ஆதியன்

தமிழ்நாடு, கேளரத்தில் வாழும் மக்களினத்தவர்
(பூம் பூம் மாட்டுக்கார மக்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பூம் பூம் மாட்டுக்கார மக்கள் (Boom Boom Mattukaran) என்னும் ஆதியன் என்னும் மக்கள் தமிழ்நாடு மற்றும் கேரளத்தில் ஆங்காங்கு வாழும் பழங்குடி மக்களினத்தவராவர்.[1] இவர்கள் பாரம்பரியமாக பூம்பூம் மாடு என்னும் அலங்கரிக்கப்பட்ட மாட்டைக் கொண்டு ஊர் ஊராக சுற்றி மக்களிடம் குறிசொல்லி வேடிக்கைக் காட்டி வாழ்கின்றனர். இவர்கள் ஆந்திரப் பிரதேசத்தில் தோன்றி, தமிழகத்தில் குடியேறியவர்களாக கருதப்படுகிறது. இவர்கள் தெலுங்கு கலந்த தமிழை பேசுகின்றனர்.[2] குறிப்பாக இவர்கள் கிருஷ்ணகிரி, காவிரிப்பூம்பட்டினம், கோயம்புத்தூர், சங்கரன் கோவில், திருச்செந்தூர், இராமேஸ்வரம், ராமநாதபுரம், மதுரை, திருவாரூர், செஞ்சி, வேதாரண்யம், வேலூர், தஞ்சாவூர், பூண்டி, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பூதலூர், தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், விருதுநகர், மேட்டூர், வாணியம்பாடி, சிவகாசி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், வாலாஜா, திருவள்ளூர், தர்மபுரி, ஓசூர் ஆகிய தமிழ்நாட்டிலுள்ள பல இடங்களில் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று வரை பூம் பூம் மாடான குலத்தொழிலையே செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 4 லட்சம் பேர் வாழ்கின்றனர்.[3] இந்த இன மக்கள் தங்கள் சாதியை ஆதியன் என்று கூறுகின்றனர்.[4] கிருட்டிணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஒன்றியம் சவுளூர் கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட இந்த இன மக்கள் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்குடும்ப ஆண்கள், பெண்களின் முக்கிய தொழில் மாடுகளை பழக்கி வித்தைக் காட்டி பிழைப்பது ஆகும். பெண்கள் அதிகாலையில் தங்கள் சிறு வயது குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஊசி, மணிகள், வளையல், தோடு, திருஷ்டி கயிறு, தாயத்து போன்றவற்றை ஊர் ஊராக சென்று விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களின் பள்ளி வயது குழந்தைகள் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் பல திறமைகள் உள்ளவர்களாக காணப்படுகின்றனர். திறமையான பேச்சு, நடனம், வித்தைகள் காட்டுதல் போன்ற பல திறன்கள் கொண்டவர்களாக உள்ளனர். இருப்பினும் இம்மக்களிடையே போதிய விழிப்புணர்வு இன்மையால் சிறு வயது திருமணம் அதிகளவில் இன்றளவிலும் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

பூம்பூம் மாடும் மாட்டுக்காரரும்
பூம் பூம் மாட்டுக்காரர் நாடோடி

மேற்கோள்கள் தொகு

  1. "Now no longer nomadic they are". The Hindu. Sep 15, 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/now-no-longer-nomadic-they-are/article3899947.ece. 
  2. "Nomadic tribes set to turn dairy farmers". Times of India. Feb 7, 2012. http://m.timesofindia.com/city/madurai/Nomadic-tribes-set-to-turn-dairy-farmers/articleshow/11785500.cms. 
  3. "ஆதியன் என்னும் பழங்குடியினரின் 60 ஆண்டுகால வேதனையும் சோதனையும்". கட்டுரை. சிறகு. 1 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2017.
  4. "'பூம் பூம்' மாடுகள் ஊர்வலம்; நிதி முறைகேடு குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்". செய்தி. தின மலர். 5 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 26 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதியன்&oldid=3682930" இலிருந்து மீள்விக்கப்பட்டது