பிரபுல்ல குமார் சென்
பிரபுல்லா குமார் சென் (Prafulla Kumar Sen) (மார்ச் 1942 இறப்பு) ஓர் இந்திய புரட்சியாளரும், தத்துவவாதியுமாவார். சுவாமி சத்யானந்தா பூரி என்றும் இவர் அழைக்கப்படுகிறார் தனது இளமை பருவத்தில் கொல்கத்தா பல்கலைக்கழகத்திலும், பின்னர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனில் உள்ள விஸ்வ-பாரதி பல்கலைக்கழகத்திலும் கிழக்கத்திய தத்துவத்தை கற்பித்தார். தாகூரால் ஊக்கப்படுத்தப்பட்ட இவர் 1932 இல் தாய்லாந்து சென்றார். 1939 இல் தாய்-பாரத் விடுதி என்ற கலாச்சார மன்றத்தை நிறுவினார். [1] தாய்லாந்திற்குச் சென்ற இவர், சுலாலாங்கொர்ன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டு, பண்டைய இந்திய மற்றும் தாய் மொழிகளில் சொற்பொழிவு செய்தார். மேலும் ஆறு மாதங்களில் தாய் மொழியில் தேர்ச்சி பெற்றதாகவும், இராமாயணம், தாய் மொழியில் காந்தியின் வாழ்க்கை வரலாறு உட்பட பல இந்திய தத்துவ படைப்புகள், சுயசரிதைகள் மொழிபெயர்த்ததாகவும் கூறப்படுகிறது. இவரது இலக்கியப் படைப்புகள் இறுதியில் இருபது தொகுதிகளுக்கு மேல் இருந்தது.
1939 இல் இரண்டாம் உலகப் போரின் தொடக்கத்தில், இவர் இந்திய தேசிய அமைப்பையும் உருவாக்கினார். கியானி பிரிதம் சிங்கின் இந்திய சுதந்திரக் கழகத்துடன் சேர்ந்து, இந்திய சுதந்திர இயக்கத்திற்கான ஆயுதமேந்திய இந்திய எதிர்ப்பை ஆதரிப்பதில் வளர்ந்து வரும் யப்பானிய ஆர்வத்தைத் தூண்டுவதில் கருவியாக இருந்தார். இந்திய சுதந்திரக் கழகம், இந்திய தேசிய இராணுவம் ஆகியவற்றின் ஆதரவைப் பற்றிய உறுதிப்பாட்டைப் பெறும் முயற்சியில் யப்பானிய கொள்கைகள் குறித்து புஜிவாரா இவைச்சியுடனும், எஃப் கிகனுடன் பேச்சுவார்த்தை நடத்திய முதல் நபர்களில் சிங்கும் இவரும் இருந்தனர். [2] மார்ச் 1942 இல் தோக்கியோ மாநாட்டிற்கு செல்லும் வழியில் விமான விபத்தில் கொல்லப்பட்ட இந்திய பிரதிநிதிகளில் இவரும், பிரிதம் சிங் இருவரும் அடங்குவர். இவரது நினைவாக 1942 ஆம் ஆண்டில் தாய்-பாரத் கலாச்சார விடுதியால் சுவாமி சத்யானந்தா பூரி அறக்கட்டளை நிறுவப்பட்டது. எஸ்.எஸ்.பி.எஃப் நூலகம் இன்று பல பழைய மற்றும் அரிய இந்திய நூல்களைக் கொண்ட ஒரு குறிப்பு நூலகமாகும். இந்திய கலாச்சாரம், குறிப்பாக இராமாயணம் குறித்த பணிகளை ஊக்குவிப்பதிலும் இந்த அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kratoska 2002
- ↑ Indian National Army in East Asia. Hindustan Times பரணிடப்பட்டது 2 சூலை 2007 at the வந்தவழி இயந்திரம்
- Indian National Army in East Asia. Hindustan Times
- Kratoska, Paul H (2002), Southeast Asian Minorities in the Wartime Japanese Empire, Routledge., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7007-1488-9