தமிழ்க் கலைக்களஞ்சியம் (நூல்)

தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சிய நூல்கள்
தமிழ்க கலைக்களஞ்சியம் பற்றிய பொதுவான தலைப்புக்கு தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் என்ற கட்டுரையைப் பார்க்க.

தமிழ் மொழியில், தமிழர் கண்ணோட்டத்தில், தமிழர் சிந்தனைகளை உள்வாங்கிய கலைக்களஞ்சியத்தை தமிழ்க் கலைக்களஞ்சியம் எனலாம். இது தமிழின் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் முதல் கலைக்களஞ்சியத்தை சிறப்பாக குறிக்கிறது.

கலைக்களஞ்சியம், 10 தொகுதிகள்
தமிழ்க் கலைக்களஞ்சியம் - தொகுதி 1

இந்திய மொழிகளில் தமிழில்தான் முதன்முதலில் இத்தகையப் பெரிய கலைக்களஞ்சியம் பத்துத் தொகுதிகளாக வெளிவந்தது. இதன் தொகுப்பாசிரியர் பத்மபூஷன் ம. ப. பெரியசாமித்தூரன்.[1] திருகூடசுந்தரம் துணைப் பொறுப்பாசிரியர்.

தமிழ்க் கலைக்களஞ்சிய வரலாறு தொகு

சென்னை மாகாண கல்வி அமைச்சரான தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் தமிழை அனைத்து துறைகளிலும் வளர்க்கவேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தார். அதற்காக தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார். தமிழில் கலைக்களஞ்சியங்களை உருவாக்குவதே இதன் முதல் நோக்கமாக இருந்தது. இந்திய விடுதலை நாளான 1947 ஆகத்து 15 அன்று இதற்கான அறிவிப்பு வெளியானது. கலைக்களஞ்சியங்கள் பணிக்கு 14 இலட்சம் செலவாகலாம் என்று மதிப்பிடப்பட்டது. ஆர். எம். அழகப்பர், மு. அ. முத்தையா, கருமுத்து தியாகராசர் போன்ற தனிநபர்களும், தருமபுர ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருப்பதி தேவசுதானம் போன்ற அமைப்புகளும் இதற்கு நிதியளிக்க முன்வந்தன. மேலும் இந்திய ஒன்றிய நிதியமைச்சராக இருந்த ஆர். கே. சண்முகம் ஆண்டுக்கு 75,000 என நான்கு ஆண்டுகள் ஒன்றிய அரசால் நிதியுதவி அளிக்க ஏற்பாடு செய்தார். கலைக்களஞ்சியம் வெளியாவதற்கு முன்பே அதற்கான தெளிவான திட்டமிடல்கள் கலைக்களஞ்சிய குழுவினரிடம் இருந்தது. கலைக்ளஞ்சியத்தை பத்து தொகுதிகளாக வெளியிடவேண்டும், ஒவ்வொரு தொகுதியும் ஏறத்தாழ 750 பக்கங்களைக் கொண்டிருக்கவேண்டும், பொதுமக்கள் விளங்கிக்கொள்ள ஏதுவாக நான்கில் ஒருபகுதி படங்கள் கொண்டதாக இருக்கவேண்டும் என்று திடமிட்டு செயல்பட்டனர். பல நூறு அறிஞர்கள், பேராசிரியர்கள், பதிப்பாசிரியர்கள் பல குழுக்களாகப் பணி செய்து முதல் தொகுதி 1954 ஆம் ஆண்டு 742 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. அதன் பின் ஏறக்குறைய ஆண்டுக்கொரு தொகுதியாக எஞ்சிய ஒன்பது தொகுதிகளும் வெளியிடப்பட்டன. [2] தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செயலாளராக இருந்த கல்கி 1954 திசம்பர் 5 அன்று இறந்தார். அதனால் அவரின் நினைவாக இதன் இரண்டாம் தொகுதியை வெளியிடுவதாக நூலின் முன்னுரையில் தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் குறிப்பிட்டார். இதில் ஐந்தாம் தொகுதியை அன்றைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு 1958 இல் வெளியிட்டார். இந்த கலைக்களஞ்சியத் தொகுதியானது 7,500 பக்கங்களைக் கொண்டும், 15000 தலைச்சொற்கள் உள்ளதாகவும் இருந்தது. இதில் ஏறத்தாழ 1,200 கட்டுரையாளர்கள் பங்களித்தனர். கட்டுரையாளர்கள் அந்தந்த துறையில் பட்டறிவு கொண்டவர்களாக தெரிவு செய்யப்படனர். எடுத்து காட்டுக்கு புதுமைப்பித்தன் பற்றி மீ. ப. சோமசுந்தரமும், கௌதம புத்தர் குறித்து சர்வபள்ளி இராதாகிருஷ்ணனும், சுப்பிரமணிய பாரதி குறித்து, பி. ஸ்ரீ ஆச்சார்யாவும், காந்தி குறித்து வெ. இராமலிங்கம் பிள்ளை ஆகியோரைக் கொண்டு கட்டுரைகள் எழுதப்பட்டன. உயிரியல், இயற்பியல், வேதியல், மருத்துவம், வேளாண்மை, பொருளியல், நுண்கலை முதலான ஒவ்வொரு அறிவுத் துறைக்கும் தனித்தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் கலைக்களஞ்சியத்தில் இடம்பெறவேண்டிய தலைச்சொற்களைப் பரிந்துரைத்தன. அறிவியல் கட்டுரைகள் தமிழில் ஆக்கும்போது கலைச் சொற்கள் தமிழில் உருவாக்கப்பட்டன. இதற்காக, பிரதிபலன் பாராத அறிஞர் குழு ஒன்று உழைத்தது. இவர்கள் ஏறத்தாழ என்சைக்ளோபீடியா என்ற சொல்லுக்கு ஈடான "கலைக்களஞ்சியம்" என்ற சொல் உட்பட 25,000 கலைச்சொற்களை உருவாக்கித் தமிழுக்கு அளித்தனர்.[3] கலைக்களஞ்சியத்தின் பத்தாவது தொகுதியானது இணைப்புத் தொகுதியாக வெளியானது. அதில் முதல் ஒப்னது தொகுதியில் விடுபட்ட சொற்கள், பத்து தொகுதிகளுக்குமான பொருட்குறிப்பு அகராதி ஆகியவற்றைக் கொண்டதாக வெளியானது.[4]

தொகுதி 1 - 1954 ஆம் ஆண்டு - 742 பக்கங்கள்
தொகுதி 2 - 1955 ஆம் ஆண்டு - 760 பக்கங்கள்
தொகுதி 3 - 1956 ஆம் ஆண்டு - 756 பக்கங்கள்
தொகுதி 4 - 1956 ஆம் ஆண்டு - 778 பக்கங்கள்
தொகுதி 5 - 1958 ஆம் ஆண்டு - 750 பக்கங்கள்
தொகுதி 6 - 1959 ஆம் ஆண்டு - 770 பக்கங்கள்
தொகுதி 7 - 1960 ஆம் ஆண்டு - 754 பக்கங்கள்
தொகுதி 8 - 1961 ஆம் ஆண்டு - 758 பக்கங்கள்
தொகுதி 9 - 1963 ஆம் ஆண்டு - 751 பக்கங்கள்
தொகுதி 10- 1968 ஆம் ஆண்டு - 560 பக்கங்கள்

பங்களித்தவர்கள் தொகு

 
 
தமிழ் வளர்ச்சிக் கழகம் பொது உரிமத்தின் கீழ் தமிழ் கலைக்களஞ்சியத் தொகுதிகளை வழங்கிய கடிதம்
  • நிர்வாகக் குழுக்கள் 5, மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 74
  • பொருட்பட்டி அமைப்புக் குழுக்கள் 21, மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 132
  • ஆய்வுக்குழுக்கள் 27, மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 66
  • கலைச்சொற் குழு 1, உறுப்பினர்கள் எண்ணிக்கை 40

இந்த கலைக்களஞ்சியத்திற்கான இரண்டாவது திருத்தப்பட்ட பதிப்பு ஒவ்வொன்றும் 1000 பக்கங்கள் கொண்ட 12 தொகுதிகளுடன் உருவாக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் திட்டம் நிறைவேறவில்லை.

கலைக்களஞ்சியம் முழுவதும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையதளத்தில் கிடைக்கிறது.

தமிழ் வளர்ச்சிக் கழகம் பொது உரிமத்தின் கீழ் தமிழ் கலைக்களஞ்சியத் தொகுதிகளை வழங்குகியது 2014 இல், தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்பாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் தமிழ் வளர்ச்சிக் குழு கலைக்களஞ்சியத்தின் 10 தொகுதிகளையும் பொதுக்களம் 3.0 உரிமத்தின் கீழ் வழங்கியது. இதனுடன், குழந்தைகளின் கலைக்களஞ்சியத்தின் 10 தொகுதிகளும் பொதுக்கள உரிமத்தின் கீழ் ஆகமொத்தம் 20 தொகுதிகளையும் வெளியிடப்பட்டது.

பரவலர் பண்பாட்டில் தொகு

கி. ராஜநாராயணன் எழுதிய கரிசல் கட்டுக் கடுதாசி என்ற நூலில் கழுகுமலை உள்ளது கழுமரம் இல்லை என்ற அத்தியாகத்தில் இந்தக் கலைக்களஞ்சியத்தின் போதாமை குறித்து எழுதியுள்ளார். தான் எழுதிய கோபல்ல கிராமம் புதினத்தில் கழுமரம் குறித்து எழுதவேண்டி இருந்த நிலையில் அது குறித்த தகவல்களை நூலகத்தில் தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் தேடியபோது கழுமரம் குறித்த கட்டுரை இடம்பெறாததை குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரங்கள் தொகு

  1. நினைவு அலைகள்; சாந்தா பதிப்பகம்; பக்கம் 617, 618
  2. ம. பொ. சிவஞானம். 1978 மு.ப. விடுதலைக்குப்பின் தமிழ் வளர்ந்த வரலாறு. சென்னை: பூங்கொடி பதிப்பகம்.
  3. தமிழுக்கு ஓர் அணிகலன், கட்டுரை (ஆ. வேங்கடசலபதி எழுதிய, தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை என்ற நூலுக்கான மதிப்புரை) மு. இராமநாதன், இந்து தமிழ், 2020, சனவரி, 4
  4. காலம்காலமாகக் காத்திருக்கும் 'கலைக்களஞ்சியம்' கட்டுரை, சுப்பிரமணி இரமேஷ் இந்து தமிழ், 7, ஆகத்து 2022

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tamil Encyclopedia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.