பனங்குடி அகத்தீசுவரர் கோவில், புதுக்கோட்டை மாவட்டம்
பனங்குடி அகத்தீசுவரர் கோவில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், பனங்குடி ஊராட்சி, பனங்குடி கிராமத்தில் (அஞ்சல் குறியீட்டு எண் 622101) அமைந்துள்ள கற்றளியாகும். பனங்குடி பரமேசுவரர் கோவில் என்பது இதன் மற்றோரு பெயராகும். முத்தரையர்கள் கலைப்பாணியில் அமைந்துள்ள இக்கற்றளி கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் பிற்காலத்தில் சோழர்களால் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழிணையம் கருதுகிறது. [1] எஸ் ஆர் பாலசுப்ரமணியம், இக்கற்றளி விஜயாலய சோழன் (கி.பி. 848-871 CE) காலத்தைச் சேர்ந்தது என்று கருதுகிறார். [2]
அமைவிடம்
தொகுஇவ்வூர் அன்னவாசலிலிருந்து 2.5 கி.மீ. தொலைவிலும், சித்தன்னவாசலிலிருந்துு 6.6 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து 12.2 கி.மீ. தொலைவிலும், இலுப்பூரிலிருந்து 13.1 கி.மீ. தொலைவிலும், நார்த்தாமலையிலிருந்து13.5 கி.மீ. தொலைவிலும், திருமயத்திலிருந்து 26.2 கி.மீ. தொலைவிலும், கொடும்பாளூரிலிருந்து 30.3 கி.மீ. தொலைவிலும், திருச்சிராப்பள்ளியிலிருந்து 47.5 கி.மீ. தொலைவிலும், அமைந்துள்ளது. இதன் புவியமைவிடம் 10°26'16.2"N அட்சரேகை 78°42'59.தீர்க்க ரேகை ஆகும். 2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள் தொகை 2,335 (ஆண்கள் 1,178, பெண்கள் 1,157) ஆகும். [3]
கோவில் அமைப்பு
தொகுகிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தச் சிறிய கற்றளிி கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலச் சோழர் கலைப்பாணியில் அமைந்த சிவன் கோவிலாகும். இக்கோவிலின் மூலவர் அகத்தீசுவரர்; அம்பாள் சிவகாமசுந்தரி ஆவார். இக்கோவிலில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் இக்கோவில் இறைவனை பனங்குடி பரமேசுவரன் என்று பதிவுசெய்துள்ளன. [4][2]
இக்கற்றளி இதன் சதுர வடிவிலான கருவறை மற்றும் அர்த்தமண்டபத்துடன் எஞ்சியுள்ளது. இக்கற்றளியின் அர்த்தமண்டபம் ஒரு முகமண்டபத்துடன் இணைந்து இருந்துள்ளது. முகமண்டபத்தின் முன்பு ஒரு நந்திமண்டபம் இருந்திருக்க வேண்டும். தற்போது முகமண்டபம் மற்றும் நந்தி மண்டபத்தின் சிதைவுற்ற அடித்தளங்கள் காணப்படுகின்றன. இக்கோவில் ஒரு பரிவார கோவிலாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம், கற்றளியைச் சுற்றி எட்டு உபகோவில்கள் இருந்திருக்கலாம். [4] [2]
கருவறை விமானம் உபானம், ஜகதி, திரிபட்டைக் குமுதம், மேலும் கீழும் கம்புகள் தழுவிய கண்டம், பட்டிகை ஆகிய உறுப்புகளுடன் கூடிய அதிட்டானம் பாதபந்த வகையைச் சேர்ந்ததாகும். இவற்றில் எவ்வித அழகணிகளும் காணப்படவில்லை. அதிட்டனத்திற்கு மேலே அமைந்துள்ள சுவர்கள் நான்கு அரைத்தூண்களைக் கொண்டு மூன்று பத்திகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கருவறைப் புறச் சுவரின் சாலைப் பத்தியில் அரைத்தூண்களின் அணைப்பில் அகழப்பட்ட கோட்டங்கள் வெறுமையாகக் காணப்படுகின்றன. கோட்டங்களின் மேற்புறத்தில் இரட்டை வளைவு கொண்ட மகர தோரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன. [4][2]
அரைத்தூண்களுக்கு மேலே அமைந்துள்ள விரிகோணப் போதிகைகள் உத்திரம் தாங்குகின்றன. பிரஸ்தர உறுப்புகளாக வாஜனமும் அதற்குமேல் வலபியும் அமைந்துள்ளன. வாலபியில் பூத கண வரிசை இடம்பெற்றுள்ளது. இதற்கு மேலே கூரை அமைந்துள்ளது. கூரை முன்னிழுப்புப் பெற்று கபோதமாக நீட்சி பெற்றுள்ளது. கபோதத்தில் பக்கத்திற்கு இரண்டு வீதம் கூடுகள் இடம்பெற்றுள்ளன. கருவறையின் கூரைக்கு மேலே பூமிதேசம் இடம்பெற்றுள்ளது. பூமிதேசத்தில் யாளி வரியும் மூலைகளில் மகரத்தலைகளும் காட்டப்பட்டுள்ளன. நான்கு புற மூலைகளிலும் வெளிப்புறம் பார்த்தவாறு நின்ற நிலையில் நான்கு நந்திகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. [4][2]
பனங்குடி அகத்தீசுவரர் கோவில் கருவறையின் மீது அமைந்த விமானம் ஏகதள நாகர விமானம் ஆகும். ஏகதள விமானம் ஒரு நிலையைக் கொண்டிருக்கும். விமானத்தின் சிகரம், கிரீவம், தூபி ஆகியன சதுர வடிவில் அமைக்கப்பட்டிருந்தால் அது நாகர விமான வகையைச் சேர்ந்தது ஆகும். சதுர வடிவுடன் கூடிய கிரீவத்தின் நாற்புறமும் கிரீவ கோட்டங்கள் அமைந்துள்ளன. கிரீவ கோட்டங்களில் கிழக்கில் சுப்பிரமணியர், தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் விஷ்ணு, வடக்கில் பிரம்மன் ஆகிய தெய்வங்களுக்கான திருமேனிகள் கட்டப்பட்டுள்ளன. கிரீவக் கோட்டத்தின் மேல் உள்ள மகாநாசிகைகள் வெறுமையாக உள்ளன. நாகர சிகரத்திற்கு மேல் மகா பத்மவரி என்ற அமைப்பு விரிந்த தாமரை மலர் போன்று காட்டப்பட்டுள்ளது இதனை அடுத்து நான்முக தூபி காட்டப்பட்டுள்ளது. [4][2]
தொடக்ககால சோழர் கோவில்களில் சூரியன், சப்த மாதர்கள், விநாயகர், கார்த்திகேயர், தவ்வை, சந்திரன், சண்டிகேசுவரர் மற்றும் நந்தி உள்ளிட்ட அட்ட பரிவார தெய்வங்களை உள்ளடக்கிய உபகோயில்களை அமைப்பது வழக்கம் என்று எஸ் ஆர் பாலசுப்ரமணியன் குறிப்பிட்டுள்ளார். இக்கோவில் வளாகத்தில் தவ்வைை, விநாயகர் மற்றும் நாகர் உள்ளிட்ட பல சிற்பங்கள் கண்டறியப்பட்டதாகவும் எஸ் ஆர் பாலசுப்ரமணியன் குறிப்பிட்டுள்ளார். [2]
கல்வெட்டுகள்
தொகு- முத்தரையர்கள் கலைப்பாணியில் அமைந்துள்ள இக்கற்றளி கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் பிற்காலத்தில் சோழர்களால் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழிணையம் கருதுகிறது. [1]
- இக்கோவிலின் வடக்குச் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள பரகேசரிவர்மனின் 14 ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்த கல்வெட்டு இக்கோவில் இறைவனை பனங்குடி பரமேசுவரன் என்று குறிப்பிடுகிறது. இறைவனுக்கு அகத்தியேசுவரர் என்ற பெயர் எப்போது முதல் சூட்டப்பட்டது என்று உறுதியாகத் தெரியவில்லை. எழுத்தமைதியின் அடிப்படையில் இக்கல்வெட்டின் காலம் கி.பி. 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் இக்கல்வெட்டு குறிக்கும் பரகேசரிவர்மன் விஜயாலய சோழன் (கி.பி. 848-871 CE) என்று கருதுகிறார். கே வி சௌந்தர ராஜன் முதலாம் பராந்தகனே (கி.பி. 907-955) பரகேசரிவர்மன் என்று கருதுகிறார். [4][2]
- கற்றளியின் மேற்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள மூன்றாம் குலோத்துங்க சோழன் கல்வெட்டு சிதைந்துள்ளது. (No 180 of the Inscriptions in the Pudukkottai State) [4]
- இக்கற்றளியின் மேற்குச் சுவரில் பொறிக்கப்பட்ட பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் (1268-1308 CE) நான்காம் ஆட்சியாண்டைச் சேர்ந்த முற்றுப்பெறாத 28 வரிகள் கொண்ட தமிழ் கல்வெட்டு, கோநாட்டில் உள்ள பனங்குடியில் உள்ள கோயில் அறங்காவலர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் ஒரு தேவதான நிலத்தின் மதிப்பீட்டை நிர்ணயித்துத பதிவு.செய்துள்ளது. [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 அருள்மிகு அகத்தீசுவரர் கோயில் தமிழிணையம் தமிழர் தகவலாற்றுபடை
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Balasubrahmanyam, S R (1966). Early Chola Art part 1. Asia Publishing House. Mumbai. pp 54-56]
- ↑ Panangudi Indian Village Directory
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 Panangudi – Agastyesvara Temple Saurabh Saxena Puratattva April 15, 2011