வேதநாயகம் பிள்ளை
மாயூரம் வேதநாயகம் பிள்ளை (Mayavaram Vedanayagam Pillai, (11 அக்டோபர் 1826 - 21 சூலை 1889) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர் ஆவார். இவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் (1879), புதினம் தமிழில் வெளியான முதல் புதினம் ஆகும்.
வேதநாயகம் பிள்ளை | |
---|---|
வேதநாயகம் பிள்ளை | |
பிறப்பு | 11 அக்டோபர் 1826 இனாம் குளத்தூர், திருச்சினாப்பள்ளி மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 21 சூலை 1889 | (அகவை 62)
தொழில் | கவிஞர், எழுத்தாளர், தமிழறிஞர் |
துணைவர் |
|
குடும்பத்தினர் | விஜய் ஆண்டனி (கொள்ளுப்பேரன்) |
வாழ்க்கை
தொகுகத்தோலிக்க சமயத்தைத் சேர்ந்த ஆரோக்கிய மரி, சவரிமுத்துப் பிள்ளை இணையருக்கு[1][2] திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள குளத்தூரில் 11 அக்டோபர் 1826 அன்று வேதநாயகம் பிறந்தார்.
தொடக்கக் கல்வியை அவரது ஊரில் இருந்த திண்ணைப் பள்ளியில் கற்றார் வேதநாயகம். திருச்சிராப்பள்ளியில் இருந்த தென் மாநில வழக்கு மன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக வேலை பார்த்து வந்த தியாகராச பிள்ளை என்பாரிடம் ஆங்கிலம், தமிழ் மொழிக்கல்வியை பயின்றார். சிறு வயதிலேயே திருமணங்கள், விருந்தினர் வருகை போன்ற நிகழ்வுகளின் போது நகைச்சுவையான கவிதைகளை எழுதினார்.[3]
மக்கள் பணி
தொகுஇவர் 22ஆம் அகவையில் (1848இல்) திருச்சி நீதிமன்றத்தில் ஆவணக் காப்பாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிய பின் 1856-இல் தரங்கம்பாடியில் முனிசீஃப் வேலையில் அமர்ந்தார். மாயவரம் மாவட்ட முனிசீப்பாக (மாவட்ட நீதிபதி) 13 ஆண்டுகள் பணி புரிந்தமையால் இவரை மாயவரம் வேதநாயகம் பிள்ளை என்றே அழைக்கலாயினர். மாயவரத்தின் நகர் மன்ற தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
1876-78 சென்னை மாகாணப் பெரும் பஞ்சத்தின்போது பெரும் நிலக்கிழார்கள். பெருஞ் செல்வர்கள், சைவ மடத்துத்தலைவர்கள் ஆகியோர் அளித்த உதவிகளுடன் தன் சேமிப்பையும் சேர்த்து, மாயூரத்திலும், சுற்றுப்புறச்சிற்றூர்களிலும் கஞ்சித் தொட்டிகள் வைத்து நடத்தினார். கத்தோலிக்க சமய உலகத் தலைவராகிய பாப்பரசர் மூலமாக ஐரோப்பிய நாட்டு உதவியையும் பெற்று உதவினார். அம்மூன்றாண்டுகளும் முழு நேரப் பணியாகச் செய்தார். இதனைப் போற்றும் விதமாகக் கோபாலகிருஷ்ண பாரதியார் நீயே புருஷ மேரு என்ற பாடலை எழுதினார்.[3]
இலக்கியப்பணி
தொகுஅந்தக் காலகட்டத்தில் 16 புத்தகங்கள் எழுதினார். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அப்போதே எழுதினார். வீணை இசைப்பதிலும் வல்லமை பெற்றிருந்தார்.[3]
அவரது சமகாலத்தோரான தமிழறிஞர்கள்
- மீனாட்சி சுந்தரம் பிள்ளை,
- இராமலிங்க வள்ளலார்,
- திருவாவடுதுறை மடத்தின் மகாசன்னிதானம் சுப்பிரமணிய தேசிகர்,
- கோபாலகிருஷ்ண பாரதியார்
ஆகியோருடன் நட்பு பாராட்டி நெருங்கியிருந்தார்.
மொழிபெயர்ப்புப் பணி
தொகுகி.பி 1805 முதல் கி.பி. 1861-ஆம் ஆண்டு வரை ஆங்கில மொழியில் இருந்த சதர்ன் கோர்ட் தீர்ப்புகளை அதாவது 56 ஆண்டுகள் தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்து சித்தாந்த சங்கிரகம் என்ற நூலாக 1862-இல் வெளிட்டார் மேலும் 1862, 1863-ஆம் ஆண்டுகளின் தீர்ப்புகளையும் அவ்வாறே வெளியிட்டார். இவ்வாறு தீர்ப்புகளை முதன்முதலில்மொழி பெயர்த்த தமிழறிஞர் வேதநாயகம் பிள்ளை ஆவார்.[1]
ஆக்கங்கள்
தொகுவேதநாயகம் பிள்ளை ஆக்கிய நூல்கள் பல. அவற்றுள் சில:
- 1860 - நீதி நூல்
- 1862-இல் சித்தாந்த சங்கிரகம் - உயர்நிலை ஆங்கில சட்டங்களைத் தமிழில் செய்த நூல்
- 1869-இல் பெண்மதி மாலை - பெண்களுக்கு ஏற்ற அற முறைகளைப் பாட்டுகளாலும் உரைநடையாலும் கூறும் நூல்.
- 1873-இல் மூன்று நூல்கள் திருவருள் அந்தாதி, திருவருள் மாலை, தேவமாதர் அந்தாதி இவை செய்யுள் நூல்கள். கிறித்துவ மதம் பற்றியது. மத வரலாறு, மற்றும் கடவுள் பால் அவருக்கிருந்த அன்பு இவற்றைப் புலப்படுத்துவது.
- 1879-இல் பிரதாப முதலியார் சரித்திரம் புகழ் பெற்ற கற்பனைக்கதை, தமிழ் புதினங்களின் முன்னோடி. இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
- 1878-இல் சர்வ சமய சமரசக் கீர்த்தனை ஏறத்தாழ 200 இசைப்பாடலகள்.
- 1887-இல் சுகுண சுந்தரி புதினம்
- 1889-இல் சத்திய வேத கீர்த்தனை
- பொம்மைக் கலியாணம், பெரியநாயகியம்மன் என்னும் நூல்களும் மற்றும் பல தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார்.
குடும்பம்
தொகுவேதநாயகர் தம் 25 ஆம் அகவையில் (1851 இல்) காரைக்காலைச் சேர்ந்த பாப்பம்மாள் என்பாரைத் திருமணம் செய்திருந்தார். சிறிது காலத்திற்குப்பின், பாப்பம்மாள் இறந்துவிடவே, தன் தமக்கையான ஞானப்பூ அம்மாளின் மகள் இலாசர் அம்மையாரை இரண்டாம் தாரமாக ஏற்றார். சில ஆண்டுகள் கழித்து, அவரும் இறைந்துவிடவே, புதுச்சேரியைச் சேர்ந்த மாணிக்கத்தம்மையாரை மணந்தார். அவர் ஞானப்பிரகாசம், சவரி முத்தம்மாள், இராசாத்தியம்மாள் என்ற மூன்று மக்களைப் பெற்றபின், முன்னவர் போலவே இறந்தார். அதன் பிறகு புதுவை அண்ணுக்கண்ணம்மாளை மணந்தார். அவரது மறைவுக்குப் பின் அம்மாளம்மாள் என்பவரை மணந்தார். அவரும் தன் கணவனுக்கு முன்னதாகவே காலமாகிவிட்டார். இங்ஙனம் தான் மணந்த மனைவியர் ஐவரும் இற்ந நிலையில், தம் இறுதிக் காலத்தில், தனியராகவே வாழ்த்து, 21 சூலை 1889 அன்று தன் 63-ஆம் அகவையில் இறந்தார்.[4]
இவர் கொள்ளுப்பேரன் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஆவார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 தமிழ் நாவல் உலகின் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளை (2001) , புலவர் என் வி கலைமணி ,சிவகாமி புக் பப்ளிக்கேஷன்ஸ்
- ↑ "மாயூரம் வேதநாயகம் பிள்ளை 10". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-12-10.
- ↑ 3.0 3.1 3.2 [1]
- ↑ பிரதாப முதலியார் சரித்திரம் நூலில், ஆ. பி. அந்தோணி இராசு, எம்.ஏ., எழுதியிருந்த மாயூரம் நீதிபதி வேதநாயகரின் வாழ்க்கை வரலாறு கட்டுரை (விக்கிமூலத்தில்)
வெளி இணைப்புகள்
தொகு- பிரதாப முதலியார் சரித்திரம் / Select Opinions
- “மாயூரம் முனிசீப் ” வேதநாயகம் பிள்ளை வரலாறும் நூலாராய்ச்சியும் (1952) - இராவ்சாகிப் கு. அருணாசலக் கவுண்டர்
- மேதை வேதநாயகம் (1954) - வீ.ப.நடராஜன்
- MAYURAM VEDANAYAKAM PILLAI’S DEVA THOTHIRA MALAI (A Garland of Hymns ) (1968)
- கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர் நூலில், வேதநாயகம் பிள்ளை குறித்த கட்டுரை (விக்கிமூலம்)
- த இந்து கட்டுரை பரணிடப்பட்டது 2010-09-03 at the வந்தவழி இயந்திரம்