பரந்தூர் கிராமம், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பரந்தூர் ஊராட்சியில் அமைந்துள்ளது.

பரந்தூர் கிராமம், திருமால்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து வடமேற்கே 10 கிலோ மீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரத்திற்கு வடக்கே 35 கிலோ மீட்டர் தொலைவிலும், வாலாஜாபாத்திற்கு வடக்கே 29 கிலோ மீட்டர் தொலைவிலும், சிறீபெரும்புதூருக்கு மேற்கே 30 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்மேற்கே 65 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

இதன் அஞ்சல் சுட்டு எண் 631 553 மற்றும் அஞ்சலகம் இடையர்பாக்கத்தில் உள்ளது. இதன் வடமேற்கே திருமால்பூர் தொடருந்து நிலையம் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பரந்தூர் கிராமத்தின் மொத்த பரப்பளவு 1,328.11 ஹெக்டேர் ஆகும். பரந்தூரில் 2,556 மக்கள் வசிக்கின்றனர். 58.88% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[1]

சென்னையின் இரண்டாவது பன்னாட்டு வானூர்தி நிலையம்

தொகு

பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமப் பகுதிகளிலிருந்து 4971 ஏக்கர் நிலப்பரப்பில், ரூபாய் 20,000 கோடி செலவில், சென்னையின் இரண்டாவது புதிய பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைக்க இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான நிலம் எடுக்கும் பணியில் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. இதனால் 3000 ஏக்கர் வயலும், 1000 குடியிருப்புகளும் பாதிக்கப்படும் எனப்பொதுமக்கள் கருதுவதால், வானூர்தி நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணிக்கு, பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.[2][3][4]புதிய பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைக்க, பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராமப் பகுதிகளில் தமிழ்நாடு அரசு கையகப்படுத்தும் நிலத்திற்கு சந்தை மதிப்பில் 3.5 மடங்கு விலை தரப்படும் என அரசு அறிவித்துள்ளது. [5]

ரூபாய் 20,000 கோடி திட்ட மதிப்பில் 4700 ஏக்கர் பரப்பளவில் நிறுவப்படும் பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தை 2028-ஆம் ஆண்டிற்குள் கட்டி முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு முதலீடு செய்யும் ஒவ்வொரு ரூபாய் 100க்கு ஆண்டு தோறும் ரூ.325 வருவாய் கிடைக்கும்.[6]

பரந்தூர் வானூர்தி நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு

தொகு

20 கிராமங்களில், 5,700 ஏக்கர் பரப்பில் பரந்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைவதாக வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் 300வது நாளை நோக்கி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஏகனாபுரம் கிராமத்தில் மக்கள் 280வது நாளை கடந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். [7]

2 அக்டோபர் 2023 காந்தி ஜெயந்தி முன்னிட்டு நடைபெறும் கிராம சபை கூட்டங்களை பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் புறக்கனித்தனர்.[8]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரந்தூர்&oldid=3812033" இலிருந்து மீள்விக்கப்பட்டது