சு. ப. திண்ணப்பன்

முனைவர் சு. ப. திண்ணப்பன் (பிறப்பு: சூன் 19 1935), தமிழ்நாட்டின், தேவகோட்டை எனுமிடத்தில் பிறந்த இவர் தனது ஆரம்ப, உயர்நிலைக் கல்வியை அங்கேயே முடித்து பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி இலக்கியத்தில் இளங்கலை ஹானர்ஸ் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்றார். பின்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் டிப்ளோமா பட்டத்தினையும், முனைவர் பட்டத்தினையும் பெற்றார்.

தொழில் முயற்சி தொகு

அதிராம்பட்டினம் காதர் மொஹிதீன் கல்லூரியில் ஆசிரியராக இணைந்து பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகவும், மொழியியல் துறை இணைப் போராசிரியராகவும் தனது பணியைத் தொடர்ந்த இவர் கோலாலம்பூரிலுள்ள மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வுப் பிரிவில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்து சிங்கப்பூர் கல்விக் கழகத்தில் விரிவுரையாளராகவும், கல்விக் கழகத் தமிழ்த்துறைத் தலைவராகவும் தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கலைப் பள்ளியில் மூத்த விரிவுரையாளராகவும், இணைப் பேராசிரியராகவும், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய கல்வித் திட்டப் பகுதி நேர பணியாளராகவும், கலிஃபோர்னியா, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், லண்டன் கீழ்த்திசை ஆபிரிக்க ஆய்வு நிலையம் ஆகியவற்றில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் மலேசியாவின் எச்.எஸ்.சி. தேர்வுக் குழு உறுப்பினராகவும், மலேசியாவின் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் தேர்வுக்கு தலைமைத் தேர்வு அதிகாரியாகவும், சிங்கப்பூர் அரச சேவைக் கழகத்தின் மொழிபெயர்ப்பாளர் தேர்வு தமிழ் மொழிக்கான தேர்வு அதிகாரியாகவும், அண்ணாமலை, சென்னை, மதுரை காமராஜ், கோயம்புத்தூர் பாரதியார், திருச்சி பாரதிதாசன், பாண்டிச்சேரி, அன்னை தெரேசா, மைசூர், காரைக்குடி அழகப்பா, காந்திகிராம கிராமப்புற, திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா போன்ற பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டத்திற்கு வெளிநாட்டுத் தேர்வதிகாரியாகவும் இவர் இருந்துள்ளார். மேலும் டிப்ளோமா இலக்கியப் பட்டத்திற்காக மதுரை காமராஜ், தஞ்சாவூர் தமிழ், சென்னை மொழியியலுக்கு மலாயா போன்ற பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டுத் தேர்வதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

இலக்கியப் பணி தொகு

தமிழ்மொழி, கற்றல் கற்பித்தல் ஆசிரியர்களுக்கான வழிகாட்டிகள், ஒலியியல் மற்றும் உச்சரிப்புப் பயிற்சி, தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள், கணினியும் தமிழும், சமயமும் தமிழும் போன்றவற்றை உள்ளிட்ட மொழி தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். அத்துடன், சமயம், இலக்கணம், மொழியியல், பண்பாடு தொடர்பான இவரது கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரைகளும் சர்வதேச ரீதியில் பல்வேறு ஆய்வுக் களஞ்சியங்களில் வெளிவந்துள்ளன. சிங்கப்பூர் எழுத்தாளர்களின் நூல்கள் பலவற்றிற்கு அணிந்துரைகளை எழுதியுள்ள இவர் சிங்கப்பூர்த் தமிழிலக்கியம் பற்றி பல விரிவான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

எழுதியுள்ள நூல்கள் தொகு

  • தமிழ் கவிக்கோவை
  • தமிழ் மொழியில் 13 எழுத்துச் சீர்திருத்தங்களைக் கற்பித்தல்
  • மொழி கற்றலில் பயன்பாட்டு நோக்கங்கள்
  • இந்து சமயத்தில் சைவம்
  • சிங்கப்பூர்த் தமிழர்கள் தமிழ் மொழியின்பால் காட்டும் அணுகுமுறையின் ஆய்வு
  • தமிழ் இலக்கியம் ஒரு நூற்றாண்டு
  • தமிழில் ஒலியியலும் உச்சரிப்பும்
  • சிங்கப்பூரில் தமிழ் மொழியும் இலக்கியமும்
  • கணினியும் தமிழ் கற்பித்தலும்

உசாத்துணை தொகு

  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சு._ப._திண்ணப்பன்&oldid=2713078" இலிருந்து மீள்விக்கப்பட்டது