கொரோனியா (போயோட்டியா)

பண்டைய கிரேக்க நகர அரசு

கொரோனியா (Coroneia, கிரேக்கம்: Κορώνεια ), அல்லது கொரோனியா, என்பது பண்டைய போயோட்டியாவின் ஒரு நகரமாகும். இது போயோட்டியன் கூட்டணியின் உறுப்பினராகவும் இருந்தது. இது ஹெலிகான் மலைக்கு அருகில் உயரமான இடத்தில் அமைந்திருந்ததாக இசுட்ராபோவால் விவரிக்கப்பட்டுள்ளது; இந்தப் பிரதேசம் Κορωνειακή என்று அழைக்கப்பட்டது. இந்த நகரம் ஹெலிகானுக்கு தெற்கே உள்ள பள்ளத்தாக்கின் நுழைவுப் பகுதியில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மலையின் மீது இருந்தது. இந்த மலையிலிருந்து கோபாய்ஸ் ஏரியின் சிறந்த காட்சியைக் காணக்கூடியதாக இருந்தது. அதன் அடிவாரத்தில் ஏரியின் சதுப்பு நிலங்கள் வரை பரந்த சமவெளி இருந்தது. மலையின் இருபுறமும் இரண்டு நீரோடைகள் பாய்ந்தன, ஒன்று கிழக்கு அல்லது வலது புறத்தில், கோரலியஸ் அல்லது குவாரிஸ் என்று அழைக்கப்படுகிறது, மற்றொன்று பலாரஸ் என்று பெயரிடப்பட்டது: பிந்தையது ஐசோமண்டஸ் அல்லது ஹோப்லியாசின் ஒரு துணை ஆறாகும். கொரோனியா தெசலியில் உள்ள ஆர்னேவைச் சேர்ந்த போயோட்டியர்களால் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் தெசலியர்களால் தங்கள் சொந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு இங்குவந்து குடியேறினர். இந்த குடியேற்றத்தை தெசலியன் நகரத்தின் பெயரால் அவர்கள் கொரோனியா என்று அழைத்ததாகத் தெரிகிறது. அதே நேரத்தில், அவர்கள் நகரத்திற்கு முன்னால் உள்ள சமவெளியில் ஏதெனா இடோனிகாவின் கோவிலைக் கட்டினார்கள், மேலும் தெசலியில் உள்ள கோயிலின் பெயரையே அதற்குச் சூடினர். அதேபோல கோவிலின் வழியே ஓடும் ஆற்றுக்கு குவாரிஸ் அல்லது குராலியஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த கோவிலில் பூயோட்டியர்கள் அனைவருக்கும் பொதுவான பாம்போட்டி திருவிழா நடைபெற்றது.

அலியார்டசுடன் இணைந்து இலியட் கப்பல்களின் பட்டியலில் ஓமரால் கரோனியா குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றுக் காலங்களில் நகருக்கு முன்னால் உள்ள சமவெளியில் பல முக்கியமான போர்கள் நடந்தன. இங்குதான் கொரோனீயா போரின்போது தால்மிடிசின் தலைமையிலான ஏதெனியர் படைகள் கிமு 447 இல் போயோட்டியர்களால் தோற்கடிக்கப்பட்டன. அந்தத் தோல்வியின் விளைவாக ஏதெனியர்கள் சில ஆண்டுகளாக போயோட்டியா மீது செலுத்தி வந்த ஆதிக்கத்தை இழந்தனர். கொரோனியாவின் சமவெளியானது கொரோனியா போர் (கி.மு. 394) நடந்த பகுதியாகவும் இருந்தது அதில் கிமு 394 இல் தீப்ஸ்கள் மற்றும் அவர்களது ஆர்கோஸ் கூட்டாளிகளுக்கு எதிராக இரண்டாம் அஜிசிலேயஸ் மன்னரின் தலைமையில் எசுபார்த்தன்களும் அவர்களது கூட்டாளிகளும் வெற்றியைக் கண்டனர். [1] மூன்றாவது புனிதப் போரில், கொரோனியா இரண்டு முறை ஓனோமார்கசின் தலைமையில் போசியன்களால் கைப்பற்றப்பட்டது. மக்கெடோனின் இரண்டாம் பிலிப், போசியன்களின் வெற்றிக்குப் பிறகு, தீப்ஸ்களுக்கு நகரத்தை விட்டுக் கொடுத்தார். [2] ரோமானியர்களுடனான போர்களில் மாசிடோனின் ஐந்தாம் பிலிப் மற்றும் மாசிடோனின் பெர்சியஸ் ஆகியோருக்கு ஆதரவாக கொரோனியா இருந்தது.

கொரோனியாவில் இருந்த மிகவும் குறிப்பிடத்தக்க கட்டுமானங்களாக எர்மெஸ் எபிமிலியஸ் மற்றும் விண்ட் ஆகியவற்றின் பலிபீடங்கள் மற்றும் அவற்றுக்கு சற்று கீழே எரா கோயில் போன்றவை என்று பௌசானியாஸ் கூறுகிறார். பண்டைய நகரத்தின் முக்கிய எச்சங்களாக அரங்கம், எரா கோவில், அகோராவின் எச்சங்கள் உள்ளன. கொரோனியா தனக்கான சொந்த நாணயங்களைத் தயாரித்தது, அவை மிகவும் அரிதானவையாக உள்ளன. அதில் ஒருபுறம் போயோடியன் கவசமும், மறுபுறம் முழு முகம் கொண்ட முகமூடி அல்லது கோர்கோனியன் தலையும், உள்ளது. [3]

நகரின் எச்சங்கள் நவீன பாலியா கொரோனியாவுக்கு அருகில் அமைந்துள்ளன.

குறிப்புகள்

தொகு
  1. Plutarch Ages. 17.
  2. Dem. de Pac. p. 62, Philip. ii. p. 69.
  3. Dodwell, vol. ii. p. 132, et seq.; Forchhammer, Hellenika, p. 185.

  This article incorporates text from a publication now in the பொது உரிமைப் பரப்பு "Coroneia". Dictionary of Greek and Roman Geography. (1854–1857). London: John Murray. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரோனியா_(போயோட்டியா)&oldid=3456782" இலிருந்து மீள்விக்கப்பட்டது