புன்செய் தானியங்கள்

பழந்தமிழர் பயிர் வகைகளை நன்செய், புன்செய் என்ற இரு பெரும் பிரிவுகளாக பிரித்து வைத்துள்ளனர். அவை இன்றளவும் வழக்கத்தில் உண்டு. பொதுவாக நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களுக்கு நன்செய் என்றும், மானாவரி அல்லது குறைந்த நீர் தேவையுள்ள பயிர்களுக்கு புன்செய் பயிர்கள் என்றும் பாகுபடுத்தியுள்ளனர். புன்செய் பயிர்கள் பொதுவாக இயற்கை மழையில் தங்கியிருப்பனவாக இருக்கும். இவ்வகைப் பயிர்ச்செய்கையானது ஓரளவு குறைவான ஈரலிப்புடன் செய்ய முடியுமாதலினால், உலர்நிலப் பயிர்ச்செய்கை எனப்படும்.

புன்செய் தானியங்கள் தொகு

 
சோளம்
 
கம்பு
 
பனி வரகு
 
வரகு
 
ராகி
 
சாமை
 
தினை
 
குதிரைவாலி
 
காடைக்கண்ணி

கீழ்கண்ட தானியங்களுக்குரிய பொதுவான தமிழ்ப்பெயர் புன்செய் தானியங்கள் ஆகும்.

- செந்தினை
- கருந்தினை
- பைந்தினை
- பெருந்தினை
- சிறுதினை
- பெருஞ்சாமை
- செஞ்சாமை
- செஞ்சோளம்
- கருஞ்சோளம் ( இருங்கு சோளம் )
- வெள்ளைச்சோளம்

உணவில் புன்செய் தானியங்கள் தொகு

கம்பு உருண்டை, உளுத்தங்களி, கேப்பைக் களி போன்றவை புன்செய் தானியங்களால் செய்யப்படும் சில உணவுகள். கம்பங்கூழ், வரகரிசிச் சோறு, கம்பு தோசை, தேன் கலந்த தினைமாவு போன்றவை முற்காலத்தில் தமிழர்களின் உணவுகளாக இருந்தன. ஆனால் தற்காலத்தில் சிறுதானியங்களைக் கொண்டு விதவிதமான உணவுப் பொருட்களை சமைக்கும் பழக்கம் குன்றி விட்டது. புஞ்சை தானியங்களுக்கு பஞ்சம் தீர்க்கும் பஞ்சை தானியம் என்று பெயருண்டு. நெல் அரிசியை 2 மாதம் சேமிக்கலாம். நெல்லை ஓராண்டு சேமிக்கலாம். ஆனால் புஞ்சை தானியங்களை 5 அல்லது 6 ஆண்டுகளுக்குச் சேமிக்கலாம். நெல் அரிசியை பயன்படுத்தும் போது, அதில் உள்ள உயிர் சத்துக்கள் பலவிதங்களில் நீக்கப்பட்டுவிடுகிறது. ஆனால், சிறுதானியங்களை பயன்படுத்தும் போது அதில் உள்ள உயிர் சத்துக்கள் காக்கப்படுகிறது.

உடல் நலத்தில் புன்செய் தானியங்கள் தொகு

சத்து நிறைந்த புன்செய் தானியங்கள் ஆறு மாதமான குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை யாவரும் உண்ண உகந்தவை. இத்தானியங்களில் இரும்பு, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்ற தனிமங்கள் மிகுந்திருக்கின்றன. புன்செய் தானியங்களால் ஆன உணவு குளுகோஸை சிறிது, சிறிதாக நீண்ட நேரத்துக்கு வெளியிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது[1]. க்ளுட்டன்[2] எனும் புரோட்டீன் மாவுச்சத்து இத்தானியங்களில் அறவே இல்லை. எனவே க்ளுட்டன் நிறைந்த நெல்லரிசி, கோதுமை போன்ற தானியங்களால் தயாரிக்கப்பட்ட உணவை உண்ணும்போது உண்டாகும் களைப்பு, அசிடிட்டி, உடல்பருமன், புற்று நோய், வயிற்றுப்போக்கு போன்றவை புன்செய் தானிய உணவை உண்ணும்போது ஏற்படுவதில்லை.

ராகி, கம்பு போன்ற தானியங்கள் குருதியில் உள்ள ட்ரைகிளிசிரைட்ஸ் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு இளைப்பைக் குறைக்க உதவுகின்றன[3]. உணவுச் செரிமானம் எளிதில் நடைபெறுகிறது.

சிறு தானியங்களில் உயிர்ச்சத்து ஒப்பீடு தொகு

ஒவ்வொரு 100 கிராம் தானியத்திலும் உள்ள சத்துகள் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

பயிர்/சத்துகள் புரதம் (கி) நார் (கி) தாது உப்புகள் (கி) இரும்பு (மி.கி) சுண்ணாம்பு (மி.கி)
கம்பு 10.6 1.3 2.3 16.9 38
கேழ்வரகு 7.3 3.6 2.7 3.9 344
தினை 12.3 8 3.3 2.8 31
பனிவரகு 12.5 2.2 1.9 0.8 14
வரகு 8.3 9 2.6 0.5 27
சாமை 7.7 7.6 1.5 9.3 17
குதிரைவாலி 11.2 10.1 4.4 15.2 11
நெல்லரிசி 6.8 0.2 0.6 0.7 10
கோதுமை 11.8 1.2 1.5 5.3 41

மதிய உணவுத் திட்டத்தில் புன்செய் தானியங்கள் தொகு

மதிய உணவுத் திட்ட சத்துணவை உண்மையிலேயே சத்தான உணவாக்க மத்திய அரசின் வேளாண் துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் தங்களுடைய மதிய உணவுத் திட்டத்தில் சிறுதானியங்களைச் சேர்க்க வேண்டும் என சுற்றறிக்கை மூலம் அறிவுருத்தியுள்ளது.

இந்தியாவில் புன்செய் பயிர் சாகுபடி தொகு

இந்தியாவின் மொத்த சாகுபடிப் பரப்பளவான 141.0 மில்லியன் ஹெக்டேரில் மானாவாரி சாகுபடியின் அளவு பரப்பளவு 44 சதவீதமான 85 மில்லியன் ஹெக்டேர் ஆகும். கடந்த 50 ஆண்டுகளில் பசுமைப் புரட்சி காலந்தொட்டு சிறுதானியங்கள் பயிரடப்படும் பரப்பளவு குறைந்து வருகிறது.

 
புன்செய் தானியங்கள் நீர்த்தேவை

புன்செய் தானிய சாகுபடியில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடமாகவும் கர்நாடக மாநிலம் இரண்டாவது இடமாகவும் உள்ளன. இந்தியாவிலேயே புன்செய் தானிய உணவு மகாராட்டிர கிராமங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமே மானாவாரி புன்செய் தானிய சாகுபடி விரிந்த அளவில் எஞ்சியுள்ளதுடன் அவ்வளவையும் சொந்த உணவு உபயோகத்துக்குப் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் தற்போது காணக் கிடைக்காத பல வகையான சாமை, குதிரை வாலி, தினை வகைகள், வரகு எல்லாவற்றையும் மராட்டிய மாநிலத்தில் பயன்பாட்டில் உள்ளன.

பயிர்ப் பருவம் தொகு

  • கார்/குருவை/சொர்னவரி/ஆடி பட்டம் (வைகாசி - ஆனி முதல் ஆவணி - புரட்டாசி வரை) (May June July - Aug Sep Oct) (3 மாதம்) (Kharif season)
  • சம்பா/தாளாடி/பிஷானம் (ஆவணி - புரட்டாசி முதல் தை - மாசி வரை) (Aug Sep Oct - Jan Feb Mar) (5 மாதம்) (Rabi season)

புன்செய் சாகுபடி முறை தொகு

பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள். வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அந்தந்தப்பட்டத்தில் அந்தந்தப் பயிர்தான் சாகுபடி செய்வார்கள். ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள், தவிரக் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலானவைற்றைச் சாகுபடி செய்வார்கள். மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கிட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்வார்கள். ஆடிப்பட்டத்தில் பாதி நிலத்தில் மானாவாரியாகச் சாமை விதைத்து கார்த்திகை, மார்கழி மாதங்களில் அறுவடை செய்யலாம். மீதிப் பாதி நிலத்தில் மாசி, பங்குனி மாதங்களில் சோளம் விதைத்து ஆனி மாதவாக்கில் அறுவடை செய்யலாம். மறு வருடம் சாகுபடி செய்யும்போது முந்தைய வருடம் சாமை விவசாயம் செய்த நிலத்தில் சோளமும், சோளம் விவசாயம் செய்த நிலத்தில் சாமையும்தான் சாகுபடி செய்வர். நிலத்தில் ஒரு பயிர் செய்தால் அந்தப் பயிரின் ஆயுளுக்குப் பின்னால் அவற்றின் கழிவுகளும் அவற்றில் அண்டி வாழ்ந்து வந்த நோய்க் கிருமிகளும், அடுத்து அதே பயிர் செய்யும்போது புதிதாகச் செய்யும் பயிரையும் பாதிக்க ஏதுவாகிறது. மாற்றுப் பயிர் செய்யும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகளும் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை. நோய்களும் நோய்க்கிருமிகளும் பயிருக்குப் பயிர் வேறுபடுகின்றன. அதனால் பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை. மாறாக கிருமிகளை அழிகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னால் வேறெரு பயிர் செய்தபின்னால் மீண்டும் பழைய பயிர் சாகுபடி செய்வதால் எந்தப் பாதிப்பும் ஏற்படுவது இல்லை. இடைக்காலத்தில் அவை பெரும்பாலும் அழிந்து விடுகின்றன.

வீரிய ரகங்கள் தொகு

கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் சிறுதானியங்கள் துறை கேழ்வரகு- 14, தினை- 7, சாமை-4, வரகு-3, பனி வரகு -5, சோளம்-28, கம்பு-9 என நிறைய ரக விதைகளை உருவாக்கி வெளியிட்டிருக்கிறது.

இவற்றையும் காணவும் தொகு

வெளி இணைப்புக்கள் தொகு

உசாத்துணைகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புன்செய்_தானியங்கள்&oldid=3449368" இருந்து மீள்விக்கப்பட்டது