பரநிருபசிங்கம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பரநிருபசிங்கம் அல்லது பரநிருபசிங்கன் என யாழ்ப்பாண வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படுபவன், 1478 ஆம் ஆண்டு முதல் 1519 ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னனாக இருந்த ஆறாம் பரராசசேகரனின் மகன் ஆவான். பரராசேகரனின் மூன்று மனைவிகளுள், இரண்டாவது மனைவியாகிய வள்ளியம்மைக்குப் பிறந்தவன் இவன். பரராசசேகரனின் மூத்த மனைவிக்குப் பிறந்த இரண்டு ஆண் மக்களுள் ஒருவன் நஞ்சு கொடுக்கப்பட்டும், மற்றவன் வாளால் வெட்டப்பட்டும் இறந்துவிட பரநிருபசிங்கனே பட்டத்துக்கு உரியவனாக இருந்தான். எனினும், பரராசசேகரனின் மூன்றாம் மனைவியின் மகனான சங்கிலி, பரநிருபசிங்கனை ஏமாற்றி ஆட்சியைப் பிடித்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாறு கூறும் நூலான யாழ்ப்பாண வைபவ மாலையின் படி, பரநிருபசிங்கம் சிறந்த வீரனாகவும், மருத்துவத்தில் வல்லுனனாகவும் இருந்ததாகத் தெரிகிறது. கண்டியரசனின் மனைவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டு எவராலும் மாற்றமுடியாமல் போகவே, பரநிருபசிங்கன் கண்டிக்குச் சென்று அந் நோயைத் தீர்த்ததாக வைபவமாலை கூறும். பரநிருபசிங்கனின் தந்தை ஆறாம் பரராசசேகரன் ஆட்சியில் இருந்தபோது, பரநிருபசிங்கனுக்குக் கல்வியங்காடு, சண்டிருப்பாய், அராலி, அச்சுவேலி, உடுப்பிட்டி, கச்சாய், மல்லாகம் ஆகிய ஏழு கிராமங்களைச் சொந்தமாகக் கொடுத்து அதற்குச் செப்புப் பட்டயமும் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
பரராசசேகரனின் மூத்த மனைவியின் மக்கள் இருவரும் இறந்துவிட பரநிருபசிங்கன் பட்டத்துக்கு உரியவன் ஆனான். ஆனால், பரராசசேகரனின் இளைய மனைவி அல்லது வைப்புப் பெண்ணின் மகனான சங்கிலி அரசாட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். முதலில் பரநிருபசிங்கத்துக்கும் தனக்கும் அரச வருமானத்தில் சரி பாதி எனவும், தான் அரசனாக இருப்பதாகவும், பரநிருபசிங்கம் மந்திரி எனவும் சங்கிலி வாக்களித்தானாயினும், படிப்படியாகத் தனது நிலையை வலுப்படுத்திக்கொண்டு பரநிருபசிங்கத்தை ஏமாற்றிவிட்டான்.
இதனால் பிற்காலத்தில் சங்கிலியைப் பதவியில் இருந்து இறக்கி யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றுவதற்காகப் பரநிருபசிங்கம், அக்காலத்தில் இப் பகுதியில் செல்வாக்குப் பெற்று வந்த போத்துக்கீசரின் உதவியை நாடினான். போத்துக்கீசரின் மதமான கத்தோலிக்க மதத்தையும் தழுவிக்கொண்டான். போத்துக்கீசரும் இவனுக்கு அரசுரிமையைப் பெற்றுத்தர வாக்களித்தனர் ஆயினும் அது ஒரு போதும் கைகூடவில்லை.