டாணா புயல் (Cyclon TANA) என்பது வங்கக் கடலில் உருவாகிய புயல் ஆகும். இது 2024 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்பட்ட முதலாவது புயலும், 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது புயலுமாகும்.[1]. டாணா என்பது கத்தார் நாடு பரிந்துரைத்த பெயர் ஆகும். மத்திய வங்க கடல் பகுதிகளில் மையம் கொண்டு வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை 23 அக்டோபர் 2024 அன்று அறிவித்தது. இந்த புயல் தீவிர புயலாக வடக்கு ஒடிசா – மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே 25 அக்டோபர் 2024 அன்று அதிகாலை கரையைக் கடந்தது.[2]

டாணா புயல்
டாணா புயல் கடந்த பாதை
தொடக்கம்அக்டோபர் 23, 2024
மறைவுஅக்டோபர் 25, 2024 (அதிகாலை)
(Remnant low after அக்டோபர் 25, 2024)
சேதம்None
2018 வடகிழக்குப் பருவமழைக் காலம்-இன் ஒரு பகுதி

புயல் உருவாதல்

தொகு

மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. 23 அக்டோபர் 2024 அன்று புயலாக உருவாகிய இது வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதிதீவிர புயலாக மாறியது. பின்னர் 25 அக்டோபர் 2024 அன்று தீவிர புயலாக ஒடிசா பூரி கடற்கரை மற்றும் சாகர் தீவு இடையே டானா புயல் கரையை கடக்கக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 23 அக்டோபர் 2024 மாலை நிலவரப்படி மேற்குவங்கத்தின் சாகர் தீவுகளிலிருந்து 540 கி.மீ. தூரத்தில் டாணா புயல் மையம் கொண்டுள்ளது. ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்துக்கு 460 கி.மீ. தொலைவிலும், தாமாராவுக்கு 490 கி.மீ. தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.[3] புயல் கரையயை கடக்கும் போது மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையே 120 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீச கூடும்எனவும் இந்த புயல் காரணமாக 24 அக்டோபர் 2024 மற்றும் 25 அக்டோபர் 2024 ஆகிய தேதிகளில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கப் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது நடபாண்டின் மூன்றாவது புயலாகவும், வடகிழக்கு பருவமழை காலத்தில் முதல் புயலாகவும் உருவாகியுள்ளது இந்த டாணா புயல்.[4][5]

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தொகு

டாணா புயல் காரணமாக கிழக்கிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் அந்தந்த மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி ஒடிசாவின் 14 கடலோர மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 23 அக்டோபர் 2024 முதல் 26 அக்டோபர் 2024 வரை விடுமுறை அறிவித்தும், புயல் கால பணிகளில் அனுபவம் வாய்ந்த 6 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளை நியமித்தும் ஒடிசா மாநில அரசு உத்தரவிட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக 200இக்கும் அதிகமான தொடருந்து சேவைகள் இந்திய தொடருந்து சேவைத் துறையால் இரத்து செய்யப்பட்டன.[6][7] 23 அக்டோபர் 2024 அன்று தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.[8] ஒடிசாவின் பிதர்கனிகா தேசியப் பூங்கா மற்றும் தம்ரா துறைமுகம் இடையே மிக கடுமையான தாக்கம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததால் ஒடிசா மாநிலத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.மேற்கு வங்கத்தில் 1.10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த புயலை எதிர்கொள்ள ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாகவும் இதற்காக மொத்தம் 56 அணிகள் மீட்பு பணிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன.[9] இந்த புயலால் மேற்கு வங்கத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் மற்றும் புவனேஸ்வர் விமான நிலையம் ஆகிய இரு விமான நிலையங்களிலும் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், 25 அக்டோபர் 2024 அன்று காலை 8 மணிக்கு மீண்டும் தொடங்கியது.[10] ஹவுரா கட்டுப்பாட்டு மையத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரவு முழுவதும் தங்கியிருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்.[11]

மழை மற்றும் புயல் பாதிப்புகள்

தொகு

புயலின் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்தது.[12] புயல் கரையைக் கடந்த போது, ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தில் மிக கனமழை பெய்தது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் முறிந்தன. 5 மணி நேரத்திற்கும் மேலாக புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்தது. ஒடிசாவில் கேந்திரபாரா, பாலசோர் மற்றும் பத்ரக் மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. பல இடங்களில் மின்சாரக் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின் விநியோகம் தடைபட்டன.[13]

நிவாரணப்பணிகள்

தொகு

புயலால் உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை. இருப்பினும் பல இடங்களில் மரங்கள் வேரோடும், முறிந்தும் விழுந்து சாய்ந்தன. மின் கம்பங்கள் பலத்த சேதமடைந்தன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை செய்தன.ஒடிசாவில் புயலால் ஏற்பட்ட சேதங்களை அம்மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாச்சி ஆய்வு செய்தார்.[14]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாணா_புயல்&oldid=4126769" இலிருந்து மீள்விக்கப்பட்டது