திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்

திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இறைவன் அப்பருக்குத் திருவடி சூட்டியதும் அமர்நீதி நாயனாரை ஆட்கொண்டதும் இத்தலத்தில் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 20ஆவது சிவத்தலமாகும். தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் திருநல்லூர் உள்ளது.

தேவாரம் பாடல் பெற்ற
திருநல்லூர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):சுந்தரகிரி
பெயர்:திருநல்லூர் கோயில்
அமைவிடம்
ஊர்:பாபநாசம் தலத்திற்கு கிழக்கே 5-கி.மீ. தொலைவு. (வலங்கைமான் - பாபநாசம் சாலை).
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கல்யாணசுந்தரேஸ்வரர், பஞ்சவர்ணேஸ்வரர், பெரியாண்டேஸ்வரர்.
தாயார்:கல்யாண சுந்தரி, திரிபுரசுந்தரி, பர்வதசுந்தரி.
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:சப்தசாகர தீர்த்தம்.
ஆகமம்:சிவாகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

தல வரலாறுதொகு

 • ஆதிசேஷனுக்கும் வாயுபகவானுக்கும் நடந்த சண்டையின்போது கயிலை மலையிலிருந்து வாயுவால் தூக்கி எறியப்பட்ட இரு சிகரங்களில் ஒன்று இத்தலம். (மற்றது ஆவூர்). இச்சிகரத்தில் இறைவன் எழுந்தருளியுள்ளார். இது சுந்தரகிரி எனப்படுகிறது.
 • திருநாவுக்கரசருக்கு ஈசன் திருவடி சூட்டியத் திருத்தலம்.
 • அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலக் காட்சி வழங்கியது.
 • பிருங்கி முனிவர் வண்டு வடிவம் தாங்கி, வழிபட்ட தலம்.
 • குந்திதேவி,தருமன் பூசித்து பேறு பெற்ற தலம்.
 • திருவாருரில் தற்போது வீற்றிருக்கும் தியாகராஜ பெருமானை, முசுகுந்தன் இந்திரனிடம் இருந்து பெற்று இறைவனின் அருளின்படி இத்தலத்தில் மூன்று நாட்கள் வைத்து பூசை செய்து திருவாரூரில் பிரதிஷ்டை செய்தார்.

பிருங்கி முனிவர் வழிபட்டமைதொகு

பிருங்கி முனிவர் வண்டு உருவில் இறைவனை மட்டும் வலம் வந்த திருத்தலம். எனவே லிங்கத்தின் மீது சில துளைகள் உள்ளன[1]

ஒப்பு நோக்கதொகு

திருவெண்டுறை(திருவண்டுதுறை வண்டுறைநாதர் கோயில்) தலவரலாற்றிலும் இவ்வரலாறு கூறப்படுகிறது.[2]

தல சிறப்புகள்தொகு

 • அமர்நீதி நாயனாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் முக்தி கிடைத்த திருத்தலம். அவர் இருவரின் பிரதிமைகள், கற்சிலையிலும், செப்புச் சிலையிலும் உள்ளன.
 • இங்கு வில்வமரத்தடியில் சுயம்புவாக தோன்றினார் சிவபெருமான்.
 • இறைவன் பொன் நிறமாக இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஐந்து நிறங்களில் வெவ்வேறு வேளைகளில் காட்சி தருகிறார். தாமிரம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருகிய தங்கம், நவரத்தின பச்சை என மாறிமாறி காட்சி அளிப்பதால் பஞ்சலிங்கேசர் என அழைப்பார்கள்.
 • இஃது கோட்செங்கணாரின் மாடக்கோவிலாகும்.
 • சோழர் கால கல்வெட்டுகள் 22ம், முஹாய்சரர் கல்வெட்டு ஒன்றும் ஆக 23 கல்வெட்டுகள் உள்ளன.

கோயில் அமைப்புதொகு

கோயிலுக்கு முன்பாக குளம் உள்ளது. ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம் உள்ளது. அதில் விநாயகர் உள்ளார். அடுத்து, பலிபீடமும் நந்தி மண்டபமும் உள்ளன. அடுத்து ஒரு கோபுரம் உள்ளது. வெளிச்சுற்றில் நந்தவனம், மடப்பள்ளி, அஷ்டபுஜ மகாகாளியம்மன் சன்னதி, விநாயகர், நடராசர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றில் 63 நாயன்மார்கள், கன்னி விநாயகர், முகுசுந்த லிங்கம், சங்குகர்ண லிங்கம், சுமதி லிங்கம், வருண லிங்கம், விஷ்ணு லிங்கம், பிரம லிங்கம் ஆகிய சிற்பங்கள் உள்ளன. தொடர்ந்து நடராஜர், பைரவர், சனீஸ்வரர், சூரியன், சந்திரன், மகாலிங்கம், பானலிங்கம், ஜுரஹரேஸ்வரர், ஜுரஹரேஸ்வரியைக் காணலாம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, உச்சிஷ்ட கணபதி, கைலாய கணபதி, ஞான தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். திருச்சுற்று மண்டத்தில் உமாமகேசுவரர், சங்கர நாராயணர், லிங்கோத்பவர், சுஹாசனர், நடராஜர், ரிஷபாரூடர் உள்ளிட்ட சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன. மூலவர் கல்யாணசுந்தரரேஸ்வரர் கட்டுமலை மீது, கிழக்கு நோக்கிய சன்னதியில் உள்ளார். அவருக்கு எதிரே பலிபீடமும், நந்தியும் உள்ளன. அருகே கணபதி உள்ளார். மூலவருக்குப் பின்புறம் அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்டிய கல்யாணசுந்தரர் சுதை வடிவில் உள்ளார். மூலவர் சன்னதிக்குச் செல்லும் வாயிலின் பக்கத்தில் அம்மன் சன்னதி, தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது. அடுத்து முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். அருகில் பள்ளியறை உள்ளது.

சப்தஸ்தானம்தொகு

திருநல்லூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள் திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகிய தலங்களாகும்.[3]

அமர்நீதி நாயனார் மடம்தொகு

அமர்நீதி நாயனார் தமது தலமாகிய பழையாறையிலிருந்து இங்கு குடிபுகுந்து திருமடம் உருவாக்கி, அடியார்களுக்கு அமுதூட்டியும், திருவிழாச் சேவித்தும் வாழ்ந்தனர். அவரது திருமடம் கோவிலுக்கு வெளியே குளத்தின் தென்மேலைக்கரையில் சிதிலமடைந்த நிலையில் இப்போதும் உள்ளது. இதனைச் செப்பனிட்டுக் காத்துப் போற்றல் சைவர்களின் முக்கியக் கடமையாகும்.[4]

திருத்தலப் பாடல்கள்தொகு

இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:

திருஞானசம்பந்தர் பாடிய பதிகம்

கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி
நட்டம் பயின்றாடும் நல்லூர்ப் பெருமானை
முட்டின் றிருபோதும் முனியா தெழுந்தன்பு
பட்ட மனத்தார்கள் அறியார் பாவமே.
பெண்ணமருந் திருமேனி யுடையீர்பிறங்கு சடைதாழப்
பண்ணமரும் நான்மறையே பாடியாடல் பயில்கின்றீர்
திண்ணமரும் பைம்பொழிலும் வயலுஞ்சூழ்ந்த திருநல்லூர்
மண்ணமருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே..

திருநாவுக்கரசர் பாடிய பதிகம்

அந்திவட் டத்திங்கட் கண்ணியன் ஐயா றமர்ந்துவந்தென்
புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோ
சிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்த
நந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.
நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார் செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார் நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே..

இவற்றையும் பார்க்கதொகு

வெளி இணைப்புக்கள்தொகு

சான்றுகள்தொகு

 1. http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=8455&Cat=3?Nid=8455
 2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 263;199
 3. ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002
 4. சிவக்கவிமணி சி.கே.சுப்பிரமணிய முதலியார், அமர்நீதியார் எனும் பழையாறை நகர் வணிகர், பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீதுர்க்காம்பிகை திருக்கோயில் கும்பாபிஷேக மலர், 1999

புகைப்படங்கள்தொகு