பி. கிருஷ்ணமூர்த்தி

இந்திய திரைப்பட கலை இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர்

பி. கிருஷ்ணமூர்த்தி (P. Krishnamoorthy, 8 செப்டம்பர் 1943 - 13 திசம்பர் 2020) என்பவர் ஒரு இந்திய திரைப்பட கலை இயக்குநர், தயாரிப்பு வடிவமைப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக தென்னிந்தியத் திரைப்படத்துறையில் பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, கன்னடம், தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 55 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.[1] இவர் ஐந்து தேசிய திரைப்பட விருதுகளை வென்றவர் அவை சிறந்த கலை இயக்கத்திற்கான மூன்று விருதுகள், சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான இரண்டு விருதுகள் ஆகும். மேலும் இவர் ஐந்து கேரள மாநில திரைப்பட விருதுகள், நான்கு தமிழக அரசு திரைப்பட விருதுகள் போன்றவற்றைப் பெற்றவர். ஐந்து முறை தேசிய விருதுகளையும் வென்றவர். 13 திசம்பர் 2020 அன்று சென்னையில் மூப்பின் காரணமான நோய்களால் இறந்தார்.[2]

பி. கிருஷ்ணமூர்த்தி
பிறப்பு(1943-09-08)8 செப்டம்பர் 1943
தமிழ்நாடு, பூம்புகார்
இறப்பு13 திசம்பர் 2020(2020-12-13) (அகவை 77)
தமிழ்நாடு, சென்னை
தேசியம்இந்தியர்
கல்விசென்னை அரசு நுண்கலைக் கல்லூரியில் பட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னை ஓவியக் கல்லூரி (1980–1985)
பணிஓவியர், கலை இயக்குநர், தயாரிப்பு வடிவமைப்பாளர், ஆடைகலன் வடிவமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1965–2020
விருதுகள்சிறந்த தயாரிப்பு வடிவமைப்பிற்கான தேசிய திரைப்பட விருது
சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான தேசிய திரைப்பட விருது
சிறந்த கலை இயக்குநருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது
சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது
சிறந்த கலை இயக்குநருக்கான கேரள மாநில திரைப்பட விருது

வாழ்க்கை

தொகு

தமிழ்நாட்டின் பூம்புகாரைச் சேர்ந்த பி. கிருஷ்ணமூர்த்தி சென்னை அரசு நுண்கலைக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[3] ஒரு ஓவியராக தனது தொழிலைத் தொடங்கிய இவர் ஜி. வி. ஐயர் மூலம் திரைப்படத் துறையில் இறங்கினார். இவர் முதன்முதலில் ஐயரை 1968 இல் சந்தித்தார். ஐயர் அப்போது ஹம்சா கீத்தே என்ற கன்னடத் திரைப்படத்தை உருவாக்கவிருந்தார். கலை இயக்கத்தில் முன் அனுபவம் இல்லாவிட்டாலும் கிருஷ்ணமூர்த்தி உடனடியாக அப்படத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டார். இந்த படம் 1975 இல் வெளியானது என்றாலும் இவர் கவனம் பெறாமலே இருந்தார்.[4] இருப்பினும், பி. வி. கராந்த் மற்றும் பன்சி கவுல் ஆகியோரின் நாடகங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.[1]

அடுத்தடுத்த ஆண்டுகளில், கிருஷ்ணமூர்த்தி முக்கியமாக ஐயரின் படங்களான ஆதி சங்கராச்சாரியா (1983), மாதவச்சார்யா(1986), ராமானுஜாச்சார்யா (1989) போன்ற படங்களில் தொடர்ந்து பணியாற்றினார். 1983 ஆம் ஆண்டில் ஸ்ரீதர் ராஜனின் கண் சிவந்தால் மண் சிவக்கும் மூலம் தமிழகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்தாலும், இவர் தனது வாழ்க்கையில் ஒரு குறுகிய கட்டத்தில் தமிழ் படங்களில் பணியாற்றவில்லை.[4] 1987ஆம் ஆண்டில், மாதவச்சார்யா படத்துக்காக தனது முதல் தேசிய திரைப்பட விருதை பெற்றார். இந்த அங்கீகாரமானது லெனின் ராஜேந்திரனின் சுவாதி திருநாள் (1987) படத்தின் மூலம் மலையாளத் திரைப்படத்துறைக்குள் நுழைய இவருக்கு உதவியது. அதைத் தொடர்ந்து, மலையாளத்தில் வைசாலி (1988), ஒரு வடக்கன் வீரகாத (1989), பெருந்தச்சன் (1991) உள்ளிட்ட 15 படங்களில் தொடர்ந்து பணியாற்றினார். ஓரு வடக்கன் வீரகத படத்தில் கலை இயக்குநராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியதற்காக இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றார்.[5] 1980 களின் பிற்பகுதியிலும் 1990 களின் முற்பகுதியிலும் மலையாள திரைத்துறையுடனான இவரது ஈடுபாடு இவருக்கு சிறந்த கலை இயக்குனருக்கான ஐந்து கேரள மாநில திரைப்பட விருதுகளைப் பெற்றுத்தந்தது .

1991 ஆம் ஆண்டில், கிருஷ்ணமூர்த்தி பாரதிராஜாவின் நாடோடித் தென்றல் படத்தின் வழியாக தமிழ் திரைத்துறைக்கு மீண்டும் வந்தார். இதைத் தொடர்ந்து பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள் (1992).[4] அடுத்தடுத்த ஆண்டுகளில், சுஹாசினி மணிரத்னம் இயக்குநராக அறிமுகமான இந்திரா (1996), சங்கம் (1999), பாரதி (2001) உள்ளிட்ட பல தமிழ் படங்களில் பணியாற்றினார். பாரதி படம் இவருக்கு சிறந்த கலை இயக்கம் மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு என இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை பெற்றுத்தந்தது.[1] இவரது பிற தமிழ்ப் படங்களான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி (2006), நான் கடவுள் (2009), ராமானுஜன் (2014) போன்ற படங்கள் அடங்கும், இதில் இம்சை அரசன் படத்திற்காக இவர் மாநில விருதை பெற்றார்.

2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, கிருஷ்ணமூர்த்தி தமிழகத்தின் மாமல்லபுரத்தில் வசித்து வந்தார்.[6]

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "48th National Film Awards: 2001" (PDF). Directorate of Film Festivals. pp. 62–63. பார்க்கப்பட்ட நாள் 3 June 2015.
  2. "National Award winning art director P Krishnamoorthy passes away at 77". The News Minute (in ஆங்கிலம்). 2020-12-14. பார்க்கப்பட்ட நாள் 2020-12-14.
  3. "34th National Film Awards, 1986" (PDF). Directorate of Film Festivals. p. 38. பார்க்கப்பட்ட நாள் 3 June 2015.
  4. 4.0 4.1 4.2 அய்யனார், பவுத்த (8 April 2012). "யதார்த்தமான கலை இயக்கத்தைப் புரிந்துகொள்ளும் தன்மை தமிழ்த்திரைப்பட உலகில் உல்லை..." Dina Mani (in Tamil). பார்க்கப்பட்ட நாள் 3 June 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "37th National Film Festival, 1990". Directorate of Film Festivals. pp. 54–56. Archived from the original on 5 May 2014. பார்க்கப்பட்ட நாள் 9 June 2015.
  6. S, Annamalai (11 June 2012). "A writer's passion for a new genre". தி இந்து. http://www.thehindu.com/news/cities/Madurai/a-writers-passion-for-a-new-genre/article3514476.ece. பார்த்த நாள்: 3 June 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கிருஷ்ணமூர்த்தி&oldid=4175157" இலிருந்து மீள்விக்கப்பட்டது