சு. சுசீந்திரராஜா
பேராசிரியர் சுவாமிநாதன் சுசீந்திரராஜா (9 அக்டோபர் 1933 - 11 சனவரி 2019) இலங்கையைச் சேர்ந்த ஒரு மொழியியலாளர். இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் புகழ் பெற்ற அறிஞர்களிடம் கல்வி பயின்றவர். தமிழ், ஆங்கில மொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தது மட்டுமன்றி, சிங்களம், சமசுக்கிருதம், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பழக்கம் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணியாற்றிய சுசீந்திரராஜா, இலங்கையில் கொழும்புப் பல்கலைக்கழகம், களனிப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.[1]
சு. சுசீந்திரராஜா | |
---|---|
பிறப்பு | சுவாமிநாதன் சுசீந்திரராஜா 9 அக்டோபர் 1933 மயிலிட்டி, யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | சனவரி 11, 2019 கொழும்பு, இலங்கை | (அகவை 85)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (முனைவர்), சென்னைப் பல்கலைக்கழகம் (இளங்கலை, சிறப்பு), புனித யோசப் கல்லூரி, பெங்களூர் (இளங்கலை) |
பணி | மொழியியல் பேராசிரியர் |
பணியகம் | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், களனிப் பல்கலைக்கழகம், கொழும்புப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | மொழியியல் பேராசிரியர் |
பெற்றோர் | எஸ். சுவாமிநாதன் |
வாழ்க்கைச் சுருக்கம்
தொகுசுசீந்திரராஜா இலங்கையில் வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணத்தில் மயிலிட்டியில் 1933ம் ஆண்டு அக்டோபர் 9 இல் பிறந்தார். இவரது தந்தையார் மயிலிட்டி எஸ். சுவாமிநாதன், ஒரு கல்வியாளர். யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இருந்த சைவ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் நீண்ட காலம் அதிபராகப் பணியாற்றியவர். இவருடைய தொடர்புகள் காரணமாக, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்த புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களான சி. கணேசையர், க. வேந்தனார், சோ. இளமுருகனார், நவநீதகிருஷ்ண பாரதி, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் தமிழ் படிக்கும் வாய்ப்பு சுசீந்திரராஜாவுக்குக் கிடைத்தது.[2]
பட்டப் படிப்பு
தொகுஇலங்கையில் பள்ளிக்கல்வி பெற்று, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் மு. வரதராசன் தலைமையில் இருந்த தமிழ்த்துறையில் 1958 இல் இளங்கலை (சிறப்பு) பட்டம் (1958) பெற்றார். அப்போது இவரது ஆசிரியர்களாக பேராசிரியர்கள் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், துரையரங்கனார் ஆகியோர் இருந்துள்ளனர்.[3] 1959-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டமும் பெற்ற பின்னர், இலங்கை திரும்பி, ஊடகத்துறையில் சிறிதுகாலம் பணியாற்றினார்.[3] பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் முதுகலைப் படிப்பில் சேர்ந்து, தொடர்ந்து மீனாட்சிசுந்தரனாரிடமும், பேராசிரியர் ச. அகத்தியலிங்கத்திடமும் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு, மொழியியல் துறையின் முதல் முனைவர் பட்ட (1967) மாணவரானார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். "இலங்கைத் தமிழ்" பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார். இவரது ஆய்வேட்டுக்கு பேராசிரியர் ஜேம்ஸ் கெயிர் (கோர்னெல் பல்கலைக்கழகம், அமெரிக்கா), பேராசிரியர் ஏ. இ. ஆஷர் (எடின்பரோ பல்கலைக்கழகம்) ஆகியோர் புறத் தேர்வாளர்களாகயிருந்தனர். உருசியப் பேராசிரியர் எம். ஆந்திரனோவ் இவரது ஆய்வேட்டைப் பாராட்டியுள்ளார்.[3]
பணி
தொகுபின்னர் இலங்கை திரும்பி, கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையிலும் (1971), களனிப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையிலும் பணியாற்றினார்.[3] 1980 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவரானார். அங்கு அவர் மொழியியல் துறையையும் நிறுவி அதன் மூத்த பேராசிரியராகப் பணியாற்றினார். 1987-இல் ஓராண்டு இங்கிலாந்து சென்று பேராசிரியர் ஆஷருடன் மொழியியல் ஆய்வு மேற்கொண்டார். 1998 ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.[3]
இவருடைய ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு “Studies in Srilankan Tamil Linguistics and Culture” என்ற நூலை இவருடைய மாணவர்கள் வெளியிட்டனர்.[3]
இறப்பு
தொகுபேராசிரியர் சு. சுசீந்திரராஜா 2019 சனவரி 11 அன்று கொழும்பில் தனது 85-ஆவது அகவையில் காலமானார்.[4]
இவரது நூல்கள்
தொகு- பண்டிதமணியின் பேரும் புகழும் (1993)
- தமிழ் மொழியியற் சிந்தனைகள் (ஆய்வுக் கட்டுரைகள், 1999)
- ஈழத்துப் பண்டிதமணி (2002)
- கல்விசார் தொடர்புகள் நினைவுகள் சிந்தனைகள் (2004)
- தமிழியல்சார் சிந்தனைத் துளிகள் (2009)
- இலங்கை இந்திய தமிழ் வழக்குகளில் சொற்களின் பயன்பாடு (2015)
- தமிழியல்சார் சிந்தனைத் துளிகள் தொகுதி - 2 (2017)
மேற்கோள்கள்
தொகு- ↑ சுசீந்திரராஜா, சு., தமிழியல்சார் சிந்தனைத் துளிகள்-2, சேமமடு பதிப்பகம், 2011, பக். vii. (சி. தில்லைநாதனின் முன்னுரை)
- ↑ Pushparatnam, P., and Sivaranee, S., Professor Suseendrarajah (A biographical sketch), in Studies in Sri Lankan Tamil Linguistics and Culture - Professor Swaminathan Suseendrarajah Sixty Fifth Birthday Commemoration Volume - Selected Papers of Professor Suseendrarajah, University of Jaffna, 1998, p. v.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 பேரா. சு. சுசீந்திரராஜா, பேராசிரியர் ந. தெய்வசுந்தரம், மே 2020
- ↑ "ஈழத்தின் முதலாவது மொழியியல் ஆசான் பேராசிரியர் காலமாகியுள்ளார்". செண்பகம்.ஓர்க். 13 சனவரி 2019 இம் மூலத்தில் இருந்து 4 அக்டோபர் 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241004072619/https://senpakam.org/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/. பார்த்த நாள்: 4 அக்டோபர் 2024.