நிமிர்வால் மறிமான்
நிமிர்வால் மறிமான் அல்லது கிளார்க்கின் கசிலா (Dibatag or Clarke's gazelle) என்பது எத்தியோப்பியா மற்றும் சோமாலியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு நடுத்தர அளவிலான மெலிந்த மறிமான் ஆகும். இது உண்மையில் கசிலா இல்லை என்றாலும், இதன் நீண்ட கால்கள் மற்றும் கழுத்துக்காக இதேபோல் குறிக்கப்பட்டுள்ளது. மேலும் இவற்றின் குறிப்பிடத்தக்க ஒற்றுமை காரணமாக இது பெரும்பாலும் சிவிங்கி மானுடன் சேர்த்து குழப்பமேற்படுகிறது. வழக்கமாக இதன் தலை மற்றும் உடல் நீளம் 103 முதல் 117 செமீ (41 முதல் 46 அங்குலம்) வரை இருக்கும். இவை நிற்கும்போது சுமார் 80 முதல் 90 செமீ (31 முதல் 35 அங்குலம்) வரை உயரம் இருக்கும். ஆண் நிமிர்வால் மறிமான்கள் 20 முதல் 35 கிலோ வரை எடையுள்ளதாகவும், அதே சமயம் பெண் மான்களின் எடை 22 மற்றும் 29 கிலோ வரை இருக்கும். ஆண் மான்களுக்கு மட்டுமே கொம்புகள் இருக்கும். அவை பின்னோக்கி வளைந்த திருகு கொம்புகளாகும். பொதுவாக அக் கொம்புகள் 10 முதல் 25 செமீ (3.9 மற்றும் 9.8 அங்குலம்) நீளம் கொண்டதாக இருக்கும். இம்மானின் மேற்பகுதி சாம்பல் முதல் இளமஞ்சள் வரையும், முதுகு மற்றும் பக்கவாட்டு பகுதிகள் இலவங்கப்பட்டை முதல் செம்பழுப்பழுப்பு வரை இருக்கும். கால்களின் அடிப்பகுதி, பிட்டம், உடலின் அடிப்பகுதி என அனைத்தும் வெண்மையாக இருக்கும். முகத்தில் அடையாள நிறத் திட்டுகள் இருக்கும்.
நிமிர்வால் மறிமான் Dibatag | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Ammodorcas |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/AmmodorcasA. clarkei
|
இருசொற் பெயரீடு | |
Ammodorcas clarkei (தாமசு, 1891)[2] | |
தைபாடேக் வாழிடம் |
தைபாடேக் எச்சரிக்கை மிகு்ந்ததாகவும் கமுக்கமானதாகவும் உள்ளது. மேலும் இவற்றின் பழுப்பு நிற உடல் சிறந்த உருமறைப்பை அளிக்கிறது. இதனால் வேட்டையாடுவதற்கு மிகவும் கடினமான மிருகங்களில் ஒன்றாக திபாடேக் உள்ளது. இவை ஒரு பகலாடி ஆகும். இவை மிகச் சிறிய மந்தைகளாக இருக்கும். இருபாலினங்களும் 12 முதல் 18 மாதங்களில் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. இந்த இனம் பல துணைகளைக் கொண்டதாக உள்ளது. ஆறு முதல் ஏழு மாத கர்ப்பகாலத்திற்குப் பிறகு, ஒரு குட்டி பிறக்கிறது. பிரசவம் பொதுவாக செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் ஏற்படும். இவற்றின் ஆயுட்காலம் பொதுவாக 10 முதல் 12 ஆண்டுகள் வரை இருக்கும். நிமிர்வால் மறிமான் தன் முன்பக்கம் உள்ள சுரப்பிகள், சிறுநீர் அல்லது சாணம் ஆகியவற்றால் தனக்கான தற்காலிக பிரதேசத்தை வரையறுக்கிறது. நிமிர்வால் மறிமான் மான்கள் இலைகள், இளம் தளிர்கள், புதர்கள் போன்றவற்றை உணவாக கொள்கிறது. நிமிர்வால் மறிமான் அரை வறண்ட வாழ்விடங்களில் வாழ ஏற்றதாக உள்ளது. மிகக் குறைந்தோ அல்லது தண்ணீர் இல்லாமலோ உயிர்வாழும் திறன் கொண்டதாக உள்ளது.
மனிதக் குடியேற்றம், வாழ்விட சீரழிவு, மிகுந்த எண்ணிக்கையிலான கால்நடைகள் மேய்தல், அரசியல் அமைதியற்ற தன்மை, ஆயுத மோதல்கள் போன்றவை இதன் வாழிட எல்லையை உள்ளடக்கிய பகுதிகளில் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இரண்டு முதல் மூன்று தசாப்தங்களாக நிலவுகிறது. இதனால் இவற்றிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதது போனது உள்ளிட்ட பல காரணிகளால் இவற்றின் எண்ணிக்கை சில ஆயிரங்களாகக் குறைத்துபோயுள்ளது. தெற்கு ஓகாடனில் (எத்தியோப்பியா) குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மான்கள் இன்னும் காணப்படுகிறன்றன. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க்கத்தால் நிமிர்வால் மறிமான் " அழிவாழ்ப்பு இனம் " என பட்டியலிடப்பட்டுள்ளது.
வகைபிரித்தல் மற்றும் சொற்பிறப்பியல்
தொகுநிமிர்வால் மறிமான் முதன்முதலில் 1891 ஆம் ஆண்டில் பிரித்தானிய விலங்கியல் நிபுணரான ஓல்டுபீல்ட் தாமசால் விவரிக்கப்பட்டது. அவர் இதற்கு அம்மோடோர்காஸ் கிளார்கேய் என்ற அறிவியல் பெயரைக் கொடுத்தார். இது அம்மோடோர்காஸ் பேரினத்தின் ஒரே உறுப்பினராகும். மேலும் இது மாட்டுக் குடும்பத்தில் வகைபடுத்தபட்டுள்ளது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கத்தின் மறிமான் நிபுணர் குழுவின் ராட் ஈஸ்ட் போன்ற சில ஆய்வாளர்கள் அம்மோடோர்காடினி என்ற தனி இனக்குழுவின் கீழ் வகைப்படுத்தியுள்ளனர். தாமஸ் முதன்முதலில் சோமாலியாவில் இருந்து இதன் மாதிரிகளை 1891 இல் ஆய்வு செய்தபோது, இந்த விலங்கு ரீடு மானின் கொம்புகளையும் வனப்புமிக்க சிறுமானின் சிறப்பியல்பு அம்சங்களுடன் (முகவாய், முக அடையாளங்கள் மற்றும் முன்னோக்கியுள்ள சுரப்பிகள்) இணைப்பது போல் தோன்றியது. முதலில், சோமாலியாவின் வறண்ட மணல் பீடபூமியில் ஒரு ரீடு மான் காணப்படுவது இயற்கைக்கு மாறானதாகத் தோன்றியதால், அவர் அதை வனப்புமிக்க சிறுமான் என்று கருதினார். கொம்புகளின் உருவ அமைப்பில் உள்ள ஒற்றுமைகள் காரணமாக தாமஸ் முதலில் இதை ரீடு மான் பேரினத்தின் உறவினராகக் கருதினார். மேலும் இதை புல்வாய் பேரினத்தின் கீழ் வைத்தார். இருப்பினும், மேலும் மாதிரிகளை பரிசீலித்த பிறகு, அவர் அதை அம்மோடோர்காஸ் என்ற தனிப் பேரினத்தின் கீழ் வைத்தார். இதில் கிளையினங்கள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை. [3]
இந்த மான் தப்பி ஓடும்போது இதன் நீண்ட கருப்பு வால் செங்குத்தாக நிற்பதால் இதை டைபாடேக் (நிமிர்வால் மறிமான்) என்று அழைக்கின்றனர். [4] டைபாடேக் என்ற இந்தப் பெரயரானது சோமாலி மொழியில் இரு சொற்களான டபு மற்றும் டேக் ஆகியவை சேர்ந்து உருவானது. அச்சொற்கள் முறையே 'வால்' மற்றும் 'நிமிர்ந்த' என்பது பொருளாகும். [5] இந்த மானின் மாதிரி வகையை சேகரித்த ஆத்திரேலிய பெரிய வேட்டைக்காரரான டி. டபிள்யூ. எச். கிளார்க்கிற்கின் நினைவூட்டும் விதமாக, டிபாடேக் கிளார்க்கின் கெல்ல என்றும் இம்மான் அழைக்கப்படுகிறது. [6]
விளக்கம்
தொகுநிமிர்வால் மறிமான் மெலிந்த உடலும் நீண்ட கழுத்தும், மெலிந்த கால்களும் கொண்ட நடுத்தர அளவிலான ஒருமறிமான் ஆகும். பொதுவாக தலை மற்றும் உடல் நீளம் 103 முதல் 117 செமீ (41 முதல் 46 அங்குலம்) வரை இருக்கும். இது நிற்கும்போது தோள் வரை சுமார் 80 முதல் 90 செமீ (31 முதல் 35 அங்குலம்) உயரம் இருக்கிறது. ஆண் மானின் எடை 20 முதல் 35 கிலோ (44 மற்றும் 77 பவுண்டுகள்), அதேசமயம் பெண் மானின் எடை 22 மற்றும் 29 கிலோ (49 மற்றும் 64 பவுண்டுகள்) வரை இருக்கும். இதற்கு நீண்ட கருமையான வாலும் அதன் முனையில் ஒரு குஞ்சத்தோடு இருக்கும். வால் கிட்டத்தட்ட 30 முதல் 36 செமீ (12 முதல் 14 அங்குலம்) நீளம் கொண்டது. இதற்கு வளைந்த கொம்புகள் உண்டு. அவை ரீடு மானின் கொம்புகளை ஒத்திருக்கும். கொம்புகள் ஆண் மான்களுக்கு மட்டுமே இருக்கும். கொம்புகள் பின்நோக்கி வளைந்து, முனைகள் முன்னோக்கி நோக்கி வளைந்து இருக்கும். கொம்புகளின் நீளம் பொதுவாக 10 முதல் 25 செமீ (3.9 மற்றும் 9.8 அங்குலம்) வரை இருக்கும். இருப்பினும் பாடம் செய்யும் பிரித்தானிய நிபுணரான ரோலண்ட் வார்டு சோமாலியாவில் 33 செமீ (13 அங்குலம்) நீளமுள்ள மானை பதிவு செய்துள்ளார். இந்த மறிமான் பால் ஈருருமை கொண்டது. ஏனெனில் பெண் மான்கள் ஆண் மான்களை விட சிறியதாகவும் கொம்புகள் இல்லாததாகவும் இருக்கும்.
இந்த மான் பெரிய கண்களும், நடுத்தர அளவிலான காதுகளைக் கொண்டதான சிறிய, தட்டையான, கூரான, ஆப்பு வடிவ தலை கொண்டது. காதுகளின் உட்புறத்தில் உள்ள கறுப்பு நிற அமைப்பு வனப்புமிக்க சிறுமான்களுடன் ஒரு ஒற்றுமையாக உள்ளது. இதன் வாய் மிகவும் சிறியது மேலும் மேல் உதடு சற்று நீளமானது. செம்பழுப்பு நிறப் பட்டை ஓன்று முன் மண்டையில் இருந்து மூக்கின் வழியாக நாசி வரை செல்கிறது. இந்த பட்டையை ஒட்டி இருபுறமும் வெள்ளை நிறப்பட்டை ஒன்று உள்ளது. இந்த வெள்ளைப் பட்டை கண்களை சுற்றி உள்ள வெள்ளை நிறப் பட்டையுடன் சேர்ந்ததாக உள்ளது. மென்மையான மற்றும் வழுவழுப்பான இதன் உரோமம் சாம்பல் முதல் இளமஞ்சல் நிறம் வரை இருக்கும். பிட்டம், வயிறு மற்றும் கால்களின் உட்புறம் போன்றவை முற்றிலும் வெண்மையாக இருக்கும். [7]
சூழலியல் மற்றும் நடத்தை
தொகுநிமிர்வால் மறிமான் ஒரு பகலாடி (பகல் நேரத்தில் வெளியே வரக்கூடியவை) ஆகும். இவை தனித்தோ அல்லது மிகச் சிறிய மந்தைகளாகவோ உள்ளன. இது சிவிங்கி மானின் சமூக நடத்தையை ஒத்துள்ளது. ஒற்றைமானாகவோ மற்றும் இணைகளாகவோ பொதுவாக காணப்படினும், ஆறு மான்கள் வரையிலான குழுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுவாக நான்கு மான்கள் கொண்ட குழுக்கள் அரிதாகவே காணப்படுகின்றன. இவை தாங்கள் வாழும் பிராந்தியத்தை தன் உடல் சுரப்பு நீர்கள், சிறுநீர் அல்லது சாணம் ஆகியவற்றை இட்டு வரையரைக்கின்றன. [5] ஆண் மான்கள் தங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பிரதேசத்தை பாதுகாக்க பிற ஆண்மான்களுடன் சண்டையிடுகிறன. [7]
நிமிர்வால் மறிமான் அரை வறண்ட வாழ்விடங்களில் வாழ தகவமைப்பு பெற்றுள்ளன. மிகக் குறைந்த நீர் அல்லது நீர் இல்லாமலோ உயிர்வாழும் திறன் கொண்டவை. இவை பெரும்பாலான தனக்கு தேவைப்படும் நீர்ச் சத்தை தான் உண்ணும் உணவில் இருந்தே எடுத்துக் கொள்கின்றன. இவை தங்கள் பின் கால்களைத் தரையில் ஊன்றி, முன்னங்கால்களை கிளையில் வைத்து நீண்ட கழுத்தின் உதவியால் எட்டும் தொலைவில் உள்ள இலைகளைத் தின்னும். இவற்றுக்கு உள்ள பழுப்பு நிற உரோமம் இவற்றை புதர்களில் மறைந்து கொள்ள உதவுகிறது. எச்சரிக்கையாகவும் கமுக்கமாகவும், நிமிர்வால் மறிமான் தாவரங்களில் மறைந்திருந்து, தனக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களைக் கவனிக்கும்போது அசைவில்லாமல் இருக்கும். எச்சரிக்கையாக இருக்கும்போது இது மெதுவாகவும் நிதானமாகவும் கழுத்தை நிமிர்ந்தும் வாலை நிமிர்த்துக் கொண்டும் ஓடுகிறது. உண்மையான ஆபத்தில் இருக்கும்போதுதான் இது பாய்ந்து ஓடுகிறது. இவற்றை வேட்டையாடிகளில் சிவிங்கிப்புலி, சிங்கம், புள்ளிக் கழுதைப்புலி, கருப்பு முதுகு குள்ளநரி, கறகால் பூனை, கேப் வேட்டை நாய், பெரிய கழுகுகள் ஆகியவை அடங்கும். கழுகுகள் பொதுவாக குட்டிகளைக் குறிவைக்கின்றன. [5] [8]
உணவுமுறை
தொகுநிமிர்வால் மறிமானின் உணவில் பசுமையாக மற்றும் இளம் தளிர்கள் மற்றும் புதர்கள் அடங்கி உள்ளன. இது உணவு தேடுவதற்கு ஒரு சிறிய பகுதிக்குள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்கிறது. நிமிர்வால் மறிமான் காடுகளில் அரிதாகவே தண்ணீர் குடிப்பதாக அறியப்பட்டடுள்ளது. இதன் நீளமான மேல் உதடு முட்கள் நிறைந்த தாவரங்களை உட்கொள்வதற்கு ஏற்றதாக உள்ளது. அதே நேரத்தில் இலைகளை முன் பற்கள் மற்றும் அசையும் உதடுகளால் பறிக்கிறது. இவை கமிபோரா, அகாசியா, போசியா, டிக்ரோஸ்டாச்சிஸ், மேருவா போன்ற தாவர இனங்களை விரும்புகிறன. அவற்றின் இலைகள் மற்றும் தளிர்களில் அதிக நீர்சத்து உள்ளங்கி இருப்பதால், இவை பெரும்பாலும் இலைகள் நிறைந்த கொமிஃபோரா தாவரம் உள்ள பகுதிகளில் கூடுகின்றன. மழைக்காலத்தில், இளம் மென்மையான புற்கள் விரும்பி உண்ணப்படுகின்றன. அதே நேரத்தில் இவை உலர் பழங்கள், பூக்கள், மொட்டுகள், புதர்கள் மற்றும் உயரமான செடிகள் ஆகியவற்றை உண்ணும். [5]
இனப்பெருக்கம்
தொகுஇருபாலினத்தவையும் 12 முதல் 18 மாதங்களில் பாலியல் முதிர்ச்சி அடைகின்றன. இதில் ஆண் மான் பல துணைகளைக் கொண்டது. [7] இனச்சேர்கைக்கான காலம் பல பகுதிகளில் ஈரமான கால நிலைப் பருவத்தின் தொடக்கத்துடன் தொடர்புடையதாக தோன்றுகிறது. நேபிள்ஸ் விலங்குக்காட்சிசாலையில் கண்ட அவதானிப்புகளில், நிமிர்வால் மறிமான் மற்றும் சிவிங்கி மான் காதல் நடத்தைகளுக்கு இடையே பல ஒற்றுமைகள் கண்டறியப்பட்டன. இனச்சேர்க்கைப் பருவத்தில் ஆண் நிமிர்வால் மறிமான் பெண் மானைப் பின்தொடர்கிறது. பின் தொடரும் போது அது உடலை நிமிர்த்து, மூக்கை உயரமாக வைத்துக் கொள்கிறது. பெண் மான் இனப்பெருக்க சுழற்சியில் உள்ளதா என்பதைக் கண்டறிய ஆண்மான் பெண் மானின் சிறுநீரை முகர்ந்து பார்த்தல் மற்றும் பெண் பிறப்புறுப்பை முகர்தல் ஆகியவற்றை மேற்கொள்கிறது. பெண் மானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவுடன், அது மெதுவாக தனது முன்னங்காலை பெண் மானின் பின்னங்கால்களுக்கு மேலை உயர்த்துகிறது. இதைத் தொடர்ந்து கலவி நடக்கிறது.
ஆறு முதல் ஏழு மாத கர்ப்பகாலத்திற்குப் பிறகு, ஒரு குட்டி பிறக்கிறது. பிரசவம் பொதுவாக செப்டம்பர் முதல் நவம்பர் வரை நிகழ்கிறது. இருப்பினும் சூன் மற்றும் சூலை மாதங்களில் கூட பிறப்புகள் பதிவாகியுள்ளன. குட்டி ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் மறைவிடத்தில் இருக்கும். அதன் தாயும் அருகிலேயே இருக்கும். பெற்றோரின் கவனிப்பு பற்றிய கூடுதல் தகவல்கள் இல்லை. ஒரு நிமிர்வால் மறிமானின் ஆயுட்காலம் சராசரியாக 10 முதல் 12 ஆண்டுகள் ஆகும். [5] [7]
குறிப்புகள்
தொகு- ↑ Heckel, J.; Wilhelmi, F.; Kaariye, X.; Amir, O. (2016). "Ammodorcas clarkei". IUCN Red List of Threatened Species 2016: e.T1141A50181613. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T1141A50181613.en. https://www.iucnredlist.org/species/1141/50181613. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ Thomas, O. (1 June 1891). "On some antelopes collected in Somali-land by Mr. T. W. H. Clarke". Proceedings of the Zoological Society of London: 206–212. https://archive.org/stream/proceedingsofgen91scie#page/207/mode/1up.
- ↑ Groves, C.; Grubb, P. (2011). Ungulate Taxonomy. Baltimore, Maryland: Johns Hopkins University Press. pp. 155–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0093-8.
- ↑ Rafferty, J.P. (2011). Grazers (1st ed.). New York: Britannica Educational Pub. pp. 96–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61530-465-3.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 Wilhelmi, Friedrich K. (2013). Mammals of Africa Volume VI. London: Bloomsbury. pp. 387–390. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2257-0.
- ↑ Beolens, Bo (2009). The Eponym Dictionary of Mammals. JHU Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8018-9533-3.
- ↑ 7.0 7.1 7.2 7.3 Derrig, J.B. "Ammodorcas clarkei (dibatag)". Animal Diversity Web. University of Michigan Museum of Zoology. பார்க்கப்பட்ட நாள் 18 January 2016.
- ↑ Castelló, J.R. (2016). Bovids of the World: Antelopes, Gazelles, Cattle, Goats, Sheep, and Relatives. Princeton University Press. pp. 162–63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-691-16717-6.Castelló, J.R. (2016).