நா. யோகேந்திரநாதன்
நா. யோகேந்திரநாதன் (14 சூலை 1944 - 29 திசம்பர் 2024)[1] ஈழத்தின் மூத்த எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியரும், வானொலிக் கலைஞரும் ஆவார். புலிகளின் குரல் வானொலியில் நாடக எழுத்தாளராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். சிறுகதைகள், புதினங்கள், மேடை நாடகங்கள், நாட்டார் கலைகள் பற்றிய ஆய்வுகள் என எழுதினார். இவர் பல அரசியல் கட்டுரைகளை சந்திரசேகர ஆசாத், யோகநாராயணன், விஷ்ணுபுத்திரன், அக்கினீஸ்வரன் என்ற புனைப் பெயர்களிலும் நா. யோகேந்திரநாதன் என்ற இயற்பெயரிலும் எழுதினார்.[2]
நா. யோகேந்திரநாதன் | |
---|---|
பிறப்பு | நாராயணபிள்ளை யோகேந்திரநாதன் 14 சூலை 1944 கரணவாய், யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை |
இறப்பு | திசம்பர் 29, 2024 நீர்வேலி, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை | (அகவை 80)
படித்த கல்வி நிறுவனங்கள் | ஸ்கந்தவரோதயா கல்லூரி, யாழ்ப்பாணம் |
பணி | உப-தபால் அதிபர் |
அறியப்படுவது | எழுத்தாளர், ஊடகவியலாளர் |
பெற்றோர் | கோ. நாராயணபிள்ளை, இராசம்மா |
வாழ்க்கைத் துணை | முத்துமணி (இ. 1995) |
பிள்ளைகள் | 5 |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுயோகேந்திரநாதன் 1944 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மாவட்டம், வடமராட்சியில் உள்ள கரணவாய் ஊரில் கோ. நாராயணபிள்ளை, இராசம்மா ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். கரணவாய் அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை, அனுராதபுரம் புனித திருக்குடும்பக் கன்னியர்மடப் பாடசாலை ஆகியவற்றில் தொடக்கக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்க மிசன் கல்லூரியிலும், உயர்தரக் கல்வியை சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரியிலும் கற்றார்.[3] இவரது தந்தையார் ஒரு இடதுசாரித் தொழிற்சங்கவாதி. இதன் காரணமாக யோகேந்திரநாதன் தனது தந்தையுடன் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார். 1966 ஆம் ஆண்டில் வட மாகாண கம்யூனிச இளைஞர் சங்கத்தின் இணைச் செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராக கிளிநொச்சியில் பணியாற்றினார். இவ்வேளையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் கவரப்பட்டு, இனஒடுக்குமுறைக்கு எதிராகப் பங்களிப்பை வழங்கினார்.[3]
எழுத்துப் பணி
தொகு1962 இல் ஈழநாடு பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது வியர்வையின் விலை என்ற சிறுகதை இரண்டாம் பரிசைப் பெற்றது. தொடர்ந்து ஈழநாட்டில் பாசத்தளை, வானத் தாமரை என்ற இவரது குறுநாவல்கள் வெளியாகின.[3] 1989 ஆம் ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் கோணாவில்லில் நடைபெற்றபோது, ஓநாயும் சேவல்களும் என்ற நாடகத்தை எழுதி மேடையேற்றினார். தொடர்ந்து நாங்களும் புலிகளே, வியர்வைத் துளிகள், கேள்விகள் கேள்விகள், கதைபேசும் கல்லறைகள், வெற்றிக்களத்தில் வீரவேங்கை போன்ற நாடகங்களைத் தயாரித்து வழங்கினார்.[3] 1995 இற்குப் பின்னர் பல வானொலி நாடகங்களையும் வானொலி நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கினார்.[3][4]
பத்திரிகை ஆசிரியர்
தொகு1993 முதல் 1995 வரை ஈழநாதம் பத்திரிகையின் வன்னிப் பதிப்பின் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் வெளிச்சம் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் புலிகளின் குரல் வானொலியில் சஞ்சிகை நிகழ்ச்சிகளையும் தொடர் நாடகங்களையும் எழுதித் தயாரித்து வழங்கினார். "நிதர்சனம் தொலைக்காட்சியூடாக நெஞ்சில் விழுந்த அடி, அந்த ஒரு கணத்திற்காக ஆகிய இரு குறும்படங்களைத் தயாரித்து ஒளிபரப்பினார்.[3]
வெளியான புதின நூல்கள்
தொகு- தொலைநோக்கி (சிறுகதைகள்)
- மரண மழையில் நீந்திக் கடந்த நெருப்பாறு
- பூநகரியிலிருந்து புதுமத்தாளன் வரை நீந்திக் கடந்த நெருப்பாறு
- இடிபடும் கோட்டைகள்
- காட்டு நிலா (இலங்கை வானொலியில் வெளிவந்த வானொலி நாடகங்களின் தொகுப்பு)