நாட்டுப்புறப் பெண் தெய்வங்கள்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
தமிழ் நாட்டில் பல நாட்டுப்புறப் பெண் தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. நாட்டுப்புற மக்களின் வாழ்வியலில் முக்கிய கூறாக விளங்குபவை வழிபாடாகும். அவர்கள் வாழ்வின் எந்தவித நிகழ்ச்சிக்கும் முதலில் தெய்வ வழிபாடே முன்நிற்கின்றன.
தோற்றம்
தொகுநாட்டுப்புற மக்களால் வழிபடப்பெறும் இத்தெய்வங்கள் நாட்டுப்புறத் தெய்வங்களாகும். இத்தெய்வங்களின் வரலாறு மக்களால் நன்கு அறியப்பட்டவையே. இத்தெய்வங்களின் தோற்றங்களுக்குப் பல வாய்மொழிக் கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இத்தெய்வங்கள் மக்களுள் மக்களாக வாழ்ந்து, தானாகவோ, ஊர் நன்மைக்காகவோ அல்லது குறிப்பிட்ட சிலரால் வன்கொலை செய்யப்பட்டோ உயிரிழந்தவர்கள். அதிலும் குறிப்பாக பெரும்பாலான பெண் தெய்வங்கள் கொல்லப்பட்டு இறந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஊரில் ஏற்படும் நோய்க்கும், மழை பெய்யாமைக்கும் இத்தெய்வங்களே காரணம் என்று நம்பினர். எனவே அவற்றுக்கு வழிபாடுகள் செய்து மக்கள் தெய்வங்களாக வணங்கினர். அவ்வாறு வணங்கப் பெறும் தெய்வங்களுள் பெரும்பான்மை பெண் தெய்வங்களே என்பது குறிப்பிடத்தக்கது.
வகைகள்
தொகுஇப்பெண் தெய்வங்கள், ஊர்த் தெய்வங்கள், பொதுத் தெய்வங்கள், இனத்தெய்வங்கள், குலதெய்வங்கள், வீட்டுத் தெய்வங்கள், பத்தினித் தெய்வங்கள், காவல் தெய்வங்கள், எல்லைத் தெய்வங்கள் எனப் பலநிலைகளில் வணங்கப்படுகின்றன. இப் பெண் தெய்வங்கள் அம்மன் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்படுகின்றனர். இத்தனை பெண் தெய்வங்கள்தான் என்று எண்ணிக்கையில் சொல்லமுடியாத அளவுக்கு பெண் தெய்வங்கள் சமூகத்தில் வழிபடப்பட்டு வருகின்றன.
உறைவிடம்
தொகுநாட்டுப்புறத் தெய்வங்கள் பெரும்பாலும், ஊருக்கு ஒதுக்குப்புறத்தில், நீர்நிலைகளுக்கு அருகில் உறைவதாக நம்பினர். முறையான கோயில் அமைப்போ, சிலை வடிவமோ இல்லாமல், சாதாரணமாக ஒரு கல்லிலோ அல்லது மரத்திலோகூட தெய்வம் உறைவதாக மக்கள் நம்புகின்றனர்.
வழிபாடு
தொகுஇத்தெய்வங்களுக்கு விரதமிருந்தும், உயிர்பலி கொடுத்தும் வழிபாடு செய்யப்படுகின்றது. இவை மட்டுமல்லாமல் வேண்டுதல், நேர்த்திக்கடன், தீமிதித்தல், தேர் இழுத்தல் போன்றனவும் வழிபாட்டு நிலையில் அடங்கும். பெருந்தெய்வங்களைப் போல தினசரி பூசைகளோ, படையல்களோ இத்தெய்வங்களுக்குச் செய்வதில்லை
வழிபடுவோர்
தொகுநாட்டுப்புறத் தெய்வங்கள் பரவலாக எல்லோராலும் வணங்கப்படுகின்றன. பொதுவாக இத்தெய்வங்கள் குறிப்பிட்ட இனம், சாதி, ஊர் என்றில்லாமல் அனைவராலும் வணங்கப்படுகிறது. அதே போல் ஒரே தெய்வம் குலதெய்வமாகவும், இனத் தெய்வமாகவும், ஊர்த் தெய்வமாகவும் வழிபடப்பட்டு வருகின்றன.
பூசை செய்வோர்
தொகுபெரும்பாலும் பிராமணரல்லாத பூசாரிகள் வழிபாட்டுச் சடங்குகளைச் செய்வர்.
வழிபடும் காலம்
தொகுபெரும்பாலும் அருள்வாக்கு கேட்டு தெய்வத்தின் சம்மதத்துடனே திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. பெரும்பாலும் ஆடிமாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்பட்டு வழிபாடுகளும், பூசைகளும், திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன.
நாட்டுப்புறப் பெண் தெய்வங்கள் பட்டியல்
தொகு- அங்கம்மா
- அங்கலம்மா
- அட்டங்கம்மா
- அம்மச்சார் அம்மன்
- அம்மாரி
- அம்மை வாரி
- அரிக்கம்மா
- அன்னம்மா
- அஷ்டசக்தி
- இசக்கியம்மன்
- ஈரங்ரிகிமாரி
- ஈலம்மா
- உக்கிரமாகாளி
- உச்சினமாகாளி
- உடலம்மா
- உத்தனகாளியம்மா
- ஊரம்மா
- எல்லம்மா
- எர்ரம்மா
- எர்ரக்கம்மாள்
- ஏழைகாத்தம்மா
- ஸ்ரீ பாப்பாத்தி அம்மாள்
மாரியம்மன்
தொகுஇவள் முத்துமாரி,ஆங்காரமாரி எனவும் அழைக்கப்படுகிறாள்.மாரி என்றால் மழை.ஆகையால் மழையைத்தருபவள் எனவும் அழைக்கப் படுகிறாள்.மாரியம்மன் அம்மை நோய் ஏற்படுத்தவும், குணமாக்கவும் கூடிய தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர், நாட்டில் மழை பொய்த்த போது மாரியம்மனையே மழை வேண்டி வழிபடுகின்றனர். ஊரில் கூழ்வார்த்தால் மழை வரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பொதுவாக வேப்பமரத்தில் மாரியம்மன் உறைவதால் வேப்பிலைக்காரி எனவும் அழைப்பர். பொங்கல் வைத்தல்,மடைபரவுதல்,நீர்க்கஞ்சி வார்த்தல்,பாற்செம்பு எடுத்தல்,கண்மடல் எடுத்தல் போன்றவை சில பொதுவான வழிபாட்டு முறைகளாகும். பொதுவாக எல்லா ஊர்களிலும் மாரியம்மன் வழிபாடு காணப்படுகின்றது.
தனியாவனத்தம்மன்
தொகுதனியாவனத்தம்மன் திருவள்ளுர் மாவட்டம் ஒதப்பை கிரமத்தில் ஆட்சிசெய்யும் மிகவும் சக்திவாய்ந்த எல்லை காவல் தெய்வம்.திருமணத் தடை உள்ளவர்களும்,குழந்தை பாக்கியம் அல்லாதவர்களும், தொழிலில் தடை விலகவும் வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளும் அம்மனாகும்.
நாடியம்மன்
தொகுபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் நாடியம்மன் என்ற பெண் தெய்வத்தை மக்கள் வழிபட்டு வருகின்றனர்.(நாடி+அம்மன்= நாடியம்மன்) தன்னை நாடிவந்து வழிபடுபவர்களுக்கு நல்லதை செய்யும் அம்மன் என்பதால் நாடியம்மன் என அழைக்கப்படுகிறாள். இந்நாடியம்மன் பெரியநாடியம்மன், சின்ன நாடியம்மன் என்று இரு தெய்வங்களாக வழிபடப்படுகின்றனர். இத் தெய்வங்கள் இரண்டும் அக்கா தங்கைகளாக வாழ்ந்தவர்கள் என்று வாய்மொழிக்கதைகள் கூறுகின்றன. ஆடி மாதத்ததில் இத்தெய்வங்களுக்கு விழா எடுக்கப்படுகிறது.
காத்தாயி அம்மன்
தொகுதஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் காசவளநாடுபுதூர் என்னும் சிற்றூர் உள்ளது. இவ்வூரில் உள்ள கள்ளர், கோனார், பள்ளர் சமூகத்தினரின் குலதெய்வமாக காத்தாயி அம்மன் வழிபடப்படுகிறது. அனைவரையும் காக்கும் தெய்வமாகையால் காத்தாயி அம்மன் என்றழைக்கப்படுகிறது. இத்தெய்வம் மரமாக வைத்து வழிபடப்பட்டு பின்பு கோயில் கட்டி வழிபடப்பட்டு வருகிறது. இத்தெய்வம் தினைப்புனம் காக்கத் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்த அம்மனுக்கு ஆடிமாத நள்ளிரவு 12 மணிக்கு விழா எடுத்து வழிபடுகின்றனர். இத்தெய்வத்துக்கு ஆடு, கோழி, பன்றி ஆகியன பலியிடப்படுகின்றன.(கும்பகோணத்துக்கு அருகில் உள்ள சாக்கோட்டை எனும் கிராமத்திலுள்ள கோயிலில் முருகப் பெருமான் மனைவி வள்ளி தேவி, காத்தாயி அம்மன் என்ற பெயரில் இடம் பெற்றிருக்கிறார். [சான்று தேவை])
காளியம்மன்
தொகுஇத்தெய்வம் எல்லா ஊர்களிலும் வழிபடப்பட்டு வருகிறது. சிவனிடமிருந்து மும்மூர்த்திகளாலோ, ஆண்தெய்வங்களாலோ தனக்கு என்றும் அழிவு ஏற்படக்கூடாது என்று வரம் வாங்கிய மகிடாசூரன் என்பவன், சிவனையே அழிக்க எண்ணியபோது அவனை காளியானவள் அழித்தாள் என்று கூறப்படுகிறது. நாட்டுப்புற மக்கள் காளியை கிராம தெய்வமாக வழிபடுகின்றனர்.
மீனாட்சியம்மன்
தொகுமீனவ மக்கள் இத்தெய்வத்தை வணங்குகின்றனர், இத்தெய்வத்தை வணங்கிச் சென்றால் அதிகமான அளவு மீன் கிடைக்கும் என்று மீனவர்கள் நம்புகின்றனர்.
பெத்தாலம்மன்
தொகுஐமீன் கோடாங்கிப் பட்டியிலிருந்த தச்சு வேலை செய்த ஆசாரிப்பெண், நாயுடு வகுப்பைச் சார்ந்தவரோடு ஊரைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டதாகவும். அவள் கணவன் கொல்லப்பட்ட நிலையில் தீக்குழி பாய்ந்து இறந்துபோனதாகவும் அப்பெண்ணே பெத்தாலம்மனாக வழிபடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
திரௌபதியம்மன்
தொகுஇவளின் வழிபாடு பாண்டவர்களின் வாழ்க்கையுடன் தொடர்புபட்டதாகும்.சகாதேவன் தவிர்ந்த ஏனைய பாண்டவர்களின் விக்கிரகங்கள் வைத்து வழிபடுவர்.தீப்பள்ளம் ஏறுதல் என்ற பூமி மிதித்தல் வழிபாடு சிறந்ததாகும்.பூசாரியால் மந்திரித்து தீயில் எறியப்படும் பூக்களும் இலைகளும் நீண்டநேரம் வாடாது இருத்தல் வழிபாட்டின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது.
துணைநின்ற நூல்கள்
தொகு- .ஆறு. இராமநாதன் (ப.ஆ), வாழும் மரபுகள், தன்னனானே பதிப்பகம், 2001.
- .துளசி. இராமசாமி, நாட்டுப்புறத் தெய்வங்கள், விழிகள் பதிப்பகம், 2002.