சோழன் செங்கணான்
கரிகாலனது வாழ்க்கையைப் போன்று, கோச்செங்கணான் வாழ்க்கையைச் சுற்றியும் எண்ணற்ற கற்பனைக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இவன் காலத்திய சான்றுகள் பிற்காலத்தில் ஏற்பட்டு தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட செய்திகளும் இரண்டறக் கலந்துவிடாமல் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. புறநானூற்று பாடலொன்றும் பொய்கையார் பாடிய , நாற்பது பாடல்களைக் கொண்ட களவழி இலக்கியமும் இவனது வாழ்க்கையைப்பற்றி கூறும் தொன்மையான சான்றுகளாகும். திருஞானசம்மந்தரும் திருமங்கையாழ்வாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் பாடல்களில் இம்மன்னனது சமய வாழ்க்கையைப்பற்றி விளக்குகின்றனர். பத்து மற்றும் பதினோராம் நூற்றாண்டுகளில் கிடைக்கும் சோழர் செப்பேடுகளிலிருந்து தெரியும் புராண மரபுவழி செய்திகளும் இவனைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளது.
களவழி
தொகுநெல் முதலான விளைச்சலை அடித்து அழி தூற்றும் களத்தைப் பாடுவது 'ஏரோர் களவழி'. பகைவரை அழிக்கும் போர்க்களத்தைப் பாடுவது 'தேரோர் களவழி'[1] தேரோர் களவழியைப் பாடும் நூல் களவழி நாற்பது. இந்தக் களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே கொடுத்தாலும், சில சமயம் கொங்கு நாட்டில் கரூருக்கு அருகே இருந்திருக்கலாம் எனக் கற்பனை செய்யப்படும் கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் தருகிறது. சோழ மன்னன் செங்கணான் சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டான் என்றும், புலவர் பொய்கையார் செங்கணான் போரைச் சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாகச் சேரனை மீட்டார் என்றும் கூறப்படுகிறது.
செங்கணான், கணைக்கால் இரும்பொறை போர்க்களமும் போர் முடிவும்
தொகு- போர் 'திருப்போர்புறம்' என்னுமிடத்தில் நடைபெற்றதாகப் புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு தெரிவிக்கிறது.[2]
- களவழி நாற்பதுக்கு உரை எழுதியோர் கழுமலம் என்னும் என்னும் ஊரில் நடைபெற்றதாகக் குறிப்பிடுகின்றனர்.
- புறநானூற்றுக் கணைக்கால் இரும்பொறை சிறைச்சாலையில் உயிர் துறந்தான்.
- களவழி நாற்பது நூலின் கணைக்கால் இரும்பொறை சிறையிலிருந்து மீட்கப்பட்டான்
சமயச் செங்கணான்
தொகுதிருமால் வழிபாடு
- திருநாறையூரைப்பற்றத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ள பாடல்களில் ஒன்று கோச்செங்கணானின் சாதனைகளைக் கூறுவதுடன், இவன் இவ்வூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வழிபட்டதையும் குறிப்பிடுகிறது. போர்க்களத்தில் பெரும்வீரனாகவும் சிவபெருமானுக்கு எழுபது கோயில்களை எடுத்து சிறந்த சிவபக்தனுமான சோழமன்னன் திருநாறையிலுள்ள வைணவ ஆலயத்திலும் வழிபட்டான் என்று இவ்வாழ்வார் கூறும்பொழுது சோழமன்னன் என்று கோச்செங்கணானையே குறிப்பிடுகிறார் என்பதை எவ்வித ஐயப்பாடுமின்றி உணரலாம்.
போர் வெற்றிகள்
- செங்கணானின் பகைவனுடைய யானைப்படையைப் பற்றியும் செங்கணானின் குதிரைப்படை ஆற்றிய அரும் பெரும் பணியைப் பற்றியும் ஆழ்வார் குறிப்பிடுகிறார். இவ்வாறே களவழியிலும் சேரமன்னனனுடைய யானைப்படையை எதிர்த்துச் சோழமன்னன் வெற்றி கொள்ள அவனது குதிரைப்படையும், காலாட்படையும் காரணமாயிருந்தன என்று குறிப்பிட்டுள்ளது. செங்கணானது ஆட்சி சோழ நாட்டிற்கு அப்பாலும் பரவியிருந்ததென்றும் அழுந்தை, வெண்ணி என்ற இடங்களில் இவன் போர் பரிந்தானென்றும் விளந்தை வேள் என்ற குருநில மன்னனைப்போரில் கொன்றான் என்றும், திருமங்கையாழ்வார் கூறுகிறார்.
சிவாலயங்கள்
- ஆம்பூர், வைகல், நன்னிலம் ஆகிய இடங்களிலுள்ள சிவாலயங்கள், செங்கணானாலேயே கட்டப்பட்டவை என்று திருஞானசம்மந்தரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் தேவாரப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
அன்பில் செப்பேடு
- நாடுமுழுவதும் கௌரீசனுக்கு செங்கணானால் கோயில்கள் கட்டப்பட்டன, என்று சுந்தர சோழனுடைய அன்பில் பட்டயங்கள் கூறுகின்றன.
சேக்கிழார் குறிப்பிடும், செங்கணான் என்ற இவனது பெயரும், இவன் சோழ குடும்பத்தில் பிறந்தவன் என்பதும் ஜம்புகேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களில் சிவபெருமானுக்கு இவன் கோயில்கள் எடுத்த விவரங்களும் இம்மன்னனைப்பற்றி பாடியுள்ள நாயனார் யாரென்று முடிவுகட்ட உதவுகின்றன.
வரலாறு
தொகு- சங்ககாலச் சோழன் செங்கணான் திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் நடந்த போரில் சேரமான் கணைக்காலிரும்பொறையைக் கைதுசெய்து கொண்டுவந்து உறையூர்க் குடவாயில் கோட்டத்துச் சிறையில் வைத்தான். சிறைக் காவலர் காலம் தாழ்த்தித் தந்த தண்ணீரைப் பருகாமல் கணைக்காலிரும்பொறை தன்மானத்தை விளக்கும் பாடல் ஒன்றை எழுதி வைத்துவிட்டு உயிர் துறந்தான். சங்ககாலச் சோழரின் கடைசி அரசன் சோழன் செங்கணான். சங்ககாலச் சேரரின் கடைசி அரசன் கணைக்கால் இரும்பொறை. இவர்கள் காலம் பொ.ஊ. 125-150
- கழுமலப் போரில் பிடிபட்ட கணைக்காலிரும்பொறையைப் புலவர் பொய்கையார் களவழி நாற்பது பாடிச் செங்கணானிடமிருந்து விடுவித்துக் கொண்டார். காலம் பொ.ஊ. 400-க்குச் சற்று முன்பின். (பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பாலானவை தோன்றிய காலம்)
- சிவாலயங்கள் கட்டிய கோச்செங்கணான். காலம் பொ.ஊ. 500-க்குச் சற்று முன்பின். (தேவாரம் தோன்றிய காலத்துக்குச் சற்று முன்)
தலவிருட்சம் அமைத்த மன்னர் : தில்லைக்குத் தில்லை, மதுரைக்குக் கடம்பம், காஞ்சிக்கு மா, குற்றாலத்திற்குக் குறும்பலா என்று ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு மரத்தை தலவிருட்சமாக அமைத்த மன்னர் கோச்செங்கணான் எனும் கடைச்சங்க காலத்துச் சோழ மன்னர்.[3]
இவற்றையும் காண்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ தொல்காப்பியம் ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வெற்றி - தொல்காப்பியம், புறத்திணையியல் 17
- ↑ புறநானூறு 74
- ↑ திருக்குற்றாலநாத சுவாமி கோயில் வரலாறும் பண்பாடும்; முனைவர் சொ.சுப்பிரமணிய கவிராயர்; உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். பக்கம் 37,38