புவனேஸ்வரி கோயில், வலஞ்சுழி

புவனேஸ்வரி கோயில், வலஞ்சுசி, தென்னிந்தியாவில் கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டாவில் உள்ள பழமையான கோயில்களில் ஒன்றாகும்.

கொடுங்கல்லூர் பகவதி

அமைவிடம்

தொகு

இக்கோயில் நகர மையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அச்சன்கோவில் [1] எனும் புனித நதியால் சூழப்பட்டுள்ளது. அச்சன்கோவில் மலைத்தொடர்களில் தோன்றும் ஆறானதுமூன்று பக்கங்களிலும் சுற்றி வருவதால் "வலஞ்சுழி" என்னும் பெயரைப் பெற்றது.[2] கடந்த 3,000 ஆண்டுகளாக ஆற்றின் போக்கின் காரணமாக, கோயிலுக்குச் சொந்தமான பெரும் நிலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. தற்போது கோயில் வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கப்படுகிறது. முன்பு இந்த பகுதி அடர்ந்த காடுகளின் இடையேஇருந்தது. அதன் எச்சங்களை சர்ப்பகாவு எனப்படுகின்ற புனித பாம்பு தோப்பில் இன்னும் காணமுடியும். சர்ப்பக்காவு பல்வேறு வகையான அரிய மருத்துவ மூலிகைகளின் தாயகமாக உள்ளது. இந்த ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக மணல் அள்ளுவதால், சர்ப்பக்காவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

பிற இடங்களைப் போலவே, 1096ஆம் ஆண்டின் பெரும்வெள்ளம் பத்தனம்திட்டாவிலும் பாதிப்பினை உண்டாக்கி, கோயிலுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. நாளடைவில், வெள்ளம் பெருமளவு வடிந்து சீரான பின்னர், கோயில் நிர்வாகத்தினர், கோயிலுக்கு அருகில் உள்ள நில உரிமையாளர்களின் தீவிர பங்களிப்புடன் சீரமைப்பு, பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனர். இக்கோயிலுக்குச் செல்வதற்கு வசதியாக ஒரு தடுப்பணை கட்டப்பட்டது.

இந்தக்கோயில் 1974ஆம் ஆண்டு வரை வெள்ளுவெட்டுவேலில் மடத்தைச் சேர்ந்த குடும்பத்தின் ஆதரவில் தொடர்ந்து இருந்துவந்தது. அவர்கள் பூசாரிகளாக இங்குபணியாற்றினார்கள். பின்னர், கோயில் நிர்வாகம் பத்தனம்திட்டா நகராட்சி, பிரமடம் மற்றும் மயிலாப்ரா பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 14 காராவின் மூத்த உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த 14 காரர்களிடமிருந்து இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு தேவசம் கவுன்சிலும், 14 நிர்வாகிகள் கொண்ட குழுவும் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்திய பார்லிமென்ட் முறையினை ஒட்டி நிர்வாகம் நடைபெற்றுவருகிறது.

புராணங்கள்

தொகு

புவனேஸ்வரி தேவியின் அவதாரமான கொடுங்கல்லூர் பகவதி கோயிலில் இருந்து பக்தர் ஒருவர் பூவை கொண்டு வந்ததாக புராணம் கூறுகிறது. அச்சன்கோயிலின் ஆறு மூன்று பக்கங்களிலிருந்தும் வளைந்து செல்லும் வலஞ்சுழியில் பூவை நிறுவ வேண்டும் என்று அந்த பக்தர் ஒரு தெய்வீகமான தூண்டுதலைப் பெற்றார். அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு, அங்கு புவனேஸ்வரி அம்மனை நிறுவுவதற்காக ஒரு கோயில் கட்டப்பட வேண்டும் என்று முடிவு செய்தனர். அந்த பக்தரும், அவருடைய அடுத்தடுத்த தலைமுறையினரும் கோயிலை கண்ணும் கருத்துமாகக் காத்துவந்தனர். கொடுங்கல்லூரில் இருந்து கொண்டு வரப்பட்ட வாளும் சிலம்பும் கோயிலில் காட்சியளிக்கின்றன. கொடுங்கல்லூர் பகவதி கோயிலும் வலஞ்சுழி கோயிலும் பல அம்சங்களில் ஒரே மாதிரியானவையாக உள்ளன. ஒரு காலத்தில் இங்கு மிருக பலி இருந்ததாக நம்பப்படுகிறது.

திருவிழாக்கள்

தொகு

மலையாள நாட்காட்டி மாதமான கும்பத்தில் பரணி நடைபெறுகின்ற ருத்ரபொங்கலா தெய்வத்திற்கான முக்கிய பிரசாதமாகும். மகரபரணி திருவிழாவின் போது நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு திரண்டு வருகின்றனர். அப்பிண்டியை பக்தர்கள் சம்பிரதாயமாக எடுத்துச் சென்றால் அனைத்து தீராத நோய்களும், துக்கங்களும் தீரும் என்று நம்புகின்றனர்.

மலையாள நாட்காட்டி மாதமான மீனத்தில் நடைபெறும் படையணி, [3] மிகுந்த பக்தியுடனும் ஆர்வத்துடனும் இக்கோயிலில் கொண்டாடப்படுகிறது. பிறந்த குழந்தைகளை தொட்டில் கட்டி எடுத்து வந்து அம்மன் முன் வைக்கிறார்கள். இந்தச் சடங்கானது இங்கு மிகவும் புகழ்பெற்றதோடு மட்டுமன்றி, கேரளாவின் அனைத்துப் பகுதியிலிருந்தும், அதற்கு அப்பாலும் பக்தர்களை ஈர்க்கிறது. மலையாள நாட்காட்டி மாதமான மகரத்தில், தேவியின் பிறந்த நாள் பரணி நாளில் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் தொடக்கத்தைக் குறிக்கும் கொடியேற்றம் மகரத்தின் புருருட்டாதி நாளில் ஆரம்பித்து, பத்தாம் நாளில் ஆராட்டுடன் நிறைவடைகிறது. புவனேஸ்வரி தேவியின் பிறந்தநாளுடன் இணைந்த திருவிழாவான ஐந்தாம் நாள் மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. அந்நாளில் நிறைய கொண்டாட்டமாகக் காணப்படும்.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Valamchuzy Temple". valamchuzhytemple.org. பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
  2. "Valamchuzy Temple, Pathanamthitta - Timings, History, Pooja & Aarti schedule,". Trawell.in. பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.
  3. "Valamchuzhy Padayani of Valamchuzhy Bhagavathy Temple". Kerala Toruism - Padayani (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-20.

வெளி இணைப்புகள்

தொகு