நளினி அம்பாடி

நளினி அம்பாடி (மார்ச்சு 20, 1959 – அக்டோபர் 28, 2013) இந்திய-அமெரிக்க சமூக உளவியலாளர் மற்றும் சொல்லற்ற நடத்தை, நபர்களிடை உள்ளுணர்வு ஆகியவற்றில் முன்னிலை வல்லுநர்.[1] இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்த நளினி தில்லி பல்கலைக்கழகத்தின் லேடி சிறீராம் பெண்கள் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2] மேற்படிப்பிற்காக ஐக்கிய அமெரிக்கா சென்று வர்ஜீனியாவிலுள்ள வில்லியம் & மேரி கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து சமூக உளவியலில் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஆர்வர்டில் தனது முனைவர் ஆய்வை மேற்கொண்டிருந்த போது ஆர்வர்டு சட்டக் கல்லூரியில் உடன் படித்த இராச் மார்பாட்டியாவைத் திருமணம் செய்தார்.[3]

நளினி அம்பாடி
2009இல் நளினி அம்பாடி
பிறப்பு(1959-03-20)மார்ச்சு 20, 1959
கொல்கத்தா
இறப்புஅக்டோபர் 28, 2013(2013-10-28) (அகவை 54)
பாஸ்டன்
வாழிடம்ஐக்கிய அமெரிக்கா
துறைஉளத்தியல்
பணியிடங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
டஃப்ட்சு பல்கலைக்கழகம்
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஆர்வர்டு பல்கலைக்கழகம்
வில்லியம் அன்டு மேரி கல்லூரி
ஆய்வு நெறியாளர்இராபர்ட்டு ரோசன்தால்
அறியப்படுவதுமெல்லிய துண்டு முடிவுகள்
விருதுகள்அறிவியல் முன்னேற்றத்திற்கான அமெரிக்கச் சங்கத்தின் (AAAS) நடத்தைசார் அறிவியல் ஆய்விற்கான பரிசு

1991இல் முனைவர் படிப்பை முடித்த பின்னர், புனிதச் சிலுவைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து துணைப் பேராசிரியராக டஃப்ட்சு பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார்.[4] 2011இல் அம்பாடி இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இணைந்து அப்பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையில் பணியாற்றிய முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார். அவருடைய கல்விப்பணியின் போது மெல்லிய துண்டு முடிவுகளைக் குறித்த விரிவான ஆய்வுகளை ஒருங்கிணைத்து நடத்தி வந்தார். இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் SPARQ மையத்தை நிறுவி அதன் கட்டமைப்பில் இறுதி வரை கவனம் செலுத்தி வந்தார். 2013இல் இரத்தப் புற்றுநோயால் உயிரிழந்தார். இவரது மரணம் உலகளவில் தெற்காசிய எலும்பு மஞ்ஞை பதிவுக்களரிகளை கூட்டுவதற்கான இயக்கத்தை தூண்டியது.

இளமையும் கல்வியும் தொகு

நளினி அம்பாடி கேரளத்தைச் சேர்ந்தவர். பள்ளிப் படிப்பை ஊட்டியிலுள்ள லாரன்ஸ் பள்ளியில் படித்தார். பின்னர் தில்லியின் சிறீராம் சீமாட்டி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்று ஐக்கிய அமெரிக்கா சென்றார். அங்கு வர்ஜீனியாவின் வில்லியம் & மேரி கல்லூரியில் உளவியலில் முதுகலை (எம்.ஏ) பட்டம் பெற்றார். சமூக உளவியலில் ஆய்வு செய்து ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் 1991இல் முனைவர் படிப்பை முடித்து பட்டம் பெற்றார். இவருடைய முனைவர் ஆய்வுக்கு வழிகாட்டியாக இருந்த இராபர்ட் ரோசன்தாலுடன் மெல்லிய துண்டு முடிவுகள் என்ற உளவியல் நெறிமுறையில் ஆய்வுகள் மேற்கொண்டார்.[5][6]

கல்விப் பணி தொகு

மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் ஆர்வர்டு பல்கலைக்கழகம், புனித சிலுவை கல்லூரி மற்றும் டஃப்ட்ஸ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி உள்ளார். 2011இல் கலிபோர்னியாவின் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்திற்கு மாறினார்.[4]

நளினி அம்பாடி உள்ளுணர்வுகள் குறித்து சிறப்புக் கல்வி பெற்றார். அவரது ஆய்வு மனிதர்கள் புதிய மனிதர்கள், நிகழ்வுகள் குறித்து சொற்கள் இல்லாமலே குறிப்புகளை உணர்வதாக கண்டறிந்தது. பார்த்த கணத்திலே உணரப்படும் முடிவு பலநாட்கள் பழகிய பின்னர் பெறப்படும் முடிவினை ஒத்தும் சரியானதாகவும் இருந்தது.[7] அம்பாடியும் அவரது வழிகாட்டி ரோசன்தாலும் இந்த உடனடி சொல்லற்ற குறிப்புகளின் உணர்விற்கு "மெல்லிய-துண்டுகள்" என்ற கலைச்சொல்லை உருவாக்கினர். இதனை, எழுத்தாளர் மால்கம் கிளாட்வெல் தமது பிளிங்க்: தி பவர் ஆப் திங்கிங் விதவுட் திங்கிங் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

SPARQ மையம் நிறுவுதல் தொகு

இசுட்டான்போர்டு பல்கலையில் பணியாற்றுகையில் அம்பாடி நிகழ் உலக வினாக்களுக்கு சமூக உளவியலின் விடைகள் மையம் (Center for Social Psychological Answers to Real-World Questions) SPARQ மையத்தை நிறுவலானார். இந்த மையம் துவக்கத்தில் சமூக உளவியலின் முன்னோடியாக அறியப்படும் கர்ட் லெவின் நினைவாக லெவின் மையம் என அழைக்கப்பட்டது. இதன் கட்டமைப்பின் போது அம்பாடிக்கு இரத்த புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இருப்பினும் தமது நோயை பொருட்படுத்தாது இதனை நிறுவிட பெரும் முயற்சிகள் எடுத்தார். ஆயினும் இது அவரது மறைவிற்குப் பிறகே அலுவல்முறையாக 2014இல் திறக்கப்பட்டது.[8]

மேற்கோள்கள் தொகு

  1. Gladwell, Malcolm, 1963- (2005). Blink : the power of thinking without thinking (1st ). New York: Little, Brown and Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0316172324. இணையக் கணினி நூலக மையம்:55679231. https://archive.org/details/blinkpowerofthin00glad/page/12. 
  2. "Nalini Ambady, Stanford psychology professor, dies at 54". Stanford News. 31 October 2013 இம் மூலத்தில் இருந்து 4 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131204235820/http://news.stanford.edu/news/2013/october/nalini-ambady-obit-103013.html. பார்த்த நாள்: 14 January 2014. 
  3. "A Dedication to Nalini Ambady" (PDF). Archived from the original (PDF) on 2021-01-19.
  4. 4.0 4.1 Ambady, Nalini. "Curriculum Vitae" (PDF). Tufts University. பார்க்கப்பட்ட நாள் 30 October 2013.
  5. Ambady, Nalini; Rosenthal, Robert (1992). "Thin slices of expressive behavior as predictors of interpersonal consequences: A meta-analysis." (in en). Psychological Bulletin 111 (2): 256–274. doi:10.1037/0033-2909.111.2.256. பன்னாட்டுத் தர தொடர் எண்:1939-1455. https://archive.org/details/sim_psychological-bulletin_1992-03_111_2/page/256. 
  6. Tannenbaum, Melanie. "Rest In Peace, Nalini Ambady". Scientific American. பார்க்கப்பட்ட நாள் 30 October 2013.{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. Fox, Margalit (4 November 2013). "Nalini Ambady, Psychologist of Intuition, Is Dead at 54". The New York Times. https://www.nytimes.com/2013/11/05/science/nalini-ambady-psychologist-of-intuition-is-dead-at-54.html. பார்த்த நாள்: 12 November 2013. 
  8. Conner, Alana C. (2014-02-28). "Stanford SPARQ Sparks Change" (in en-US). APS Observer 27 (3). https://www.psychologicalscience.org/observer/stanford-sparq-ignites-change. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நளினி_அம்பாடி&oldid=3931262" இலிருந்து மீள்விக்கப்பட்டது