பிரெனெல் விளக்கு
ஃபிரெனெல் விளக்கு (பிரெனெல் விளக்கு, Fresnel lantern) அல்லது சுருக்கமாக ஃபிரெனெல் என அழைக்கப்படுவது, கலை அரங்குகளில் ஒளியமைப்புக்குப் பயன்படும் ஒரு பொட்டொளி விளக்கு ஆகும். மேடையின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கு மட்டும் ஒளி கொடுப்பதற்காகப் பயன்படும் இவ்விளக்கில் ஃபிரெனெல் வில்லைகள் பொருத்தப்படுகின்றன. இவ்வில்லை, பின்னொளி, மேலொளித் தேவைகளுக்குப் பொருந்தக்கூடிய, சற்று விரிந்த மென்விளிம்பு கொண்ட ஒளிக்கற்றையை வழங்குகிறது.[1][2][3]
இவ்வில்லையைக் கண்டுபிடித்த அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் என்பவரின் பெயரைத் தழுவியே இதற்குப் பெயரிடப்பட்டது. வழமையான வில்லைகளைப் போல் அன்றி இதன் மேற்பரப்பு ஒரு மைய வட்டவடிவிலான படியமைப்புத் தோற்றம் கொண்டது. இவ்வடிவுரு வில்லையூடு செல்லும் ஒளியை முறித்து, ஃபிரெனெல் வில்லைகளுக்கே உரிய இயல்பான மென்னொளிக் கற்றைகளை வெளிவிடுகிறது. இதனால், ஒளிக்கற்றையின் விளிம்புப் பகுதிகளில் நடுப்பகுதியைக் காட்டிலும் குறைவான ஒளிச்செறிவு இல்லாமல், ஒளிக்கற்றை விழும் இடத்தின் எல்லாப் பகுதிகளும் சீரான ஒளிச்செறிவைக் கொண்டு அமைகின்றன. தளக்குவிவு வில்லைகளைப் பயன்படுத்திய முன்னைய விளக்குகளைக் காட்டிலும், ஃபிரெனல் விளக்குகளில் வெப்ப அதிகரிப்பும் குறைவாகவே காணப்படுகின்றது.
அமைப்பு
தொகுஅரங்க ஃபிரெனெல் விளக்குகள் பொதுவாக 8, 6 அல்லது 3 அங்குல விட்டம் கொண்ட ஃபிரெனெல் வில்லைகளைப் பயன்படுத்துகின்றன. இவற்றின் வலு 150 வாட் முதல் 2000 வாட் வரை வேறுபடும். ஃபிரெனெல் வில்லைகளை ஒளிமூலத்துக்கு மிக அருகிலேயே அமைக்க முடியும் என்பதாலும், அவற்றைச் செய்வதற்குக் குறைந்த செலவே ஆகும் என்பதாலும், ஃபிரெனெல் விளக்குகள் அளவில் சிறியனவாகவும், விலை குறைந்தவையாகவும் உள்ளன.
திரைப்படத் தயாரிப்பில் பயன்படும் ஒளியமைப்புக்களில், கூடிய எண்ணிக்கையான அளவுகளைக் கொண்ட வில்லைகள் பயன்படுவதுடன், பயன்படும் மின்விளக்குகளின் வலுக்களும் கூடிய எண்ணிக்கையில் உள்ளன. வில்லைகள் 2 முதல் 24 அங்குலங்கள் வரை அளவுகள் கொண்டனவாகவும், விளக்கின் வலுக்கள் 200 வாட் முதல் 20,000 வாட் வரை வேறுபடுவனவாகவும் உள்ளன.
ஃபிரெனெல்கள் கோளத் தெறிப்பிகளைப் பயன்படுத்துகின்றன. இத்தெறிப்பியின் குவியப் புள்ளியில் மின்குமிழின் இழை இருக்குமாறு அமைக்கப்படுகின்றது. தெறிப்பி, ஒளி வெளியீட்டை ஏறத்தாள இருமடங்கு ஆக்குகின்றது. மின்குமிழில் இருந்து முன்புறமாகச் செல்லும் ஒளி வில்லையினூடு நேரடியாகச் செல்ல, பின்புறம் செல்லும் ஒளியும் தெறிப்பியினால் தெறிக்கப்பட்டு முன்புறமாகச் செலுத்தப்படுகிறது. இதில், குமிழும், தெறிப்பியும் தனித்தனியாக அசைவது இல்லை. இவையிரண்டும் ஒரே கூறாக விளக்கின் கூட்டினுள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கூறே விளக்கினுள் முன்னும் பின்னும் அசைந்து ஒளியை வேண்டியவாறு குவியச் செய்கின்றது. இவ்விளக்கு மின்குமிழ் நிமிர்ந்த நிலையில் இருக்கும்படியே பொருத்தப்படுகின்றது. தலைகீழாகப் பொருத்துவது விளக்கின் பயன்படு காலத்தை வெகுவாகக் குறைத்துவிடும்.
ஃபிரெனெல் விளக்குகள் கூடிய செயற்றிறன் கொண்டவை அல்ல. தெறிப்பியின் அளவு. வில்லையின் அளவைவிடப் பெரிதாக இருப்பதில் பயனில்லை. எனவே, வில்லையூடு நேரடியாகவும், தெறிப்பில் தெறித்து வெளிச் செல்லும் ஒளியையும் விடப் பெருமளவு ஒளி விளக்குக் கூட்டினுள்ளேயே உறிஞ்சப்பட்டு வெப்பமாக வீணாகின்றது. குறிப்பாக, ஒளிக்கதிரின் விரிவைக் குறைப்பதற்காக தெறிப்பியையும், குமிழையும் பின்னே நகர்த்தும்போது கூடிய ஆற்றல் வீணாகும்.
பயன்பாடு
தொகுநாடக, நடன அரங்குகளில் ஃபிரெனெல்கள், நடுத்தர வீச்சுத் தூரங்களில் மேலொளி அல்லது பின்னொளி அமைப்புக்களுக்குப் பயன்படுகின்றது. சிறிய அரங்குகளில் முன்னொளியாகவும் பயன்படுத்தப்படுவது உண்டு. எனினும், நீள்வட்டத் தெறிப்பி விளக்குகளில் இருப்பது போல, ஒளி வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் வசதி இதிலே இல்லாதது ஒரு பாதகமான அம்சமாகும்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Chand, Tushar (1 May 2021). "Lighting for Cinema, Lighting Controls" (PDF). Dr. Shyama Prasad Mukherjee University. பார்க்கப்பட்ட நாள் 1 June 2022.
- ↑ Shelly, p.104
- ↑ Brain, Marshall. "How does a Fresnel Lens work?". HowStuffWorks. பார்க்கப்பட்ட நாள் 2006-12-12.