பொபிலி அரசர்

ராமகிருஷ்ண ரங்கா ராவ் (தெலுங்கு: రామకృష్ణ రంగారావు) என்னும் இயற்பெயர் கொண்ட பொபிலி அரசர் (பிப்ரவரி 20, 1901 – மார்ச் 10, 1978) 1930 களில் நீதிக்கட்சியின் தலைவரும், சென்னை மாகாணத்தின் பிரதமரும்[1] (முதல்வர்) ஆவார். பின்னாளில் இந்திய அரசியலமைப்பு சட்ட ஆணையத்தின் உறுப்பினராகவும், ஆந்திர சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். தற்கால ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் பொப்பிலி சமஸ்தானத்தின் மன்னராக இருந்தவர்.

ராஜா ஸ்ரீ ராவு ஸ்வேதாசலபதி
ராமகிருஷ்ண ரங்கா ராவ்
ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் (பொபிலி தொகுதி)
பதவியில்
1967–1972
Premier காசு பிரம்மானந்த ரெட்டி
முன்னவர் எல். தெண்டு
பின்வந்தவர் வெங்கட கிருஷ்ண ராவ்
இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினர்
பதவியில்
1946–1951
சென்னை மாகாண பிரதமர்
பதவியில்
ஆகஸ்ட் 24, 1936 – ஏப்ரல் 1, 1937
ஆளுநர் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு (தற்காலிகம்), ஜான் எர்ஸ்கைன்
முன்னவர் பி. டி. ராஜன்
பின்வந்தவர் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
பதவியில்
நவம்பர் 5, 1932 – ஏப்ரல் 4, 1936
ஆளுநர் ஜான் எர்ஸ்கைன்
முன்னவர் முனுசாமி நாயுடு
பின்வந்தவர் பி. டி. ராஜன்
பிரிட்சிஷ் இந்தியாவின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்
பதவியில்
1925–1927
பொபிலி அரசர்
பதவியில்
1921 – 1978
(1948 இலிருந்து பெயரளவில் மட்டும்)
முன்னவர் வெங்கட குமார கிருஷணா
பின்வந்தவர் வெங்கட கோபால கிருஷ்ண ரங்கா ராவ்
தனிநபர் தகவல்
பிறப்பு பெப்ரவரி 20, 1901(1901-02-20)
பொபிலி, சென்னை மாகாணம் , இந்தியா இந்தியா
இறப்பு மார்ச்சு 10, 1978(1978-03-10) (அகவை 77)
பொபிலி, சென்னை மாகாணம்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி நீதிக்கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) லட்சுமி சுபத்ராயம்மா
தொழில் வழக்கறிஞர்
சமயம் இந்து

பிறப்பும் படிப்பும் தொகு

தற்போதைய ஆந்திர மாநிலத்தில் 1901 -இல் ராமகிருஷ்ண ரங்கா ராவ் பொபிலி அரசகுலத்தில் பிறந்தார். அவரது தந்தை வெங்கட கிருஷ்ண ரங்கா ராவ் பொபிலியின் ஜமீந்தாராக இருந்தவர். ராமகிருஷ்ண ரங்கா ராவுக்கு ஐரோப்பிய ஆசிரியர்களைக் கொண்டு வீட்டிலேயே கல்வி அளிக்கப் பட்டது. 1921 இல் அவரது தந்தை மறைந்த பின் பொபிலியின் பதின்மூன்றாவது அரசராக இவர் அறிவிக்கப்பட்டார்.[2][3]

அரசியல் வாழ்க்கை தொகு

ரங்கா ராவ் 1925 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையில் (கவுன்சில் ஆஃப் ஸ்டேட்) உறுப்பினரானார்; 27 வரை அப்பதவியில் நீடித்தார். 1930 இல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் விசாகப்பட்டினம் தொகுதியில் நீதிக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். (இக்காலகட்டத்தில் தான் அவர் ஆந்திர பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றினார்) 1931 இல் லண்டனில் நடை பெற்ற இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் இந்திய நிலச்சுவான்தார்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். அதே ஆண்டு நீதிக்கட்சியில் ஜமீந்தார்கள் கோஷ்டியின் தலைவரானார். நீதிக்கட்சித் தலைவரும், சென்னை முதல்வருமான முனுசாமி நாயுடுக்கு எதிராகக் கட்சிக்குள் போர்க் கொடி தூக்கினார். அமைச்சர் பதவிகிட்டாத ஜமீந்தார்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர். 1932 அக்டோபரில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டில் பெரும் குழப்பத்திற்கிடையே ரங்கா ராவ், கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். கட்சித் தலைமையிலிருந்து வெளியேற்றப்பட்ட முனுசாமி நாயுடு, ரங்கா ராவ் அடுத்து தன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவார் என்ற அச்சத்தில் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அவருக்குப் பதில் நவம்பர் 5, 1932 இல், ரங்கா ராவ் சென்னை மாகாண முதல்வரானார்.[2][3]

சென்னை மாகாண முதல்வர் தொகு

1937 வரை முதல்வராக நீடித்த ரங்கா ராவின் ஆட்சிக் காலத்தில், நீதிக்கட்சி உட்கட்சிப் பூசல்களால் நலிந்து மக்களின் ஆதரவையும் இழந்து அக்காலத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் இந்திய தேசிய காங்கிரசிடம் தோல்வியடைந்தது. 1930 களில் உலகைப் பீடித்த பெரும் பொருளியல் வீழ்ச்சியினால் சென்னை மாகாண மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். பொபிலி அரசர் தனது ஆதரவாளர்களான ஜமீன்தார்களை திருப்தி படுத்த எடுத்த பல முடிவுகள் சாதாரண பொதுமக்களுக்குப் பெரும் கஷ்டங்களை ஏற்படுத்தின. சிறு விவசாயிகள் கடன் நெருக்கடியிலிருந்து விடுதலை பெற கடன் தள்ளுபடி சட்டம் கொண்டு வர ஆங்கில அரசு முயன்றபோது ரங்கா ராவ் அதனைத் தடுத்துவிட்டார். அதே போல் நிலவரியைக் குறைக்கக் கோரி காங்கிரசு விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்திய போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினார். உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் தலையிட்டு அவற்றின் சுதந்திரத்தைப் பறித்தார். பொருளாதார நெருக்கடியின் காரணமாக மற்ற மாகாண அரசுகள் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில், தன் ஆதரவாளர்களைத் திருப்திப் படுத்த அமைச்சரவையை விரிவு படுத்த முயன்றார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தோர் அண்டைய மத்திய மாகாணத்தின் அமைச்சர்களைக் காட்டிலும் இரு மடங்கு சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தனர். நீதிக்கட்சியின் மீது மக்கள் கடும் கோபம் கொண்டனர். 1934 இல் நடை பெற்ற தேர்தலில் அக்கட்சியை தோற்கடித்தனர். ஆனால் வெற்றி பெற்ற காங்கிரசு இரட்டை ஆட்சிமுறையின் கீழ் பதவியேற்க மறுத்து விட்டதால் ரங்கா ராவே மீண்டும் சிறுபான்மை அரசமைத்தார். நீதிக்கட்சியின் தொடர் தோல்விகளால் அக்கட்சியின் பல தலைவர்களும், தொண்டர்களும் கட்சியிலிருந்து விலகிக் காங்கிரசில் இணைந்தனர். ஊழலும், நிர்வாகக் கோளாறுகளும் மலிந்த ரங்கா ராவின் ஆட்சியை நீதிக் கட்சியின் நிரந்தர ஆதரவாளர்களான ஐரோப்பியர் கூட வெறுக்க ஆரம்பித்தனர். ரங்கா ராவின் மீது பொது மக்களுக்கிருந்த கோபத்தைப் பற்றிச் செய்தி வெளியிட்ட “ஜமீன் ரயாட்” இதழ், “கிராமங்களில் கிழவிகள் கூடப் பொபிலி அரசு எப்பொழுது ஒழியும்” என்று ஏங்குவதாகக் கூறியது. இவ்வாறு அனைத்து தரப்பினரின் எதிர்ப்பையின் சம்பாதித்த நீதிக் கட்சி, 1937 இல் மாநில சுயாட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்திற்கு நடத்தப்பட்ட முதல் சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. 215 தொகுதிகளில் 21 தொகுதிகளில் மட்டுமே வென்றது. காங்கிரசு பெரும்பானமை பெற்று ராஜகோபாலாச்சாரி சென்னையின் முதல்வரானார். தோல்வியினால் நீதிக்கட்சி நிலை குலைந்து போனது. ரங்கா ராவ் ஐரோப்பிய நாடுகளுக்கு நெடும் பயணமாகச் சென்று விட்டார்.[4][5][6][7][8][9]

ரங்கா ராவின் பதவிக்காலத்தில் சென்னை நகரத்தில் மீண்டும் மேயர் பதவி ஏற்படுத்தப்பட்டது. 1688 முதல் 1801 வரை பழக்கத்திலிருந்த மேயர் ஆட்சி முறையை ஜனவரி 17, 1933 இல் நகர முனிசிபல் சட்டத்தின் மூலம் ரங்காராவ் மீண்டும் கொண்டு வந்தார். நீதிக்கட்சியின் ஸ்ரீராமுலு நாயுடு சென்னையின் மேயரானார். அவருக்குப் பின் மற்றொரு நீதிக்கட்சித் தலைவரான முத்தைய்யா செட்டியார் மேயராகப் பணியாற்றினார்.[10] ரங்காராவின் நிர்வாகம் ஜமீன்தார் ஆதரவு அரசாகவே பரவலாகக் கருதப்பட்டாலும், அவரது ஆட்சிகாலத்தில் சிறு விவசாயிகளுக்கு ஆதரவாகச் சில நிகழ்வுகளும் நடந்தன. ரஙகா ராவின் அரசு பண்ணைத்தோட்டங்கள் நிலச் சட்டம், 1908 ஐ திருத்தியதன் மூலம் சிறு விவசாயிகளின் சில உரிமைகளைப் பாதுகாத்தது; இடைத்தரகர்களான ”இனாம்தார்”களின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்க முயற்சியும் செய்தது. ரங்கா ராவின் ஆட்சி காலத்தில் (1936) தான் சென்னை மாகாணத்தின் கஞ்சம் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஒரிசா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.[3]

பிற்கால வாழ்க்கை தொகு

ரங்கா ராவ் 1946-51 இல் இந்தியாவின் அரசியல்அமைப்பு சட்டத்தை இயற்றிய இந்திய அரசியலமைப்பு நிர்ணயமன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றினார்.[11] பின்னர் பல ஆண்டுகள் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். 1967 ஆம் ஆண்டு ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வென்று 1972 வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.[12] ரங்கா ராவ் குதிரைப் பந்தயம், போலோ போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர்.[3]

மரணம் தொகு

ரங்கா ராவ், மார்ச் 10, 1978 இல் மரணமடைந்தார்.[13] அவருக்குப் பின் அவரது மகன் வெங்கடகோபால கிருஷ்ண ரங்கா ராவ் பொபிலியின் அரசரானார்.[2]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

 1. "நடராசன் புகழுடம்பு எய்திய கதை" (in ta). https://www.hindutamil.in/news/opinion/columns/762614-anti-hindi-struggle.html. 
 2. 2.0 2.1 2.2 "Indian Princely States - Bobbili Zamindari". Genealogical Gleanings (Henry Soszynski, University of Queensland). http://uqconnect.net/~zzhsoszy/ips/b/bobbili.html#2. 
 3. 3.0 3.1 3.2 3.3 B. M. G. (October 7, 2002). "A people's king". தி இந்து இம் மூலத்தில் இருந்து ஜனவரி 8, 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090108101050/http://www.hinduonnet.com/thehindu/mp/2002/10/07/stories/2002100701390200.htm. 
 4. S. Krishnaswamy (1989). The role of Madras Legislature in the freedom struggle, 1861-1947. People's Pub. House (New Delhi). பக். 215–219. 
 5. Saroja Sundararajan (1989). March to freedom in Madras Presidency, 1916-1947. Madras : Lalitha Publications. பக். 347–350. 
 6. Rajaraman, P. (1988). The Justice Party: a historical perspective, 1916-37. Poompozhil Publishers. பக். 212–220. http://books.google.com/books?id=GGMmAAAAMAAJ. 
 7. Manikumar, K. A. (2003). A colonial economy in the Great Depression, Madras (1929-1937). Orient Blackswan. பக். 184–198. ISBN 8125024565, ISBN 9788125024569. http://books.google.com/books?id=8eWkmxJRnoAC&pg=PA185. 
 8. Kannan, R. (2010). Anna: The life and times of C. N. Annadurai. Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780670083282. 
 9. மலர்மன்னன் (2009). திமுக உருவானது ஏன்?. கிழக்கு பதிப்பகம. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788184932652. 
 10. S. Muthiah (July 10, 2007). "Showing the way". தி இந்து. http://www.thehindujobs.com/thehindu/mp/2002/07/10/stories/2002071000070300.htm. 
 11. LIST OF MEMBERS OF THE CONSTITUENT ASSEMBLY (AS IN NOVEMBER, 1949)
 12. "1967 Andhra Pradesh Assembly elections - A statistical report". Election Commission of India. http://www.eci.gov.in/StatisticalReports/SE_1967/Statistical%20Report%20Andhra%20Pradesh%201967.pdf. 
 13. Eminent Indians who was Who, 1900-1980, Also Annual Diary of Events. Durga Das Pvt. Ltd.,. 1985. பக். 50. 

மேலும் படிக்க தொகு

 • Bobbili: Being a biography of Sri Varu Sir Ramakrishna Swatchelapathi Ranga Rao, the 13th Raja of Bobbili, who was Chief Minister of Madras (1932-36), Nilkan Perumal, The Topical Book Co: 1960.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொபிலி_அரசர்&oldid=3565567" இருந்து மீள்விக்கப்பட்டது