ஞானியாரடிகள்

சைவ சமயத்துறவி

ஞானியாரடிகள் (Gnaniyaqradikal) எனப்படும் ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் (பிறப்பு : பழனியாண்டி, 17 மே -1873 - 2 ஆகத்து 1942 ) என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டின் திருக்கோவலூர் ஆதீனம் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயத்தில் ஐந்தாவது மடாதிபதி ஆவார். இவர் தமிழிலும், வடமொழியிலும் புலமை கொண்டவரும், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளை நன்கு அறிந்தவராகவரும் ஆவார். இவர் சைவ மறுமலர்ச்சிக்கு உழைத்த துறவி, பேச்சாளர், உரையாசிரியர். மதுரைத் தமிழ்ச்சங்கம் தோன்றுவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தவர். தமிழையும் சைவத்தையும் ஒன்றாக எண்ணிய இவர் சைவசித்தாந்த பெருமன்றம், வாணிவிலாச சபை போன்ற அமைப்புகளை உருவாக்கினார். இவர் திருக்கோவிலூர் மடத்தின் தலைவராகவும் இருந்தார்.

பிறப்பு

தொகு

ஞானியாரடிகள் தமிழ்நாட்டின், கும்பகோணத்திற்கு வடகிழக்கில் அமைந்துள்ள திருநாகேச்சுரம் என்ற ஊரில், செங்குந்தர் மரபு[1] வீரசைவரான அண்ணாமலை அய்யர் (வீரசைவ மதத்தை பின்பற்றியதால் ஐயர் பட்டம் பெற்றார்), பார்வதியம்மை இணையருக்கு மகனாக 17 மே -1873 அன்று பிறந்தார். ஞானியாரடிகளுக்கு பெற்றோர் இட்ட பெயர் பழனியாண்டி என்பதாகும். பழனியாண்டி பிறந்த ஆறுமாதத்தில் அண்ணாமலை அய்யரும் பார்வதி அம்மையும், திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலய குருமூர்த்திகளைக் தங்கள் குல குருவாகக் கொண்டிருந்தவர்கள். பிள்ளைக்கு சிவலிங்க தாரணம் செய்து வைப்பதற்காக அப்போதைய ஞானியார் மடாலயத்து நான்காம் குருவிடம் பிள்ளையோடு வந்தனர். குருவின் விருப்பத்தின்படி தங்கள் குழந்தையான பழனியாண்டியை மடத்திலேயே விட்டுவிட்டனர்.

கல்வி

தொகு

மடத்திலேயே வளர்ந்த பழனியாண்டிக்கு எழுத்தறியும் காலம் வந்ததும், மடாலயத்தின் குருநாதர், சென்னகேசவலு நாயுடு என்பாரை வரவழைத்து, மடாலயதிதிலேயே தெலுங்கு மொழியைக் கற்பிக்கச் செய்தார். இவ்வாறு நான்கு ஆண்டுகள் பழனியாண்டி தெலுங்கு கற்றார். பின்னர், தாய்மொழி தமிழும், ஆங்கிலமும் பயிற்றப் பெற்ற பள்ளியில் சேர்ந்து பழனியாண்டி கல்வி பயின்றார். பள்ளிக்குச் சென்ற நேரம்போக மடத்தில் இதர பணிகளையும் மேற்கொண்டுவந்தோடு, விநாயகர் அகவல், திருவாசகச் சிவபுராணம், திரு அகவல்கள், திருமுருகாற்றுப்படை, கந்தர் கலிவெண்பா முதலியவற்றை பாராயணம் செய்துவந்தார்.

மடாலயத் தலைவராக

தொகு

பழநியாண்டிக்கு பதினாறு வயது முடிந்து, பதினேழாம் வயது நடந்து கொண்டிருந்ததபோது. மடாலயத்தின் நான்காம் குருவாகிய சிவசண்முக பரசிவ மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் உடல்நிலைக் கெட்டது. இதனால் அவர் பழனியாண்டியை அடுத்த குருவாக நியமித்து உயிலில் எழுதிவைத்தார். மேலும் பழனியாண்டிக்கு சந்நியாச தீட்சையும் செய்து முடித்து, ஆசாரிய அபிஷேகம் செய்வித்து, முறைப்படி உபதேசம் செய்து வைத்தார். இதன்படி 10- நவம்பர்-1889 அன்று மடாதிபதியாக பதவியேற்றார்.

பணிகள்

தொகு

ஞானியாரடிகள் தமிழையும் சைவத்தையும் பரப்புவதற்காகத் தொடர்ந்து பல சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். விரும்பி வந்தோர்க்கெல்லாம் சமய வேறுபாடில்லாமல் தமிழ் மொழியை போதித்தார். அடிகளின் ஆலோசனையின்படி தான் பாண்டித்துரைத்தேவரும், அவர் சகோதரர் பாஸ்கர சேதுபதியும் மதுரையில் தமிழ்ச்சங்கத்தை 1901ல் இல் நிறுவினர்.

சைவ சமயத்தை பரப்பும் நோக்கில் 7.7.1907ல் சைவ சித்தாந்த மகா சமாஜம் என்ற அமைப்பு ஞானியாரடிகளால் நிறுவப்பட்டது இந்த அமைப்பின் செயலாளராக மறைமலை அடிகள் பல ஆண்டுகள் செயல்பட்டார். சாமாசத்தின் சார்பில் சித்தாந்தம் என்ற இதழும், பல மாநாடுகளும் நடத்தப்பட்டன.

தமிழ்க் கல்விக்கு எனத் தமிழ்க் கல்லூரி எதுவும் இல்லாத காலமாக அக்காலம் இருந்தது. அக்காலத்தில் திருவையாற்றில் சரபோஜி மன்னரால் நிறுவப்பட்ட சமஸ்கிருதக் கல்லூரி இருந்தது. அது பிற்காலத்தில் தஞ்சை மாவட்ட ஆளுகைக் கழகத்தில் (DISTRICT BOARD) மேற்பார்வையில் இயங்கியது. அடிகளார் ஒருசமயம் அக்கல்லூரிக்கு சென்றிருந்தார். அக்கல்லூரியின் தோற்றம் வளர்ச்சி - அதன் பணிகள் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டார். வடமொழி மட்டும் கற்பிக்கப்படும் அந்தக் கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அடிகளாருக்கு உருவானது.

திருவையாறு கல்லூரியை இயக்கி வந்த தஞ்சை மாவட்டக் கழகத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்த உமாமகேசுவரம் பிள்ளையை அடிகளார் தம் இருப்பிடத்துக்கு அழைத்து திருவையாறு கல்லூரி அறக்கட்டளை பற்றி ஆராயத் தூண்டினார். மாவட்டக் கழகத்தின் தலைவராக இருந்தவர் சர். ஏ. டி. பன்னீர் செல்வம் ஆவார். தஞ்சாவூர் சென்ற உமாமகேசுவரனார், திருவையாறு கல்லூரி உருவாக்கப்பட்ட அறக்கட்டளையின் வடமோழி செப்புப்பேட்டை எடுத்துக் கொண்டு, பன்னீர் செல்வத்தையும் உடன் அழைத்துக் கொண்டு திருப்பாதிரிப்புலியூர் வந்தார். செப்பேட்டைப் படித்துபார்த்த அடிகளார் அந்த பட்டயத்தில் அதன் குறிக்கோள்பற்றி “கல்வி வளர்ச்சிக்குப் பணியாற்ற“ என்று பொதுவாகவே குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே - தமிழையும் அக்கல்லூரியில் கற்பிக்கலாம் என்பதை அடிகளார் முன்னிலையில் இருவரும் தீர்மானித்தர்கள். அதன்படி அக்கல்லூரியில் தமிழ் வித்துவான் கல்வியும் கற்பிக்க ஏற்பாடு செய்தார்கள்! வடமொழிக் கல்லூரி என்னும் பெயரையும் பொதுவாக அரசர் கல்லூரி என்ற பெயராக மாற்றியமைக்கப்பட்டது.

காங்கிரசை விட்டு விலகி சுயமரியாதை இயக்கம் தொடங்கிய பெரியார் பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்காக குடி அரசு இதழின் அலுவலகத்தைத் திறந்து வைக்க ஞானியாரடிகளை அழைத்தார். அங்கு சென்ற ஞானியாரடிகள் அலுவலகத்தைத் திறந்தவைத்து வாழ்த்துரை வழங்கினார்.

1938ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இந்தி கட்டாயமாக்கப் பட்டபோது, அடிகளார் இந்தியை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்.

தோற்றுவித்த அமைப்புகள்

தொகு

24.05.1901 - மதுரை தமிழ்ச்சங்கம்.

1903 - வாணி விலாச சபை புலிசை ,ஞானியார் அருளகம்

07.07.1905 - சைவ சித்தாந்த மகா சமாசம்

ஞானியார் மாணவர் கழகம் ,புலிசை, திருக்கோவலூர்

20.09.1908 பக்த பால சமாசம் மணம்பூண்டி

24.10.1909 கம்பர் கலாமிர்த சங்கம் திருவெண்ணைநல்லூர்.

25.04.1910 வாகீச பக்தசனசபை நெல்லிக்குப்பம்

1911 கலைமகள் கழகம் புதுச்சேரி

புதுவை செந்தமிழ் பிரகாச சபை

ஞானியார் சங்கம், காஞ்சிபுரம்

சன்மார்க்க சபை கடலூர்

சோமாசுகந்த பக்தசனசபை வண்டிப்பாளையம்

சரசுவதி விலாச சபை புலிசை

சைவசித்தாந்த சபை உத்திரமேரூர்

சமயாபி விருத்தி சங்கம் , செங்கல்பட்டு

1911 பார்க்கவகுல சங்கம் மணம்பூண்டி

1912 கோவல் சைவசித்தாந்த சமாசம் திருக்கோவலூர்

1915 சக்தி விலாச சபை திருவண்ணாமலை

02.02.1917 ஞானியார் பாட சாலை

03.01.1919 வாகீச பக்த பத சேகர சபை, வடமட்டம் இன்ன பிற

இறப்பு

தொகு

1942 ஆம் ஆண்டு பழனி முருகன் கோயிலில் வழிபாடு செய்து திரும்பிவரும்போது சனவரி 31 நாள் தைப்பூசத்தன்று ஞானியாரடிகள் இறந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  • வெள்ளையாம்பட்டு சுந்தரம் எழுதிய “ஞானியார் அடிகள்”
  • வல்லிக்கண்ணன் தொகுத்த ”தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்”
  • சுந்தரசண்முகனார் எழுதிய "ஞானியார் அடிகள்"
  1. https://books.google.co.in/books?id=6XkfAAAAIAAJ&dq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&focus=searchwithinvolume&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானியாரடிகள்&oldid=3957349" இலிருந்து மீள்விக்கப்பட்டது