மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா

மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா (கன்னடம்: ಶ್ರೀ ಮೋಕ್ಷಗುಂಡಂ ವಿಶ್ವೇಶ್ವರಯ್ಯ; 15 செப்டம்பர் 1860 - 12/14 ஏப்பிரல் 1962)[1] புகழ்பெற்ற இந்திய பொறியாளர் ஆவார். இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னாவை 1955ம் ஆண்டு பெற்றவர். இவர் நினைவாக செப்டம்பர் 15 இந்தியாவில் பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் பிறந்த மாநிலமான கர்நாடகாவில் செப்டம்பர் 15 பொது விடுமுறை நாளாகும்.

சர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, KCIE
ಮೋಕ್ಷಗುಂಡಂ ವಿಶ್ವೇಶ್ವರಯ್ಯ
பிறப்பு(1860-09-15)செப்டம்பர் 15, 1860
முத்தனஹல்லி, கனிவேநாராயணப்புரா, சிக்பல்லாப்பூர் வட்டம், சிக்பல்லாப்பூர் மாவட்டம், மைசூர் அரசாளுகை (நடப்பு கருநாடகம்)
இறப்புஏப்ரல் 14, 1962(1962-04-14) (அகவை 101)
பெங்களூரு
பணிபொறியாளர், மைசூர் திவான்
வலைத்தளம்
கருநாடகா.கொமில் விசுவேசுவரய்யா

இளம்பருவம்

தொகு

இவர் சீனிவாச சாஸ்திரிக்கும் வெங்கசம்மாளுக்கும் கர்நாடகத்தில் சிக்கபல்லபுரா மாவட்டத்திலுள்ள முட்டனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார்.[2] இக்கிராமம் முன்பு மைசூர் அரசுக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. இவர் தந்தை சீனிவாச சாஸ்திரி சமசுகிருதத்தில் பண்டிதராகவும் இந்து சமய நூல்களில் புலமையும் பெற்றிருந்ததுடன் ஆயுர்வேத மருத்துவமும் செய்து வந்தார். விசுவேசுவரய்யாவின் மூதாதையர்கள் ஆந்திரப்பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்திலுள்ள கிட்டலூருக்கு அருகிலுள்ள மோக்சகுண்டம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் இவர்கள் மைசூர் அரசுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.[3] மோக்சகுண்டம் என்ற குடும்பப் பெயர் இத்தொடர்பு மறந்துவிடாமல் காக்கிறது.

இவரது 15வது வயதில் தந்தையை இழந்தார். அச்சமயத்தில் இவரது குடும்பம் ஆந்திரப்பிரதேசத்தின் கர்னூலில் வசித்து வந்தது. இத்துயர நிகழ்வு காரணமாக அவர்கள் முட்டெனஹள்ளிக்கு திரும்பினார்கள். விசுவேசுவரய்யா தனது பள்ளிப்படிப்பை சிக்கபல்லபுராவிலும் பெங்களூரிலும் தொடர்ந்தார். இளங்கலை படிப்பை 1881 ல் சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின் கட்டட பொறியியல் படிப்பை புனே அறிவியல் கல்லூரியில் முடித்தார்.[4]

பொறியாளர்

தொகு

பொறியியல் படிப்பு முடித்ததும் விசுவேசுவரய்யா பாம்பே பொதுப் பணித்துறையில் பணிக்கு சேர்ந்தார். பின்பு இவர் இந்திய பாசன ஆணையத்துக்கு அழைக்கப்பட்டார். இவர் கடுஞ்சிக்கலான பாசன அமைப்பை தக்காண பகுதியில் செயல்படுத்தினார். இவர் தானியங்கி வெள்ளமடை மதகை வடிவமைத்து காப்புரிமை பெற்றார். 1903 இல் புனேக்கு அருகில் கடக்வசல (Khadakvasla) நீர்த்தேக்கத்தில் இவரது தானியங்கி மதகு முதலில் நிறுவப்பட்டது. இந்த மதகுகளின் வெற்றிகரமான செயல்பாடுகளால் இவ்வமைப்பு குவாலியருக்கு அருகில் டைக்ரா அணை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் நிறுவப்பட்டது.

வெள்ளத்தில் இருந்து ஐதராபாத் நகரை பாதுகாக்க வெள்ள தடுப்பு முறை அமைப்பை வடிவமைத்தது இவருக்கு அனைவரிடமும் பெரும்புகழை பெற்று தந்தது. விசாகப்பட்டிணம் துறைமுகத்தை கடல் அரிப்பிலிருந்து தடுக்கும் அமைப்பை உருவாக்க இவர் காரணமாகவிருந்தார்.[5]

விசுவேசுவரய்யா காவிரியின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணை கட்டுமானத்தை திட்டக்கருத்து உருவாக்கத்திலிருந்து திட்டம் முடியும் வரை மேற்பார்வையிட்டார். இவ்வணை உருவாக்கிய நீர்த்தேக்கம் அச்சமயத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரியதாக இருந்தது.[6] 1894 ல் மைசூருக்கு அருகிலுள்ள சிவசமுத்திரத்தில் ஆசியாவிலேயே முதல் நீர் மின் உற்பத்தி ஆலையை அமைக்க காரணமானார். இவர் நவீன மைசூர் அரசின் தந்தை என அழைக்கப்படுகிறார்.திருப்பதியிலிருந்து திருமலைக்கு சாலை அமைக்கும் திட்டப்பணிக்கு காரணமாக இருந்தார்.

மைசூர் திவான்

தொகு

1908ல் விருப்ப ஓய்வு பெற்ற பின் விசுவேசுவரய்யா மைசூர் அரசின் திவானாக நியமிக்கப்பட்டார். மைசூர் மன்னர் நான்காம் கிருஷ்ணராச உடையாரின் ஆதரவுடன் திவானாக மைசூர் அரசில் இதற்கு முன் நிகழ்ந்திராத பல சிறப்பான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தினார். கிருஷ்ணராஜ சாகர் அணை, சிவசமுத்திரத்தில் நீர்மின் உற்பத்தி திட்டம், பத்ராவதி எஃகு ஆலை, பெங்களூரில் ஸ்ரீ ஜெயசாமராஜேந்திரா பாலிடெக்னிக் நிலையம், மைசூர் பல்கலைக்கழகம், கர்நாடகா சோப் & டிடர்ஜன்ட் நிறுவனம் மற்றும் பல ஆலைகள் , பொது பணிகளுக்கு இவர் காரணமாக இருந்தார். 1917 ல் பெங்களூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க காரணமானார். பின்பு இது விசுவேசுவரய்யா பொறியியல் கல்லூரி பல்கலைக்கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப் பொறியியல் கல்லூரி பெங்களூர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

கௌரவிப்பு

தொகு

உருவாக்கிய இந்தியப்பேரரசின் ஒழுங்கின் நைட் கம்மாண்டர் (Knight Commander) என்ற பட்டம் இவருக்கு மைசூர் திவானாக இருந்த போது ஆற்றிய அளப்பரிய பொதுச்சேவைக்காகப் பிரித்தானியர்களால் வழங்கப்பட்டது. இந்தியா விடுதலை பெற்ற பின்பு 1955 ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவர் லண்டனை மையமாக கொண்ட பன்னாட்டு கட்டுமான கழகத்தின் மதிப்புறு உறுப்பினராக கௌரவிக்கப்பட்டார். இந்திய அறிவியல் நிறுவனத்தின் fellowship இவருக்கு வழங்கப்பட்டது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்கள் வழங்கின. இந்திய அறிவியல் காங்கிரசின் 1923 ஆம் ஆண்டு அமர்விற்கு இவர் தலைவராக இருந்தார்.

குற்றச்சாட்டு

தொகு

பத்து கோடி ரூபாய் மதிப்பீட்டில் கிருஷ்ண ராஜசாகர் அணையை கட்ட அவர் முயன்ற பொழுது அரசர் யோசித்தார் .அதன் மூலம் மின்சாரம் தயாரித்து பிற மாநிலத்துக்கு விற்கலாம் என இவர் சொல்லி சாதித்தார்.காவிரியின் நடுவே ஒப்பந்தத்தை மீறி அணை கட்டினார்கள்.[7]

நூல்கள்

தொகு
  • இந்தியாவின் மீள்கட்டமைப்பு (1920)
  • திட்டமிட்ட இந்தியப் பொருளாதாரம் (1934)

கிராமங்களைத் தொழில் மயமாக்குதல் பற்றியும் இந்திய நாட்டுத் தொழில் வளர்ச்சிப் பற்றியும் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியும் சில நூல்கள் எழுதினார்.

நினைவுச் சின்னங்கள்

தொகு
  • விசுவேசுவரய்யா தொழில் துறை மற்றும் தொழில் நுட்ப அருங்காட்சி யகம், பெங்களுரு.
  • விசுவேசுவரய்யா தொழில்நுட்பப் பல்கலைகழகம் (தலைமையகம், பெல்காம்)
  • விசுவேசுவரய்யா தேசிய தொழில் நுட்பக் கழகம்,நாகபுரி மராட்டிய மாநிலம்.
  • விசுவேசுவரய்யா இரும்பு எக்கு தொழிற்சாலை, பத்ராவதி.

மேற்கோள்கள்

தொகு
  1. Sir M. Visvesvaraya | Sir MV | Karnataka Personalities. Karnataka.com (1 October 2007). Retrieved on 30 December 2013.
  2. Karnataka News : Remembering Karnataka's icon – Sir. M. Visvesvaraya பரணிடப்பட்டது 2013-09-28 at the வந்தவழி இயந்திரம். The Hindu (15 September 2010). Retrieved on 30 December 2013.
  3. Nath, Pandri (1987). Mokshagundam Visvesvaraya: life and work. Bharatiya Vidya Bhavan. p. 3.
  4. Kannada Anubhava. Bangalore: Department of Kannada, RV College of Engineering. 2010.
  5. "Visvesvaraya's services recalled". The Hindu. 16 September 2006 இம் மூலத்தில் இருந்து 10 மே 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110510083018/http://www.hindu.com/2006/09/16/stories/2006091619630300.htm. பார்த்த நாள்: 21 March 2011. 
  6. Husain, Dildar (1966) An Engineering Wizard of India, Institution of Engineers (India) AP, Hyderabad.
  7. "இந்தியாவின் பொறியியல் துறை தந்தை விஸ்வேஸ்வரய்யா". Vikatan. 15 September 2014. http://www.vikatan.com/news/coverstory/32373.html. பார்த்த நாள்: 11 February 2017. 

வெளி இணைப்புகள்

தொகு