நீ. கந்தசாமிப் பிள்ளை
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
நீ. கந்தசாமிப் பிள்ளை (1898-1977) பன்மொழி அறிவும், மொழி பெயர்ப்பு ஆற்றலும், இலக்கியப் புலமையும் கொண்டவர். கட்டட ஒப்பந்தக்காரராகவும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராகவும், தாளாளராகவும் பணி புரிந்தார். கரந்தைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட தமிழ்ப் பொழில் இதழின் ஆசிரியராகவும் இருந்தார். அவ்விதழில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நூலாசிரியராகவும் பதிப்பாசிரியராகவும் விளங்கினார்.
நீ. கந்தசாமிப் பிள்ளை | |
---|---|
பிறப்பு | 1898 பள்ளி அக்கிரகாரம் |
இறப்பு | 1977 |
அறியப்படுவது | எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் |
பெற்றோர் | நீலமேகம் பிள்ளை, சௌந்தரவல்லி |
பிறப்பும் படிப்பும்
தொகுகந்தசாமிப்பிள்ளை தஞ்சை நகரத்தின் அருகில் அமைந்துள்ள பள்ளி அக்கிரகாரத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் நீலமேகம் பிள்ளை, சௌந்தரவல்லி ஆவர். தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை படித்தார். பள்ளிப் படிப்பை முடித்ததும் தம் தந்தையின் வழியில் கட்டட ஒப்பந்தக்காரராகப் பணியாற்றினார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்து ஒப்பந்தக்காரராக இருந்த காரணத்தால் பெரும் புலவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் இவருக்குக் கிடைத்தது. தம் இல்லத்துக்கு அவர்களை அழைத்து வந்து விருந்து நல்கி ஓம்பினார். தம் வீட்டிற்கு அறிவகம் என்று பெயர் சூட்டி நூல் நிலையம் ஒன்றை வீட்டிலேயே அமைத்தார். கந்தசாமி தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம், சமற்கிருதம், பிரெஞ்சு, இலத்தீன் ஆகிய மொழிகளைக் கற்று புலமை பெற்றார்.
பதிப்புப் பணி
தொகுவெண்பாவில் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். 'பள்ளியகரப் பழங்கதை' என்னும் நூலும் ’ஏழுர்த் தேவாரத் திரட்டு’ என்னும் நூலும் இவரால் எழுதி வெளியிடப்பட்டன. 'கம்பராமாயணப் பதிப்பும் நிலையும்' என்னும் தலைப்பில் ’தமிழ்ப் பொழில்’ இதழில் தொடர்க் கட்டுரை எழுதினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 'திருவாசகம்' நூலைப் பதிப்பிக்கும் பணியைக் கந்தசாமிப்பிள்ளையிடம் வழங்கியது. மர்ரே என்னும் நிறுவனத்தின் பதிப்பு அறிவுரையாளராக இருந்து தொல்காப்பியம், கல்லாடம், திருவாசகம் ஆகியவற்றைப் பதிப்பித்தார். வீரமாமுனிவரின் 'செந்தமிழ்', 'கொடுந்தமிழ்' என்னும் நூல்களைப் பதிப்பித்தார். மாணவர்களுக்குப் பயன்படும்வண்ணம் ஆங்கிலக் கவிதைகளைத் திரட்டி இரண்டு தொகுதிகள் வெளியிட்டார். பிரஞ்சு இந்திய ஆய்வியல் நிறுவனத்தில் பணியாற்றியபோது பழந்தமிழ்ச் சொல்லடைவு (மூன்று தொகுதிகள்), செந்தமிழ் அகராதி ஆகியவற்றைத் தொகுத்தார். தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தின் செயலாளராக இருந்தபோது சித்த மருத்துவ ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்தார்.
மொழிப் பெயர்ப்புப்பணி
தொகுதமிழ்ப் பொழில் இதழில் வெளிவந்த மதுரா விஜயம் என்னும் சமற்கிருத நூலின் மொழிபெயர்ப்பை திறனாய்வு செய்து எழுதினார். கால்டுவெல் வரலாற்று மலரை தமிழ்ப்பொழிலில் வெளியிட்டார். தாமசு கிரே எழுதிய 'நாட்டுப் புறக் கல்லறை இரங்கற் பா' என்னும் நூலை மொழி பெயர்த்து தம் மறைந்த மகளுக்கு அந்நூலை காணிக்கையாக்கினார். நற்றிணைப் பாடல்களை தமிழில் மொழி பெயர்த்தார். சித்த மருத்துவத்தின் சிறப்பை விளக்கி ஆங்கிலத்தில் நூல் எழுதினார்.
திரைப்படத்துறை
தொகுசென்னையில் பிரகதி என்னும் திரைப்படப் படப்பிடிப்பு நிலையத்தைக் கட்டித் திரைப்படங்களை உருவாக்கினார். பம்மல் சம்பந்தர் எழுத்தில் உருவான சபாபதி (1941) ஜி. பி. தேவால் எழுத்தைத் தழுவிய என் மனைவி (1942) ஆகிய திரைப்படங்கள் நீ.க.வின் படப்பிடிப்பு நிலையத்தில் ஆக்கப்பட்டன.
உசாத்துணை
தொகு- செம்மொழிச் செம்மல்கள்-ஆசிரியர், முனைவர் பா. இறையரசன் தமிழ்மண் பதிப்பகம்
- நீ.கந்தசாமி எனும் புலமையாளன்- கீற்று இதழிலில் வெளியான ”பாண்டிச்சேரி ப்ரெஞ்ச் இந்திய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிஞர் நீ.கந்தசாமிப் பிள்ளையவர்களின் நற்றிணை ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் (Narrinai ext and Translation) இடம் பெற்ற கட்டுரை”
- தமிழ்நாடு பாடநூல் கழக வெளியீடு: மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தமிழ் பாடப்புத்தகம் (முதற்பதிப்பு:2004), பக்கம்:3, மொழி வாழ்த்துப் பாடல்-ஆசிரியர் குறிப்பு பரணிடப்பட்டது 2014-09-14 at the வந்தவழி இயந்திரம்