பொருட்காட்சி
பொருட்காட்சி அல்லது கண்காட்சி (Exhibition) என்பது பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகின்ற பொருட்களை மக்கள் எளிதில் வந்து பார்க்கத் தகுந்த வகையில் ஓர் இடத்தில் ஒழுங்கான, கவர்ச்சிகரமான முறையில் அமைத்துக் காணச் செய்வதாகும். நடைமுறையில், கண்காட்சிகள் பொதுவாக அருங்காட்சியகம், கலையரங்கம், பூங்கா, நூலகம், பொருட்காட்சி அரங்கம், பன்னாட்டரங்கம் போன்ற பண்பாடு அல்லது கல்வி அமைப்பிற்குள் நடக்கும் நிகழ்வுகள் ஆகும். நவீனக் கண்காட்சிகள் பாதுகாப்பு, கல்வி மற்றும் செயல்முறை விளக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆரம்பகாலக் கண்காட்சிகள் பொதுமக்களின் ஆர்வத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. புகைப்படம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு, ஒரு பொருளின் கண்காட்சி பெரும் கூட்டத்தை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருந்தன.[1]
நோக்கம்
தொகுமக்கள் பல புதிய பொருட்களைக் கண்டுகளித்துச் செல்ல, தத்தம் தொழில் திறமையைக் காட்டிக் கொள்ள, வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்ள இத்தகைய பொருட்காட்சிகள் அமைக்கப்படும். வியாபாரம் காரணமாக நடத்தப்பெறும் பொருட்காட்சிகள் இன்று பெருகியுள்ளன. இத்தகைய பொருட்காட்சியை சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம் போன்ற பல நகரங்களில் அரசாங்கமே நடத்துகிறது. ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி காட்சி நடத்தும் முறையும் தோன்றி, இப்பொழுது விரிவடைந்துள்ளது. இம்முறையில் நடத்தப் பெறுபவை ஜவுளிக் கண்காட்சி,[2] புத்தகக் கண்காட்சி[3] முதலியவையாகும்.
அமைப்பு
தொகுபொருட்காட்சி சாலை, நகரின் ஒரு புறத்தே அல்லது நடுவே அகன்ற இடத்தில் தக்க பாதுகாப்போடு அமைக்கப்படும். அவ்வாறு அமைக்கப்படுகின்ற பொருட்காட்சி சாலை மின்சார விளக்குகளால் அலங்கரிக்கப்படும். பொருட்காட்சி சாலையினுள்ளே செல்வதற்கு நுழைவுக்கட்டணம் உண்டு. அங்குப் பலவகையான கடைகள் வியாபாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு அமைக்கப்பட்டிருக்கும். பல சினிமா படக் காட்சிகளும் நடைபெறும். ஐந்தாண்டுத் திட்டங்களில் உருவாகும் செயல்களைப் படங்கள் வாயிலாகவும், மாதிரிப்படிகளின் மூலமாகவும் அங்கு அதிகாரிகள் மக்களுக்குக் காட்டி விளக்குவார்கள். புத்தம் புதிய விவசாயக் கருவிகள், பொறுக்கு விதைகள், எரு வகைகள் முதலியவற்றை, வேளாண்மைத் துறை அலுவலர்கள் மக்களுக்குக் காட்டி விளக்கிக் கூறி, அவற்றை வாங்கச் செய்வார்கள். ஒவ்வொரு கடையின் சிறப்பைப் பற்றியும், பொருட்களின் சிறப்பைப் பற்றியும் ஒலிபரப்புவர். அன்றாட நிகழ்ச்சிகள் பற்றியும் ஒலிபரப்பப்படும். பொருட்காட்சி சாலையில் இசை, நடனம், நாடகம், பேசும் படக்காட்சி முதலியவை சிறப்பு நிகழ்ச்சிகளாக அன்றாடம் நடைபெறும். நோய்ப் பரவும் முறை, அவற்றைத் தடுக்கும் முறை, குடும்பக் கட்டுப்பாடு முதலியவற்றைச் சுகாதார அதிகாரிகள் படம் மூலமாகவும் மக்களுக்கு விளக்கிக் கூறுவார்கள். பொருட்காட்சி சாலை காலையிலும், மாலையிலும் குறுப்பிட்ட நாட்களில் கால அளவுடன் நடைபெறும்.
நன்மைகள்
தொகுபொருட்காட்சியினால் உண்டாகும் நன்மைகள் மிகப் பலவாகும். பலவிடங்களில் உற்பத்தியாகும் பொருட்கள் ஓர் இடத்திலேயே கண்டுகளிக்கலாம். புதிய கண்டுபிடிப்புகளையும், புதிய பொருட்களையும் பார்த்து மகிழலாம். குறைந்த விலைக்குப் பொருட்களை வாங்கியும் கொள்ளலாம். மக்களுடைய, தொழிலாளர்களுடைய திறமையைப் பொருட்களைக் காண்பதன் மூலம் அறியலாம். நாட்டின் முன்னேற்றத்தையும், தொழில்களின் வளர்ச்சியையும் நன்கு அறியலாம். பொருட்காட்சி சாலையில் பங்கு கொள்ளும் பல்வகைக் கடைகளுக்கும், பிற நிலையங்களுக்கும் தக்க ஆதரவு தந்து உதவுவதோடு, அவற்றில் சிறந்து விளங்கும் கடைகளுக்கு அரசாங்கம் நற்சான்றிதழும் பொற்பதக்கமும் அளித்து ஊக்குவிக்கும். இவ்வாறு செய்வதால், பலரும் போட்டி மனப்பான்மையுடனும் உற்சாகத்துடனும் பொருள் தயாரிப்பிலும் விற்பனையிலும் கடையமைப்பிலும் நன்கு செயல்படுவார்கள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Mondello, Bob (24 November 2008). "A History Of Museums, 'The Memory Of Mankind'". NPR இம் மூலத்தில் இருந்து 29 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029072918/http://www.npr.org/templates/story/story.php?storyId=97377145.
- ↑ https://www.vikatan.com/business/companies/germany-textile-fair-69-karur-textile-manufacturing-companies
- ↑ https://www.dinamalar.com/news/tamil-nadu-news/news/1057892
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Exhibitions தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.