நானக்சாகி நாட்காட்டி
நானக்சாகி நாட்காட்டி (Nanakshahi calendar) என்பது, முக்கியமான சீக்கிய நிகழ்வுகளைக் தீர்மானிப்பதற்காக சிரோமணி குருத்துவாரா பிரபந்தக் குழுவினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வெப்பமண்டல சூரிய நாட்காட்டி ஆகும். பிரபல சீக்கிய அறிஞரான பேராசிரியர் கிர்பால் சிங் பதுங்கர் அக்குழுவின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது சீக்கியத் தலைவர்களின் முன்னிலையில் இந்த நாட்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது.[1] 1998ல் இருந்து பயன்பாட்டில் உள்ள இந்த நாட்காட்டி, இதற்கு முன்னர் புழக்கத்தில் இருந்த இந்தியத் தேசிய நாட்காட்டிக்குப் பதிலாக நடைமுறைக்கு வந்தது. இதை வடிவமைத்தவர் பால் சிங் புரேவால் என்பவர் ஆவார். சீக்கியத்தின் முதல் குருவான குரு நானக் பிறந்த 1469ம் ஆண்டே இந்த நாட்காட்டியின் தொடக்கமாகக் கொள்ளப்படுகிறது. புத்தாண்டு கிரகோரிய நாட்காட்டியின்படி ஒவ்வோராண்டும் மார்ச் 14ம் தேதி வருகிறது.[1]
இந்த நாட்காட்டி உலகெங்கிலும் உள்ள 90% குருத்துவாராக்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சீக்கிய உலகின் சில பழமைவாதக் குழுக்களிடையே இதை ஏற்பது குறித்த சர்ச்சைகள் உள்ளன. குருமார்களின் காலத்திலிருந்தே இருந்து வருகின்ற தம்டமி தக்சால் போன்ற சில அமைப்புக்களும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.
கூறுபாடுகள்
தொகுநானக்சாகி நாட்காட்டியின் சில முக்கியமான கூறுபாடுகள் வருமாறு:
- இது ஒரு வெப்பமண்டலச் சூரிய நாட்காட்டி.
- சீக்கியத்தின் நிறுவனர் குரு நானக்கின் பெயரைத் தழுவி நானக்சாகி என அழைக்கப்படுகிறது.
- குரு நானக் பிறந்த ஆண்டே (கிபி 1469) இந்த நாட்காட்டியின் முதல் ஆண்டு.
- மேற்கத்திய நாட்காட்டியின் பெரும்பாலான அம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
- ஆண்டின் கால அளவு மேற்கத்தைய ஆண்டுக்குச் சமமானது. (365 நாட்கள் 5 மணி 48 நிமிடம் 45 நொடிகள்)
- 31 நாட்கள் கொண்ட 5 மாதங்களையும் தொடர்ந்து 30 நாட்கள் கொண்ட 7 மாதங்களையும் உள்ளடக்குகிறது.
- ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கடைசி மாதத்தில் ஒரு நாள் கூட்டப்படுகிறது.
மாதங்கள்
தொகுநானக்சாகி நாட்காட்டியின் மாதங்கள் வருமாறு:[1][2]
No. | பெயர் | பஞ்சாபி | நாட்கள் | கிரகரிய மாதங்கள் |
---|---|---|---|---|
1 | செட் | ਚੇਤ | 31 | 14 மார்ச் – 13 ஏப்ரில் |
2 | வைசாக் | ਵੈਸਾਖ | 31 | 14 ஏப்ரில் – 14 மே |
3 | ஜெட் | ਜੇਠ | 31 | 15 மே – 14 யூன் |
4 | ஹார் | ਹਾੜ | 31 | 15 யூன் – 15 யூலை |
5 | சாவன் | ਸਾਵਣ | 31 | 16 யூலை – 15 ஆகத்து |
6 | பாதன் | ਭਾਦੋਂ | 30 | 16 ஆகத்து – 14 செப்டெம்பர் |
7 | அஸ்சு | ਅੱਸੂ | 30 | 15 செப்டெம்பர் – 14 அக்டோபர் |
8 | கட்டக் | ਕੱਤਕ | 30 | 15 அக்டோபர் – 13 நவம்பர் |
9 | மகர் | ਮੱਘਰ | 30 | 14 நவம்பர் – 13 டிசம்பர் |
10 | போஹ் | ਪੋਹ | 30 | 14 டிசம்பர் – 12 சனவரி |
11 | மாக் | ਮਾਘ | 30 | 13 சனவரி – 11 பெப்ரவரி |
12 | பகுன் | ਫੱਗਣ | 30/31 | 12 பெப்ரவரி – 13 மார்ச் |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "What is the Sikh Nanakshahi calendar". allaboutsikhs.com. Archived from the original on 2008-05-10. பார்க்கப்பட்ட நாள் 2008-05-09.
- ↑ Gurbani And Nanakshahi Calendar Nanakshahi Sangrand Dates in Gregorian Calendar - Forever from 14 March 2003 CE / 535 NS