தமிழ்க் கலைக்களஞ்சியங்கள்
தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் எனப்படுபவை தமிழ் மொழியில் அமைந்த கலைக்களஞ்சியங்கள் ஆகும். 20 ம் நூற்றாண்டிலேயே தமிழில் கலைக்களஞ்சியங்கள் தோன்றின. பல் துறைத் தகவல்களைத் தொகுக்கும் பொதுக் கலைக்களஞ்சியங்களும், துறை சார் கலைக்களஞ்சியங்களும் தமிழில் உண்டு. தற்போது இணையத்திலும் தமிழ் கலைக்களஞ்சியங்கள் உள்ளன.
வரலாறு
தொகுதமிழ் மொழி நீண்ட எழுதப்பட்ட இலக்கண, இலக்கிய மரபைக் கொண்டது. தொல்காப்பியம், திருக்குறள், திருமந்திரம் போன்ற தமிழ் ஆக்கங்கள் பல வகைச் செய்திகளைக் கூறுகின்றன. ஆனால் அவற்றின் முதன்மை உள்ளடக்கமாக ஒரு குறிப்பிட்ட துறையே (இலக்கணம், அறம், சைவ சித்தாந்தம்) உள்ளது. தமிழ்ச் சமூகம் நுட்ப வளர்ச்சியில் முதன்மை பெற்று இருந்த காலங்கள் உள்ளன, ஆனால் அந்த நுட்பங்கள் தமிழில் எழுதிப் பகிரப்படவில்லை. தமிழ் மொழி மரபில் இது ஒரு பெரும் குறைபாடு ஆகும்.[1][2][3] இதனால் பல வகைச் செய்திகளை, குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், சமூகம் தொடர்பான தகவல்களைத் தொகுத்துத் தரும் கலைக்களஞ்சியங்கள் தமிழ் மொழியில் 20 ம் நூற்றாண்டு வரை தோன்றவில்லை.
அபிதானகோசம், அபிதான சிந்தாமணி
தொகுதமிழில் முதலில் தோன்றிய கலைக்களஞ்சியங்கள் இலக்கியக் கலைக்களஞ்சியங்களே ஆகும். அபிதானகோசம் மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டு, யாழ்ப்பாணம் நாவலர் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டு, 1902 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அபிதானகோசத்திலும் விரிவாகவும் விடயப் பரப்பிலே ஆழமாகவும் அமைந்து வெளிவந்தது அபிதான சிந்தாமணி ஆகும். இது மதுரைத் தமிழ்ச்சங்க வெளியீடாக 1910 ஆம் ஆண்டு வெளிவந்தது. அபிதான சிந்தாமணி ஆ. சிங்காரவேலு முதலியாரின் கடின உழைப்பின் ஆக்கம் ஆகும்.
தமிழ்க் கலைக்களஞ்சியம்
தொகுதமிழின் முதல் விரிவான பல் துறைக் கலைக்களஞ்சியம் தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆகும். தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் தலைமையில் தமிழ் வளர்ச்சிக் கழகம் 1947 ஆம் ஆண்டு தமிழ்க் கலைக்களஞ்சியம் உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தது. பெரியசாமி தூரன் நெறிப்படுத்தி, பல நூறு அறிஞர்கள், பேராசிரியர்கள், பதிப்பாசிரியர்களின் கூட்டுழைப்பாக 10 தொகுதிகளாக 1954 - 1968 காலப் பகுதியில் தமிழ்க் கலைக்களஞ்சியம் வெளிவந்தது.
அறிவியல், வாழ்வியல் கலைக்களஞ்சியங்கள்
தொகு1980 களில் தமிழில் துறைசார் கலைக்களஞ்சியங்கள் வெளிவரலாயின. இவற்றுள் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் அறிவியல், பொறியியல் துறைகளுக்கென வெளியிடப்பட்ட அறிவியல் களஞ்சியமும், மானுடவியல், சமூக அறிவியல் துறைகளுக்கு என வெளியிடப்பட்ட வாழ்வியற் களஞ்சியமும் முக்கிய படைப்புகள் ஆகும்.
இணையக் கலைக்களஞ்சியங்கள்
தொகு1990 களின் பிற்பகுதி, 2000 களில் இணையத்தில் தமிழில் பல்வகைத் தகவல்களைத் தொகுக்கும் முயற்சிகள் நடைபெற்றன. இவற்றுள் இன்தாம்[4], தமிழ்க் களஞ்சியம் ஆகியன குறிப்பிடத் தக்கன. இணையம் ஊடாக பயனர்கள் தொகுக்கும் விக்கிப்பீடியா பன்மொழிக் கலைக்களஞ்சியத் திட்டத்தின் தமிழ்ப் பிரிவான தமிழ் விக்கிப்பீடியா 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
பட்டியல்
தொகு- அபிதானகோசம்
- அபிதான சிந்தாமணி
- தமிழ்க் கலைக்களஞ்சியம் - 10 தொகுதிகள்
- குழந்தைகள் கலைக்களஞ்சியம் - 10 தொகுதிகள்
- அறிவியல் களஞ்சியம் - 19 தொகுதிகள்
- வாழ்வியற் களஞ்சியம் - 15 தொகுதிகள்
- சைவக் களஞ்சியம் - அருணாசலம். கா. - 12 தொகுதிகள்
- இஸ்லாமிய கலைக்களஞ்சியம் - அப்துற் றகீம் - 4 தொகுதிகள்
- அனுராகம் சிறுவர் கலைக்களஞ்சியம் - ~8 தொகுதிகள்
- மருத்துவக் கலைக்களஞ்சியம் - 13 தொகுதிகள்
- சித்த மருத்துவம் - 6 தொகுதிகள்
- இந்தியத் தத்துவக் களஞ்சியம் - சோ. ந. கந்தசாமி - 3 தொகுதிகள்
- இந்துக் கலைக்களஞ்சியம் - சிவசுப்பிரமணியம் பத்மநாதன் (தொகுத்தது) - 10 தொகுதிகள்
- சைவசமயக் கலைக்களஞ்சியம் - சேக்கிழார் மனித வளமேம்பாட்டு அறக்கட்டளை - 10 தொகுதிகள்
- தமிழிசைக் கலைக்களஞ்சியம் - 4 தொகுதிகள்
- உடலியல் கலைக்களஞ்சியம் - 6? தொகுதிகள் - என். ஸ்ரீநிவாஸன் - [1]
- தமிழ் இலக்கிய வரலாறு - மு. அருணாச்சலம் - ~10 தொகுதிகள் [2]
- பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (தமிழ்) - 3 தொகுதிகள்
- திராவிட கலைக்களஞ்சியம்
- தமிழ் இலக்கிய விமர்சனக் கலைக்களஞ்சியம் - இணையக் கலைக்களஞ்சியம்
- தமிழ் விக்கிப்பீடியா - இணையக் கலைக்களஞ்சியம்
- தமிழ்க் களஞ்சியம் - இணையக் கலைக்களஞ்சியம்
- வேளாண்மைக் கலைக்களஞ்சியம்
- இளையர் அறிவியல் களஞ்சியம் - மணவை முஸ்தபா - 1 தொகுதி - (சிறு)
- அறிவியல் தகவல் களஞ்சியம் - மொழிபெயர்ப்பு - 1 தொகுதி - (சிறு)
- பாலியல் கலைக்களஞ்சியம் - மொழிபெயர்ப்பு - 1 தொகுதி - (சிறு)
- விவசாய கலைக்களஞ்சியம் - இணையக் கலைக்களஞ்சியம் - (சிறு)
- சிறுவர்களுக்கான பொது அறிவுக் கலைக்களஞ்சியம் - (சிறு)
- வண்ணக்களஞ்சியம் - காஞ்சி சிறீ நாகலிங்க முனிவர் - (சிறு)
- ஜைன ஆகம கலைக்களஞ்சியம் - [3] ?
- வைஷ்ணவ சமயக் கலைக்களஞ்சியம் - [4] ?
- திருமுருகன் கலைக்களஞ்சியம் - [5] ?
- நகரத்தார் கலைக்களஞ்சியம் - [6] ?
- பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும்: அறிவுக்களஞ்சியக் கையேடு - (சிறு)
- சக்தி களஞ்சியம் பாகம் - 5 தொகுதிகள் ? - விஜயபாஸ்கரன் .வ வை .கோ .கரன் அழகப்பன் [7]
- மாணவர் அறிவியல் களஞ்சியம் - 8 தொகுதிகள் - [8]
- தகவல் களஞ்சியம் - 4 தொகுதிகள் [9]
- சங்க இலக்கியப் பொருட் களஞ்சியம் - [10]
- விகாஸ்பீடியா - இணையக் தகவல் களஞ்சியம்
- மூலிகைக் கலைக்களஞ்சியம் - (சிறு)
- உலகத் தமிழ்க் களஞ்சியம் மூன்று தொகுதிகள்
சமூக தாக்கம்
தொகுமுதன்மைக் கலைக்களஞ்சியங்கள் பாரிய சமூக, மொழியியல் தாக்கத்தை ஏற்படுத்த வல்லன. சுதந்திர இந்தியாவில் தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் ஆக்கம் தமிழையும், தமிழ்ச் சமூகத்தையும் நவீனப்படுத்தியதில் ஒரு முக்கிய பங்காற்றியது. எனினும் தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் வீச்சு தொடர்ச்சியாக பேணப்படவில்லை.[5] தமிழ்நாட்டில் ஆங்கில மொழிக் கல்வி மேலோங்கிய பின்னர் தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் பயன்பாடு அருகியது, அவற்றைத் தொடர்ச்சியாக இற்றைப்படுத்த வேண்டிய தேவையும் குறைந்தது. இன்றும் தமிழ் வழிக் கல்வி மாணவர்களுக்கு அவசியமான ஒரு தகவல் மூலமாக தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் உள்ளன.
தமிழ்க் கலைக்களஞ்சியங்களே தமிழில் பல்துறைத் தகவல்களை எழுதுவதற்கு அடித்தளம் இட்டன. தமிழ்க் கலைக்களஞ்சிய ஆக்கத்தின் போது புதிய கலைக்சொற்கள், நடைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இவ்வாறு அறிவியல் தமிழை தமிழ்க் கலைக்களஞ்சியங்கள் வளர்த்தன.
சிக்கல்கள்
தொகுதமிழ்க் கலைக்களஞ்சியம் ஒன்றைத் தொகுப்பதும், அதை மக்களிடம் எடுத்துச் செல்வதும் பல சிக்கல்களைக் கொண்ட ஒரு பணியாகும். தொடக்கத்தில் பல துறைகளில் தமிழில் நூல்கள், ஆக்கங்கள், கலைச்சொற்கள் அரிதாக இருந்தன. எனவே தமிழ் கலைக்களஞ்சிய ஆக்கர்களுக்கு ஆராய்ச்சிப் பின்புலம் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. இவர்கள் பெரும்பாலும் ஆங்கில, உருசிய அல்லது பிற மொழி உசாத்துணைகளை பயன்படுத்த வேண்டி இருந்தது.
தமிழ்க் கலைக்களஞ்சியங்களைப் பெற்று பயன்படுத்தப் பல தடைகள் இருந்தன. எல்லா நிலைப் பாடசாலைகளிலும் இவை கிடைக்கவில்லை. அச்சுத் தமிழ்க் கலைக்களஞ்சியங்களின் விலை கனதியாக இருந்ததால் பெரும்பாலானவர்களால் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடிவதில்லை. தமிழில் கலைக்களஞ்சியங்கள் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படுவது இல்லை.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ கா. சிவத்தம்பி தமிழ் இலக்கிய வரலாறு
- ↑ தமிழில் அறிவியல் கலைச்சொற்களின் தேவையும் வளர்ச்சியும் - அறிவியல் நம்பி
- ↑ விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி - ஜெயபாரதன்
- ↑ "web.archive.org - இன்தாம்". Archived from the original on 2001-03-02. பார்க்கப்பட்ட நாள் 2001-03-02.
- ↑ பெரியசாமி தூரன்