சுப. வீரபாண்டியன்

பேராசிரியர், பகுத்தறிவாளர், திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்

சுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன் சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். இறைமறுப்பாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் வயதில் விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர்.[1][2] இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார்.

சுப. வீரபாண்டியன்
பிறப்புஏப்ரல் 22, 1952 (1952-04-22) (அகவை 72)
காரைக்குடி, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்சுபவீ
கல்விஅறி.இ., க.மு., முனைவர்
படித்த கல்வி நிறுவனங்கள்பச்சையப்பன் கல்லூரி
பணிபேராசிரியர்
அறியப்படுவதுதிராவிடத் தமிழ் தேசியம்
சமயம்இறைமறுப்பு
பெற்றோர்இராம. சுப்பையா
விசாலாட்சி
வாழ்க்கைத்
துணை
வசந்தா
பிள்ளைகள்லெனின்
உறவினர்கள்எஸ். பி. முத்துராமன் (அண்ணன்)

பிறப்பு

சுப. வீரபாண்டியன் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர்.[3] புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநரான சுப. முத்துராமன் இவர்தம் அண்ணன் ஆவார்.[4]

கல்வி

சுப.வீரபாண்டியன் தொடக்கக்கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் காரைக்குடியில் பெற்றார். பின்னர் காரைக்குடியில் உள்ள அழகப்பர் அரசு கலைக் கல்லூரியில் பயின்று இயற்பியலில் அறிவியல் இளவர் பட்டம் பெற்றார். தமிழிலக்கியம் பயின்று கலை முதுவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார்.

பணி

மாணவப் பருவத்தில் திரைத்துறையில் பணியாற்ற விரும்பிய சுப. வீரபாண்டியன், தனது கல்லூரிக் கல்வியை முடித்ததும் சென்னையில் இருந்த வணிக நிறுவனம் ஒன்றில் ஓராண்டு தட்டச்சராகப் பணியாற்றினார். பின்னர் உயர்கல்வி பெற்று சென்னையில் உள்ள தென்னிந்திய வாணியர் கல்வி அறக்கட்டளைக் கல்லூரியில் (South Indian Vaniyar Educational Trust College – SIVET College) 1976ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றார்.

குடும்பம்

சுப. வீரபாண்டியன் காரைக்குடியில் வசந்தா என்பவரை மணந்தார்.[3] இவர்கள் திருமணத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் க. இராசாராம் தலைமையேற்று நடத்தி வைத்தார். இவ்விணையர்களுக்கு ஆண்மக்கள் இருவர் உண்டு. அவர்களுள் மூத்தவரின் பெயர் லெனின்.

அரசியல் பணி

சுப. வீரபாண்டியனின் தந்தை 1937 ஆம் ஆண்டு முதலே சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என அரை நூற்றாண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து அரசியலில் இயங்கி வந்தனர். இதனால் இளமையிலேயே சுப. வீரபாண்டியனுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரியில் படிக்கும் பொழுதே திராவிட இயக்க ஆதரவாளராக வளர்ந்தார். 1970 ஆம் ஆண்டுகளில் செல்வாக்குப் பெறத் தொடங்கிய தமிழ் தேசியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். கல்லூரியில் பணியாற்றும் பொழுதே தமிழர் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டார்.தமிழ் தேசியத் தந்தை பெருஞ்சித்திரனாரின் கருத்துக்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு அவரது தென்மொழி இதழைக் கேடயமாகப் பயன்படுத்தி வந்தார். பின்னர் தியாகு நடத்திய திலீபன் மன்றத்தோடு தனது தமிழர் மன்றத்தை இணைத்து தமிழ் – தமிழ்த்தேசிய இயக்கத்தைத் தொடங்கி அதன் பொதுச்செயலாளராக இருந்தார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக அதிலிருந்து பிரிந்து சான்றோர் பேரவை என்னும் அமைப்பில் இயங்கினார். அங்கிருந்து கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து, ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்!! தமிழியத்தால் வெல்வோம்!!! என்னும் முழக்கத்தோடு திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் அமைப்பை 2007 ஆம் ஆண்டில் உருவாக்கி அதன் பொதுச்செயலாளராகத் தற்பொழுது இயங்கி வருகிறார். பெரியாரைப் போற்றி, பெருஞ்சித்திரனார் வழி தமிழ்த்தேசியவாதியாகவே திகழ்கிறார்.

சிறை வாழ்க்கை

சுப. வீரபாண்டியன் தமிழீழ ஆதரவு நடவடிக்கைகளின் காரணமாக பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் விடுதலை அடைந்தார்.

இதழ்ப்பணி

கல்லூரிப் பேராசிரியராக இருந்தபொழுதே சுட்டி, விடுதலை, உண்மை, தென்மொழி உள்ளிட்ட பல இதழ்களில் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதினார். பின்னர் இனி, நந்தன் வழி, தாயகம் ஆகிய இதழ்களின் சிறப்பாசிரியராகப் பொறுப்பு வகித்தார். தற்பொழுது கருஞ்சட்டைத் தமிழர் என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியராகப் பொறுப்பு வகிக்கிறார்.

தொகுப்பு நூல்

சுப. வீரபாண்டியன் தன் தந்தை இராம. சுப்பையாவிடம் உரையாடி, அவரது திராவிட இயக்க அனுபவங்களை “எனது வாழ்க்கையும் திராவிட இயக்க அனுபவங்களும்” என்னும் நூலாகத் தொகுத்து வெளியிட்டார்.

படைப்புகள்

சுப. வீரபாண்டியனின் எழுத்துகளும் சொற்பொழிவுகளும் பின்வரும் நூல்களாக வெளிவந்துள்ளன.

அரசியல்

  1. பகத்சிங்கும் இந்திய அரசியலும் (1987)
  2. ஈழம் காப்போம்
  3. மண்டல் அறிக்கையால் மாறும் அரசியல் (1990 விடுதலைக் குயில்கள்)
  4. தடா தடா தடா : அடக்குமுறைச் சட்டங்களைத் துரத்தியடிப்போம் (கி. வெங்கட்ராமனுடன் இணைந்து எழுதியது) 1992 அடக்குமுறைச்சட்ட எதிர்ப்புக் கூட்டியக்கம், சென்னை)
  5. தமிழகப் பண்பாட்டு வரலாறு (சுருக்கம்)
  6. உடையும் சித்திரங்கள் (செப்டம்பர் 2001 - தமிழ் முழக்கம், சென்னை)
  7. குடும்பமும் அரசியலும் (2004 தமிழ் முழக்கம், சென்னை)
  8. பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம் (2005 தமிழ் முழக்கம், சென்னை)
  9. இதுதான் ராமராஜ்யம்
  10. திராவிடத்தால் எழுந்தோம் ( 2012 - - வானவில் புத்தகாலயம், சென்னை)
  11. ஈழம் தமிழகம் நான் : சில பதிவுகள் (2013 - சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை)
  12. இளமை எனும் பூங்காற்று (2013 - நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், சென்னை)

பல்சுவை

  1. ஒன்றே சொல் நன்றே சொல் - 1 (2012 - வானவில் புத்தகாலயம், சென்னை)
  2. ஒன்றே சொல் நன்றே சொல் - 2 (2012 - வானவில் புத்தகாலயம், சென்னை)
  3. ஒன்றே சொல் நன்றே சொல் - 3 (2012 - வானவில் புத்தகாலயம், சென்னை)
  4. ஒன்றே சொல் நன்றே சொல் - 4 (2012 - வானவில் புத்தகாலயம், சென்னை)
  5. ஒன்றே சொல் நன்றே சொல் - 5 (2012 - வானவில் புத்தகாலயம், சென்னை)
  6. ஒன்றே சொல் நன்றே சொல் - 6 (2012 - வானவில் புத்தகாலயம், சென்னை)

இலக்கியம்

  1. இந்தக் காலக் கவிதை உத்திகள் (1985 கனிமுத்துப் பதிப்பகம், சென்னை)

கவிதை

  1. புதுத் தென்றல் (1972 பாரிநிலையம், சென்னை)

பயணக் குறிப்புகள்

  1. என் நாட் குறிப்பிலிருந்து...

தன் வரலாறு

  1. அது ஒரு பொடா காலம்
  2. வந்ததும் வாழ்வதும் (2012 - - வானவில் புத்தகாலயம், சென்னை)

புதினங்கள்

  1. இந்த விதை முளைக்கும் (1994 ஆதி பதிப்பகம், சென்னை)
  2. இடைவேளை
  3. கவிதா (2012 - - வானவில் புத்தகாலயம், சென்னை)

உரை

  1. குறள்வானம்(அறத்துப்பால்) (2012 - - வானவில் புத்தகாலயம், சென்னை)

மேற்கோள்கள்

  1. "peravai.com/அறிமுகம்/". Archived from the original on 2017-01-04. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2018.
  2. Kolappan, B (2 March 2016). "Dravidian parties too strong to be dislodged: Suba. Veerapandian". தி இந்து. http://www.thehindu.com/news/national/tamil-nadu/dravidian-parties-too-strong-to-be-dislodged-suba-veerapandian/article8302105.ece. பார்த்த நாள்: 20 March 2016. 
  3. 3.0 3.1 "சுபவீ வலைப்பூ". பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2018.
  4. Suba Veerapandian (2014-08-24), சிங்கப்பூர் கவிஞர் கண்ணதாசன் விழா - 2009, பார்க்கப்பட்ட நாள் 2018-05-12
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுப._வீரபாண்டியன்&oldid=3555054" இலிருந்து மீள்விக்கப்பட்டது