பத்து ஆராங்

பத்து ஆராங் (ஆங்கிலம்: Batu Arang, சீனம்: 煤炭山) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில்; கோம்பாக் மாவட்டத

பத்து ஆராங் (ஆங்கிலம்: Batu Arang, சீனம்: 煤炭山) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில்; கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். கோலாலம்பூரில் இருந்து 48 கி.மீ. தொலைவில் உள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் மட்டும் அல்ல; மலேசியாவிலும் மிகப் பழமையான நகரங்களில் பத்து ஆராங் நகரமும் ஒன்றாகும்.

பத்து ஆராங்
Batu Arang
பத்து ஆராங் நகரத்தின் நினைவுச் சின்னம்
பத்து ஆராங் நகரத்தின் நினைவுச் சின்னம்
Map
பத்து ஆராங் is located in மலேசியா
பத்து ஆராங்
      பத்து ஆராங்
ஆள்கூறுகள்: 3°19′02.7″N 101°28′17.6″E / 3.317417°N 101.471556°E / 3.317417; 101.471556
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
உருவாக்கம்18-ஆம் நூற்றாண்டு
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 =
அஞ்சல் குறியீடு
48100
தொலைபேசி எண்+6-03
வாகனப் பதிவெண்B

மலேசியத் தமிழர்களின் வரலாற்றில் பத்து ஆராங் நகரம் தனி ஒரு வரலாற்றைப் பெற்று உள்ளது. மர்மங்கள் நிறைந்த நகரம் என்றும் பேசப் படுகின்றது. பத்து ஆராங் நகரம் தான் மலேசியாவிலேயே முதன்முதலாக ஒரு சோவியத் கம்யூனிச நகரமாக அறிவிக்கப் பட்டது.[1] மார்க்ஸ்லெனின் சித்தாந்தங்களுக்கு விளக்கு ஏற்றி வைத்த முதல் கிராமப்புற நகரம். மலேசியா சுதந்திரம் அடைவதற்கு முன்னால் மலாயா என்று அழைக்கப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சி நடந்தது.

பொது

தொகு

இந்த நகரம் கடந்த 2011 அக்டோபர் 16-ஆம் தேதி தனது நூற்றாண்டு தினத்தைக் கொண்டாடியது.[2] பத்து ஆராங் நகருக்குப் பல சிறப்புகள் உள்ளன. மலாயாவில் முதன்முதலாக நிலக்கரி எடுக்கப்பட்ட இடம். சோசலிச நகரமாக அறிவிக்கப்பட்ட இடம். கர்மவீரர் காமராசர் வந்து போன இடம். மலாயா கணபதியை ஆங்கிலேயர்கள் கைது செய்த இடம். தொழிற்சங்கவாதிகளின் மேடை முழக்கங்களுக்கு வெண் சாமரம் வீசிய இடம்.

மலாயாவை ஆட்சி செய்த பிரித்தானியர்களின் போக்குவரத்து துறை, மின்சாரத் துறை மற்றும் தொழில் துறை வளர்ச்சிகளுக்குப் பத்து ஆராங் ஆற்றிய பங்களிப்புகள் மலாயா வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

வரலாறு

தொகு

1908-ஆம் ஆண்டில் பத்து ஆராங் பகுதியில் முதன்முதலில் நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டது. பூமிக்கு அடியில் பெரிய அளவில் நிலக்கரி இருப்புக்கள் இருப்பதைப் பிரித்தானிய அதிகாரிகள் கண்டு அறிந்தனர். அவை வணிக ரீதியில் பயன் அளிக்கும் என்றும் இரயில் பாதை அமைப்புக்கு எரிபொருளாக அமையும் என்றும் முடிவு செய்தனர்.

ஆங்கிலேயர்கள் நிலக்கரிச் சுரங்க நடவடிக்கைகளைத் தொடங்கிய போதுதான் பத்து ஆராங் நகரம் நிறுவப்பட்டது. 1915-ஆம் ஆண்டில், நாட்டின் பிற பகுதிகளுக்கு நிலக்கரியை கொண்டு செல்வதற்காக பத்து ஆராங் மற்றும் குவாங் சிறுநகரத்தை இணைக்கும் ஓர் இரயில் பாதையை அமைத்தார்கள்.

பத்து ஆராங் நிலக்கரிக்கு கிராக்கி

தொகு

நிலக்கரி உற்பத்தியும்; நிலக்கரி பயன்பாட்டுக்கான தேவையும் அதிகரித்ததால், பத்து ஆராங் நகரில் இருந்து கோலாலம்பூருக்கும் மற்ற இடங்களுக்கும் இரயில் சேவைகள் விரிவு செய்யப் பட்டன. அடுத்ததால முதல் உலகப் போர் வந்தது. அதன் காரணமாக பத்து ஆராங் நிலக்கரிக்கும் அதிகமான அளவில் கிராக்கியும் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதும் குறைந்தது. பத்து ஆராங்கில் உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கரி, உள்ளூர் இரயில் சேவை நிறுவனங்கள்; மின் நிலையங்கள்; ஈயச் சுரங்கங்கள்; ஈயத் தூர்வாரி இயந்திரங்களின் செயல்பாடுகள் போன்றவற்றுக்கு பெருமளவில் விற்கப்பட்டது.

பிரித்தானியர் மலாயா காலம்

தொகு

1908-ஆம் ஆண்டு. ஹாஜி அப்துல் ஹாடி என்கிற மலாய்க்காரர் ஒரு துண்டு கரும் கரியைக் கண்டு எடுத்தார். இவர் பத்தாங் பெர்ஜுந்தை பகுதியில் இருந்து வந்து குடியேறியவர்.[3] அந்தத் துண்டுக் கரியைப் பற்றி ஆய்வுகள் செய்ய ஜே.பி. சீர்வெனோ என்பவரைப் பிரித்தானிய அரசாங்கம் பணித்தது. சோதனைகள் செய்தனர். பின்னர் அந்தக் கரித்துண்டு ஒரு நிலக்கரித் துண்டு என்று கண்டுபிடிக்கப் பட்டது.

இதே காலக் கட்டத்தில் பேராக் மாநிலத்தில் எங்கோர் எனும் இடம்; பெர்லிஸ் மாநிலத்தில் புக்கிட் ஆராங் எனும் இடம்; ஜொகூர் மாநிலத்தில் புக்கிட் கெப்போங் எனும் இடத்திலும் நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், லாபம் அதிகமாகக் கிடைக்காது என்பதால் அந்த இடங்கள் கைவிடப்பட்டன.

ஜான் ஆர்ச்சிபால்ட் ரஸ்ஸல்

தொகு

இருந்தாலும் பத்து ஆராங்கில் மட்டும் நல்ல லாபம் கிடைக்கும் என்பது உறுதியானது. பத்து ஆராங்கில் நிலக்கரி எடுப்பதற்கான குத்தகைக்கு பலர் மனு செய்தனர். அவர்களில் ஒருவர் ஜான் ஆர்ச்சிபால்ட் ரஸ்ஸல் (John Archibald Russell) என்பவர். முதலில் அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் பலர் முயற்சிகள் செய்தனர்.

இருப்பினும் ரவாங் கூட்டாட்சி மலாயா மாநிலங்கள் நிலக்கரி சிண்டிகேட் (Rawang Federated Malay States Coal Syndicate Ltd) எனும் நிறுவனத்திற்குக் குத்தகை கிடைத்தது. அந்த நிறுவனம் இரு ஆண்டுகளுக்கும் மேலாக பற்பல சோதனைகளைச் செய்தது. கடைசியில் லாபம் கிடைக்காது என்று அந்தத் திட்டத்தைக் கைவிட்டது.

மலாயன் கோல்லியரிஸ் லிமிடெட்

தொகு

அதன் பின்னர் சுரங்க உரிமத்தை ஜான் ஆர்ச்சிபால்ட் ரஸ்ஸல் என்பவர் வாங்கினார். 1913 ஜூன் மாதம் 20-ஆம் தேதி மலாயன் கோல்லியரிஸ் லிமிடெட் (Malayan Collieries Ltd) என்ற ஒரு நிறுவனத்தை அவர் தொடங்கினார். 1915-ஆம் ஆண்டில் நிலக்கரி உற்பத்தி தொடங்கியது. ஏறக்குறைய 47 ஆண்டுகள் அந்த நிறுவனம் செயல்பட்டது. 1960-ஆம் ஆண்டு அந்த நிறுவனமும் மூடப்பட்டது.

அந்த 47 ஆண்டுகளில் 15,566,143 மெட்ரிக் டன்கள் நிலக்கரி தோண்டி எடுக்கப்பட்டது. உலகம் பூராவும் ஏற்றுமதி செய்யப்பட்டது. அதிகமான நிலக்கரி இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. உற்பத்தி செய்யப்பட்ட நிலக்கரியின் அப்போதைய மதிப்பு 163,345,181 ரிங்கிட். இது 50 வருடங்களுக்கு முன்னால் இருந்த மலாயா நாணயத்தின் மதிப்பு. இப்போதைய கணக்குப் படி பார்த்தால் நூறு கோடி ரிங்கிட்டைத் தாண்டி நிற்கும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்

தொகு
 
1949-ஆம் ஆண்டில் பத்து ஆராங் பகுதியில் நிலக்கரி தோண்டி எடுக்கப் படுகிறது.

இரண்டாம் உலகப் போரின் போது, 1942 ஜனவரி 5-ஆம் தேதி, பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம் பத்து ஆராங்கைக் காலி செய்யுமாறு சுரங்க நிறுவனத்திற்கு கட்டளை பிறப்பித்தது. சுரங்கத்தின் செயல்பாடுகள் உடனடியாக நிறுத்தப் பட்டன.

அங்கு இருந்த தளவாடப் பொருட்கள் இரயில் மூலமாகச் சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப் பட்டன. பின்னர் அங்கு இருந்த மின் நிலையத்தையும் அதன் முக்கிய துணை நிலையத்தையும் பிரித்தானிய இராணுவம் வெடிபொருட்களைக் கொண்டு தகர்த்தது.

ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பு

தொகு

முதன்மைச் சுரங்க நிறுவனமான ஜே. ஏ. ரஸ்ஸல் நிறுவனம், ஜனவரி 9, 1942 வரை தொடர்ந்து கோலாலம்பூரில் செயல்பட்டு வந்தது. ரஸ்ஸல் நிறுவனத்தினர் தற்காலிகமாக ஓர் அலுவலகத்தை நிறுவுவதற்காகச் சிங்கப்பூருக்குச் சென்றனர்.

ஜப்பானியப் படைகள் சிங்கப்பூரை அடைந்ததும், ரஸ்ஸல் நிறுவனம் அனைத்துப் பதிவுகளையும் உபகரணங்களையும் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்து; அங்கே ஓர் அலுவலகத்தைத் திறப்பதற்கு முயற்சி செய்தது. ஆனால் பதிவுகளையும் உபகரணங்களையும் ஏற்றிச் சென்ற கப்பல் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் வழியில் மூழ்கியது.

ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்புக் காலத்தில், பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத்தில் பலத்த சேதங்கள். அவற்றைச் சரி செய்யவும்; சுரங்க நடவடிக்கைகளை மீண்டும் தொடரவும் ஜப்பானியர்கள் பலரை வேலைக்கு அமர்த்தினார்கள். அவ்வாறு தொடங்கப்பட்ட சுரங்கத் தொழிலில் நிலத்தடிச் சுரங்க நடவடிக்கைகள் தவிர்க்கப் பட்டன.

இந்திய துருப்புக்கள் உதவி

தொகு

நில மேற்பரப்பில் மட்டுமே நிலக்கரியை வெட்டி எடுத்தார்கள். இருப்பினும் அதிகச் செலவுகள் காரணமாகக் சுரங்கத் தொழில் பாதிப்பு அடைந்தது. ஜப்பானியர்கள் சரணடையும் வரையில் 1,369,834 டன் நிலக்கரியை வெட்டி எடுத்து உள்ளனர்.[4]

1945 செப்டம்பர் 11-ஆம் தேதி, பிரித்தானிய இராணுவ நிர்வாகம் பத்து ஆராங் நிலக்கரிச் சுரங்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொண்டது. இந்திய துருப்புக்களின் உதவியுடன் நிலக்கரிச் சுரங்கதிற்குச் சொந்தமான சொத்துக்கள் அனைத்தையும் கையகப் படுத்தியது.

அதிகச் செலவுகள் காரணமாக, பத்து ஆராங் சுரங்கம் 1960 ஜனவரி 30-ஆம் தேதி நிரந்தரமாக மூடப்பட்டது.[5] இருப்பினும் அந்தக் காலக்கட்டம் வரையில் 14,000,000 டன் நிலக்கரி தோண்டப்பட்டு உள்ளது என்பது பத்து ஆராங் படைத்த ஒரு வரலாறு ஆகும்.[4]

மலாயா அவசரகாலம்

தொகு

மலாயா அவசரகாலத்தின் போது, பத்து ஆராங் ஒரு மோதல் மண்டலமாகவே உருவெடுத்து இருந்தது. அதற்குக் காரணம் மலாயா கம்யூனிஸ்டு கட்சி பத்து ஆராங் நகரத்தை ஆக்கிரமிக்க முயன்றது தான். அந்த வகையில் கம்யூனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பு 1960-ஆம் ஆண்டு வரை நீடித்தது. அதுவே பிரித்தானிய அதிகாரிகள் பத்து ஆராங் பகுதியை "கறுப்பு பகுதி" என்று அறிவிக்கவும் ஒரு காரணமாக அமைந்தது.

ஒரு கட்டத்தில் பத்து ஆராங் பகுதி, கம்யூனிஸ்டுக் கிளர்ச்சிக்காரர்களுக்கு ஒரு முன்னோடித் தளமாகவும் விளங்கியது. தவிர அந்தப் பகுதியைச் சுற்றிலும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் நிறையவே இருந்தன. அவை கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு சிறந்த மறைவிடமாகவும் திகழ்ந்தது.[6]

கம்யூனிஸ்டுகளின் திடீர் தாக்குதல்

தொகு

1948 ஜூலை 12-ஆம் தேதி கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவினர், பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத்தைக் கைப்பற்றினர். ஒரு மணி நேரம் வரையில் ஆக்கிரமித்தனர். சுரங்கத்தில் இருந்த தளவாடப் பொருட்களைச் சேதப் படுத்தினர். தவிர சுரங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் ஐந்து சீனர்களையும் கொன்று விட்டனர்.[7]

மலாயா அவசரகாலத்தின் தொடக்கக் காலத்தில்; பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத்தின் மீதான அந்தத் தாக்குதல் சிற்சில பதற்றங்களை ஏற்படுத்தியது. அங்கு வாழ்ந்த மக்களை அரசாங்கத்தால் பாதுகாக்கவும் இயலவில்லை. பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடவும் இயலவில்லை. நாட்டில் போதுமான இராணுவத் துருப்புக்கள் இல்லாமல் போனதே அதற்குக் காரணமாகும்.[8]

கைது நடவடிக்கை

தொகு

எட்டு நாட்களுக்குப் பின்னர், நிலக்கரி சுரங்கத் தாக்குதல் தொடர்பாக இருபது பேர் கைது செய்யப் பட்டார்கள். பின்னர் 1948 ஜூலை 30-ஆம் தேதி போலீசாரும் இராணுவப் படையினரும் கூட்டாக இணைந்து தாக்குதல்களில் ஈடுபட்டார்கள். அந்த நடவடிக்கையில் 22 கம்யூனிஸ்டு உறுப்பினர்களைக் கூட்டுப் படையினர் சுட்டுக் கொன்றார்கள். மற்றும் காட்டுப் பகுதிகளில் மறைந்து இருந்த 47 உறுப்பினர்களையும் கைது செய்தார்கள்.

அதன் பின்னர் கம்யூனிஸ்டு தரப்பில் இருந்து ஒரு பழிவாங்கும் படலம் டொடங்கியது. 1949 ஜனவரி 25-ஆம் தேதி கம்யூனிஸ்டுகள் ஓர் இரயில் வண்டியைத் தடம் புரளச் செய்தார்கள். அந்த நிகழ்ச்சி பிரித்தானிய அரசாங்கத்திற்கு மேலும் சினமூட்டியது. அதன் பின்னணியில் 1949 ஜூலை 20-ஆம் தேதி விமானப் படையினர் கம்யூனிஸ்டு கொரிலாக்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தினார்கள்.

இந்தியர் கேளிக்கை விடுதியில் திடீர் சோதனை

தொகு

கம்யூனிஸ்டு கொரிலாக்களுக்குத் தலைவராக இருந்தவர் சோங் ஹோய் போங். இவரைப் பிடித்துக் கொடுத்தால் $ 2,000 பரிசு வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது. எனினும் 1950 ஜனவரி 16-ஆம் தேதி நடந்த ஒரு தாக்குதலில் சோங் ஹோய் போங் இராணுவ வீரர்களால் கொல்லப் பட்டார்.

பின்னர் பத்து ஆராங்கில் இருந்த இந்தியர் கேளிக்கை விடுதியில் திடீர் சோதனை நடவடிக்கை. அதில் கம்யூனிஸ்டுக் கொடிகள், தொப்பிகள், கம்யூனிஸ்டு தலைவர்களின் புகைப்படங்கள், சுவரொட்டிகள் போன்றவை சிக்கின. அவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நடவடிக்கையின் தொடர்பாக 25 கடைகள் மூடப் பட்டன. பெரும்பாலும் சீனர்களுக்குச் சொந்தமான கடைகள்.[7]

பத்து ஆராங் தமிழர் நிகழ்வுகள்

தொகு

பத்து ஆராங் நகருக்குத் தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சர் காமராசர், ஒரு முறை வந்து இருக்கிறார். 1953-ஆம் ஆண்டில் நடந்தது. அப்போது அவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் பதவியில் இல்லை. தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராகத் தான் இருந்தார். அவர் பத்து ஆராங் வந்த பின்னர்தான் முதலமைச்சர் ஆனார்.

பத்து ஆராங் தொழிற்சங்கத்தின் பழைய கட்டடத்தில் காமராஜர் பேசுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தொழிற்சங்கத்தின் புதுக் கட்டடம் 1954-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. புதுக் கட்டடத் திறப்பு விழாவில் பிரபலமான தொழிற்சங்கவாதி பி.பி.நாராயணன் அவர்களும் கலந்து கொண்டார்.

காமராசர் வருகை

தொகு

காமராஜர் கதர் வேட்டி அணிந்த பச்சைத் தமிழராகப் பரிணமித்தார். அவர் பாணியிலேயே பேசி இருக்கிறார். அந்த வேளையில் பத்து ஆராங் பிரமுகர்களில் ஒருவரான பிச்சை என்பவர் காமராசரிடம் பற்பல கேள்விகளைக் கேட்டு இருக்கிறார்.

காமராஜருக்குக் கோபம் வந்து விட்டது. துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு ‘போயிட்டு வர்றேங்கய்யா’ என்று கிளம்பி விட்டார். ரவாங்கில் வேறு ஒரு கூட்டம். அங்கு போய் விட்டார். பிரமுகர் பிச்சை தொடுத்தக் கேள்விகள் காமராசரைப் புண்படுத்தி இருக்கலாம்.

தற்காலத்தில் பத்து ஆராங்

தொகு
 
1971-ஆம் ஆண்டில் பத்து ஆராங் இரயில் பாலம் அகற்றப்பட்ட பின்னர் உள்ள எஞ்சிய நினைவுகளை குறிக்கும் தகடு.
 
2007-ஆம் ஆண்டில் பத்து ஆராங்

நிலக்கரி சுரங்கம் மூடப்பட்ட பின்னர் பல சுரங்கத் தொழிலாளர்கள் பத்து ஆராங்கில் இருந்து வெளியேறி விட்டனர். பத்து ஆராங் நகரத்தின் பல கட்டிடங்கள் இப்போது சிதைந்த நிலையில் காட்சி அளிக்கின்றன. அவற்றில் சில கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ளன, ஏனெனில் அவை மக்கள் குடியிருப்பதற்கு பாதுகாப்பு அற்றவை. அத்துடன் பல கட்டிடங்கள் பழைய நிலக்கரிச் சுரங்கங்களின் மீது கட்டப்பட்டு உள்ளன.

பத்து ஆராங் நகரத்தின் வரலாற்றில் பல கடந்த காலத் தடயங்கள் மறைந்து விட்டன. சுரங்கப் புகைபோக்கிகள் போன்ற சில பொருட்கள் மட்டும் இன்னும் உள்ளன. சில புகைபோக்கிகளில் செடி கொடிகள் மரங்கள் வளர்ந்து புரதான சின்னங்களைப் போல காட்சி அளிக்கின்றன.[6] குவாங் நகரம் தொடங்கி பத்து ஆராங் வரையிலான இரயில் பாதையின் தண்டவாளங்கள் 1971-ஆம் ஆண்டில் அகற்றப்பட்டன். அத்துடன் பத்து ஆராங்கின் வரலாற்று இரயில் சேவையும் ஒரு முடிவுக்கு வந்தது.[9]

தமிழர்கள் நடமாட்டம் அதிகம்

தொகு

இந்த நகரில் அதிகமாகத் தமிழர்களைப் பார்க்க முடிகிறது. இப்போது அதிகமான மலாய்க்காரர்களும் அங்கு குடியேறி வருகின்றனர். ஒரு காலத்தில் படு சுறுசுறுப்பாக இயங்கிய நகரம் பத்து ஆராங். இப்போது அதன் வேகத்தை இழந்து நிற்கிறது. பலர் வெளியேறி விட்டனர். இருந்தாலும், பலருக்கு வயதாகிப் போனாலும் இன்னும் அங்கேயே வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு பத்து ஆராங் பழைய தடயங்களை இழந்து விட்டாலும், பல உள்ளூர்க் கடைகள், உணவகங்கள், காய்கறிச் சந்தைகள் இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்த நகரம் இப்போது சீனர்கள், மலாய்க்காரர்கள் மற்றும் இந்தியர்கள் பின்னணியைக் கொண்ட ஒரு பன்முகக் கலாச்சார நகரமாக மாறி வருகிறது.[10]

நகரப் பாரம்பரிய தகுதி

தொகு

2011-ஆம் ஆண்டில், பத்து ஆராங் நகரில் 100-ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. அந்த நகரத்திற்கு நகரப் பாரம்பரிய தகுதி வழங்கப்பட வேண்டும் என்று பத்து ஆராங் வாழ் மக்கள் அறைகூவல் விடுத்தனர்.

சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக நகரத்தையும் அதன் கட்டிடங்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். காவல் நிலையம், செங்கல் தொழிற்சாலை, சுரங்கத்தின் சுமை உந்துகள், நகர மண்டபம் போன்றவை புதுப்பிக்கப்பட வேண்டும்; பராமரிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தனர்.[11]

திரைப்படங்கள்

தொகு

பல சீனப் புத்தாண்டுத் திரைப் படங்கள் பத்து ஆராங்கில் எடுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் எ ஹவுஸ் ஆப் ஹேப்பினஸ் (A House of Happiness) என்ற 2018 திரைப்படம் 2017 மார்ச் மாதம் 13 நாட்களுக்குப் படமாக்கப்பட்டது.[12] கோபிதாம் சண்டை போடு எனும் படம் 2019-ஆம் ஆண்டு பத்து ஆராங்கில் படமாக்கப்பட்டு 2020-ஆம் ஆண்டில் வெளியீடு கண்டது.[13]

மேற்கோள்

தொகு
  1. Malaya's first Soviet government on March 27, 1937. This was a declaration of independence even before the formation of the Federation of Malaya in 1957.
  2. Mining Batu Arang’s rich history
  3. Kaur, A. ,1990 p. 75 - 76
  4. 4.0 4.1 Kaur, A. ,1990 p. 83 - 84
  5. Kaur, A. ,1990 p. 84 - 85
  6. 6.0 6.1 Price, Liz (2010-02-06). "Stepping back in time". The Star (Malaysia). https://www.thestar.com.my/travel/2010/02/06/stepping-back-in-time. 
  7. 7.0 7.1 Communist Terrorism in Malaya: The Emergency: June 1948 - June 1952 (PDF). Kuala Lumpur: Department of Information Federation of Malaya. pp. 46, 48, 53, 61, 82, 92, 152.
  8. Reuters (1948-07-15). "Malayan Communist Plan Reported To Declare "Soviet Republic"". The Sydney Morning Herald. https://trove.nla.gov.au/newspaper/article/18077897. 
  9. "Batu Arang" (in zh). Sin Chew Daily. 2018-01-13. https://www.pressreader.com/malaysia/sin-chew-daily-metro-edition-evening/20180113/284258120658869. 
  10. Michael, Stuart (2011-09-10). "Batu Arang still boasts of its rustic charm". The Star (Malaysia). https://www.thestar.com.my/news/community/2011/09/10/batu-arang-still-boasts-of-its-rustic-charm. 
  11. "Residents want heritage status". The Star (Malaysia). 2011-09-10. https://www.thestar.com.my/news/community/2011/09/10/residents-want-heritage-status. 
  12. Kit Yan, Seto (2017-03-27). "Happily together again". The Star (Malaysia). https://www.pressreader.com/malaysia/the-star-malaysia-star2/20170327/281762744087262. 
  13. "Three races working together. These red lanterns has been placed in Batu Arang, Malaysia." (in zh). China News Service. 2019-12-25. http://www.chinanews.com/hr/2019/12-25/9042968.shtml. 

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்து_ஆராங்&oldid=3996994" இலிருந்து மீள்விக்கப்பட்டது