பதினைந்தாம் இராம வர்மா
பதினைந்தாம் இராம வர்மா (Rama Varma XV ) (1852-1932) என்பவர் 1895 முதல் கொச்சி இராச்சியத்தின் மன்னராக இருந்த பின்னர் 1914இல் தனது பதவியை துறந்தார். இவர் கொச்சியின் இராஜரிஷி எனவும் அழைக்கப்பட்டார். [1] மேலும், இவர் கொச்சி அரச குடும்பத்தின் சிறந்த அறிஞர்களில் ஒருவராகவும், திறமையான நிர்வாகியாகவும் இருந்தார்.
பதினைந்தாம் இராம வர்மா | |
---|---|
கொச்சி இராச்சியத்தின் மகாராஜா | |
பதினைந்தாம் இராம வர்மா | |
ஆட்சி | 1895 முதல் 1914 |
சமயம் | இந்து சமயம் |
இவர் 1852 திசம்பர் 26 ஆம் தேதி, குட்டலபுரத்து இல்லத்தின் அம்மா தம்புராட்டி மற்றும் பாஸ்கரன் அனுஜன் நம்பூரிபாடு ஆகியோருக்கு பிறந்தார். 1867இல், கொச்சின் அரசவையில் சிறந்த அறிஞர்களில் ஒருவராக இருந்த கும்பகோணம் சேஷாச்சாரியாரின் கீழ் சமசுகிருதத்தைப் பயின்றார். இராம வர்மா 1876 இல் தனது சகோதரியை இழந்தார். மேலும் 1877 இல் தீராத செரிமானக் கோளறு நோயால் பாதிக்கப்பட்டு, சில ஆண்டுகளுக்குப் பிறகு குணமடைந்தார். 1881 இல் தனது தந்தையையும் இழந்தார். இவ்வாறு தனது வாழ்க்கையின் தொடர்ச்சியான துயரங்களால் மனச்சோர்வைக் கடக்க, புத்தகங்களின் துணையை நாடினார். இதன் விளைவாக, இவர் கொச்சியின் அரச குடும்பத்தின் மிகப் பெரிய அறிஞர்களில் ஒருவரானார். 1917 இல் புனேவில் நடந்த அகில இந்திய ஆயுர்வேத மாநாட்டில் தனது உரையில், இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர் பால கங்காதர திலகர் இவரை கொச்சியின் இராஜரிஷி என்று அழைத்தார். [2].
ஆட்சி
தொகு1888 ஆம் ஆண்டில், இவர் பட்டத்து இளவரசரானார். இதன் பின்னர் இவர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்கத் தொடங்கினார். இவர் கொச்சி இராச்சியம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாட்டின் தேவைகளைப் பற்றிய அறிவைப் பெற்றார். ஆகத்து 1895 இல், அப்போதைய மகாராஜா, ஐந்தாம் கேரள வர்மா கடுமையாக நோய்வாய்ப்பட்டார். பிரிட்டிசு நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் இவர் தற்காலிகமாக அரசாங்கத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1895 செப்டம்பரில் கேரள வர்மா மறைந்த பின்னர் கொச்சியின் மகாராஜா என முடிசூட்டப்பட்டார். [3]
இவர் பதவிக்கு வந்தபின்னர் தனது இராச்சியத்தின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்தார். இவரது ஆட்சியின் கீழ் செயலகம் அதிகாரம் பெற்றது, வரிவிதிப்பு விதிகள் கடுமையாக்கப்பட்டன. மேலும் சட்டம் ஒழுங்கு முறை ஊழலிலிருந்து விடுவிக்கப்பட்டது. இவர் கல்வியை அனைத்து வழிகளிலும் ஊக்குவித்தார். கொட்டுநல்லூர் குருகுலத்தின் சிறந்த செயல்பாட்டிற்காக இவர் நிதி ஒதுக்கீடு செய்தார். இது தாழ்த்தபட்ட சாதி மக்கள் உட்பட அனைவருக்கும் இலவச கல்வியை இலவசமாக வழங்கியது.
இராம வர்மா சமசுகிருதம் மற்றும் ஆங்கிலம் குறித்த ஆழ்ந்த அறிவால் கேரளாவிற்கு வெளியே நன்கு அறியப்பட்டவர். பல மாநாடுகளில் பிரதம விருந்தினராக இவர் கலந்து கொண்டார். இதேபோல், அந்த காலத்தில் கேரளத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெற்ற பெரும்பாலான அறிவியல் மாநாடுகளில் இவரது இருப்பைக் காணலாம். ஆதி சங்கரருக்குப் பிறகு கேரளத்திற்கு வெளியே இரண்டாவது மரியாதைக்குரிய அறிஞராக இருந்தார். இவர் ஒரு சிறந்த ஆட்சியாளராகவும் இருந்தார். பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனராக பணியாற்றிய கர்சன் பிரபுவும் இவரது ஆட்சியைப் பாராட்டியுள்ளார்.
சீர்திருத்தங்கள்
தொகுநில உடைமை, கணக்கியல் மற்றும் பல துறைகளில் புரட்சிகர மாற்றங்களை இவர் தொடங்கினார். மக்களை ஆட்சிக்கு நெருக்கமாகக் கொண்டுவர இவர் கொண்டுவந்த கிராமப் பஞ்சாயத்துச் சட்டம் கேரளாவில் முதல் முறையாக கொண்டுவரப்பட்டது. இவரது மற்றொரு சீரமைப்பு என்பது குத்தகை சட்டமாகும். திருப்பூணித்துறையில் இவர் நிறுவிய சமசுகிருதப் பள்ளி இப்போது இராம வர்மா சமசுகிருதக் கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. இது மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் சமசுகிருத ஆய்வுக்கு கல்லூரியின் பங்களிப்பு மகத்தானது. முனைவர். கே. ஜி. பால் போன்ற பல பிரபலங்களின் உருவாக்கத்திற்கும் அவர்களது பணிகளுக்கும் கல்லூரி பங்களித்தது.
இவர் கொச்சிக்கு இருப்புப்பாதையை கொண்டு வந்தார். சோரனூர்-கொச்சி துறைமுக இரயில்வே இவரது காலத்தில் தொடங்கப்பட்டது. 1914 இல் இவர் பதவி விலகினார். இது ஆங்கிலேயர்களுடனான ஒற்றுமையின்மை காரணமாகவும், உடல் நோய் காரணமாகவும் எனக்கூறப்படுகிறது. இவர் தனது பதவியைத் துறந்த நேரத்தில், கொச்சின் பாரதத்தின் வரைபடத்தில் ஒரு முற்போக்கான மற்றும் கௌரவமான மாநிலமாக மாறிவிட்டது. எனவே இவர் "நவீன கொச்சியின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.[4]
சொந்த வாழ்க்கை
தொகுஇவர், இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். இவரது முதல் மனையின் மரணம் காரணமாக இவர், திருச்சூர் வில்லடத்தைச் சேர்ந்த இட்டியானாத் குடும்பத்தைச் சேர்ந்த இத்தியானாத் மாடத்தில் பாருகுட்டி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பாருகுட்டி பின்னர் அவரது நேத்தியராம்மா (அரசிகளின் பட்டப் பெயர்) என அழைக்கப்பட்டார்.
இறப்பு
தொகுசனவரி 1932 இல் திருச்சூரிலுள்ள இவரது கோடைகால இல்லத்தில் காலமானார். இவரது உடல் அரண்மனை மைதானத்தில் அரச மரியாதைக்காக அடக்கம் செய்யப்பட்டது. இவரது குடியிருப்பு இன்றைய கேரள வர்மா கல்லூரிக்கு அருகில் உள்ளது. வடவுகோடு, இராஜரிஷி நினைவு மேல்நிலைப்பள்ளி அல்லூர், இராஜரிஷி நினைவு மேல்நிலைப்பள்ளி என இவரது பெயர் கொச்சி மாநிலத்தில் உள்ள பல கல்வி நிறுவனங்களுக்கு வைக்கப்பட்டது.