மலாக்கா போர்த்துகீசிய கிராமம்
மலாக்கா போர்த்துகீசிய கிராமம் அல்லது செயின்ட் ஜோன் கிராமம் (போர்த்துகீசியம்: Aldeia de São João; மலாய்:Kampung Portuguese Melaka; Kampung St. John; ஆங்கிலம்:Malacca Portuguese Settlement; Saint John's Village; சீனம்:葡萄牙村) என்பது மலேசியா, மலாக்கா, மத்திய மலாக்கா மாவட்டத்தின் உஜோங் பாசிர் கிராமத்தில் உள்ள போர்த்துகீசியர் கிராமம் ஆகும்.
மலாக்கா போர்த்துகீசிய கிராமம் Malacca Portuguese Settlement Kampung Portuguese Melaka Aldeia de São João | |
---|---|
ஆள்கூறுகள்: 02°11′09″N 102°15′57″E / 2.18583°N 102.26583°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | மலாக்கா |
மாவட்டம் | மத்திய மலாக்கா |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசியாவின் அஞ்சல் குறியீடுகள் | 75050 |
இந்தக் கிராமம் கிறித்தாங் மக்களின் (Kristang People) குடியிருப்புப் பகுதியாகச் செயல்படுகிறது. மலாக்கா போர்த்துகீசிய மக்களை கிறித்தாங் மக்கள் என்று மலாக்காவில் அழைக்கிறார்கள். கிறித்தாங் மக்கள் என்பவர்கள் போர்த்துகீசியர் மற்றும் மலாய் பாரம்பரியக் கலப்பு கொண்ட ஒரு மலேசிய இனக்குழு ஆகும். 16 முதல் 17-ஆம் நூற்றாண்டு வரையிலான மலாக்கா போர்த்துகீசிய ஆட்சி காலத்திலிருந்து இந்த இனக்குழு இயங்கி வருகிறது.
பொது
தொகு1933-ஆம் ஆண்டில், மலாக்கா கடற்கரைப் பகுதியில் 11 எக்டேர் சதுப்பு நிலம் வாங்கப்பட்டது. மலேசிய முழுவதும் சிதறிக் கிடந்த கிறித்தாங் மக்கள், அவர்களின் மதம், மொழி, கலாசாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க ஒரு குடியேற்றத்தை உருவாக்குவதே, இந்தக் கிராமத்தை அமைப்பதின் முதன்மையான நோக்கம். அந்தச் சதுப்பு நிலம் சுத்தப்படுத்தப்பட்டு அத்தாப்பு கூரைகள் கொண்ட. 10 மர வீடுகள் கட்டப்பட்டன.[1]
அந்தக் கிராமத்திற்கு செயின்ட் ஜோன் கிராமம் என்று பெயரிடப்பட்டது. முதலில் இது ஓர் எளிய மீன்பிடி கிராமமாக இருந்தது. விரைவில் அது மலாக்காவின் பிற பகுதிகளிலிருந்து கிறித்தாங் மக்களை ஈர்த்தது. இப்போது மலாக்காவின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. அத்துடன் தற்போது அங்கு குடியேறிய கிறித்தாங் மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்ந்துள்ளது.[2]
செயிண்ட் பீட்டர் திருவிழா
தொகுஉலகெங்கிலும் உள்ள இதர போர்த்துகீசிய மொழி பேசும் சமூகங்களைப் போலவே, இந்த மலாக்கா போர்த்துகீசியக் குடியேற்றமும் ஆண்டுதோறும் சூன் திருவிழாவை நடத்துகிறது. அந்த விழா சூன் 23 அன்று திருமுழுக்கு யோவான் (Festa de São João) விழாவுடன் தொடங்குகிறது. சூன் 29 அன்று செயிண்ட் பீட்டரின் (Festa de São Pedro) விழாவுடன் திருவிழா நிறைவு காண்கிறது.[1]
இந்த விழாவில் மலேசியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 100,000 பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர். திருவிழாவின் போது கிறித்தாங் நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்கலாம்; மற்றும் வண்ணமயமான ஆடைகளில் நடனக் கலைஞர்கள் பிரான்யு இசையின் (Branyu Music) தாளத்தில் நடனம் ஆடுவதையும் பார்க்கலாம். இந்த விழாவில் உள்ளூர் மீனவர்களின் படகுகளுக்கு ஆசி வழங்குவது ஒரு முக்கிய நிகழ்வாகும். விழாவுக்காக படகுகள் சிறப்பாக அலங்கரிக்கப்படுவது வழக்கம்.[2]
ஆசியாவின் கடைசி போர்த்துகீசிய சமூகம்
தொகுமலாக்காவில் உள்ள இந்தப் போர்த்துகீசியப் குடியேற்றம், மலேசியாவின் செழுமையான கலாசாரப் பாரம்பரியத்திற்கு ஒரு வாழும் சான்றாக அமைகின்றது. இந்தப் போர்த்துகீசிய சமூகமே ஆசியாவில் எஞ்சியிருக்கும் கடைசி போர்த்துகீசிய சமூகமாகும். இந்தச் சமூகம், அழகான கிராமப் பாரம்பரியங்கள், உணவுகள் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றின் தனித்துவமான கலவையை வழங்கி வருகிறது.[2][3]
போர்த்துகீசிய கிராமத்தின் காட்சியகம்
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Portuguese Settlement Melaka - The Portuguese Settlement Melaka, or Kampung Portugis, is located a couple of kilometres outside of Melaka city centre in an area known as Ujong Pasir". Malaysia Traveller. பார்க்கப்பட்ட நாள் 13 March 2024.
- ↑ 2.0 2.1 2.2 "Portuguese Settlement - TourismMelaka.com". Tourism Melaka. பார்க்கப்பட்ட நாள் 13 March 2024.
- ↑ "Life in Melaka's Portuguese settlement". MalaysiaNow (in ஆங்கிலம்). 18 November 2021. பார்க்கப்பட்ட நாள் 13 March 2024.