பிரான்சிசு வைட் எல்லிசு

எல்லீசன் என்று தமிழ் ஒலி மரபுக்கேற்பத் தம்மை அழைத்துக் கொண்ட பிரான்சிசு வைட் எல்லிசு (Francis Whyte Ellis) (1777-1819) என்பார் 1810 ஆம் ஆண்டு முதல் 1819 ஆண்டு வரை சென்னை மாகாணத்தில் பிரித்தானிய அரசின் கீழ் பணியாற்றிய அதிகாரி ஆவார். 1796 ஆம் ஆண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியில் எழுத்தராகச் சேர்ந்த இவர் 1798 ஆம் ஆண்டில் துணைக் கீழ்நிலைச் செயலராகவும், 1801 ஆம் ஆண்டில் துணைச் செயலராகவும், 1802 ஆம் ஆண்டில் வருவாய்த்துறைச் செயலராகவும் படிப்படியாக உயர்ந்தார். 1806 ஆம் ஆண்டில் மசூலிப்பட்டினத்தில் நீதிவானாக நியமிக்கப்பட்டார். 1809 ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தின் நிலச்சுங்க அதிகாரியாகப் பதவி ஏற்றுக்கொண்ட இவர், 1810 ஆம் ஆண்டில் சென்னையின் கலெக்டர் ஆனார். ஒரு அரச அதிகாரி என்ற அளவில் இவர் சென்னை மாகாண மக்களுக்கு ஆற்றிய பணி ஒருபுறம் இருக்க, மொழியியல் துறையிலும் இவர் தென்னிந்திய மொழிகள் தொடர்பில் ஆற்றிய பணிகளும் நினைவு கூரத் தக்கவை. 1816 ஆம் ஆண்டிலேயே தென்னிந்திய மொழிகள் பிற இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டிருப்பதை உணர்ந்து, "தென்னிந்திய மொழிக் குடும்பம்" என்னும் கருத்தாக்கத்தை முதன் முதலில் வெளிப்படுத்தியவர் இவரேயாவார். "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்னும் புகழ் பெற்ற நூலைக் கால்டுவெல் எழுதுவதற்கு 40 ஆண்டுகள் முன்னரே இது நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடியும் ஆவார். பல தமிழ் நூல்களையும் கற்று அவற்றின் அடிப்படையில் திருக்குறளுக்கான ஒரு விளக்கவுரையையும் அவர் எழுதினார்.[1]

பிரான்சிசு வைட் எல்லிசு
பிறப்பு1777
இறப்பு1819
பணிமொழிபெயர்ப்பாளர்
வேலை வழங்குபவர்

தமிழ்ப் பற்று தொகு

இவர் தமிழைக் கற்று அம்மொழியில் கவிதை எழுதும் அளவுக்குப் புலமை பெற்றிருந்தார். இராமச்சந்திரக் கவிராயரிடம் இவர் தமிழ் கற்றதாகத் தெரிகிறது. சென்னை நகரில் ஏற்பட்ட குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்குவதற்காகக் கிணறுகளைப் பல இடங்களில் வெட்டுவித்த அவர், அவற்றுக்கருகில் தமிழில் கல்வெட்டுக்களையும் பொறிப்பித்தார்.[2] இக்கல்வெட்டுக்கள் தமிழ் பாடல்களாக அமைந்திருந்தன. இராயப்பேட்டையில் உள்ள அத்தகைய கல்வெட்டுப் பாடலொன்றில் இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்குறுப்பு என்று ஒரு நாட்டின் முக்கிய உறுப்பாக நீரைக் குறிப்பிடும் திருக்குறளும் மேற்கோளாக வந்துள்ளது.[3]

சென்னையின் நாணயசாலை இவரது பொறுப்பில் இருந்த காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்கள் இரண்டு திருவள்ளுவரின் உருவம் பொறித்து வெளியிடப்பட்டன. ஐராவதம் மகாதேவன் 1994 ஆம் ஆண்டில் இந்த நாணயங்களை அடையாளம் கண்டு அவைபற்றி எழுதியுள்ளார்.

தமிழ்ப்பணி தொகு

தமிழைக் கற்று அதனைப் பயன்படுத்தியது மட்டுமன்றி, அதன் மறுமலர்ச்சிக்கும் பெரிய அளவில் இவர் உதவியிருப்பதாகத் தெரிகிறது. 19 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தமிழ் மறுமலர்ச்சியின் ஊற்றுக்கண்ணாக "எல்லிசு" இருந்தார் என்று அயோத்திதாசப் பண்டிதர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவித் தமக்குக் கிடைத்த சுவடிகளை அச்சிட்டு வெளியிட்டார் என்றும் எல்லீசை அவர் புகழ்ந்துள்ளார். திருக்குறள், நாலடி நானூறு போன்ற நூல்கள் இவ்வாறு அச்சிடப்பட்டவற்றுள் சிலவாகும். இது தவிர திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததுடன், அதற்கான விரிவுரை ஒன்றையும் எழுதினார். தமிழின் யாப்பியலைப் பற்றியும் இவர் எழுதி வெளியாகாதிருந்த ஒரு நூலை அண்மையில் தாமசு டிரவுட்மன் இங்கிலாந்தில் கண்டுபிடித்துள்ளார்.

பிற பணிகள் தொகு

தென்னிந்திய மொழிகள் உள்ளிட்ட இந்திய மொழிகளை ஆங்கிலேய அதிகாரிகளுக்குப் பயிற்றுவிக்கும் நோக்கோடு, சென்னைக் கல்விச் சங்கம் என அழைக்கப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டைக் கல்லூரியை 1812 ஆம் ஆண்டில் இவர் நிறுவினார். எல்லிசின் மொழியியல் ஆய்வுகளுக்கு இக்கல்லூரியே களமாக அமைந்தது. பல நூல்களை இவர் எழுதிய போதும் தமது நாற்பது வயதுக்கு முன்னர் நூல்களை வெளியிடுவதில்லை என்று இருந்தாராம். ஆனால் அவரது 41 ஆவது வயதில் இவர் காலமானார்.

எல்லிசின் இறுதிக்காலம் தொகு

எல்லிசு நிறுவிய கல்லூரி தொடர்பில், 1814 ஆம் ஆண்டில் சென்னை மாகாண ஆளுனராகப் பதவியேற்ற எலியட்டுக்கும், கல்லூரிக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. கல்லூரி கூடிய அளவு மொழியியலில் கவனம் செலுத்துவதாகவும், அதிகாரிகள் மொழித்திறன் பெறுவதற்கு உதவவில்லை என்ற கருத்து நிலவியது. இதனால், கல்லூரிக்கு அரசாங்கத்தின் ஆதரவு குறைந்தது. கல்லூரியைக் காப்பாற்றுவதற்காக எல்லீசு இங்கிலாந்து சென்று அங்கு அதிகாரிகளுடன் பேச எண்ணியிருந்தார். ஆனால் பல காரணங்களால் அவரது பயணம் பல முறை தடைப்பட்டது. இக் காலத்தில் இவர் வயிற்று நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். 1818 ஆம் ஆண்டில் உடல்நலக் குறைவினால் மூன்றுமாதம் பணியிலிருந்து விடுப்புக் கோரியிருந்தார். இவரது விண்ணப்பத்தின் படி இவருக்கு வயிற்று நோயும் ஈரல் சீர்குலைவும் இருந்ததாகத் தெரிகிறது.

விடுப்பு எடுத்துக்கொண்டு ஆய்வுப் பணிகளுக்காக மதுரைக்கும் பின்னர் அங்கிருந்து இராமநாதபுரத்துக்கும் சென்றார். இராமநாதபுரத்தில் அவர் காலமானார். இவர் நோயினால் அன்றி மருந்துக்குப் பதிலாக நஞ்சை உட்கொண்டதாலேயே இறந்ததாக இவர் இறக்கும் தறுவாயில் எழுதிய கடிதங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

எல்லீஸ் சாலை தொகு

சென்னையில் அண்ணா சாலையும் வாலாஜாசாலையும் சந்திக்கும் புள்ளிக்கு அருகில் உள்ள சாலைக்கு எல்லீஸ் சாலை என பெயர்வைக்கப்பட்டது. இந்தச் சாலை உள்ள இந்தப் பகுதி எல்லீஸ்புரம் என்று அழைக்கப்படுகிறது. அண்மையில் சென்னையில் ஆங்கிலேயர்களின் பெயரிலான சாலைகளின் பெயரை மாற்ற சென்னை மாநகராட்சி முடிவெடுத்தது. இதற்காக 50 சாலைகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டன. அவற்றுள் எல்லீஸ் சாலையும் ஒன்று. பின்னர் எல்லீஸ் சாலையின் பெயர் மாற்றும் முடிவு கைவிடப்பட்டது.[4]

குறிப்புக்கள் தொகு

  1. தாமசு டிரவுட்மன், (தமிழாக்கம்) 2007, பக்.11
  2. எல்லீஸ்[தொடர்பிழந்த இணைப்பு]
  3. தாமசு டிரவுட்மன், (தமிழாக்கம்) 2007, பக்.12
  4. ஜெய் (23 செப்டம்பர் 2017). "ஆங்கிலேயத் தமிழறிஞரின் சாலை". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 23 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

உசாத்துணைகள் தொகு

  • தாமசு டிரவுட்மன், திராவிடச் சான்று (மொழிபெயர்ப்பு: இராம. சுந்தரம்), சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனமும் காலச்சுவடு பதிப்பகமும், சென்னை 2007.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிசு_வைட்_எல்லிசு&oldid=3601556" இலிருந்து மீள்விக்கப்பட்டது