சின்னமஸ்தா கோயில்

ஜர்கண்ட் மாநிலத்தில் உள்ள அம்மன் கோயில்

சின்னமஸ்தா கோயில் (Chhinnamasta Temple) என்பது இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தின், ராம்கர் மாவட்டத்தில் உள்ள இராஜ்ரப்பாவில் அமைந்துள்ள ஒரு இந்து புனித யாத்திரை தலமாகும். இது சின்னமஸ்தா தேவிக்காக அமைக்கப்பட்ட ஒரு கோயிலாகும். [1] [2] சார்க்கண்டு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களான மேற்கு வங்காளம் மற்றும் பீகாரிலிருந்தும் இந்த இடத்திற்கு பக்தர்கள் வருகின்றனர். [3]

சின்னமஸ்தா கோயில்
சின்னமஸ்தா கோயில் is located in சார்க்கண்டு
சின்னமஸ்தா கோயில்
சார்கண்டில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:சார்க்கண்டு
மாவட்டம்:ராம்கர் மாவட்டம்
அமைவு:இராஜ்ரப்பா
ஆள்கூறுகள்:23°37′56″N 85°41′38″E / 23.63222°N 85.69389°E / 23.63222; 85.69389
கோயில் தகவல்கள்

சின்னமஸ்தா கோயில் அதன் தாந்திரீக பாணியிலான கட்டிடக்கலை வடிவமைப்பிற்காக பிரபலமானது. முதன்மைக் கோயிலைத் தவிர, சூரியன், அனுமன், சிவன் போன்ற பல்வேறு தெய்வங்களுக்கு இங்கு பத்து கோயில்கள் உள்ளன. [3]

ராஜரப்பாவின் வரலாறு தொகு

ஜார்கண்டில் நிலக்கொடை இயக்கத்தில் ராம்கர் சமீன்தார் மக்களுக்கு தலா மூன்று ஏக்கர் நிலத்தை வழங்கிய இடம் இது.

சொற்பிறப்பியல் தொகு

சின்னமஸ்தா ( சமக்கிருதம்: छिन्नमस्ता , Chinnamastā, "தலை துண்டிக்கப்பட்டவள்"), சின்னமஸ்திகா மற்றும் பிரசண்ட சண்டிகா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தச மகா வித்யாக்களில் ஒருவர். இவர் பத்து தாந்திரீக தெய்வங்கள் மற்றும் இந்து தெய்வீக அன்னையான தேவியின் மூர்க்கமான அம்சமாவார். சின்னமாஸ்தாவை அவரது பயமுறுத்தும் உருவத்தால் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். தானே தலை துண்டித்துக் கொண்ட தெய்வம் ஒரு கையில் துண்டிக்கப்பட்ட தன் தலையையும், மற்றொரு கையில் ஒரு கத்தியையும் வைத்திருக்கிறது. அவரது கழுத்தில் இருந்து மூன்று பிரிவுகளாக குருதி பீச்சியபடி வெளியேறுகிறது. அதில் ஒன்றை துண்டிக்கபட்ட சக்தியின் தலையில் உள்ள வாயே ஏற்கிறது. மற்ற இரண்டை அவருடைய தோழியர் இடாகினியும் வாருணியும் ஏற்கின்றதாக சித்தரிக்கப்படுகிறது. [4]

நிலவியல் தொகு

சின்னமஸ்தா கோயிலானது இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தின் ராம்கர் மாவட்டத்தில் ராம்கர் பாசறை நகரத்தில் இருந்து தே.நெ 20 வரழியாக 28 கிமீ தொலைவில் உள்ள sராஜ்ரப்பாவில் அமைந்துள்ளது. இது sராஜ்ரப்பா அருவிக்கு அருகில் தாமோதர் மற்றும் பேரா (பைரவி ஆறு) ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது.

இந்த இடம் ஒரு சிறப்பு வாய்ந்த இடமாக உள்ளது. இது மேலிருந்து வரும் பைரவி ஆறு பெண் ஆறாகவும், தாமோதர் ஆண் ஆறு என்று கருதப்படுகிறது. இரண்டு ஆறுகளும் இணைவது அருமையான காட்சி. இதில் பைரவி முரட்டுத்தனமாக ஓடும் ஆறாகும். ஆனால் தாமோதர் ஆறு அமைதியாக ஓடுவதாகும்.

விளக்கம் தொகு

 
சின்னமாஸ்தா தேவி

அஷ்டதாது (எட்டு உலோகங்களின் சேர்க்கை) கவசத்தால் மூடப்பட்ட ஒரு இயற்கையன பாறை, சின்னமாஸ்தா தெய்வமாக வணங்கப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் சின்னமஸ்தா கோயில் இந்து கோயிலாக நிறுவப்பட்டதாக இருந்தாலும், பழங்காலத்திலிருந்தே பழங்குடியினர் மத்தியில் பிரபலமான வழிபாட்டுத் தலமாக இருந்துள்ளது. தேவிக்கு பாயாசம் படையல் கொடுப்பதுடன், விலங்கு பலியும் கொடுக்கப்படுகிறது. [5] [6]

இதன் முதன்மைக் கோயிலைச் சுற்றி சப்தகன்னியர், தட்சிண காளி போன்ற பல சிறிய கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. தாரா, சோடசி, புவனேசுவரி, பைரவி, பகளாமுகி, கம்லா, மாதங்கி, தூமாவதி போன்ற மகாவித்யாக்களின் கோயில்கள் இதன் அருகில் கட்டப்பட்டுள்ளன.

மிகப் பழமையான இந்த கோவிலுக்கு பீகார், சார்க்கண்டு, மேற்கு வங்காளம், அசாம், நேபாளம் ஆகிய பகுதிகளிலிருந்தும் சின்னமஸ்திகா தேவியை வழிபடுவதற்காக பக்தர்கள் வந்து செல்கின்றனர். வேத நூலான துர்கா சப்தசதியும் கோயிலைப் பற்றி குறிப்பிடுகிறது. இக்கோயிலின் கலை, கட்டிடக்கலை வடிவமைப்பு போன்றவை தாந்திரீக முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களின் வடிவமைப்பை ஒத்திருக்கிறது. இதே போன்ற கட்டடக்கலை கொண்ட அசாமின் காமாக்யா கோவிலைப் போன்ற தாந்திரீக தலமாக இந்த கோவில் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது. இக்கோயில் 10 மகாவித்யாக்களில் ஒன்றாகும். இங்கிருந்த பழமை வாய்ந்த அம்மன் கோவில் சேதமடைந்ததால், புதிய கோயில் கட்டப்பட்டு, அதில் பழைய மூலவர் சிலை நிறுவப்பட்டது. இன்றும் கோவிலில் விலங்கு பலி நடைமுறையில் உள்ளது. செவ்வாய், சனிக்கிழமைகளின் போதும் காளி பூசையின் போதும் விலங்குகள் பலியிடப்படுகின்றன.

இங்கு ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் வெள்ளுவா, காருவா இரவுகளில் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த இடத்தின் சமய முக்கியத்துவம் காரணமாக, இங்கு பக்தர்கள் திருமணம் செய்தல், முடி இறக்குதல் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். புதிய வாகனங்களை வாங்குபவர்கள் வாகனத்தின் ஆயுளுக்காவும், தங்களின் நல்வாய்ப்புக்காகவும் இங்கு வந்து முதல் பூசை செய்கின்றனர்.

sராஜ்ரப்பா சந்தாலிகள் போன்ற பழங்குடியினருக்கு ஒரு புனிதத் தலமாக உள்ளது. அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் அஸ்தியை தாமோதர் ஆற்றில் கரைக்க வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் திசம்பர் மாதத்தில் யாத்ரி என்னும் குழுக்களாக வருகின்றனர். அவர்களின் தொன்மங்களின்படி, இது அவர்களின் இறதி இளைப்பாறல் இடமாகும். அவர்களின் நாட்டுப்புற பாடல்களில் ராஜ்ரப்பாவை "தெல் கோபி காட்" (தண்ணீர் மலையிடைவழி) என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் அவர்கள் குளித்த பிறகு எண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தெற்கு பகுதிகளான கிழக்கு மற்றும் மேற்கு சிங்பூம் மற்றும் சரைகேலா மாவட்டங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் வருகிறார்கள். சின்மாஸ்திகா தேவி பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவர் என்ற நம்பிக்கையால் மனோகம்னா தேவி என்றும் அழைக்கப்படுகிறார். பக்தர்கள் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்காக கோயிலில் உள்ள பாறையில் சிவப்பு நூலைக் கட்டுகிறார்கள்.

சனவரி மாதம் மகர சங்கராந்தி பண்டிகையின் போது இங்கு சிறப்பு திருவிழா நடத்தப்படுகிறது. அதில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர். விஜயதசமி பண்டிகையின் போது ஒரு சந்தை ஏற்பாடு செய்யப்படுகிறது. அதில் ஏராளமான மக்கள் கலந்து கொள்கின்றனர். பார்வையாளர்கள் ஆற்றில் புனித நீராடுகின்றனர்.

சமய முக்கியத்துவத்தைத் தவிர, இந்த இடம் இதன் இயற்கை சூழலின் காரணமாக ஒரு சுற்றுலா தலமாகவும் உள்ளது. செழிப்பான காடுகளும் ஆறுகள் நிறைந்த மலை நிலப்பரப்பு இதன் சில அம்சங்களாகும். இங்கு அமைந்துள்ள வெந்நீர் ஊற்று இப்பகுதியின் பிரபலத்தைக் கூட்டுகிறது. பேரா ஆறு 20 அடி உயரத்தில் இருந்து தாமோதர் ஆற்றில் இணைகிறது. இது ஒரு அருவி ஒன்றை உருவாக்குகிறது. இந்த இடத்தில் படகு சவாரி வசதி உள்ளது. பார்வையாளர்கள் ஆற்றங்கரையில் பல்வேறு பாறை அமைப்புகளைக் கொண்ட பகுதியிஐ பார்வையிட்டபடி படகு சவாரி செய்யலாம். இந்த இடம் அதன் இயற்கை மற்றும் சமய முக்கியத்துவம் காரணமாக பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "2009 - SAARC disaster Management Report" (PDF). SAARC DISASTER MANAGEMENT CENTRE. Archived from the original (PDF) on 12 January 2012. பார்க்கப்பட்ட நாள் 20 April 2012.
  2. Prasad, Basudeo (1 January 2009). "Sustainable eco-tourism development: A case study of Jharkhand state". Spectrum 1 (1): 62. http://www.environmentportal.in/feature-article/sustainable-eco-tourism-development-case-study-jharkhand-state. பார்த்த நாள்: 6 April 2012. 
  3. 3.0 3.1 "Rajrappa Temple". Official Website of Ramgarh district. Archived from the original on 27 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-04-20.
  4. "Burglary committed in Chhinnamastika temple". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 Jul 2010 இம் மூலத்தில் இருந்து 3 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103074834/http://articles.timesofindia.indiatimes.com/2010-07-03/patna/28299583_1_chief-priest-temple-premises-chief-secretary. 
  5. (Benard 2000, ப. 146)
  6. (R Mahalakshmi 2014)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்னமஸ்தா_கோயில்&oldid=3858313" இலிருந்து மீள்விக்கப்பட்டது