ஆதிசக்தி

எல்லாவற்றிற்கும் ஆதி ரூபமாக எல்லோரையும் படைத்த மூலசக்தி
(சக்தி தேவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆதிசக்தி அல்லது ஆதிபராசக்தி என்பவள் இந்து மதத்தில் எல்லாவற்றிற்கும் ஆதி ரூபமாக எல்லோரையும் படைத்த மூலசக்தியாக விளங்குபவள். தன்னையே சிவம் சக்தி என இரண்டாகப் பிரித்து ஜோதியும் அதன் வெப்பமுமாக விளங்குபவள். சக்தியை முழுமுதற்கடவுளாக வழிபடப்படும் சமயம் மிகப்பழமையான சமயங்களுள் ஒன்றான சாக்தம் ஆகும். தாய் தெய்வ வழிபாட்டின் மிகப் பெரும் எல்லையைக் கடந்துள்ள சக்தி வழிபாடானது, அகிலாண்டம் அனைத்திற்குமே ஆதிசக்தியே தாய் என்று உரைக்கிறது. இதனால் அகிலாண்டேசுவரி என்று ஆதிசக்தி அழைக்கப்படுகிறார்.

எல்லோரா குடைவரையில் சத்தி [1]புடைப்போவியம்
ஆலமர் செல்வன் என்பவன் சிவன். அவன் மனைவியாகிய இவளும் ஆலமர் செல்வி எல்லோரா குடைவரை

முப்பெரும் தேவியரான கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகியோர் ஆதிசக்தியின் அம்சமாகவே இந்து தொன்மவியல் நூல்கள் உரைக்கின்றன. அத்துடன் திருமால் ஆதிசக்தியின் ரூபம் என்பதாலேயே மோகினி அவதாரம் எடுத்துச் சிவபெருமானுடன் ஐயப்பன் என்ற குழந்தையைப் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சொல்லிலக்கணம் மற்றும் பிற பெயர்கள்

தொகு

இவர் அம்மன், ஆதிபராசக்தி, உமையம்மை என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

சக்தி அவதாரங்கள்

தொகு

ஒரு சமயம் தட்சனின் கடுந்தவத்திற்கு இணங்க ஆதிசக்தி தாட்சாயிணியாக அவதாரம் எடுத்தார். ஆனால் மாயையாலும், தட்சனின் மறுப்பாலும் யாகத்தில் விழுந்து மரித்தார். பதிவிரதையான தாட்சாயிணியின் சரீரம் அக்னியால் ஒரு துளியும் சுட முடியாததால் அதனைச் சுமந்து ஈசனிடம் ஒப்படைத்தான். சிவனோ அதனைத் தன் கழுத்தில் சுமந்து ருத்ர தாண்டவம் ஆட அண்டமெல்லாம் இடியும் நிலை உண்டானது. ஆகவே, திருமால் தனது சக்கராயுதத்தை ஏவி சக்தியின் உடலை பல துண்டுகளாக அறுத்து புவி எங்கும் விழச்செய்தார். அப்படி விழுந்த இடங்களே சக்தி பீடங்கள் ஆயின. அவைகளில் 51 முதன்மையானவை.

பார்வதி, தாட்சாயினி, காளி, எல்லம்மா, மாரியம்மா, ரேனுகா தேவி, துர்கை, அங்காள பரமேஸ்வரி, சாமுண்டி, பகவதி உள்ளிட்டவை சக்தியின் அவதாரங்களாகக் கருதப்படுகின்றன. எல்லாமுமான சிவத்தையே சிருஷ்டித்து தனது வல்லமையை (சக்தியை) அளித்து இயங்கச்செய்வதால் இவளைச் சக்தி என்று திரிலோகமும் போற்றுகிறது.

தாட்சாயிணி

தொகு

பிரம்மாவின் மானசீக குமாரனான பிரஜாபதி தட்சனின் புதல்வியாக பூமியில் பிறந்தார். இவர் தாட்சாயிணி என்றும் சதி தேவி என்றும் அறியப்படுகிறார். சிவபெருமான் மீது காதல் கொண்டு பிரஜாபதியின் விருப்பத்தினையும் மீறி சிவபெருமானைத் திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையான பிரம்மதேவரின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கொய்து நான்கு தலைகளாக மாற்றிய சிவபெருமான் மீது பிரஜாபதி தட்சன் கோபம் கொண்டிருந்தார். எனவே சதி தேவியார் சிவபெருமானைத் திருமணம் செய்தது கண்டு வெகுண்ட தட்சன் சிவபெருமானுக்கும், சதி தேவிக்கும் அழைப்பு விடுக்காமல் யாகம் ஒன்றைச் செய்தார். அங்கு அழைப்பின்றி வந்த சதி தேவியின் முன்னால் சிவபெருமானை தட்சன் அவமானம் செய்தமையால், சதி தேவியார் யாகக் குண்டத்திலே விழுந்து மறைந்தார். அதனால் தட்சனை அழிக்க சிவபெருமான் தன் சடாமுடியிலிருந்து வீரபத்திரனை தோற்றுவித்தார்.

சக்தி பீடங்கள்

தொகு

சக்தி பீடங்கள் 108 ஆகும்.

அவைகளில் 64 முதன்மையானவை. அவையிலும் 51 மிகப் பிரசித்திப் பெற்றவை.

பார்வதி தேவி

தொகு

சிவபெருமானுக்கு மீண்டும் வல்லமை அளித்து அவரோடு இணைய ஆதி சக்தி, மீண்டும் பூமியில் பர்வதராஜன் மைனாகுமாரி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். இவர் பார்வதி தேவி என்று அறியப்படுகிறார். மிகக் கடுமையாக தவமிருந்து யோகசத்திகளை பெற்று சிவனை மணந்தார். சிவன் பார்வதி தம்பதியரின் முதல் குழந்தையாக விநாயகர் அறியப்படுகிறார். கயிலை மானோசரோவரில் பார்வதி தேவியார் குளிக்க செல்லும் பொழுது மானசீகமாக ஒரு குழந்தையை உருவாக்கி காவலுக்கு வைத்தார். அங்கு வந்த சிவபெருமானை தந்தை என அறியாது அக்குழந்தை சண்டையிட சிவன் அக்குழந்தையின் தலையை கொய்தார். பின் பார்வதியின் விஸ்வரூபம் ஆதிபராசக்தியாய் அங்காள பரமேஸ்வரியாய் நவதுர்கையாய் தசமஹாவித்யாவாய் சிவபெருமானோடு அண்டசராசரமும் சுட்டெரிக்க தேவியின் கோபக்கனலைச் சாந்தப்படுத்த எண்ணிய ஈசன் தேவர்களிடம் முதலில் தென்படும் விலங்கின் தலையை கொண்டுவரும்படி ஆணையிட்டார். சிவ பூத கணங்களும் தேவர்களும் யானை தலையை கொண்டுவந்தனர். சிவபெருமான் அதை அக்குழந்தைக்கு அளித்து உயிர்ப்பித்தார். அதனால் ஆனைமுகன் என்று பெயர் பெற்றார். சிவ கணங்களின் அதிபதியாக ஆனைமுகன் விளங்கியமையால் கணபதி என்றும் அறியப்படுகிறார்.

சிவன் பார்வதி தம்பதியரின் இரண்டாவது குமாரன் முருகன் ஆவார். சிவபெருமான் தனது ஆறு முகங்களிலும் உள்ள நெற்றிக் கண்களிலி்ருந்து நெருப்புப் பொறிகளைத் தோற்றுவித்தார். அதனை வாயு தேவன் சரவணப்பொய்கை நதியில் சேர்ப்பித்தார். அந்நதியில் நெருப்புப் பொறிகள் ஆறு குழந்தைகளாக ஆனது. அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்தனர். அன்னையாகிய பார்வதி தேவி அந்த ஆறு குழந்தைகளை அனைத்த பொழுது ஆறுமுகமும், பன்னிரு கரமும் கொண்ட குமாரனாக அக்குழந்தை ஒன்றினைந்தது. ஆறு முகங்களை உடையதால் ஆறுமுகம் என்றும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையால் கார்த்திகேயன் என்றும், அன்னை ஆதிபராசக்தியிடம் இருந்து சக்தி வேலை பெற்றதனால் சக்தைவடிவேலன் என்றும், அழகான குழந்தை என்பதால் முருகன் என்றும் அறியப்படுகிறார். சிவபெருமானும் பார்வதியும் கயிலையில் மனம் மகிழ்ந்திருந்த பொழுது கரடி ரூபம் கொண்டு கயிலை காடுகளில் மகிழ்ந்ததாகவும், அதனால் சிவரூபமான ஜாம்பவான் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.

மீனாட்சி

தொகு

மீனாட்சி என்பவர் பாண்டிய மாமன்னன் மலையத்துவஜன் மற்றும் காஞ்சனமாலை தம்பதியரின் மகளும் சிவபெருமானின் உருவமான சுந்தரேசரரின் மனைவியும் ஆவார். இவர் தடாதகை பிராட்டி எனவும் அறியப்படுகிறார். இவர் மிகுந்த வீரம் கொண்டவராகவும், தந்தையின் இறப்பிற்குப் பிறகு பாண்டிய நாட்டிலிருந்து படை திரட்டி கையிலை வரை சென்று வென்றதாகவும் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. கையிலையில் சிவபெருமானைக் கண்டு வெட்கம் கொண்டு பெண் நிலையை அடைந்ததால் சிவபெருமானையே சுந்தரேசுவரராகத் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடவுளுடனான உறவு

தொகு

திருமால்

தொகு

ஆதிசக்தியின் சகோதரனாக திருமால் போற்றப்படுகிறார்.

நந்தி தேவர்

தொகு

சிவபெருமான் முதல் தொண்டனான நந்தி தேவர், ஆதிசக்தியின் மகனுக்கு இணையானவராக கூறப்படுகிறது.

கங்கை

தொகு

இமவானின் மகளான கங்கா தேவி ஆதிசக்தியின் (பார்வதி) சகோதரியாகக் கருதப்படுகிறார்.

சக்தி விழாக்கள்

தொகு

நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி (புரட்டாசி) மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) நோன்பாகும். இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.

  • ஹோலி
  • துர்க்கை பூசை
  • மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள் மேற்கோள்கள்

தொகு
  1. நமக்குள் ஊறும் சத்து சக்தியாக மாறுகிறது
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதிசக்தி&oldid=3890371" இலிருந்து மீள்விக்கப்பட்டது