தேசிய உயர் கல்வித் திட்டம்
தேசிய உயர் கல்வித் திட்டம் (Rashtriya Uchchatar Shiksha Abhiyan) என்பது இந்திய அரசின் கல்வித் துறை அமைச்சகத்தால் 2013-ல் தொடங்கப்பட்ட இந்தியாவில் உயர்கல்விக்கான முழுமையான வளர்ச்சித் திட்டமாகும். நாடு முழுவதிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு மூலோபாய நிதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் மத்திய அரசால் துவக்கப்பட்டது. மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய பகுதிகள் மூலம் மத்திய அமைச்சகத்தால் நிதி வழங்கப்பட்டு, மத்திய திட்ட மதிப்பீட்டு வாரியத்தின் ஒருங்கிணைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வமைப்பு கல்வி, நிர்வாக மற்றும் நிதி முன்னேற்றங்களைக் கண்காணிக்கும். மொத்தம் 316 மாநில பொது பல்கலைக்கழகங்கள் மற்றும் 13,024 கல்லூரிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும்.[1]
பின்னணி
தொகுஇந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதுமையான கல்விக் கொள்கைகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. தொடக்கக் கல்விக்காக 2001-ல் தொடங்கப்பட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம்மற்றும் இடைநிலைக் கல்விக்காக 2009-ல் தொடங்கப்பட்ட தேசிய இடைநிலைக் கல்வித் திட்டம் கல்வி வளர்ச்சியில் சிறந்த மேம்பாட்டினைத் தந்தது. உயர்கல்விக்கான பல்கலைக்கழக மானியக் குழு வழக்கமான கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டு நிதிகளுக்கான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் 12பி மற்றும் 2(எப்) பிரிவுகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மத்திய நிதியுதவி பெறும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான நிதி போதுமானது. இருப்பினும், 31 மார்ச் 2012 புள்ளி விவரப்படி, இந்தியாவில் உள்ள உயர்கல்வித் துறையானது 574 பல்கலைக்கழகங்கள் மற்றும் 35,539 கல்லூரிகளைக் கொண்டிருந்தது. இவற்றில் 214 பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்டத்தின் 12பி-ன் கீழ் வரவில்லை. மேலும் 6,787 கல்லூரிகள் மட்டுமே 12பி மற்றும் 2(எப்)-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், மாநில அரசுகளால் நடத்தப்படும் அதிக எண்ணிக்கையிலான உயர் கல்வி நிறுவனங்கள், அவற்றின் சொந்த நிர்வாகத்தில் வரையறுக்கப்பட்டவை, கல்வி சீர்திருத்தங்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கு போதுமான நிதி உதவி இந்த நிறுவனங்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, 2012-ல் 12வது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, மாநில/ஒன்றியத்தால் நிர்வகிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தனித் திட்டம் தேசிய வளர்ச்சிக் குழுமத்தினால் முன்மொழியப்பட்டது.[2] இதற்கு அமைச்சரவைக் குழு அக்டோபர் 2013-ல் ஒப்புதல் அளித்தது.
நோக்கங்கள்
தொகுதேசிய உயர் கல்வித் திட்டம் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் சமமான வளர்ச்சியை வழங்குவதையும், உயர்கல்வி அமைப்பில் உள்ள பலவீனங்களைச் சரிசெய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 2017-ல் 12ஆவது திட்டத்தின் இறுதிக்குள் மொத்த உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 32% ஆக உயர்த்துவதே இதன் இலக்காகும். இதன் முக்கிய நோக்கங்கள்[3]
- அனைத்து நிறுவனங்களும் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதன் மூலம் தற்போதுள்ள அரசு நிறுவனங்களின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துதல் மற்றும் அங்கீகாரத்தை ஒரு கட்டாய தர உத்தரவாத கட்டமைப்பாக ஏற்றுக்கொள்வது.
- மாநில அளவில் திட்டமிடல் மற்றும் கண்காணித்தல், மாநில பல்கலைக்கழகங்களில் சுயாட்சியை ஊக்குவித்தல் மற்றும் நிறுவனங்களில் நிர்வாகத்தை மேம்படுத்துதல். நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் மாநில உயர்கல்வி அமைப்பில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துதல்.
- உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி மற்றும் தேர்வு சீர்திருத்தங்களை உறுதி செய்தல்.
- உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கு இணையாக சில பல்கலைக்கழகங்களை ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களாக மாற்றுதல்.
- இணைப்புக் கல்லூரிகளின் சீர்திருத்தங்கள் மற்றும் ஆதாரத் தேவைகள் போதுமான அளவு பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக இணைப்பு அமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள மாநிலங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குதல்.
- அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் தரமான ஆசிரியர்கள் போதுமான அளவில் உள்ளதை உறுதி செய்தல். அனைத்து தர வேலை நிலைகளிலும் திறனை வளர்ப்பதை உறுதி செய்தல்.
- உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஆசிரியர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்குதல்.
- சேர்க்கை இலக்குகளை அடைவதற்காக, ஏற்கனவே உள்ள நிறுவனங்களில் கூடுதல் திறனை உருவாக்கி, புதிய நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் நிறுவன தளத்தை விரிவுபடுத்துதல்.
- நகர்ப்புற மற்றும் பகுதி நகர்ப்புறங்களில் உள்ள உயர்தர கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் அணுகலை எளிதாக்குவதன் மூலம் உயர் கல்விக்கான அணுகலில் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைச் சரிசெய்தல், கிராமப்புற மாணவர்கள் சிறந்த தரமான நிறுவனங்களை அணுகுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல். உயர்கல்விச் சேவையில்லாத மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உயர்கல்வி நிறுவனங்களை நிறுவுதல்.
- பட்டியல் சாதியினரும்/ பழங்குடியினரும்மற்றும் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கும் உயர் கல்விக்கான போதுமான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் உயர் கல்வியில் சமத்துவத்தை மேம்படுத்துதல்; பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கல்லூரிகளில் சேர்ப்பதை ஊக்குவித்தல்.
நிதி செயல்முறை
தொகுதேசிய உயர் கல்வித் திட்டம், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நேரடியாக மாநில மற்றும் ஒன்றிய பிரதேச அரசாங்கங்களுக்கு வழங்கப்படுகிறது. மாநில/ஒன்றிய நிதியறிக்கையில் இருந்து நிதிகள் தனிப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. உயர் கல்வித் திட்டங்களுக்கான மாநிலத் திட்டங்களின் விமர்சன மதிப்பீட்டின் அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதி அளிக்கப்படும். மொத்த மானியத்தில் 60% மத்திய அரசின் நிதியுதவியாக இருக்கும். மேலும் 40% மாநிலம்/ஒன்றிய பிரதேச பங்காக வழங்கப்படும். வடகிழக்கு மாநிலங்கள், சிக்கிம், சம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் உத்தராகண்டம் ஆகியவற்றிற்குப் பொருந்தக்கூடிய பங்கு 10% வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.[3] 2012-2017க்கு இடைப்பட்ட 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், தேசிய உயர் கல்வித் திட்டத்திற்கு 228.55 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 162.27 பில்லியன் மத்திய அரசின் பங்களிப்பாக இருக்கும். முதல் கட்டமாக, தன்னாட்சி பெற்ற கல்லூரிகள்/கல்லூரிகளை மாநிலப் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதன் மூலம் 80 புதிய பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும். 100 புதிய கல்லூரிகள் அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள 54 கல்லூரிகள் மாதிரி பட்டயக் கல்லூரிகளாக மாற்றப்படும். உள்கட்டமைப்பு குறிப்பாக நூலகங்கள், ஆய்வகங்கள் போன்றவற்றில் உள்ள முக்கியமான இடைவெளிகளை மேம்படுத்தவும் நிரப்பவும் 150 பல்கலைக்கழகங்கள் மற்றும் 3,500 கல்லூரிகளுக்கு உள்கட்டமைப்பு மானியங்கள் வழங்கப்படும். மேலும் கூடுதலாக 5,000 ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்.[4] பின்னர் இத்திட்டம் 13வது ஐந்தாண்டு திட்டக் காலத்திற்கும் நீட்டிக்கப்படும்.[2]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Govt launches Rashtriya Uchchatar Shiksha Abhiyan for bouldering Higher Education". பார்க்கப்பட்ட நாள் 2 February 2014.
- ↑ 2.0 2.1 Press Information Bureau (3 October 2013). "Rashtriya Uchchatar Shiksha Abhiyan for reforming state higher education system". National Informatics Centre.
- ↑ 3.0 3.1 Ministry of Human Resource Development. "Rashtriya Uchchatar Shiksha Abhiyan: National Higher Education Mission" (PDF). National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 2 February 2014.
- ↑ "Rashtriya Uchchatar Shiksha Abhiyan" இம் மூலத்தில் இருந்து 21 பிப்ரவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140221071804/http://www.erewise.com/current-affairs/rashtriya-uchchatar-shiksha-abhiyan_art5267c66a978f2.html#.Uu44cfv9HIU.
வெளி இணைப்புகள்
தொகு- MHRD இல் முகப்புப் பக்கம்
- அதிகாரப்பூர்வ ஆவணங்கள் பரணிடப்பட்டது 2020-02-23 at the வந்தவழி இயந்திரம்