டில்யா மலை (Tillya tepe, Tillia tepe or Tillā tapa (பாரசீக மொழி: طلا تپه‎) (பொருள் "தங்க மலை") என்பது வட ஆப்கானித்தானின், ஜோவ்ஸ்ஜான் மாகாணத்தின் தலைநகரான செபேர்கனுக்கு அருகில் உள்ள ஒரு தொல்லியல் தளம் ஆகும். ஆப்கானித்தான் மீது சோவியத் படையெடுப்புக்கு ஒராண்டுக்கு முன்பாக, 1978இல் சோவியத் அரசு ஆப்கனிய அரசின் குழுக்களுடன் இணைந்து கிரேக்க உருசியரான விக்டர் சரியானிடி தலைமையில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் இவை கண்டறியப்பட்டன. இந்த சேகரிப்பானது பெரும்பாலும் பாக்திரியா தங்கம் என அழைக்கப்படுகிறது.

ஒரு பெண்ணைப் புதைத்த ஆறாம் கல்லறையில் கிடைத்த ஒரு கிரீடம்
டயோனிசசுவை சித்தரித்துள்ள ஒரு தங்கக் கச்சு (அல்லது ஈரானிய பெண் தெய்வமான நானா / நானியாவை சித்தரிப்பது). இது நான்காம் கல்லறையில் கிடைத்தது.

இங்கு கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆறு கல்லறைகளை (இவை ஐந்து பெண்கள் மற்றும் ஒரு ஆணுக்கு உரியவை) அகழ்ந்தது, அதில் நாணயங்கள் மற்றும் தங்கம், வெள்ளி, தந்தத்தால் செய்யப்பட்ட 20,600 அணிகலன்கள் போன்றவை எடுக்கப்பட்டன. இந்த அணிகலன்களில் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட அட்டிகை, இடுப்புவார், பதக்கங்கள், கிரீடம் உள்ளிட்டவை அடங்கும். இவை கண்டறியப்பட்டப் பிறகு, ஆப்கானிஸ்தானில் நடந்த போர்களின் போது, காணமல்போன இவை மீண்டும் "கண்டறியப்பட்டன". அதன்பிறகு 2003 இல் மீண்டும் மக்கள் பார்வைக்கு கொண்டுவரப்பட்டன. காபூலில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள ஒரு புதிய அருங்காட்சியகத்தில் பாக்திரியா தங்கம் வைக்கப்படும்.

காலம்

தொகு
 
டில்யா மலை கல்லறைகளில் புதைக்கப்பட்ட இரு மனிதர்களின் மாதிரிகள், அதனுடன் அவர்களின் அணிகலன்கள்: ஆண் (r. நான்காம் கல்லறை) மற்றும் பெண் (l. இரண்டாம் கல்லறை).

இங்கு கண்டறியப்பட்ட பல நாணயங்கள் முதலாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவையாக உள்ளன. அதற்கு பிற்காலத்தியவை எதுவும் இல்லை என்பதால், இந்தக் கல்லறையின் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது. இந்தக் கல்லறைகளில் புதைக்கப்பட்டுள்ள உடல்களானது அப்போது இந்தப் பகுதியை ஆண்ட சிதியப் பழங்குடியினர் அல்லது பார்த்தியப் பழங்குடியினராக இருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்தார்கள். சீனப் பழங்குடியினரான யுவஸி வம்சத்தினரது ராஜ்ஜியமாக பாக்திரியா அப்போது இருந்திருக்கலாம். அந்த ராஜ குடும்பத்தினரது உடல்கள் இங்கே புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் சொன்னார்கள். ஆனால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

 
பழங்கால பாக்திரியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள டில்யா மலை.

மூன்றாம் கல்லறையில் இருந்த பெண்ணின் ஒரு கையில் ஒரு வெள்ளி நாணயம் இருந்தது. இந்த நாணயமானது பார்த்தியா அரசரான இரண்டாம் மித்ரிதாதிஸ் கால நாணயமாகும். இவரது ஆட்சிக்காலம் கி.மு. 123–88 ஆகும்.

ஆறாம் கல்லறையில் புதைக்கப்பட்ட பெண்ணின் இடது கையில் ஒரு தங்க நாணயம் இருந்தது. இந்த நாணயமானது கி.மு. 95-90 இல் ஆண்ட பார்த்தியா அரசரான முதலாம் கோட்டாரஸ் காலத்து நாணயமாகும்.

மூன்றாம் கல்லறையில் ஒரு தங்க நாணயம் கண்டறியப்பட்டது. இது ரோமானிய பேரரசர் திபெரியஸின் மார்பளவு உருவம் பொறிக்கப்பட்ட நாணயமாகும்.[1]

 
காபுல் அருங்காட்சியகத்தில் உள்ள டில்யா மலை பௌத்த நாணயம். இதில் தர்மசக்கரத்தை சுற்றியபடி உள்ள தலையில் தொப்பியணிந்த நிர்வாண தெய்வம்.

நான்காம் கல்லறையில் (ஆண் போர்வீரன் கல்லறை) இந்தியாவில் இருந்து வந்த ஒரு பௌத்த தங்க நாணயமானது கிடைத்துள்ளது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஒரு சிங்கம் மற்றும் நந்திபாதம் ஆகிய உருவங்கள் உள்ளன. மேலும் இதில் கரோஷ்டி எழுத்தில் "Sih[o] vigatabhay[o]" ("பயம் விலகிய சிங்கம்") என்ற வாசகம் இருந்தது. இதன் மறு புறத்தில் தலையில் தொப்பியணிந்த கிட்டத்தட்ட நிர்வாண நிலையில் ஒரு தெய்வமானது ( எர்மெசு/ மெர்குரி) தர்மசக்கரத்தை சுற்றியபடி உள்ளது. மேலும் கரோஷ்டி எழுத்தில் "தர்மசக்ரவர்த்தா" ( தர்மசக்கரத்தை சுழற்றியவர்) என்று உள்ளது. இது புத்தரின் முற்பிறப்பு கதையில் சம்பந்தப்பட்ட உருவமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.[2]

மேலும், யூகீயின் அரசனான ஹிரோயோசின் ஒரு நாணயம் கண்டறியப்பட்டது.

கலாச்சாரத் தாக்கங்கள்

தொகு
 
Hellenistic tritons with dolphins (Tomb I.).

அங்கு இருப்பதாக கருதப்பட்ட ஏழு கல்லறைகளில் ஆறு கல்லறைகள் தோண்டப்பட்டன. அதில் ஒன்றில் ஆண் எலும்புக்கூடும், மற்ற ஐந்திலும் பெண் எலும்புக்கூடுகளும் கிடைத்தன. அந்த ஆண் எலும்புக்கூடானது அரசருக்குரியது, மற்ற ஐவரும் அவரது மனைவிகளாக இருக்கக்கூடும். ஏனெனில் அரசர், அரசிகளையே இவ்வளவு தங்கத்துடன் புதைக்கும் வழக்கம் அப்போது இருந்தது. இறந்தபின் வேறு உலகத்துக்கு அவர்கள் செல்வார்கள். அப்போது இந்தச் செல்வங்கள் அவர்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையுடன் புதைத்தார்கள்.

இதில் தங்க வளையல்கள், காதணிகள், அட்டிகைகள், காப்புகள், மோதிரங்கள் போன்ற விதவிதமான நகைகள், இரண்டு தங்கக் கிரீடங்கள், தங்கச் சிலைகள், ஆயுதங்கள், நாணயங்கள், தங்கம் – வெள்ளி – யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் என சுமார் 22,000 பொருள்கள் அந்தக் கல்லறைகளில் இருந்து சேகரிக்கப்பட்டன. இதில் கிடைத்த நகைகள் நுணுக்கமான வேலைப்பாடுகளுடனும், அதில் மதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்டும் உருவாக்கப்பட்டிருந்தன. சிதியர்களே இப்படிப்பட்ட வேலைப்பாடுகள் கொண்ட நகைகளைச் செய்வதில் வல்லவர்கள் என்பது ஆய்வாளர்களது கருத்து.[3]

இழப்பும் மறு கண்டுபிடிப்பும்

தொகு
 
புதையலில் கிடைத்த ஒரு செம்மறி ஆட்டுக்கிடா உருவம்.
 
பண்டைய காலத்தின் மிகப்பெரிய தங்க நாணயமான கிரேக்க பாட்ரிக் மன்னர் யுகிரைடிடிகளின் தங்க நாணயம்.

1990களில் இந்த அரிய செல்வங்கள் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் இல்லாமல் போயிருக்கலாம் என்று கருதப்பட்டது. அக்காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானின் தேசிய அருங்காட்சியகமானது ஏராளமான முறை சூறையாடப்பட்டு அங்கிருந்த 100,000 பொருட்களில் 70% இல்லாமல் போனது.[4] இருப்பினும் 2003இல், காபூல் மத்திய வங்கி கட்டிடத்தின் கீழுள்ள இரகசிய அறைகளில் இது காணப்பட்டது.

1989 இல் ஆப்கானிஸ்தானின் நான்காவதும் கடைசிமான கம்யூனிச அதிபரான முகமது நஜிபுல்லாவின் உத்தவின்பேரில் அருங்காட்சியகத்தில் இருந்த இந்த அரிய பொக்கிசங்கள் காபூல் மத்திய வங்கியில் இருந்த நிலவறையில் வைக்கப்பட்டன. நிலவரைக் கதவின் சாவிகள் நம்பிக்கைக்குரிய ஐந்து நபர்களிடம் பிரித்து வழங்கப்பட்டன.

2003 இல், தலிபான்களிடம் இருந்து நாடு மீட்கப்பட்டபோது, புதிய அரசாங்கம் பெட்டகத்தை திறக்க விரும்பியது, ஆனால் சாவிகளை வைத்திருந்தவர்களின் ("தவாதாரர்கள்" என்று அழைக்கப்படுபவர்கள்) பெயர்கள் அறியப்படாத காரணத்தினால் அவர்களை அழைக்க முடியவில்லை. இதையடுத்து ஹமித் கர்சாய் நிலவறை பெட்டகத்தை உடைப்பதற்கான அங்கீகார உத்தரவை வெளியிட்டார். ஆனால் உரிய நேரத்தில், சாவிகளை வைத்திருந்த அந்த ஐந்து முக்கிய நபர்களும் சேர்ந்து பெட்டகத்தைத் திறந்தனர். அதன் பின்னர், தேசிய புவியியல் சங்கமானது அதில் இருந்த சேகரிப்பை பட்டியலிட்டது, அதன்படி மொத்தம் 22,000 பொருள்கள் இருந்தன.

ஆப்கானிய அரசாங்கம் மற்றும் பிரான்ஸ் இடையே ஏற்பட்ட ஒரு உடன்பாட்டை தொடர்ந்து, இந்தச் சேகரிப்புகளானது மதிப்பிடப்பட்டது. மேலும் தேசிய புவியியல் சங்கத்தின் ஒத்துழைப்போடு பல முக்கிய அருங்காட்சியகங்கள் மற்றும் கண்காட்சிகளில் சர்வதேச அளவில் பார்வைக்கு வைக்கப்பட்டன. இந்தப் பொருட்கள் 2007-2009 காலகட்டத்தில் பாரிசின் குய்மெட் அருங்காட்சியகம் , வாசிங்டன், டி. சி.யின் வாசிங்டன் தேசிய கலைக்காட்சியகம் , சான் பிரான்சிஸ்கோவின் ஆசியக் கலை அருங்காட்சியகம் , ஹியூஸ்டன் கவின் கலை அருங்காட்சியகம், நியூயார்க் நகரின் மெட்ரோபொலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட் ஆகிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டன.[5]

படக்காட்சியகம்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Sarianidi, Victor. 1985. The Golden Hoard of Bactria: From the Tillya-tepe Excavations in Northern Afghanistan. Harry N. Abrams, New York.
  2. "Il semble qu'on ait là la plus ancienne représentation du Buddha, selon une modalité qui n'est pas encore celle de l'iconograhie boudhique traditionnelle" (French): "It seems this might be the earliest representation of the Buddha, in a style which is not yet that of traditional Buddhist iconography", in Afghanistan, les trésors retouvés, p. 280.
  3. முகில் (3 அக்டோபர் 2018). "பாக்திரியாவின் தங்கப் புதையல்!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2018.
  4. Lawson, Alastair (1 March 2011). "Afghan gold: How the country's heritage was saved". பிபிசி. https://www.bbc.co.uk/news/world-south-asia-12599726. பார்த்த நாள்: 1 March 2011. 
  5. Fredrik Hiebert and Pierre Cambon, eds. Afghanistan: Hidden Treasures from the National Museum, Kabul. Washington DC: National Geographic, 2007.

மேற்கோள்கள்

தொகு

மேலும் வாசிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டில்யா_மலை&oldid=3577372" இலிருந்து மீள்விக்கப்பட்டது