துங்கபத்ரா அணை
துங்கபத்ரா அணை அல்லது பம்பா சாகர் (ஆங்கில மொழி: Tungabhadra Dam) என்பது கிருஷ்ணா ஆற்றின் துணை ஆறான துங்கபத்ரா ஆற்றின் குறுக்கே கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டத்தின் ஹொஸபேட்டே பகுதியிலுள்ள அணையாகும்.[1] வேளாண்மை, மின்சாரம், வெள்ளநீர் மேலாண்மை என இந்த அணை பல்நோக்கு பயன்பாட்டைக் கொண்டுள்ளது. இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் ஹைதராபாத் மாகாணமும், சென்னை மாகாணமும் இணைந்து அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது.[2] சுதந்திரத்திற்குப் பின்னர் கருநாடகம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் சேர்ந்து 1953 ஆம் ஆண்டு கட்டிமுடித்தனர். ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிடையே அணை நீர் பங்கீட்டில் பிணக்கு நிலவுகிறது. ஹைதராபாத் மாகாணத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் இதன் தலைமைப் பொறியாளர் ஆவார். மண்ணும் சுண்ணாம்பும் சேர்ந்து கட்டப்பட்டதால் இதன் நிலைத்தன்மையும், நீடித்து நிற்கும் தன்மையும் கொண்டுள்ளது. இதைப் போல எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நிலைத்து நிற்கும் சிமெண்ட் அல்லாத அணை இதுவெனக் கருதப்படுகிறது.[சான்று தேவை] மாபெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்டு இதைக் கட்டிமுடித்தனர், அதன் பிரதான ஒப்பந்ததாரராக ஹைதராபாத் மாகாண மகபூப்நகரின் கொன்னூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட் ரெட்டி முலமால்லா செயல்பட்டார்.
துங்கபத்ரா அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | துங்கபத்ரா அணை |
அமைவிடம் | ஹொஸபேட்டே, பெல்லாரி மாவட்டம், கருநாடகம், இந்தியா |
கட்டத் தொடங்கியது | 1949 |
திறந்தது | 1953 |
உரிமையாளர்(கள்) | கர்நாடக அரசு |
இயக்குனர்(கள்) | துங்கபத்ரா வாரியம் |
அணையும் வழிகாலும் | |
வகை | தொகுப்பணை, வெள்ளக்கால் நீளம் (701 மீ) |
தடுக்கப்படும் ஆறு | துங்கபத்திரை ஆறு |
உயரம் | 49.50 m (162 அடி) பள்ளமான கட்டுமானத்திலிருந்து |
நீளம் | 2,449 m (8,035 அடி) |
வழிகால் அளவு | 650,000 cusecs |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | துங்கபத்ரா நீர்த்தேக்கம் |
மொத்தம் கொள் அளவு | 101 tmcft at FRL 498 மீ msl |
செயலில் உள்ள கொள் அளவு | 98.7 tmcft (at 498 m msl) |
செயலற்ற கொள் அளவு | 2.3 tmcft (below 477.01 m msl) |
நீர்ப்பிடிப்பு பகுதி | 28,180 km2 (10,880 sq mi) |
மேற்பரப்பு பகுதி | 350 km2 (140 sq mi) |
மின் நிலையம் | |
இயக்குனர்(கள்) | கர்நாடக அரசு |
நிறுவப்பட்ட திறன் | 127 மெகாவாட் |
இணையதளம் www.tbboard.gov.in |
வரலாறு
தொகு1860 வாக்கில் பெல்லாரி, அனந்தபூர், கர்னூல் மற்றும் கடப்பா மாவட்டத்தை உள்ளடக்கிய இராயலசீமை பகுதிகளில் ஏற்பட்ட பஞ்சம் பிரிட்டீஷ் பொறியாளர்கள் கவனத்திற்கு வருகிறது. பஞ்சத்திலிருந்து மீண்டு வர துங்கபத்ரா நதி நீரைத் தேக்கிக் கால்வாய்கள் மூலம் வேளாண்மைக்குப் பயன்படுத்திக் கொள்ள அணைக்கான பரிந்துரையை முன்வைக்கப்பட்டது. 1860 இல் ஆர்தர் காட்டன் என்பவரால் இத்திட்ட வரைவு முதலில் உருவாக்கப்பட்டாலும், படிப்படியாக மேம்படுத்தப்பட்டு, ஹைதராபாத்தைச் சேர்ந்த என். பரமேஸ்வரன் பிள்ளை என்பவரால் 1933 இல் புதிய வரைவு முன்வைக்கப்பட்டது. வேளாண்மைக்காக இதற்கு முன்னர் இருந்த நதிநீர் ஒப்பந்தங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாகத் தீர்த்துவைக்க எட்டாண்டுகள் ஆகின. இறுதியாக மெட்ராஸ் மாகாண அரசு 1940 இல் ஆய்வறிக்கை தயாரிக்க உத்தரவு இட்டது. அப்போதைய பொறியியல் கண்காணிப்பாளர் எல். வெங்கடகிருட்டிண ஐயர், தலைமைப் பொறியாளர் எப். எம். டௌலெய் என பலரது பரிந்துரைகளையும் ஆராய்ந்து எம். எஸ். திருமலை ஐயங்கார் என்பவரால் 1942 இல் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 1944 இல் மெட்ராஸ் மற்றும் ஹைதராபாத் அரசுகளுக்கிடையே புரிந்துணர்வு செய்து கொண்டு துங்கபத்ரா திட்டம் தொடங்கப்பட்டது.
அலுவல்ரீதியாக 1945 பிப்ரவரி 28 ஆம் நாள் சர் ஆர்தர் ஹோப் என்ற மெட்ராஸ் ஆளுநர் முன்னிலையிலும் பேரர் இளவரசர் முன்னிலையிலும் தொடங்கிவைக்கப்பட்டது. ஆனால் அரசியல் மற்றும் தொழில்நுட்ப இடர்களால் 1949 ஜனவரி வரை பணிகள் தொடங்கவில்லை. மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா தலைமையில் இரு மாநில பொறியாளர்கள் கூடி அணை கட்டுமானத்தின் நீர் பங்கீடு குறித்து விவாதித்து உறுதி செய்தனர்.
1947 இல் அற்றின் கரைகளில் அகழ்வாய்வு செய்து, 1949 ஏப்ரல் 15 ஆம் நாள் கட்டுமானப் பணிகள் தொடங்கின. கோபர் அணை கட்டிய அனுபவத்தைக் கொண்டு வெள்ள காலத்திலும் அகழ்வாய்வுப் பணிகள் தொடர்ந்தன. 1950 வாக்கில் கரையோரக் கட்டுமானங்கள் முடிந்து, 1951 இல் தடுப்புக் கட்டுமானமும் நிறைவு பெற்றது. இதனால் 1953 அக்டோபரில் +1613.00 அடி நீர் தேக்கிவைக்கப்பட்டது. நிலக் கையகப்படுத்தலும், மறு குடியமர்வுப் பணிகளும் தொடர்ந்து 1953 செப்டம்பர் வரை நடந்தன. 90 கிராமங்களில் 54,452 மக்கள் இதனால் பாதிக்கப்பட்டனர். மீதிப் பணிகளான சாலைப் பாலம், அணைக் கோபுரம், நீர் தேக்கும் எந்திரங்கள், வடிகால் போன்ற பணிகள் அனைத்தும் 1958 ஜூன் மாதத்தில் நிறைவு பெற்றன. பொருட்களுக்கும், பணிக்கும் சேர்த்து மொத்தம் 16.96 கோடி செலவாகியது. 1953 ஜூலை ஒன்றாம் நாள் நீர் திறந்துவிடப்பட்டது.
மின்னுற்பத்திக்கான கால்வாய் 1954 ஜூன் மாதத்தில் தொடங்கி 1957 மே மாதத்தில் நிறைவடைந்தன. 1956 அக்டோபர் 2 இல் ஆந்திர அரசின் சார்பாக முதல் நீர் மின்சாரத் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. 920 லட்சம் செலவில் 1966 ஜூன் மாதம் நிறைவு செய்யப்பட்டு, 1966 ஜூலை 27 ஆம் நாள் கால்வாயில் நீர் திறக்கப்பட்டது. இரண்டாம் நீர் மின்சாரத் திட்டம் 487 லட்சம் செலவில் 1970 ஜூன் மாதம் முழுமையடைந்தது. இந்த நீர் மின் உற்பத்தித் திட்டமானது முதலாம் இந்திய ஐந்தாண்டு திட்டங்களுள் ஒன்றாகச் செயல்படுத்தப்பட்டது.[3]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Map of Krishna River basin" (PDF). Archived from the original (PDF) on 6 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2019.
- ↑ "The Secret History of Hyderabad State of the Nizam (South India; 1724 – 1948)".
- ↑ "History of Tungabhadra Project | TUNGABHADRA BOARD". tbboard.gov.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 ஆகத்து 2018.
வெளியிணைப்புகள்
தொகு