கோவிலாங்குளம் முக்குடையார் சமணக் கோவில், அம்பலப்பசுவாமி கோவிலாக மாற்றம்

கோவிலாங்குளம் முக்குடையார் சமணக் கோவில், அம்பலப்பசுவாமி கோவிலாக மாற்றம் கண்ட தலம் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டத்தில் உள்ள கோவிலாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது.. சிதைவுற்ற முக்குடையார், சமணக் கோவிலின் எச்சங்களான, மூன்று சமணச் சிற்பங்கள் இந்து சமயக் கடவுள்களாக மாற்றம் கண்டுள்ளன.[1]

அமைவிடம்

தொகு

அம்பலப்பசுவாமி கோவில் தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம், கோவிலாங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது. இவ்வூர் அருப்புக்கோட்டையிலிருந்து 11.1 கி.மீ. தொலைவிலும், காரியப்பட்டியிலிருந்து 15.2 கி.மீ. தொலைவிலும், பள்ளிமடத்திலிருந்து 17.4 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைநகரான விருதுநகரிலிருந்து 24.6 கி.மீ. தொலைவிலும், குறண்டியிலிருந்து 28.2 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 626 107 ஆகும்.

முக்குடையார் கோவில்

தொகு

முக்குடையார் கோவில் என்று அழைக்கப்பட்ட இந்தச் சமணக் கோவிலில் எஞ்சியிருப்பது சிதிலமடைந்த ஓர் அடித்தளமும், அதன் மீது அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்துள்ள மூன்று சமணச் சிற்பங்களும், இவற்றைச் சுற்றிலும் உள்ள நான்கு துாண்களும் மட்டுமே. [2] மிஞ்சியுள்ள மூன்று சிற்பங்களுள், நடுவில் இடம்பெற்றுள்ள சிற்பம், சுருள் முடி கொண்டுள்ளது. சுருள் முடி மகாவீரருக்கு உரியது என்று ஓய்வுபெற்ற தொல்லியல்துறை அதிகாரியான சி.சாந்தலிங்கம் கூறியுள்ளார்.[1] இதன் இரு புறங்களிலும் உள்ள சிற்பங்களின் தலைக்கு மேல், நல்ல ஞானம், நல்ல பார்வை மற்றும் நல்லறம் மூன்று இரத்னங்களைக் குறிக்கும் முக்குடை காட்டப்பட்டுள்ளது.[1]

முக்குடை விளக்கம்

தொகு
சமண சமயத்தின்  அருகக் கடவுள் மூன்று உலகங்களுக்கும் உரியவர் என்பதை, ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கி அமைத்த முக்குடை காட்டுகிறது. மூன்று உலகங்கள் என்பன சந்திராதித்தம், நித்திய வினோதம், மற்றும் சகலபாசனம் ஆகியனவாகும். சந்திரன் குளிரொளியால் உயிர்களுக்கு இன்பம் தருவது போல, சூரியன் இருளை அகற்றி ஒளி தருவது போல அருகக் கடவுள் தோன்றியவுடன் மூவுலகில் உள்ள உயிர்கள் இன்பமடைவர். சந்திராதித்தம் குறிப்பது இதனைத்தான். நடு உலகமான நிலவுலகில் வாழும் மக்கள் தவமியற்றி முக்தி அடையும் வாய்ப்பை உடையவர்கள். இவ்வாறு முக்தி பெற்ற ஆன்மாக்கள் நித்தியானந்தத்துடன் ஆன்ம இன்பத்தில் மூழ்கி இருப்பர். நித்திய வினோதம் குறிப்பது இதைத்தான். கீழ் உலகம் என்னும் ஏழு நரக உலகங்களில் எண்ணிறந்த உயிர்கள் உள்ளன. துன்பத்தில் உழலும் இந்த உயிர்கள், துன்பம் நீங்கி  விடுதலை  பெற்று அருகனின் கருணையை பெறுவதை சகலபாசனம் குறிக்கிறது. [3]

பக்தி இயக்கமும் சமண சமயமும்

தொகு

பக்தி இயக்கத்தால் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் சமண சமயம் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அச்சனந்தி முனிவரின் சீரிய முயற்சியால் கி.பி. ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் சமணம் மீண்டும் தழைத்தோங்கியது. இக்காலத்தில் கோவிலாங்குளத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. பாண்டியநாட்டில் கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரை சமணம் செழித்திருந்தது. இக்காலத்தில் பல சமணக் கோவில்கள் கட்டப்பட்டன.[1]

முக்குடையார் கோவில் வரலாறு

தொகு

முக்குடைக் கோவில் என்னும் இந்தக் கட்டுமானக் கோவிலில் கருவறை, மற்றும் முன்மண்டபம் என்று அமைந்திருந்தது.[2] பாண்டிய நாட்டில் இடம்பெற்றிருந்த இக்கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. சோழர் கோன் என்ற குறுநிலத்தலைவன் இந்த சமணக் கோவிலை கட்டியதாக நம்பப்படுகிறது. தேவகோட்டை அருகேயுள்ள அனுமந்தக்குடியில், பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட அனுமந்தக்குடி சமண சமய கட்டுமானக் கோவில், இக்கோவிலை ஒத்த கட்டமைப்பில் உள்ளதாக சி.சாந்தலிங்கம் கருதுகிறார்.[1]

கல்வெட்டுகள்

தொகு

முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த மூன்று கல்வெட்டுகள் இங்கு கண்டறியப்பட்டுள்ளன. [2] இக்கோவிலின் அடித்தளத்தின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் குலோத்துங்க சோழனின் (ஆட்சி கி.பி. 1070–1122) 48ஆம் ஆண்டுக் கல்வெட்டின் [2]மூலம், இவ்வூர் கும்பனூர் என்றும், குணஹனபரநல்லூர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதையும். வெண்புவள நாட்டின், செங்காட்டு இருக்கை என்னும் உட்பிரிவின் கீழ் இவ்வூர் இடம்பெற்றிருந்ததையும் அறிய முடிகிறது. இக்கோவிலில் ஒரு தங்க விமானம் இருந்ததையும், இறைவன் முக்குடையார் என்று அழைக்கப்பட்டதையும் இக்கல்வெட்டு குறிப்பிட்டுள்ளது.[1]

அருகதர் மற்றும் இயக்கியின் இரண்டு செப்பு உருவங்களும் வழங்கப்பட்டன. [2]இந்த சிற்பங்களைச் செய்வித்தவர்கள் குறித்த விவரங்களையும் இக்கல்வெட்டு தருகிறது. கோவில் பராமரிப்பிற்காக அளிக்கப்பட்ட நிலக்கொடை, ஊர் மற்றும் கோவில் தேவைகளுக்காகத் தோண்டிய கிணறு, கோடை காலத்தில் பயணிகளின் தாகம் தீர்க்க நிறுவப்பட்ட தண்ணீர் பந்தல் ஆகியன குறித்த செய்திகளும் இக்கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. மதுரை, சாத்தங்குடி, குறண்டி, குன்றத்தூர் ஆகிய பாண்டியநாட்டின் பகுதிகளிலிருந்து சமணர்கள் இக்கோவிலுக்கு வந்துள்ளனர். (ARE 397 of 1914)[1]

கோவிலாங்குளத்தில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் குலோத்துங்கன் (ஆட்சி கி.பி. 1070–1122) காலத்துக் கல்வெட்டில், பொதுவாகக் கல்வெட்டுகளில் காணப்படாத, அதன் உட்பொருள் (Content) மற்றும் அதன் கவித்துவமிக்க கவிதை வரிகள் (Poetical Verse) ஆகியன கருத்தில் கொள்ளத்தக்கனவாகும்.[2] தமிழ் மொழியில் தெளிவாகத் தேர்ச்சிபெற்றவர்களை உள்ளடக்கிய சுமார் இருபத்தைந்து பேர், "முக்குடைக் கடவுளுக்கு" ஒரு கோவிலையும் (Temple) தங்க விமானத்தையும் (Shrine), கட்டியதுடன், கடவுள் மற்றும் அவரது இயக்கியின் கல் மற்றும் உலோகச் சிற்பங்களையும் அளித்துள்ளனர். தெய்வத்தை ஊர்வலமாக அழைத்துச் செல்வதற்கான செலவுகளையும், அவர்கள் நிறுவிய தருமங்களை கட்டிக்காப்பதற்கான கொடையினையும் வழங்கியுள்ளனர். பிற்காலச் சோழர் காலத்திலும், சமண சமயத்தின் மீதான அரச ஆதரவு தொடர்ந்ததற்கு, இக்கல்வெட்டே சான்றாகும்.[2][1]

அம்பலப்பசுவாமி கோவில்

தொகு

முதலாம் குலோத்துங்கன் ஆட்சியின் இறுதி காலகட்டத்தில் (அதாவது, கி.பி. 1118) கட்டப்பட்ட இக்கோவிலில், தற்போது சிதமடைந்த எச்சங்களைத் தவிர வேறெதுவும் காணப்படவில்லை.[2] சமண சிற்பங்கள் தொன்மையானது என்பதால், இவற்றை இந்து சமய தெய்வங்களாகவே மாற்றியுள்ளனர். இவ்வூர் மக்கள், இச்சிற்பங்களுக்கு அம்பலப்பசுவாமி என்று பெயரும் சூட்டியுள்ளனர். இந்து சமய முறைப்படி சந்தனம் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, சிவப்பு ஆடை உடுத்தி, தலைப்பாகை அணிவித்து வழிபட்டு வருகின்றனர். சமண சிற்பங்கள், இவ்வூர் மக்களால், உள்ளூருக்கான காவல் தெய்வங்களாகவே முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன. ஆண்டுதோறும், புரட்டாசி மாதத்தில், அம்பலப்பசுவாமிக்கு சிறப்பு பூசைகளை நடத்தி வருவதுடன், அம்பலப்பசுவாமியையும் ஊர்வலமாகவும் அழைத்துச் செல்கின்றனர்.[4][1]

கோவிலாங்குளம் மக்களுக்கு, சிதைந்து காணப்படும் இந்த முக்குடைக் கோவில் குறித்து சரிவர எதுவும் தெரியவில்லை. இவ்வூர் பெரியவர்களுக்குக் கூட இச்சிற்பங்கள் குறித்து எதுவும் தெரியவில்லை. சமணர் சிற்பம், மகாவீரர் சிற்பம், என்று தாங்கள் கேள்வியுற்றதை பகிர்ந்து கொண்டனர். வரலாற்று ஆய்வாளர்களும், சமயம் சார்ந்த தன்னார்வலர்களும் இங்கு வந்து செல்வதாகவும் கூறுகின்றனர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Namma Madurai: Monks turned into Hindu deities S.S.Kavitha, The Hindu, January 02, 2013
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Temples in Kovilangulam In Later Chola temples : Kulottunga I to Rajendra III (A.D. 1070-1280). SR Balasubramaniyam. Mudgala Trust. 1979. பக். 141 – 142
  3. முக்குடை அகிம்சை யாத்திரை
  4. 4.0 4.1 நுாற்றாண்டு கடந்த சமண சிலை வழிபாடு! தினமலர், செப்டம்பர் 24, 2016