சோட்டோ சோனா மசூதி
சோட்டோ ஷோனா (Choto Sona Mosque) (சிறிய தங்க மசூதி ) என்பது வங்காளதேசத்தின்சபாய் நவாப்கஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மசூதி கோட்வாலி வாயிலுக்கு தெற்கே சுமார் 3 கிலோமீட்டர் (1.9 மை) தொலைவிலும், பிரோசுபூரிலுள்ள முகல் தகாகானா வளாகத்தின் தென்கிழக்கே 0.5 கிலோமீட்டர் (0.31 மை) தொலைவிலும் அமைந்துள்ளது.
சோட்டோ சோனா மசூதி | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சபாய் நவாப்கஞ்ச் மாவட்டம், வங்காளதேசம் |
புவியியல் ஆள்கூறுகள் | 24°48′49″N 88°08′36″E / 24.8137°N 88.1432°E |
சமயம் | இசுலாம் |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1493 க்கும் 1519 க்கும் இடையில் |
செயற்பாட்டு நிலை | நல்ல நிலையில் உள்ளது |
வரலாறு
தொகுஇந்த மசூதி வங்காள சுல்தான் அலாவுதீன் உசைன் ஷா ஆட்சியின் போது கி.பி.1493 மற்றும் 1519 க்கு இடையில் கட்டப்பட்டது. மசூதியின் பதினைந்து குவிமாடங்கள் ஒரு காலத்தில் தங்கத்தால் பூசப்பட்டதால், மசூதிக்கு சோட்டோ ஷோனா மஸ்ஜித் ( சிறிய தங்க மசூதி ) என்று பெயர் வந்தது. [1] வங்காளதேச அரசாங்கத்தின் தொல்பொருள் மற்றும் அருங்காட்சியகத் துறையின் பாதுகாப்பின் கீழ் இந்த மசூதி பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாகும். கட்டிடத்திற்கு அதன் பெயரைக் கொடுத்த தங்க முலாம் இப்போது இல்லை. வடக்கிலிருந்து தெற்கே 43.5 மீ கிழக்கிலிருந்து மேற்காக 42 மீ பரப்பளவைக் கொண்ட மசூதி வளாகம், முதலில் வெளிப்புறச் சுவரால் சூழப்பட்டிர்ந்தது. (இப்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளது) கிழக்குப் பக்கத்தின் நடுவில் ஒரு நுழைவாயிலும் இருந்தது.
வடிவமைப்பு
தொகுசெங்கல் மற்றும் கற்களால் கட்டப்பட்ட இந்த மசூதி, வடக்கிலிருந்து தெற்கு மற்றும் 15.9 மீட்டர்கள் (52 அடி) கிழக்கிலிருந்து மேற்கு வரை 25.1 மீட்டர்கள் (82 அடி) வெளிப்புற பரிமாணங்களைக் கொண்ட ஒரு செவ்வக வடிவத்தை உருவாக்குகிறது. நான்கு சுவர்களும் வெளிப்புறமாகவும், ஓரளவிற்கு உள்புறமாகவும் கிரானைட் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 1897 ஆம் ஆண்டு பூகம்பத்தால் ஏற்பட்ட அழிவுக்குப் பிறகு மேற்கொண்டுவரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக மேற்குச் சுவரின் தெற்குப் பகுதியிலிருந்த கற்கள் மறைந்துவிட்டன. கட்டிடத்தின் நான்கு வெளிப்புற கோணங்களும் பலகோண கோபுரங்களுடன் பலப்படுத்தப்பட்டுள்ளன. மூலைகள் வளைவாகவும், கூரையிலிருந்து மழை நீரை வெளியேற்றும் வகையில் கல் சாக்கடைகளைக் கொண்டுள்ளன. கிழக்கு முகப்பில் ஐந்து வளைவு கதவுகளும், வடக்கு மற்றும் தெற்கு சுவர்களில் தலா மூன்று கதவுகளும் உள்ளன. கிழக்குச் சுவரில் உள்ள ஐந்து வளைவுப் பாதைகளுக்கு ஏற்ப, மேற்குச் சுவரில் ஐந்து அரை வட்ட மிஹ்ராப்கள் உள்ளன. இந்த மிஹ்ராப்களில் பெரும்பாலானவற்றின் கற்கள் மறைந்துவிட்டன.
அலங்காரம்
தொகுநுழைவாயிலுக்கு கிழக்கே 14.5 மீ தொலைவில், குரானின் வசனங்கள் மற்றும் கடவுளின் சில பெயர்கள் பொறிக்கப்பட்ட இரண்டு கல்லறைகளைக் கொண்ட ஒரு கல் மேடை உள்ளது. இங்கு புதைக்கப்பட்டவர் யார் என்று தெரியவில்லை. இவை மசூதியைக் கட்டிய வாலி முகமது மற்றும் அவரது தந்தை அலி ஆகியோரின் கல்லறைகள் என்று வரலாற்றாளர் கன்னிங்ஹாம் கூறுகிறார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Chhota Sona Masjid. Gaur | By Bangladesh Channel. Bangladesh.com. Retrieved on 2012-08-22.
மேலும் படிக்க
தொகு- Husain, A. B. (2007). Architecture – A History Through Ages. Dhaka: Asiatic Society of Bangladesh, p. 117 இணையக் கணினி நூலக மையம் 298612818, LCCN 2008419298-{{{3}}}.
- Abu Sayeed M Ahmed (2006) Mosque Architecture in Bangladesh. UNESCO Dhaka. p. 102 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9843234693.
- The Islamic heritage of Bengal (1984) UNESCO, p. 69