பொம்மை கல்யாணம்

ஒரு தமிழ்த் திரைப்படம்

பொம்மை கல்யாணம் 1958 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ் திரைப்படமாகும். ஆர். எம். கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜமுனா, மைனாவதி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1]

பொம்மை கல்யாணம்
இயக்கம்ஆர். எம். கிருஷ்ணசுவாமி
தயாரிப்புஎம். ராதாகிருஷ்ணன், ஆர். எம். கிருஷ்ணசுவாமி
கதைஎஸ். டி. சுந்தரம்
திரைக்கதைஆத்ரேயா
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஜமுனா
மைனாவதி
சித்தூர் வி. நாகையா
எஸ். வி. ரங்கராவ்
பி. சாந்தகுமாரி
ஒளிப்பதிவுசி. ஏ. மதுசூதன்
படத்தொகுப்புஆர். எம். வேணுகோபால்
கலையகம்அருணா ஃபிலிம்ஸ்
விநியோகம்அருணா ஃபிலிம்ஸ்
வெளியீடு3 மே 1958
ஓட்டம்131 நிமி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரைக்கதை

தொகு

கண்ணன் (சிவாஜி) ஒரு விடலைப் பையன். செல்வாக்கான வழக்கறிஞர் வரதராஜன் (நாகையா), தங்கம் (சாந்தகுமாரி) ஆகியோரின் மகன். ஒரு நாள் கால் பந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது ராதாவைச் சந்திக்கிறான். ராதா, அந்த ஊரிலுள்ள சுதந்திரப் போராட்ட வீரரான வீரமுத்து (ரங்காராவ்), மரகதம் (ருஷ்யேந்திரமணி) ஆகியோரின் மகள். முதல் சந்திப்பிலேயே இருவரும் காதல் வயப்படுகின்றனர்.

வரதராஜன் ஒரு நிதானமான மனிதர். ஆனால் அவரது மனைவி தங்கம் பேராசை பிடித்தவள். தங்கத்தின் சகோதரன் சோணாச்சலம் (ஃபிரெண்ட் ராமசாமி), மனைவி பெருந்தேவி (சுந்தரிபாய்) ஆகியோருக்கு கண்ணம்மா (மைனாவதி) என்ற மகள் இருக்கிறாள். இந்த கண்ணம்மாவை கண்ணனுக்கு மணமுடித்து வைக்க தங்கம் விரும்புகிறாள்.

கண்ணம்மா ஒரு அப்பாவிப் பெண். அவளைத் திருமணம் செய்ய பெருந்தேவியின் தம்பி மன்னார் (காக்கா ராதாகிருஷ்ணன்) விரும்புகிறான்.

வரதராஜனுக்கு வீரமுத்துவின் எளிமையான குடும்பத்தைப் பிடித்து விட்டது. அவர் கண்ணன், ராதா திருமணத்துக்கு சம்மதிக்கிறார். ஆனால் தங்கம் அதனை எதிர்ப்பதால் வீரமுத்து ஒரு பெருந்தொகை சீதனமாகத் தருவார் என அவளிடம் வரதராஜன் பொய் சொல்லுகிறார். திருமணம் நடக்கிறது.

தன் மகள் கண்ணம்மா மணமகள் அல்ல என அறிந்த பெருந்தேவி தங்கத்துடன் சண்டை போடுகிறாள். தங்கம் சீதனம் கேட்டு ராதாவை பிறந்த வீட்டுக்கு அனுப்புகிறாள். ஆனால் கண்ணன் ராதாவை முழுமையாக ஏற்றுக் கொள்ளுகிறான்.

சோணாசலம் அந்த வீட்டை விட்டு வெளியேற முற்படுகிறார். ஆனால் பெருந்தேவி அங்கே தங்கியிருந்து தங்கத்துக்கும் ராதாவுக்கும் இடையில் விரோதத்தை ஏற்படுத்தத் திட்டமிடுகிறாள். ஒவ்வொரு விடயத்திலும் தங்கம் ராதா மீது குற்றஞ்சுமத்துகிறாள். ஆனால் ராதா பொறுமையாக எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறாள்.

வரதராஜன் சாகிறார். கண்ணன் ஊருக்குப் போகிறான். கண்ணன் ராதா வாழ்க்கை ஒரு தடையை சந்திக்கிறது. தங்கமும் பெருந்தேவியும் சேர்ந்து ராதாவை வீட்டை விட்டுத் துரத்துகிறார்கள். வீரமுத்து ராதாவை அழைத்துக் கொண்டு போகிறார்.

கண்ணன் திரும்பி வருகிறான். அவனிடம் ராதா தங்களிடம் சொல்லாமல் தன் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டதாக தங்கமும் பெருந்தேவியும் அவனிடம் பொய் சொல்கின்றனர். அன்றிரவு கண்ணனைச் சந்திக்க ராதா வருகிறாள். ஆனால் தங்கம் அவளை உள்ளே விட மறுக்கிறாள். நடந்ததை கண்ணம்மா அப்பாவித்தனமாக கண்ணனிடம் சொல்லி விடுகிறாள். கண்ணன் ராதாவைக் கூட்டிச் செல்ல வீரமுத்துவின் வீட்டிற்குச் செல்கிறான். ஆனால் தங்கம் இருக்கும் வரை ராதா அந்த வீட்டிற்கு வர மாட்டாள் என வீரமுத்து சொல்கிறார்.

இதைப் பயன்படுத்தி கண்ணம்மாவைத் திருமணம் செய்யும்படி கண்ணனை தங்கமும் பெருந்தேவியும் வற்புறுத்துகின்றனர். இதைக் கேட்டுக்கொண்டிருந்த சோணாச்சலமும் மன்னாரும் கண்ணம்மாவைக் கடத்திச் செல்ல முயற்சி செய்கின்றனர். ஆனால் முயற்சியில் தோல்வியடைந்தனர்.

தங்கம் ராதாவுக்குக் கடிதம் எழுதுகிறாள். கண்ணன் மறுமணம் செய்து கொள்ளப்போவதாகவும் அவன் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம் எனவும் கடிதத்தில் எழுதுகிறாள்.

நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நாளில் கண்ணன் மிகக் கலவரமடைந்து முதல் மாடி பால்கனியிலிருந்து தவறிக் கீழே விழுகிறான். இதைக் கேள்விப்பட்ட ராதா தடுத்த வீரமுத்துவைச் சமாதானப்படுத்தி கண்ணனை வந்து பார்க்கிறாள். தன் தாய் கொடுமைப் படுத்தினாலும் இனிமேல் அவள் தன்னை விட்டுப் போகக் கூடாது என கண்ணன் ராதாவிடம் சொல்ல அவளும் சம்மதிக்கிறாள்.

தங்கமும் பெருந்தேவியும் வீரமுத்துவிடம் சீதனத்தைக் கொடுக்கும் படி அவரைத் தொந்தரவு செய்ய அவர் சீதனம் கொடுப்பதற்காகத் தனது வீட்டை விற்கிறார்.

தங்கம் ராதாவை வீட்டை விட்டுத் துரத்த முடிந்தவரை முயற்சி செய்கிறாள். ஆவேசம் கொள்கிறாள். ராதா ஒரு அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொள்கிறாள். தங்கம் ஆவேசத்தோடு கதவைத் திறக்க முயல, கதவு உடைந்து அவள் மேல் விழுகிறது.

இதற்கிடையில் வீரமுத்து சீதனப் பொருட்களை எடுத்துக் கொண்டு தெருவில் ஊர்வலமாக வருகிறார். ஊரார் தங்கத்தைப் பழிக்கின்றனர். கண்ணன் வீட்டை வந்தடைகிறார்கள்.

இதையெல்லாம் பார்த்த பெருந்தேவியும் கண்ணம்மாவும் வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர்.

தங்கம் தன் தவறை உணர்கிறாள். மரணப்படுக்கையிலிருந்த அவள் தன்னை மன்னிக்கும்படி கண்ணனிடமும், ராதாவிடமும், வீரமுத்துவிடமும் வேண்டியபின் இறந்து விடுகிறாள். கண்ணனும் ராதாவும் மீண்டும் இணைகின்றனர்.

நடிகர்கள்

தொகு
நடிகர் வேடம்
சிவாஜி கணேசன் கண்ணன்
ஜமுனா ராதா
மைனாவதி கண்ணம்மா
சித்தூர் வி. நாகையா வரதராஜன்
எஸ். வி. ரங்கராவ் வீரமுத்து
பி. சாந்தகுமாரி தங்கம்
ருஷ்யேந்திரமணி மரகதம்
பிரெண்ட் ராமசாமி சோணாச்சலம்
காக்கா ராதாகிருஷ்ணன் மன்னார்
எம். எஸ். சுந்தரிபாய் பெருந்தேவி

தயாரிப்புக் குழு

தொகு
  • தயாரிப்பாளர்: எம். ராதாகிருஷ்ணன், ஆர். எம். கிருஷ்ணசாமி
  • தயாரிப்பு நிறுவனம்: அருணா ஃபிலிம்ஸ்
  • இயக்குநர்: ஆர். எம். கிருஷ்ணசுவாமி
  • திரைக்கதை: ஆத்ரேயா
  • கதை வசனம்: எஸ். டி. சுந்தரம்
  • ஒளிப்பதிவு: சி. ஏ. மதுசூதன்
  • படத்தொகுப்பு: ஆர். எம். வேணுகோபால்
  • கலை: ராகவன்
  • நடனப்பயிற்சி: பி. கிருஷ்ணமூர்த்தி
  • பாடல்கள் ஒலிப்பதிவு: எம். ராதாகிருஷ்ணன்

பாடல்கள்

தொகு

படத்திற்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன்[2] பாடல்களை இயற்றியோர்உடுமலை நாராயண கவி, ஏ. மருதகாசி ஆகியோர். பின்னணி பாடியவர்கள்: ஏ. எம். ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், ஜிக்கி, பி. சுசீலா, ஏ. பி. கோமளா, டி. வி. ரத்தினம் ஆகியோர்.

எண். பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் கால அளவு (நி:செக்)
1 ஆசை வைச்சேன் சீர்காழி கோவிந்தராஜன் & டி. வி. ரத்தினம் 03:27
2 அன்பே நீ அங்கே ஏ. எம். ராஜா &ஜிக்கி ஏ. மருதகாசி
3 இதுவோ நம் கதி ஜிக்கி 02:53
4 இன்பமே பொங்குமே ஏ. எம். ராஜா &ஜிக்கி உடுமலை நாராயண கவி 03:31
5 கல்யாணம் கல்யாணம் ஜிக்கி & ஏ. பி. கோமளா ஏ. மருதகாசி 02:56
6 ராஜாதி ராஜன் சீர்காழி கோவிந்தராஜன்
7 வசந்த காலம் ஜிக்கி உடுமலை நாராயண கவி 03:00
8 நில்லு நில்லு மேகமே பி. சுசீலா

மேற்கோள்கள்

தொகு
  1. "Bommai Kalyanam". spicyonion. பார்க்கப்பட்ட நாள் 2016-10-15.
  2. "Bommai Kalyanam Songs". gaana. Archived from the original on 2015-04-03. பார்க்கப்பட்ட நாள் 2016-10-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொம்மை_கல்யாணம்&oldid=3959099" இலிருந்து மீள்விக்கப்பட்டது