டச்சு சோழமண்டலம்

சோழமண்டலம் (Coromandel, கோரமண்டல்) 1610இலிருந்து 1798இல் நிறுவனம் கலைக்கப்படும்வரை சோழ மண்டலக் கடற்கரை பகுதியில் இருந்த டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநரகம் ஆகும். இப்பகுதியில் போர்த்துக்கேயர்களிடமிருந்து பழவேற்காட்டை டச்சுக்காரர்கள் கைப்பற்றியதிலிருந்து இப்பகுதி நெதர்லாந்து இராச்சியத்தின் குடிமைப்பட்டபகுதியாக இருந்து வந்துள்ளது; இது 1825இல் பிரித்தானியர்களிடம் ஒப்படைக்கும்வரை தொடர்ந்தது. இது டச்சு இந்தியாவின் அங்கமாக விளங்கியது.[1]

டச்சு சோழமண்டலம்
சோழமண்டலம்
1608–1825
கொடி of சோழமண்டலம், டச்சு
கொடி
சின்னம் of சோழமண்டலம், டச்சு
சின்னம்
நிலைகுடிமைப்பட்ட பகுதி
தலைநகரம்பழவேற்காடு (1610–1690; 1781–1825)
நாகப்பட்டினம் (1690–1781)
பேசப்படும் மொழிகள்இடச்சு
ஆளுநர் 
• 1608–1610
பீட்டர் ஐசக் ஐலோஃப்
• 1636–1638
கேரல் ரெய்னியர்சு
• 1663–1665
கார்னெலிசு இசுபீல்மேன்
• 1824–1825
என்றி பிரான்சிசு வொன் சோகசுடென்
வரலாற்று சகாப்தம்ஏகாதிபத்தியம்
• புலிகட்டில் கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி
1608
• 1824ஆம் ஆண்டின் ஆங்கிலேயர்-டச்சு உடன்பாடு
1 சூன் 1825
முந்தையது
பின்னையது
Portuguese India
British India

வரலாறு

தொகு
 
பழவேற்காடு ஏரியின் மேலிருந்து காட்சி.
ஏறத்தாழ. 1656[2]
 
1676இல் மசூலிப்பட்டணம்.

1606இல் பழவேற்காடு ஏரியின் கழிமுகத்திற்கு வடக்கே, கரிமணல் சிற்றூரில் ஓர் டச்சுக் கப்பல் நின்றுவிட்டது.[3] அப்பகுதி இசுலாமியர் அவர்களுக்கு உணவும் உதவியும் வழங்கினர். அவர்களுடன் உள்ளூர் சந்தைப் பொருட்களை கிழக்கிந்தியத் தீவுகளின் டச்சுப் பகுதிகளில் விற்பனை செய்ய உடன்பாடு செய்துகொண்டனர். [4]

விசயநகரப் பேரரசின் அரசர் வெங்கடபதி ராயனின் மனைவியும் அரசியுமான இறைவி பிரளயக் காவிரியை ஆண்டு வந்தார். அவளது ஆட்சியில் 1608இல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு கோட்டைக் கட்டிக்கொள்ளவும் வணிகம் செய்யவும் அனுமதி கொடுக்கப்பட்டது.[5] அவர்கள் கெல்ட்ரியா என்ற பெயரில் மற்ற ஐரோப்பிய வணிகர்களிடமிருந்து காத்துக்கொள்ள கோட்டையைக் கட்டினர். இங்கிருந்து கிழக்கிந்தியத் தீவுகளில் மிக இலபகரமான வணிகம் நடத்தி வந்தனர். [6] டச்சுக்களைப் பார்த்து ஆங்கிலேயர்களும் 1619இல் இங்கு துறை அமைக்க முயன்றனர்; ஆனால் இதனை 1622இல் கைவிட்டனர்.[7] போர்த்துக்கேயர்கள் இந்த துறைமுகத்தின் மீது பலமுறை தாக்குதல் தொடுத்தனர். 1611இல் போர்த்துகேயர்களுடன் வெங்கடபதி கோபம் கொண்டு அவர்களை சந்திரகிரியிலிருந்து வெளியேற்றினார்; அதேநேரம் பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் கோட்டை கட்டிக்கொள்ள உதவினார்.

இந்தக் கோட்டையைக் கைப்பற்ற 1614, 1623, 1633 ஆண்டுகளில் போர்த்துகேயர் முயன்றனர்; ஆனால் வெற்றியடையவில்லை.[8][9][10] 1616 முதல் 1690 வரை பழவேற்காடு டச்சு சோழமண்டலத்தின் அலுவல்முறை தலைமையிடமாக இருந்தது.

பழவேற்காடு பகுதியின் பல உள்நாட்டுப் பகுதிகளில் இருந்த தமிழ், தெலுங்கு, கன்னட மக்களின் முதன்மை தொழில்வாய்ப்பாக துணித் தயாரிப்பு இருந்தது. பழவேற்காட்டில் மட்டுமே 1,000க்கும் மேலான கைத்தறிகள் இயங்கியதாகத் தெரிகிறது.[11] 1620களில் பழவேற்காட்டில் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி துப்பாக்கி வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவியது. இங்கு தயாரிக்கப்பட்ட வெடிமருந்து உற்பத்தி பல்லாண்டுகளுக்கு கிழக்கிந்தியாவின் பல்வேறு டச்சு வணிக மையங்களின் தேவையையும் தங்கள் தாய்நாட்டுத் தேவையையும் சந்திக்கப் போதுமானதாக இருந்தது.[12]1615இல் இந்தியாவின் முதல் நாணயச்சாலை கெல்ட்ரியா கோட்டையில் நிறுவப்பட்டது; துவக்கத்தில் செப்பு நாணயங்கள் VOC சின்னத்துடனும் சமசுகிருத உரையுடன் வெளியாயிற்று.[13] இந்த நாணயச்சாலை 1674 வரை இயக்கப்பட்டது; பின்னர் நாகப்பட்டினத்தில் புதிய நாணயச்சாலை நிறுவப்பட்டு இது கைவிடப்பட்டது. இந்த நாணயங்கள் பரவலாக இலங்கையில் பயன்படுத்தப்பட்டன.[14]

நாகப்பட்டினத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும்

தொகு

1690இல் டச்சு சோழமண்டலத்தின் தலைமையிடம் நாகப்பட்டினத்திற்கு மாறியது. மூன்றாண்டுகளுக்கு முன்னதாக இங்கு நாகப்பட்டினம் கோட்டை கட்டத்துவங்கியிருந்தனர். மிகவும் பாதுகாப்பு அரண்களுடன் கட்டப்பட்ட இந்தக் கோட்டை 1781 நாகப்பட்டினம் முற்றுகையைத் தாக்குபிடிக்க முடியவில்லை. இந்த முற்றுகைக்குப் பின் பிரித்தானியர் கோட்டையைக் கைப்பறினர். 1784ஆம் ஆண்டு பாரிசு உடன்படிக்கையில் இந்தக் கோட்டை டச்சுக்காரர்களுக்கு திருப்பியளிக்கப்படவில்லை. பிரித்தானியர்களிடமே தங்கிவிட்டது. இதனால் டச்சு ஆளுநரின் தலைமையிடம் பழவேற்காட்டிற்குத் திரும்பியது.[13]

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் பழவேற்காட்டின் மக்கள்தொகை 10,000க்கும் குறைவாக வீழ்ந்ததாக அறியப்படுகின்றது.[15] 1746இல் பருவமழை தவறியதால் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பழவேற்காடு, சாந்தோம் போன்ற பெரிய நகரங்களிலேயே உயிரிழந்தவர் எண்ணிக்கை 15,000 தொட்டது; மூன்றில் ஒருபங்கு நெசவாளர்களும், வண்ணமடிப்பவர்களும் துவைப்போரும் உயிர்தப்பினர். துணி விலைகள் 15% உயர்ந்தது; இந்த விலையில் கூட கிடைக்காமலும் இருந்தது. டச்சுக்காரர்களின் வீழ்ச்சிக்கு மற்றுமொரு முதன்மையான காரணியாக இப்பகுதியை மீர் ஜும்லா தலைமையிலான கோல்கொண்டா படைகள் கைப்பற்றியது ஆகும்.[16]

பிரித்தானியர் ஆக்கிரமிப்பும் தொடர்ந்து விட்டுக் கொடுத்தலும்

தொகு

டச்சு ஆளுநர் வில்லியம் எழுதிய கியூ கடிதங்களின்படி பிரான்சியப் படைகளிடமிருந்து காக்கும் வண்ணம் பிரித்தானியத் துருப்புகள் டச்சு மலபாரைச் சூழ்ந்துகொண்டன. 1814 ஆங்கில-டச்சு உடன்படிக்கையின்படி டச்சு மலபார் மீளவும் திரும்பித் தரப்பட்டது. ஆனால்1824இல் ஏற்பட்ட மற்றொரு உடன்படிக்கையின்படி, 1825இல் மீண்டும் பிரித்தானியா மீட்டுக்கொண்டது. இரண்டு சிறிய இடைவெளிகளைத் தவிர பழவேற்காட்டில் டச்சு ஆட்சி 1606இலிருந்து 1825 வரை 214 ஆண்டுகள் நீடித்திருந்தது. 1825இல் ஆற்காட்டரசர் செங்கல்பட்டு மாவட்டத்தை (பழவேற்காடு இதில் உள்ளடங்கியிருந்தது) பிரித்தானியருக்கு வழங்கினார்.[17]

டச்சு சோழமண்டலத்தின் இன்றைய நிலை

தொகு

இன்று பழவேற்காடு டச்சு ஆட்சியின் நினைவுச் சின்னங்களைத் தாங்கி நிற்கிறது. டச்சுக் கோட்டையின் இடுபாடுகளும் டச்சு தேவாலயமும் 1631 முதல் 1655 வரை அடக்கம் செய்யப்பட்ட 22 கல்லறைகளுடன் கூடிய கல்லறைத் தோட்டமும் 76 கல்லறைகள் கொண்ட மற்றுமொரு கல்லறைத் தோட்டமும் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் பாதுகாப்பில் உள்ளன.[18][19][20] டச்சு கட்டிட வடிவியலாளர்களும் அறிஞர்களும் இந்த துவக்க கால டச்சு குடியேற்றத்தின் குடியேற்றங்களை மீட்க ஆதரவு நல்க இசைந்துள்ளனர்.

கோட்டைகளும் வணிகத் துறைகளும்

தொகு
 
 
பழவேற்காடு
 
மசூலிப்பட்டணம்
 
நிசாம்பட்டணம்
 
கோல்கொண்டா
 
பீமுனிப்பட்டணம்
 
ஜக்கெம்மைக்கபுரம்
 
திராக்சாராமம்
 
பாலக்கோல்
 
நகுலவஞ்சா
 
சதுரங்கப்பட்டணம்
தற்போதைய இந்திய மாநிலங்களான ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் அமைந்திருந்த முதன்மையான சோழமண்டல கோட்டைகளைக் குறிக்கும் நிலப்படம்
 
 
பழவேற்காடு
 
சதுரங்கப்பட்டணம்
 
தெங்கணாப்பட்டணம்
 
திருப்பாப்புலியூர்
 
பரங்கிப்பேட்டை
 
நாகப்பட்டினம்
தற்போதைய தமிழ்நாட்டில் அமைந்திருந்த முதன்மையான சோழமண்டலக் கோட்டைகளைக் குறிக்கும் நிலப்படம்
குடியேற்றம் வகை நிறுவப்பட்டது கலைக்கப்பட்டது குறிப்புகள்
பழவேற்காடு கோட்டை (பழவேற்காடு) கோட்டையும் தொழிற்சாலையும் 1613 1825 1608இல் தொழிற்சாலை கட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்ட பிறகு உள்ளக அரசர் 1613இல் கோட்டைக் கட்டிக்கொள்ளவும் அனுமதித்தார். கெல்ட்ரியா கோட்டை என அழைக்கப்பட்ட இக்கோட்டையே 1690 வரை சோழமண்டலத்தில் முதன்மையான டச்சுக் கோட்டையாக இருந்து வந்தது. 1690இல் தலைமையகம் நாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டது. 1694இல் இங்கிருந்த பெரும் ஆயுத சேகரிப்புகள் நாகப்பட்டினத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஆனால் 1781இல் பிரித்தானியர்களிடம் தோற்றபிறகு கெல்ட்ரியா கோட்டை மீண்டும் தலைமையகமாக மீள்விக்கப்பட்டது. பருத்தி ஏற்றுமதிக்கு இதுதான் டச்சுக்களின் முதன்மையான வணிகத்துறையாக இருந்தது.
நாகப்பட்டினம் கோட்டை (நாகப்பட்டினம்) கோட்டையும் தொழிற்சாலையும் 1658 1781 1658இல் போர்த்துகேயர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாகப்பட்டினம் முதலில் ஒல்லாந்தர் கால இலங்கையின் ஆட்சியின் கீழ் இருந்தது. 1780ஆம் ஆண்டு கடும் வெள்ளப்பெருக்கால் முழுமையாக சேதப்படுத்தப்பட்ட விஜ் சின்னென் கோட்டை அழிவுகளிலிருந்து கட்டப்பட்டப்பட்டது. இந்தப் புதிய கோட்டை டச்சு சோழமண்டலத்தின் தலைமையகமாக மாற்றப்பட்டது; 1781இல் பிரித்தானியரிடம் இக்கோட்டையை இழக்கும் வரை இது தொடர்ந்தது.
சதரஸ் கோட்டை கோட்டையும் தொழிற்சாலையும் 1612 1825 1612இல் முதலில் நிறுவப்பட்ட சிறிய தொழிற்சாலை பின்னர் 1654இல்தான் முழுமையாக விரிவாக்கப்பட்டது. 1749இல் சதராஸ் கோட்டை கட்டிமுடிக்கப்பட்டது. இதையும் நாகப்பட்டினத்தையும் 1781இல் பிரித்தானியர் கைப்பற்றினர்; ஆனால் நாகப்பட்டினம் போலன்றி 1784இல் பாரிசு உடன்படிக்கையின்படி இது மீளவும் டச்சுக்காரர்களிடமே திரும்பியளிக்கப்பட்டது. உயர்தர பருத்தி வகைகள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. படாவியா, இலங்கைக்கு இங்கிருந்து செங்கற்கள் சென்றன.
பீமுனிப்பட்டணம் கோட்டையும் தொழிற்சாலையும் 1652 1825 சிறிய தொழிற்சாலையாகத் தொடங்கி பின்னர் கோட்டையாக 1758இல் விரிவாக்கப்பட்டது. அரிசி முதன்மையான ஏற்றுமதியானது; இலங்கை முதன்மையான இறக்குமதியாளராக இருந்தது.
ஜக்கெம்மைக்கப்புரம் கோட்டை கோட்டையும் தொழிற்சாலையும் 1734 1825 ஓர் முதன்மையான துணி வணிகத் துறையாக இருந்தது. திராக்சாராமமும் பாலக்கோலும் இழந்தபிறகு (கீழே காண்க) இதன் முக்கியத்துவம் கூடியது.
பரங்கிப்பேட்டை தொழிற்சாலை 1608 1825 டச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் 1608இல் பழைய வீடொன்றில் குடியிருந்தது. 1680இல் இது முழுமையான தொழிற்சாலையாக விரிவாக்கப்பட்டது. இது போர்ட்டோ நோவோ எனவும் அழைக்கப்பட்டது.
பாலகொல்லு தொழிற்சாலை 1613 1825 1730இல் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இங்கிருந்து துணி, விளக்கு எண்ணெய், மரம், ஓடுகள், செங்கற்கள் வணிகம் செய்யப்பட்டன.
மச்சிலிப்பட்டணம் தொழிற்சாலை 1605 1756 சோழமண்டலக் கடற்கரையில் நிறுவப்பட்ட முதல் டச்சு தொழிற்சாலை இதுவேயாகும். 1756இல் இது கைவிடப்பட்டது.
நிசாம்பட்டணம் தொழிற்சாலை 1606 1668 சோழமண்டலக் கடற்கரையில் நிறுவப்பட்ட இரண்டாம் டச்சு தொழிற்சாலை. 1668இல் கைவிடப்பட்டது.
தெங்கணாம்பட்டணம் தொழிற்சாலை 1609 1758 1609இல் நிறுவப்பட்டது. 1647இல் கோட்டை கட்ட அனுமதி பெற்றது. இக்குடியேற்றம் முதன்மையாக இதே நகரிலிருந்த பிரித்தானியர்களை உளவு காணும் நோக்கத்துடனையே ஏற்படுத்தப்பட்டது. 1758இல் பரங்கிப்பேட்டைக்கு சாதகமாக இக்குடியேற்றம் கைவிடப்பட்டது.
கோல்கொண்டா தொழிற்சாலை 1634 1733 டச்சுக் கிழக்கிந்திய நிறுவனத்தின் முதன்மையான வணிகச் சந்தை. உள்ளூர் வணிகர்களின் சேவையுடன் தொடங்கிய வணிகத்தைப் பின்னர்1664இல் இங்கு முழுமையான தொழிற்சாலை அமைத்து விரிவாக்கினர். உள்ளூர் கலவரங்களால் 17ஆம் நூற்றாண்டில் வணிகம் குறையத்தொடங்கியது. கடைசியில் 1733இல் கைவிடப்பட்டது.
திராக்சாராமம் தொழிற்சாலை 1633 1730 1730இல் ஜக்கெம்மைக்கபுரதிற்காக கைவிடப்பட்டது.
திருப்பாப்புலியூர் தொழிற்சாலை 1608 1625 1608இல் ஓர் பழைய போர்த்துக்கேய கோட்டையின் இடிபாடுகளின் மேல் நிறுவப்பட்டது. உள்ளூர் தலைவரால் 1625இல் அழிக்கப்பட்டது.
நகலவாஞ்சா தொழிற்சாலை 1669 1687 நல்ல தரமான உள்நாட்டுப் பொருட்களைப் பெற உள்நிலப்பகுதியில் அமைக்கப்பட்டது. உள்ளூர் மக்களால் 1687இல் (அக்டோபர் 13) அழிக்கப்பட்டது.
புதுச்சேரி கோட்டையும் தொழிற்சாலையும் 1693 1699 ஒன்பதாண்டுகள் போரின்போது டச்சுக் கிழக்கிந்திய நிறுவனம் 1693இல் பிரான்சிய புதுச்சேரிக் கோட்டையை முற்றுகையிட்டது. 1693 செப்டம்பர் 6 அன்று அக்கோட்டையின் தலைவராக இருந்த பிரான்சுவா மார்ட்டின் சரண்டைந்தார். ஆனால் பிற்பாடு கண்ட உடன்பாடுகளின்படி, 1699இல் மீண்டும் பிரான்சிய ஆட்சி மீட்கப்பட்டது.

இவற்றையும் காண்க

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. De VOC site - Coromandel
  2. Azariah pp. 63-68
  3. Pandian p.131
  4. SANJEEVA RAJ, P.J. (19 October 2003). "... and a placid Pulicat experience". The Hindu இம் மூலத்தில் இருந்து 2010-08-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100826092210/http://www.hinduonnet.com/thehindu/mag/2003/10/19/stories/2003101900280700.htm. பார்த்த நாள்: 2008-11-29. 
  5. Azariah p.10
  6. Pandian pp.?
  7. Pandian p.73
  8. Lach pp. 1008-1011
  9. Mukund p. 57
  10. Sewell et al. pp.232,233
  11. Pandian pp.72-75
  12. DIJK, Wil O. (November 2001). "The VOC's Gunpowder Factory". IIAS Newsletter #26. International Institute for Asian Studies (International Institute for Asian Studies,IIAS). Archived from the original on 2007-10-19. பார்க்கப்பட்ட நாள் 2008-11-28.
  13. 13.0 13.1 Kavan Ratnatunga (2006). "Paliakate - VOC Kas Copper Dumps, 1646 - 1794 - Dutch India]". Dutch India coins - Pulicat. lakdiva.org. Archived from the original on 2008-12-08. பார்க்கப்பட்ட நாள் 2008-12-02.
  14. Shimada, Ryūto (2006). The Intra-Asian Trade in Japanese Copper by the Dutch East India Company During the Eighteenth Century. Brill. p. 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-15092-8.
  15. Subrahmanyam pp.23-24
  16. Mukund pp.68-67
  17. Pandian p.75
  18. CRENIEO (2005). "Alternative Development Paradigm". Proposed preplanning activities. CRENIEO. Archived from the original on 20 November 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-02.
  19. Azariah ch. 5 pp. ?
  20. Archaeological Survey of India, Government of India (2008). "197 Fort And Cemetery Pulicat Thiruvallur". Alphabetical List of Monuments - Tamil Nadu. Government of India. pp. SI No. 197. பார்க்கப்பட்ட நாள் 2008-11-30.

உசாத்துணைகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டச்சு_சோழமண்டலம்&oldid=3711136" இலிருந்து மீள்விக்கப்பட்டது