சியார்ச் வாசிங்டன்

1789 முதல் 1797 வரை இருந்த முதல் அமெரிக்க அதிபர்
(ஜார்ஜ் வாஷிங்டன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சியார்ச் வாசிங்டன் (ஜார்ஜ் வாஷிங்டன்; ஜோர்ஜ் வொஷிங்ரன்; பெப்ரவரி 22, 1732 -டிசம்பர் 14, 1799)[1] அவர்கள் அமெரிக்கக் கண்டத்தின் படையைத் தலைமை தாங்கி, பிரித்தானியரை அமெரிக்கப் புரட்சிப் போர் என்னும் அமெரிக்க விடுதலைப் போரில் (1775-1783) தோற்கடித்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் எட்டு ஆண்டுகள்- 1789 முதல் 1797 வரையிலும், ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தலைமை தாங்கினார். விடுதலை பெற்ற நாடாக ஐக்கிய அமெரிக்கா திகழ்ந்த துவக்க ஆண்டுகளில் இவர் ஆற்றிய நாடு நிறுவும் பணிகளை நோக்கி இவரை ஐக்கிய அமெரிக்காவின் தந்தை எனப் போற்றுவர்.[2]

சியார்ச் வாசிங்டன்
முதல் குடியரசுத் தலைவர்
பதவியில்
ஏப்ரல் 30 1789 – மார்ச் 4 1797
முன்னையவர்(யாரும் இல்லை)
பின்னவர்சான் ஆடம்சு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புபெப்ரவரி 22 1732
வெசிட்மோர்லாண்டு கவுண்ட்டி, வர்ச்சீனியா
இறப்புடிசம்பர் 14 1799, அகவை 67
வெர்னான் மலை, வர்ச்சீனியா
தேசியம்அமெரிக்கர்
துணைவர்மார்த்தா வாசிங்டன்
கையெழுத்து

இளமைக்கால வாழ்க்கை மற்றும் குடும்பம்

தொகு

சியார்ச் வாசிங்டனின் தந்தை அகஸ்டின் வாஷிங்டன் நிறைய நிலங்களையும் அடிமைகளையும் பெற்றிருந்த ஒரு செல்வந்தராகவும், இலட்சியமிக்க மனிதராகவும் இருந்தார். இவர் நிறைய ஆலைகளைக் கட்டினார். புகையிலை விவசாயம் செய்தாார். ஒரு காலத்தில், அவர் இரும்பு சுரங்கங்களைத் திறக்கும் ஆர்வமும் கொண்டிருந்தார். அவர் ஜேன் பட்லரை திருமணம் செய்துகொண்டார், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர். 1729 ஆம் ஆண்டில் ஜேன் இறந்தார். பின்னர் 1731 ஆம் ஆண்டில் ஆகஸ்டின் மேரி பாலை மணந்தார். அகஸ்டின் மற்றும் மேரி ஆகியோருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் சியார்ச்சு வாசிங்டன் மூத்தவராக இருந்தார். சியார்ச் வாஷிங்டனின் தந்தை 11 வயதில் இறந்துவிட்டார், அவர் தனது அண்ணன் லாரன்ஸின் கவனிப்பில் வளர ஆரம்பித்தார். அண்ணன் லாரன்சு அவருக்கு நல்ல வளர்ப்பை அளித்தார். 1748 ஆம் ஆண்டில், அவர் 16 வயதாக இருந்தபோது, வர்ஜீனியாவின் மேற்குப் பகுதியிலுள்ள நிலப்பகுதியை ஆய்ந்து நில அளவை மேற்கொள்ளும் குழுவுடன் பயணித்தார். அடுத்த வருடம், லார்டு ஃபேர்ஃபாக்சின் உதவியுடன் வாஷிங்டன் கல்பெபர் கவுண்டியின் அதிகாரப்பூர்வ நில அளவையாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கு அவர் கல்பெபர், பிரெட்ரிக் மற்றும் அகஸ்டா மாவட்டங்களில் நில அளவை மற்றும் ஆய்வில் மிகவும் சுறுசுறுப்பாக ஈடுபட்டார். இந்த அனுபவம் அவரை வளமிக்க மனிதராகவும், அவரது உடல் மற்றும் மனதை வலிமை மிக்கதாகவும் மாற்றியது எனலாம்.[3]

ஓகியோ ஆற்றங்கைரயும் வாசிங்டனும்

தொகு

மெக்சிக்கோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள அமெரிக்க கண்டத்தின் கட்டுப்பாட்டிற்கான போட்டியின் காரணமாக இங்கிலாந்து மற்றும் பிரான்சு ஆகியவை ஓஹியோ நதி பள்ளத்தாக்கின் மீது சச்சரவுகளைக் கொண்டிருந்தன. பிரஞ்சு கனடாவில் இருந்து அந்த பிராந்தியத்தில் நுழைந்து பூர்வீக அமெரிக்கர்களுடன் கூட்டுக்களை உருவாக்கியது. வர்ஜீனியாவில் உள்ள ஆங்கிலேய விசுவாச அரசாங்கம் இந்த ஊடுருவல்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. பிரித்தானிய இராணுவ தூதுவராக பணிபுரிந்த வாசிங்டன், தொலைதூரப் பகுதிக்கு தன் விருப்பத் தொண்டர்கள் குழுவை வழிநடத்திச் சென்று, எதிரி துருப்புக்களின் பலம் பற்றிய தகல்வகளை சேகரித்தார். பிரஞ்சு நாட்டினர் அந்தப் பிராந்தியத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். அவர்கள் மறுத்துவிட்டனர். வாசிங்டன் திரும்பியபோது, மேலும் பிரெஞ்சு விரிவாக்கத்தை நிறுத்துவதற்காக ஓகியோ ஆற்றின் மீது கோட்டை கட்டப்பட வேண்டும் என்று முன்மொழிந்தார். 1754 ஆம் ஆண்டு வசந்த காலத்தில், மிகவும் சிறப்பாக பயிற்சியளிக்கப்படாத, ஆயுதம் தாங்கிய 150 நபர்களைக் கொண்ட படைப்பிரிவு ஒன்றை உருவாக்கினார். ஓகியோ ஆற்றின் கரையில் இவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மரக்கட்டைகளால் ஆன தடுப்பு ஒன்றை அமைக்கக் கிளம்பினார். இம்மரக்கட்டைத் தடுப்பினை அவசியமான கோட்டை என்று அழைத்தார். வழியில், அவர் ஒரு சிறிய பிரெஞ்சு படையை எதிர்கொண்டு உடனடியாக அதைத் தாக்கி, பத்து பிரெஞ்சு வீரர்களைக் கொலை செய்தார். இந்த மோதலின் போது வர்ஜீனியாவில் இருந்து வந்த அறியப்படாத இளம்போராளியும் துப்பாக்கியால் சுடப்பட்டார். பிரித்தானிய தூதருக்கு ஒரு செய்தியை வழங்குவதற்காக துாதுவராக வந்த ஒரு பிரெஞ்சுப் படைவீரர் கொல்லப்பட்டதால், சர்வதேச நெறிமுறைகளின்படி வாசிங்டன் துாதரைக் கொன்ற கடுமையான விதிமீறலில் ஈடுபட்டு விட்டதாக குற்றம் சாட்டப்பட்டார். இதுவே பிரெஞ்சு-செவ்விந்தியப்படைகளுக்கும் அமெரிக்கர்களுக்குமான போருக்கான முதல் காரணமாயிற்று. இந்த இடையூறுகளின் விளைவுகள் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை மற்றும் வெர்சாய்ஸ் ஆகிய இடங்களுக்குச் சென்றன. இப்பகுதியில் உள்ள பூர்வீக அமெரிக்கர்கள், பிரஞ்சு-அமெரிக்க முரண்பாட்டை உணர்ந்து, பிரஞ்சுக்கு ஆதரவளித்தனர். இந்த பிரெஞ்சு மற்றும் பூர்வீக அமெரிக்க கூட்டுப்படையானது, வாசிங்டன் மற்றும் அவரது படைப்பிரிவை திணறடித்தனர். அவரால் உருவாக்கப்பட்ட மரத்தடுப்புகளை சிதறடித்தனர். வாசிங்டன் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட ஒரு சரணடையும் பத்திரத்தில் கையொப்பமிட்டு விட்டு அந்த இடத்தை விட்டுச் செல்ல பணிக்கப்பட்டார். அந்த ஒப்பந்தத்தில் வாசிங்டன் இராணுவ நெறிமுறைகளை மீறியதாக ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பிரான்சு தன் மக்களிடம் பெரிய வெற்றியாகக் கொண்டாடியது. பிரித்தானிய படையில் வாசிங்டனுக்கான பதவி உயர்வின் போது புறக்கணிக்கப்பட்டார். பிரிட்டிஷார் தன்னை அவமதித்து விட்டதாக உணர்ந்து வாசிங்டன் இராணுவத்திலிருந்து பதவி விலகினார்.

ஓகியோ ஆற்றின் பள்ளத்தாக்கில் இருந்து பிரஞ்சுப்படையை ஓட்ட சிறந்த வழி இராயல் இராணுவத்திலிருந்து துருப்புகளில் அனுப்பப்பட வேண்டும் என்று இங்கிலாந்து முடிவு செய்தது. அவர்களுடைய தளபதி ஜெனரல் எட்வர்ட் பிராடோக் மோதலில் அனுபவமுள்ள ஒரு உதவியாளர் தேவை என்பதால் பதவியை வாசிங்டனுக்கு வழங்கினார். ஆங்கிலேய இராணுவத்திடமிருந்து சாதகத்தைப் பெறுவதற்காக வாசிங்டன் இந்தப் பொறுப்பை ஆர்வமாக ஏற்றுக்கொண்டார். 1755 ஜூலையில், பிரித்தானியப்படை டுக்கென் கோட்டையில் (Fort Duquesne) பிரெஞ்சுப் படையை அணுகியது. பிரெஞ்சு மற்றும் செவ்விந்தியத் துருப்புக்கள் ஐரோப்பாவின் ஒழுங்கமைக்கப்பட்ட படைகளை விட மிகவும் வித்தியாசமாகப் போராடினார்கள் என்று வாசிங்டன் பிராடோக்கை எச்சரித்தார். ஆனால், அவரது எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது. ஒரு சில நாட்களுக்குப் பிறகு, பிரித்தானிய படையை பூர்வீக அமெரிக்கப் படையினர் தாக்கி முற்றிலும் முறியடிக்கப்பட்டனர். வாசிங்டன் அமர்ந்து போரிட்ட இரு சுடப்பட்டிருந்த போதிலும், தைரியமாக போராடினார். பிராட்டோக் கொல்லப்பட்டார், அவரது பிரித்தானிய துருப்புக்கள் மிரட்சியடைந்து காடுகளில் ஓடி ஒளிந்து கொண்டனர்.விட்டனர். வாசிங்டனின் மேலங்கி வரை நான்கு தோட்டாக்கள் உரசிச்சென்றன. உயிரோடு தப்பியது பெரிய செயலாயிற்று.[4] 1755 ஆம் ஆண்டு ஆகஸ்டில், தனது 23 ஆம் வயதில் விர்ஜினாவினுடைய படைத்தலைவராக நியமிக்கப்பட்டார். 400 மைல் நீளமுடைய எல்லைப்புறத்தைக் கண்காணிக்கவும், பாதுகாக்கவும் அவருக்கு ஒத்துழைப்பளிக்க விருப்பமில்லாத 700 ஒழுக்கக்கேடான காலணிய படைகளுடன் அனுப்பப்பட்டார். இது சலிப்பூட்டக்கூடிய பணியாக இருந்தது. 1757 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் அவர் உடல்நலம் குறைந்து பேதியுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.[5] தொடர்ந்து கடுமையாகப் பாடுபட்டும் ஆங்கிலேய இராணுவத்தில் உரிய பதவியளிக்கப்படாததால், 1758 ஆம் ஆண்டு டிசம்பரில் இவர் தனது பதவியிலிருந்து விலகினார்.[6] 1753 முதல் 1758 வரையிலும் இவர் இராணுவத்தில் பணிபுரிந்த போது பிரெஞ்சு மற்றும் செவ்விந்தியப் போர்களில் தீவிரமாகப் பங்குபெற்றது இவருக்கு இராணுவ அனுபவத்தையும், புகழையும் தந்தது.[7]

அமெரிக்கப் புரட்சிக்கு முந்தைய காலம் (1759 - 1774)

தொகு

பிரெஞ்சு,செவ்விந்தியப் போருக்குப் பின்னர், வாசிங்டன் விதவையான மார்தா டான்ட்ரிட்ஜ் கஸ்டிஸை மணந்தார். தனது சகோதரர் லாரன்சு இறப்புக்குப் பின் மவுண்ட் வெர்னான் தோட்டத்திற்கு பொறுப்பு எடுத்துக் கொண்டார். மார்த்தாவின் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பையும் பார்த்துக் கொண்டார். வாசிங்டனுக்கும் மார்த்தாவிற்குமான திருமண வாழ்வில் குழந்தைகள் ஏதும் இல்லை. தனது பண்ணையை மிக அதிக அளவில் கவனித்து தனது சொத்துக்களை அதிகப்படுத்தினார். அவர் தனது வாழ்வு முழுவதுமே, விவசாயத்தை தனது மதிப்புமிக்க தொழிலாகக் கருதினார். சிறிது சிறிதாக தனது நிலப்பரப்பை 8000 ஏக்கர் அளவிற்கு அதிகப்படுத்தினார். சியார்ச் வாசிங்கடன் விர்ஜீனியாவின் மிகப்பெரிய நில உரிமையாளராகி விர்ஜீனியா பேரவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். விரைவிலேயே, வாசிங்டன் மற்றும் அவரோடு இணையாக இருந்த நில உரிமையாளர்கள் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் நேர்மையற்ற அணுகுமுறையைக் குறித்து அதிருப்தியடைந்திருந்தார்கள். அவர்கள் தங்களது உரிமைக்காக விவாதிக்கவும், போராடவும் தொடங்கியிருந்தார்கள். இதற்கு ஆங்கிலேய அரசு மறுத்த போது ஒரு புரட்சியில் ஈடுபடவும் தயாராயினர்.[8]

அமெரிக்கப்புரட்சி

தொகு

• போஸ்டன் முற்றுகையின் போது 1775 ஜூலையில் வாசிங்டன் பெருநிலப்பகுதியின் இராணுவத்தின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டார். எட்டு ஆண்டுகளுக்கு நீடித்திருந்த போரின் போக்கின்போது, அவர் நல்ல முறையில் பயிற்சி பெறாத, போதுமான அளவு படைக்கலன்கள் வழங்கப்படாத படைகளை வைத்துக்கொண்டு, அவர்களைத் தொடர்ந்து ஊக்குவித்து சிறந்த தளபதியாக முன்னணியில் இருந்தார்.

• தொடக்கத்தில், அவர் வென்றதை விட அதிக போர்களில் இழந்தார்; ஆனால் அவரது நிலைப்பாட்டைக் கைவிடாமல் தொடர்ந்து போராடினார். அந்தக் காலகட்டத்தில் பிரித்தானிய படைகளைத் தொடர்ந்து துன்புறுத்துவது, பெரிய நடவடிக்கைகளைத் தவிர்ப்பது போன்றவை அவரது உத்தியாக இருந்தது. பின்னர் அவர் தனது இராணுவத்தினருக்கு பயிற்சியளிப்பதன் மூலமாகவும் படைத்தளவாடங்களை வழங்குவதன் மூலமாகவும், ஒழுங்கமைக்கத் தொடங்கியதால் நிலைமை முன்னேற்றமடையத் தொடங்கியது.

• 1781 ஆம் ஆண்டு அக்டோபரில் பெருநிலப்பகுதியின் (கான்டினென்டல்) படைகள் யார்க் டவுனில் நிறுத்தப்பட்ட பிரித்தானிய துருப்புக்களை கைப்பற்றிய போது யுத்தம் முடிவுக்கு வந்தது. அக்டோபர் 19, 1781 அன்று சரணடைதல் நிகழ்ந்தது. வாசிங்டன் தேசிய அளவிலான நாயகன் ஆனார்.

• 1783 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் நாள் பாரிசு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் வரை தலைமை படைத்தளபதியாக வாசிங்டன் தொடர்ந்தார். குறைவாக ஊதியம் அளிக்கப்பட்ட பெருநிலப்பகுதியின் இராணுவத்தை சமாதானப்படுத்தும் பொருட்டு முறையான இழப்பீடு கேட்டு அப்பகுதியின் காங்கிரஸிற்கு ஒரு மனுவை கையெழுத்திட்டனுப்பினார். அதன் பிறகு, அவர் தனது வேலையை விட்டுவிட்டு, மவுண்ட் வெர்னானுக்குத் திரும்பினார்.[9]

முதல் அமெரிக்க குடியரசுத் தலைவர்

தொகு

போருக்குப் பிறகு, வாசிங்டன் தனது தோட்டத் தொழிலில் ஈடுபடுவதையே விரும்பினார். தனது விவசாயப் பண்ணையில் நீண்ட காலம் பணியாற்றாமல் போனதால் உண்டான பாதிப்புகளையெல்லாம் சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் கூட தேசிய அரசியலைத் தொடர்ந்து உற்றுநோக்கி வந்தார். 1785 ஆம் ஆண்டில் மவுண்ட் வெர்னான் மாநாட்டை தனது பண்ணைத் தோட்டத்தில் வைத்து நடத்தினார். 1786 ஆம் ஆண்டில் அன்னபோலியில் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால், 1787 ஆம் ஆண்டில் நடைபெற்ற அரசியலமைப்புப் பேரவையில் தலைமை தாங்க ஒத்துக்கொண்டார். அவரது ஆளுமையின் தாக்கம் நிறைந்த தலைமைப்பண்பு வந்திருந்த பெருமைமிகு பிரதிநிதிகளைக் கவர்ந்தது. அவரே அமெரிக்காவின் முதல் குடியரசுத்தலைவராக மிகப் பொருத்தமானவர் என்று அவர்கள் கருதினர்.

1789 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் நடைபெற்ற முதல் குடியரசுத்தலைவர் தேர்தலில் வாசிங்டன் அனைத்து வாக்குகளையும் வென்றார். அவர், 1789 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் அலுவல் உறுதிமொழியை நியூயார்க் நகரத்தின் ஃபெடரல் அரங்கத்தின் மேல்மாடத்தில் எடுத்துக்கொண்டார். கடினமான அந்தக் காலகட்டத்தில் தனது தொலைநோக்கு கொண்ட நிர்வாகத்திறமையை நிரூபித்தார். அவரது முடிவுகள் பல முன் உதாரணங்களாய் அமைந்தன. ஆரம்பத்தில் $ 25,000 வருடாந்திர சம்பளத்தை எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டிய அவர், தன்னுடைய முடிவு பணக்காரர்கள் மட்டுமே இந்தப் பதவிக்கு வர முடியும் என்ற தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாதே என்பதற்காக, ஊதியத்தை ஏற்றுக்கொண்டார். புதிய அரசியலமைப்பை ஒரு செயல்படும் கருவியாக மாற்றியமைத்தார். அதே நேரத்தில் ஒருமைப்பாடு மற்றும் விவேகத்திற்கான எடுத்துக்காட்டாக விளங்கினார். குடியரசுத் தலைவரின் பட்டங்கள் மற்றும் விழாக்கள் குடியரசு நாட்டின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கின்றனவா என்பதை கண்காணிப்பதில் உறுதியாய் இருந்தார். குடியரசுத் தலைவரை அழைப்பதற்கு பேரவை உறுப்பினர்கள் மிகவும் மேன்மைதங்கிய பல அடைமொழிகளை உருவாக்கிக் கொடுத்தபோதும், திருவாளர். குடியரசுத்தலைவர் என்றழைப்பதையே விரும்பினார். 1792 ஆம் ஆண்டில், முதல் பதவிக்கால முடிவில், வாசிங்டன் மீண்டும் ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 1796-ல் அது முடிவடைந்தபோது, மீண்டும் அப்பதவியில் தொடர்வதை அவர் உறுதியாய் மறுத்து, மவுண்ட் வெர்னானுக்குத் திரும்பினார். இதன் மூலம் இன்றளவும் ஒரு குடியரசுத் தலைவர் இரண்டு முறைகள் மட்டுமே பதவி வகிக்கலாம் என்ற மற்றுமொரு முன்னுதாரணத்தை வாசிங்டன் உருவாக்கிச் சென்றுள்ளார்.[9]

இறப்பு

தொகு

1799 ஆம் ஆண்டின் ஒரு டிசம்பர் மாதத்தில், வாசிங்டன் பனிப்பொழிவின் நடுவே, குதிரையின் மீதமர்ந்தவாறு தனது பண்ணைத் தோட்டத்தினை ஆய்விடுவதில் அதிக நேரம் செலவிட்டார். தனது நனைந்த உடைகளுடன் வீடு திரும்பி இரவு உணவை முடித்துவிட்டு படுக்கைக்குச் சென்றார். அடுத்த நாள் டிசம்பர் 13 ஆம் நாள் காலை கடுமையான தொண்டைப்புண்ணுடன் கண் விழித்தார். அந்த நாளின் நேரம் செல்லச்செல்ல மிகவும் நிலைமை மோசமடைந்தது. பல மருத்துவர்களின் சிகிச்சைகள் பலனின்றி, டிசம்பர் 14 ஆம் நாள் மாலை அவர் இறந்தார்.[10]

மேற்கோள்கள்

தொகு
  1. "George Washington". history.com. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2017.
  2. Grizzard 2002, ப. 105–07
  3. "George Washington". Biography.com. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2017.
  4. Stephen Knott. "George Washington: Life Before the Presidency". UVA MILLER CENTER. பார்க்கப்பட்ட நாள் 27 அக்டோபர் 2017.
  5. "George Washington". Biography.com. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2017.
  6. "A Short Biography of George Washington" (PDF). What So*Proudly*We hail. Archived from the original (PDF) on 2018-11-08. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2017.
  7. Michael H Hart (1987). The 100. Citadel Press. pp. 129.
  8. Biography.com Editors. "George Washington". Biography.com. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2017. {{cite web}}: |author= has generic name (help)
  9. 9.0 9.1 Editors, TheFamousPeople.com (Last updated June 01, 2017). "George Washington". The Famous People. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2017. {{cite web}}: |author= has generic name (help); Check date values in: |date= (help)
  10. "George Washington". Editors, Biography.com. Biography.com. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியார்ச்_வாசிங்டன்&oldid=3924981" இலிருந்து மீள்விக்கப்பட்டது