மன்னார்கோயில் வேதநாராயணர் கோயில்

மன்னார்கோயில் வேதநாராயணர் கோயில் என்பது தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், மன்னார்கோயில் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு பெருமாள் கோயிலாகும்.[1] இது அம்பாசமுத்திரத்தில் இருந்து வடமேற்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது.

மன்னார்கோயில் வேதநாராயணர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருநெல்வேலி
அமைவிடம்:மன்னார்கோயில், அம்பாசமுத்திரம் வட்டம்
சட்டமன்றத் தொகுதி:அம்பாசமுத்திரம்
மக்களவைத் தொகுதி:திருநெல்வேலி
கோயில் தகவல்
மூலவர்:வேதநாராயணர்
தாயார்:வேதவல்லி
சிறப்புத் திருவிழாக்கள்:சித்திரையில் தேரோட்டம், தைமாதம் பூப்பலக்கில் ஆழ்வார் புறப்பாடு, மாசிமாதம் தெப்போற்சவம்
உற்சவர்:அழகய மன்னர்

தலச்சிறப்பு

தொகு

குலசேகர ஆழ்வார் தன் வாழ்வின் இறுதிக் காலத்தை இங்குதான் கழித்தார் என்று கூறப்படுகிறது.[2]

தொன்மம்

தொகு

பிருகு முனிவரின் மனைவி கியாதி என்பவள் அசுரர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறாள். இதனால் கோபமுற்ற நாராயணன் சக்ராயுதத்தால் கியாதியைச் சேதிக்கிறான். மனைவியை இழந்த பிருகு கோபங்கொண்டு, 'நான் மனைவியை இழந்து தவிப்பது போல் இந்தப் பரந்தாமனும் மனைவியை இழந்து தவிக்கட்டும்' என்று சாபமிடுகிறார். கோபம் தெளிந்த பின், பரந்தாமனைச் சபித்துவிட்டோமே என்று வருந்தி, தவம் கிடக்கிறார். ஆனால் பரந்தாமனோ, 'மகரிஷியின் வாக்கும் பொய்க்கக்கூடாது' என்று பின்னர் இராமனாக அவதரித்து சீதையைப் பிரிந்து துயர் உறுகிறார் இராவண வதம் முடித்துத் திரும்புகின்ற போது, பிருகு வேண்டிக் கொண்டபடி, அவருக்குச் சேவை சாதிக்கிறார். பிருகுவும் அந்த வேத நாராயணனைப் பொதிய மலைச் சாரலிலே இந்த இடத்திலே பிரதிட்டை செய்கிறார். தாமும் தம் கொள்ளுப் பேரனுமான மார்க்கண்டேயனுடன் அத்தலத்தில் தங்கி, வேதம் ஓதிக் கொண்டு வாழ்கிறார். அதனாலே வேத நாராயன் சந்நிதியில் பிருகுவம் மார்க்கண்டரும் இடம் பெற்றிருக்கின்றனர்.[2]

வரலாறு

தொகு

பொ.ஆ. 1021 இல் சேர மன்னன் இராசசிம்மன் என்பவர் சோழர் கட்டடக்கலையில் கற்றளியாக இக்கோயிலைக் கட்டினார். சோழமன்னனுடன் இருந்த நட்பின் அடிப்படையில் கோயிலுக்கு ராஜேந்திர விண்ணகர் என்று பெயர் சூட்டினார். இக்கோயில் கருவறையில் உள்ள மூலவர் பிருகு முனிவராலும், மார்கண்டேய மகரிசியாலும் மூலிகைக் கலவையால் உருவாக்கபட்டனர் என்று எனக்கருதப்படுகிறது. இதனால் கருவறையில் இந்த இரு முனிவர்களுக்கும் வணங்கிய நிலையில் சிலைகள் காணப்படுகின்றன. மூலவர் தைலக்காப்பால் செய்யப்பட்டவர் என்பதால் அவருக்கு தைலக்ககாப்பு அபிடேகம் மட்டுமே தொன்று தொட்டு செய்யப்படுகிறது. பொ.ஆ. 1558 இல் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் விசுவநாத குறடு என்னும் உற்சவர் மண்டபம் கட்டப்பட்டு இராசகோபால சுவாமி, ஆண்டாள், கருடாழ்வார் ஆகிய உற்சவத் திருமேனிகள் உருவாக்கபட்டன. இந்த உற்சவருக்கு அழகிய மன்னர் என்ற சிறப்புப் பெயர் உண்டு.

பொ.ஆ.1209 ஆம் ஆண்டு சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக் காலத்தில் சேர நாட்டைச் சேர்ந்த வாசுதேவன் கேசவன் என்கிற செண்டலங்காரதாசர் என்பவர் இக்கோயிலின் வடக்குச் சுற்றில் குலசேகர ஆழ்வாருக்கு தனிச் சந்நிதியைக் கட்டினார்.[3]

கோயில் அமைப்பு

தொகு

இந்தக் கோயில் வாயிலில் ஒரு பெரிய மண்டபமானது பந்தல் மண்டபம் என்று அழைக்கபடுகிறது. இம்மண்டபத்தில் முத்துகிருஷண நாயக்கருடைய சிலையும் அவனுடைய தளவாய் ராமப்பய்யனுடைய சிலையும் இருக்கின்றன. பாண்டியர்கள் சின்னமாக மீன்கள் மண்டப முகட்டில் காணப்படுகின்றன. ஆதலால் நாயக்க மன்னர்கள் ஆட்சியில் ஒரு பாண்டியன் இதைக் கட்டியிருக்கிறான் என்று கருதப்படுகிறது.

இந்த மண்டபத்தை அடுத்தே கோயிலின் பிரதான வாயில் உள்ளது. அந்த வாயிலை ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரம் அணி செய்கிறது. இதனை அடுத்தது ஒரு பெரிய மண்டபம், இம்மண்டபத்தில் குமார கிருஷ்னப்ப நாயக்கர் சிலை இருப்பதால் அவரே இம் மண்பம் கட்டியிருக்க வேண்டும் எனப்படுகிறது. இங்கேயே செண்டலங்கார மாமுனிகள், பராங்குசர் முதவியோரது சிலைகள் இருக்கின்றன. மற்ற மண்டபங்களையும் கடந்து அந்தாரளம் சென்றால் அதை அடுத்த கருவறையில் மூலவரான வேத நாராயணர் உள்ளார். இவருக்கு இரு பக்கத்திலும் சிறீதேவியும் பூதேவியும் நிற்கிறார்கள். வேதநாராயணனும் நின்ற கோலத்திலேயே சேவை சாதிக்கிறார். பக்கத்திலேயே பிருகு மகரிசியும் மார்க்கண்டேயரும் இருக்கிறார்கள்.

வேதநாராயணனும், வேதவல்லித் தாயாரும் புவனவல்லித் தாயாரும் உற்சவ மூர்த்திகளாக அமர்ந்திருக்கின்றனர். இத்தாயார்களுக்குத் தனிக் கோயில்கள் இருக்கின்றன. அந்த மண்டபத்திலே குலசேகரரது திரு ஆராதனை மூர்த்தியான இராமன் சீதை இலட்சுமண சமேதனாக எழுந்தருளியிருக்கிறான். இன்னும் இங்கேயே காட்டுமன்னார், கண்ணன், சக்கரத் தாழ்வார், மற்ற ஆழ்வார்கள், ராமானுஜர். மணவாள மாமுனிகள் எல்லோரும் இருக்கின்றனர். இந்த மண்டபத்திலிருந்து வேத நாராயணனைச் சுற்றி ஒரு பிரதக்ஷிணம் இருக்கிறது. அதனை அடைத்து வைத்திருக்கின்றனர். இதற்கு அடுத்த மண்டபமே மகாமண்டபம். இத்தலத்தில் இதனைக் குலசேகரன் மண்டபம் என்று அழைக்கின்றனர். இதில் ஓர் உள் மண்டபமும், வேதிகையும் இருக்கின்றன. இந்த வேதிகையை விசுவநாதன் பீடம் என்கின்றனர். இந்த வேதிகையில் ராஜகோபாலன். ஆண்டாள், கருடன் எல்லோரும் எழுந்தருளியிருக்கின்றனர். இந்த ராஜகோபாலன் பக்கத்திலே குலசேகராழ்வார் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார்.[2]

இதற்கு வெளியே உள்ள கிளிக்குறடும் மண்டபமும் மணிமண்டபம் என்று பெயர் பெறும். இக்குறட்டிலிருந்து தென்பக்கத்துப் படிகள் வழியாக மாடிக்கு ஏறிச் சென்றால் அங்கு பரமபதநாதன் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார். இவரைச் சுற்றியுள்ள பிரதட்சிணமே யானை முடுக்கு என்று சொல்லப்படுகிறது. அதன்பின் அந்த மண்டபத்தின் கீழ்ப்புறமுள்ள படியாக மேலும் ஏறிச் சென்றால் அரங்கநாதன் போல் பள்ளிக்கொண்ட பெருமானைக் காணலாம். இப்படி, வேத நாராயணனாக நின்று, இருந்து கிடந்த கோலத்தில் எல்லாம் சேவை சாதிக்கிறான். இந்தப் பள்ளிக்கொண்ட பெருமானைச் சுற்றியுள்ள பிரதட்சிணத்தைப் பூனை முடுக்கு என்கின்றனர், இனி படிகளின் வழியாகக் கீழே இறங்கி வந்து வடபக்கத்துக்குச் சென்றால் அங்கு புவனவல்லித் தாயாரைக் கண்டு வணங்கலாம். அங்கேயே விஷ்வக்சேனரையும் தரிசிக்கலாம். அதன்பின் அங்குள்ள சின்னக் கோபுர வாயில் வழியாகக் கொடி மண்டபத்துக்கு வந்தால் வடக்கு வெளிட்ட பிராகாரத்தில் குலசேசுராழ்வார் சந்நிதிக்கு வரலாம். இவருக்குத் தனிக்கோயில், கொடிமரம், தேர் எல்லாம் ஏற்படுத்தபடுள்ளன.[2]

விழாக்கள்

தொகு

இங்கே தைமாதம் திருவாதிரை நாளில் குலசேகர ஆழ்வாருக்கு திருத்தேரோட்டமும், மாசி புனர்பூச நாளில் கோயில் தெப்பக் குளத்தில் அவருக்கு தெப்போற்சவமும் நடைபெறுகின்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. http://templesinsouthindia.com/templedetails.php?templeId=1854
  2. 2.0 2.1 2.2 2.3 தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான் (2001). "வேங்கடம் முதல் குமரி வரை 4". நூல். கலைஞன் பதிப்பகம். pp. 182–186. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "மூன்று கோலங்களில் அருளும் அழகு மன்னார்!". 2023-10-19. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)