ஜெகசிற்பியன்

ஜெகசிற்பியன் (19 சூன் 1925 – 26 மே 1978) தமிழ் நாட்டின் புனைகதை எழுத்தாளர்களில் ஒருவர்.

ஜெகசிற்பியன்
பிறப்புபாலையன்
(1925-06-19)19 சூன் 1925
மயிலாடுதுறை, தமிழ்நாடு, இந்தியா
இறப்புமே 26, 1978(1978-05-26) (அகவை 52)
அறியப்படுவதுபுனைகதை எழுத்தாளர்
பெற்றோர்பொன்னப்பா - எலிசபெத்
வாழ்க்கைத்
துணை
தவசீலி
பிள்ளைகள்3 மகள்கள்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

மயிலாடுதுறையில், பொன்னப்பா - எலிசபெத் ஆகியோருக்குப் பிறந்தவர் ஜெகசிற்பியன். இவரது இயற்பெயர் பாலையன்.[1] தொழிற்கல்வி நிலையத்தில் பயிற்சி பெற்று, சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியம் கற்றார்.[1] 1939-இல் "நல்லாயன்' என்ற இதழில், இவரது முதல் கதை வெளிவந்தது.[1] பாலையா, தஞ்சை ஜெர்வாஸ், மாயவரம், பின்னர் ஜெகசிற்பியன் என்ற பெயர்களில் இவர் எழுதினார். பல்வேறு இதழ்களில் அவரது சிறுகதைகள் வெளிவந்தன. கவியோகி சுத்தானந்த பாரதியார், தன்னுடைய புதினம் ஒன்றில் சேக்சுபியரை 'செகப்ரியர்' என்று பெயரிட்டிருந்தார். இப்பெயரின் தாக்கத்தால், பாலையன், 'ஜெகசிற்பியன்' என்ற பெயரைத் தனது புனைப்பெயராக்கிக் கொண்டார்.[1]

1948-இல் இவர், "ஏழையின் பரிசு" என்ற தனது முதலாவது முதல் புதினத்தை எழுதினார். 'காதம்பரி' என்ற மாத இதழ் நடத்திய போட்டியில், "கொம்புத் தேன்" என்ற இவரது குறும் புதினம் முதல் பரிசைப் பெற்றது. புதுமைப்பித்தன், இக்கதையைப் பரிசுக்காகத் தேர்ந்தெடுத்தார். 1957-இல் ஆனந்த விகடன் நடத்திய வெள்ளி விழாப் போட்டியில் இவருடைய "திருச்சிற்றம்பலம்" என்ற வரலாற்றுப் புதினமும், 'நரிக்குறத்தி' என்ற சிறுகதையும் முதல் பரிசுகள் பெற்றன.[1]

1958-இல் அவருடைய "அக்கினி வீணை" என்ற சிறுகதைத் தொகுதி, 17 சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக வெளிவந்தது. அவரின் 154 சிறுகதைகள், 12 தொகுதிகளாகவும், இரு குறுநாவல்களும், இரு தொகுதிகளாகவும் மொத்தம் பதினான்கு தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றுள் முப்பது சிறுகதைகளும், குறுநாவல்களும், ஆங்கிலம், இடாய்ச்சு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கின்றன. 'பாரத புத்திரன்' சிறுகதைத் தொகுதிக்கு, தமிழ் வளர்ச்சித் துறை (1979-1981) பரிசளித்துச் சிறப்பித்தது.[1] வானொலிக்காகப் பல நாடகங்களையும் எழுதியுள்ளார். கொஞ்சும் சலங்கை திரைப்படத்திற்கு உரையாடலை எழுதியவர் ஜெகசிற்பியன்.

கொம்புத்தேன், தேவ தரிசனம், மண்ணின் குரல், ஜீவகீதம், மோக மந்திரம், ஞானக்குயில் உட்பட 16 சமூகப் புதினங்களை எழுதியிருக்கிறார். இவற்றில் பெரும்பாலானவை, பத்திரிகைகளில் தொடராக வெளிவந்து, நூல் வடிவம் பெற்றன. தமிழ் நேசன் என்ற மலேசியத் தினசரியில், அவர் எழுதிய 'மண்ணின் குரல்' சமூகப் புதினம், தனி நூலாக வெளியானது.

'ஜீவகீதம்' தொடர் புதினத்தை, 1965 சனவரி 17 முதல் கல்கி இதழில் அவர் எழுதினார். இப்புதினம், பதின்மூன்று இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

சென்னைப் பல்கலைக்கழகப் புகுமுக வகுப்பு, உயர்நிலைப் பள்ளிக் கல்வி ஆகியவற்றில், தமிழ்ப்பாட நூல்களில், 'அவன் வருவான்', 'நொண்டிப் பிள்ளையார்' ஆகிய சிறுகதைகள், பாடமாக வைக்கப்பெற்றன. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், முதுகை (எம்.ஏ.) வகுப்பிற்கு 'ஆலவாயழகன்' என்ற வரலாற்றுப் புதினத்தையும், 'நடை ஓவியம்' என்ற ஓரங்க நாடகத் தொகுப்பையும் பாடநூல்களாக வைத்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ் முதுகலை வகுப்பில், ஜெகசிற்பியன் சிறுகதைகள், வரலாற்றுப் புதினங்கள் பற்றிய ஆய்வையும், அமெரிக்க பிலடெல்பியாவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகம், தெற்காசிய மொழியியல் ஆராய்ச்சிப் பிரிவைச் சேர்ந்த திராவிட மொழிகள் ஆராய்ச்சித் துறையினர், 'ஜெகசிற்பியன் சிறுகதைகள்' சமூகப் புதினங்கள் பற்றி ஆராய்ச்சி செய்துள்ளனர். இவற்றை விட, பல்கலைக்கழகங்களில், இவரின் நூல்களைப் பலர் மேற்பட்டப் படிப்புக்கு ஆய்ந்துள்ளனர்.

இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ், இண்டர்நேஷனல் பயோ கிராபிக்ஸ் சென்டர், தனது சர்வதேச எழுத்தாளர்கள், ஆசிரியர்கள்- யார் எவர்? நூலின் எட்டாம் பதிப்பில், அவரது வாழ்க்கைக் குறிப்பை வெளியிட்டுள்ளனர்.

மறைவு

தொகு

இவரது 'ஊமத்தைப் பூக்கள்' என்ற சமூகப் புதினம் குமுதம் இதழில் தொடராக வெளிவரத் தொடங்கிய சில வாரங்களில், 1978 மே 26-ஆம் தேதி ஜெகசிற்பியன் காலமானார். இவருக்கு மனைவி தவசீலி, மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இவரது மறைவுக்குப் பிறகு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் 'திரு.வி.க. பரிசு' மற்றும் ரூ. 5000 தமிழக அரசால் ஜெகசிற்பியன் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.[1]

வெளியான ஜெகசிற்பியனின் படைப்புக்கள் சில

தொகு

சிறுகதைத் தொகுதிகள்

தொகு
  • அக்கினி வீணை (1958)
  • ஊமைக்குயில் (1960)
  • நொண்டிப் பிள்ளையர் (1961)
  • நரிக்குறத்தி (1962)
  • ஞானக்கன்று (1963)
  • ஒரு நாளும் முப்பது வருடங்களும் (இரு குறுநாவல்கள்; 1962)
  • இன்ப அரும்பு (1964)
  • காகித நட்சத்திரம் (1966)
  • கடிகாரச் சித்தர் (1967)
  • மதுரபாவம் (1967)
  • நிழலின் கற்பு (1969)
  • அஜநயனம் (1972)
  • ஒரு பாரதபுத்திரன் (1974)

சமூக நாவல்கள்

தொகு
  • ஏழ்மையின் பரிசு (1948)
  • சாவின் முத்தம் (1949)
  • கொம்புத் தேன் (1951)
  • தேவதரிசனம் (1962)
  • மண்ணின் குரல் (1964)
  • ஜீவகீதம் (1966)
  • காவல் தெய்வம் (1967)
  • மோகமந்திரம் (1973)
  • ஞானக்குயில் (1973)
  • கிளிஞ்சல் கோபுரம் (1977)
  • ஆறாவது தாகம் (1977)
  • காணக் கிடைக்காத தங்கம் (1977)
  • இனிய நெஞ்சம் (1978)
  • சொர்க்கத்தின் நிழல் (1978)
  • இன்று போய் நாளை வரும் (1979)
  • இந்திர தனுசு (1979)

வரலாற்று நாவல்கள்

தொகு
  • மதுராந்தகி (1955)
  • நந்திவர்மன் காதலி (1958)
  • நாயகி நற்சோணை (1959)
  • லவாயழகன் (1960)
  • மகரயாழ் மங்கை (1961)
  • மாறம்பாவை (1964)
  • பத்தினிக் கோட்டம் (பாகம் 1; 1964)
  • பத்தினிக் கோட்டம் (பாகம் 2; 1976)
  • சந்தனத் திலகம் (1969)
  • திருச்சிற்றம்பலம் (1974) - 1958ஆம் ஆண்டில் ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்
  • கோமகள் கோவளை (1976)

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 கலைமாமணி விக்கிரமன் (20-09-2012). ""எழுத்துலகச் சிற்பி' ஜெகசிற்பியன்". தினமணி. Archived from the original on 2020-03-30. பார்க்கப்பட்ட நாள் 2020-03-30. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகசிற்பியன்&oldid=3638198" இலிருந்து மீள்விக்கப்பட்டது