திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில்

(திருப்பாம்புபுரம் சேஷபுரீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவாலயம் ஆகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 59ஆவது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):சேஷபுரி, திருப்பாம்புரம்
பெயர்:திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருப்பாம்புரம்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பாம்புரநாதர்
தாயார்:வண்டுசேர் குழலி(வண்டார் குழலி)
தல விருட்சம்:வன்னி
தீர்த்தம்:ஆதிசேஷ தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர்

தலச்சிறப்பு

தொகு

ஆனை தொழுத தலம் திருஆனைக்கா எனவும், எறும்பு தொழுத தலம் திறு எறும்பூர் எனவும் வழங்கப்படுவதுபோல, பாம்பு தொழுத இத்தலம் திருப்பாம்புரம், “பாம்புரம்” எனப் பெயர் கொண்டது. திருஞானசம்பந்தர் தன் தேவாரப் பாடல்களில் இத்தலத்தைப் “பாம்புர நன்னகர்” என்று குறிப்பிடுகிறார்.[1] திருநாவுக்கரசர் தம் திருத்தாண்டகத்திலும், சுந்தரர் தம் தேவாரத்திலும் இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர். அருணகிரிநாதரும் திருப்புகழில் இத்தலத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இத்தலத்தில் ஆதிசேடன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு, கேது போன்ற சந்தர்ப்ப தோஷங்கள் விலகவும் சிறந்த தலம் என வழிபடுவோரால் நம்பப்படுகிறது.

கோயில் அமைப்பு

தொகு

மூலவர், இறைவி

தொகு

நுழைவாயிலை அடுத்து விநாயகர், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. அடுத்து ராஜகோபுரம் உள்ளது. மூலவராக லிங்கத்திருமேனியாக சேசபுரீஸ்வரர் உள்ளார். மூலவருக்கு முன்பாக வலது புறம் விநாயகர், இடது புறம் சுப்பிரமணியர் உள்ளனர். மூலவர் சன்னதியை அடுத்து தனியாக வண்டார்குழலி சன்னதி உள்ளது.

சட்டைநாதர் சன்னதி

தொகு

மூலவர் விமானத்தின்கீழ் சட்டைநாதர் உள்ளார். இதற்குப் பீடம் மலை ஈஸ்வரர் கோயிலில உள்ளது. இக்கோயில் விமானம் வட்டமானதாகும். விமானத்தின் கிழக்குப் புறத்தில் உள்ள சிறிய கோயிலில் சுதையால் செய்யப்பட்ட சட்டை நாதர் உருவம் தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது.[2]

மலைஈஸ்வரர் கோயில்

தொகு

கருவறையை அடுத்து தெற்கில் மலைஈஸ்வரர் சன்னதி உள்ளது. இதற்குப் படிக்கட்டுகள் உள்ளன. இதன் வழியாக ஏறிச்சென்றால் பாம்புரநாதர் கருவறை விமானத்திற்கு வர முடியும்.[2]

திருச்சுற்று

தொகு

திருச்சுற்றில் ராஜ விநாயகர் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சன்னதி, வன்னீஸ்வரர் சன்னதி, சண்டிகேஸ்வரர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றில் பைரவர், சூரியன், மகாவிஷ்ணு, பிரம்மா, மாணிக்கவாசகர், சுந்தரர், நாவுக்கரசர், ஞானசம்பந்தர், மகாலிங்கம், சனி பகவான், பாணலிங்கம் ஆகியோர் உள்ளனர். மூலவர் கருவறை கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை, தட்சிணாமூர்த்தி ஆகியோர் உள்ளனர். கோயிலுக்கு முன்பாக எதிரில் கோயில் குளம் உள்ளது.

சிவராத்திரி தொடர்பு

தொகு

நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.[3]

வழிபட்டோர்

தொகு

அனந்தன், வாசுகி, தட்சன், கார்க்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு மகா நாகங்கள் மற்றும் நாகராஜரான ஆதிசேடன்.

இவற்றையும் பார்க்க

தொகு

படத்தொகுப்பு

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. துஞ்சுநாள் துறந்து தோற்றமும் இல்லாச் சுடர்விடுசோதி எம்பெருமான்
    நஞ்சுசேர் கண்டம் உடைய என்நாதர் நள்ளிருள் நடம்செயும் நம்பர் மஞ்சுதோய் சோலை மாமயில் ஆட மாட மாளிகை தன்மேல் ஏறிப் பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் ’பாம்புர’ நன்னகராரே. -திருஞானசம்பந்தர்

  2. 2.0 2.1 ச.கிருஷ்ணமூர்த்தி, திருப்பாம்புரம் சேடபுரீஸ்வரர் கோயில், மா. சந்திரமூர்த்தி, தமிழ்நாட்டுச் சிவாலயங்கள், தொகுதி 2, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004, ப.235
  3. கண்டியூர் வந்த காளத்திநாதன், தினமணி, வெள்ளிமணி, 13.2.2015

வெளி இணைப்புகள்

தொகு