மூவர் கோயில், கொடும்பாளூர்

இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்

சங்க காலத்திலிருந்து புகழ்பெற்று விளங்கும் கொடும்பாளூர் என்ற ஊரில் அமைந்துள்ளது மூவர் கோயில்.

மூவர் கோவில்

அமைவிடம்

தொகு

திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் விராலிமலையை அடுத்து, புதுக்கோட்டையிலிருந்து 36 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும், கொடும்பாளூர் அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இவ்வூர் கொடும்பை நகர் என்று அழைக்கப்பட்டது.[1]

வரலாறு

தொகு

கொடும்பாளூரை ஆண்ட வேளிர் குல அரசனான பூதிவிக்கிரமகேசரி என்பவனால் மூவர் கோயில் கட்டப்பட்டது. பூதிவிக்கிரமகேசரிக்கு மூவர் கோயிலில் நடுக்கோயிலைத் தன் பெயராலும் மற்ற இரு கோயில்களைத் தன் தேவியரான அனுபமா, கற்றளி என்ற இருவரின் பெயராலும் எடுத்ததை நடுக்கோயிலின் சுவரில் காணப்படுகின்ற அம்மன்னனின் கல்வெட்டு மூலமாக அறியமுடிகிறது. இந்த மூன்று கோயில்களில் நடுவில் உள்ள கோயில் மட்டும் சிவலிங்கம் உள்ளது. பேரழகோடு காணப்படும் இருகோயில்களின் விமானங்களிலும் அழகான சிற்பங்கள் காணப்பெறுகின்றன.[1] இக்கோயில் 10 ஆம் நூற்றாண்டை அதாவது சோழர்களில் இரண்டாம் சுந்தர சோழ பராந்தகன் மற்றும் இரண்டாம் ஆதித்த கரிகாலன் காலத்தில் கட்டப்பட்டது என்று இக்கோயில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

கோயில் அமைப்பு

தொகு

மண்டபங்கள்

தொகு

மூன்று கோயில்களிலும் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கும் வடக்குமாக கட்டப்பட்டுள்ள இம் மூன்று கோயில்களும் காலபோக்கில் வடக்குப் பக்கம் அமைந்திருந்த கோயில் இடிந்து போனது. அதன் அடித்தளம் மட்டுமே தற்போது உள்ளது. மூவர் கோயில் ஒவ்வொன்றிலும் கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவை உள்ளன. இம்மூன்று கோயில்களும் மேற்கு திசை நோக்கி உள்ளன. மூன்று கோயில்களுக்கும் பொதுவாக ஒரு மகா மண்டபம் இருந்துள்ளது. இம்மண்டபமும் அழிந்து தற்போது அடித்தளம் மட்டுமே உள்ளது. கோயிலானது தாமரை மலர் போன்ற பீடத்தின்மீது அமைக்கப்பட்டுள்ளது. [2] துவாரபாலகர், நந்திஸ்வரர் என ஆகம விதிப்படி அமைக்கப்பட்டுள்ளது. மகா மண்டபத்தை அடுத்து நந்தி மண்டபம், பலிபீடம் அமைந்து இருந்ததற்கான சுவடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. பிரகாரச் சுற்றில் பரிவார தேவதைகளுக்காகக் கட்டப்பட்டிருந்த பதினைந்து சந்நிதிகளும் அஸ்திவாரங்கள் மட்டுமே இன்று நம் கண்ணால் காணக் கூடியவை. வடகிழக்கு ஈசான மூலையில் வட்ட வடிவில் நேர்த்தியாக அமைந்த படிக்கிணறு அமைந்துள்ளது. இக்கோயிலைச் சுற்றி பெரிய திருமதில் இருந்தற்கான தடயம் மட்டுமே எஞ்சியுள்ளது.

கருவறை, விமானம்

தொகு

மூலவர் விமானத்தின் கற்கள் ஒன்றின் மீது ஒன்றாக அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒரு கல்லின்மீது மற்றொரு கல்லை அடுக்கி அந்த பாரத்தைக் கொண்டு விமான உட்பகுதி கூம்பு போல காணப்படுகிறது. வெளியிலிருந்து பாரக்கும்போது இறுக்கமாகக் கட்டப்பட்டது. விமானத்தின் உச்சிப்பகுதி திருமந்திரக்கல்லினால் மூடப்பட்டுள்ளது. மாடங்களுக்கு மேல் உள்ள பூத கணங்கள், மகர தோரணங்கள், கூடுகள் ஆகியவை சோழர் காலச் சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டவையாகும். [2] கருவறை 21' X 21' என்ற அளவில் மேற்கு பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. விமானம் 32' உயரம் கொண்டது. சுண்ணாம்பு, சாந்து ஏதுமின்றி கற்கள் ஒன்றன் மீது ஒன்றாக அமைக்கப்பட்டுள்ள பாரத்தை கொண்டு விமானத்தின் உள்பகுதி கூம்பு போன்ற உள்கூடாக உருவகப்பட்டுள்ளது. இவை தமிழரின் நாகரிக வளர்ச்சியை, கலாச்சார மேன்மையை உலகத் தரத்திற்கு எடுத்துச் செல்லும் மதிப்புமிக்கவையாகும்.

சிற்பங்கள்

தொகு

சிவபெருமானின் பல திருவடிவங்கள் புராணக் கதைகளுக்கு ஏற்றவாறு சிற்பங்களாக உள்ளன. அவற்றுள் அர்த்தநாரீசுவரர், வீணாதர தட்சிணாமூர்த்தி, காலந்தக மூர்த்தி, பிக்ஷாடன மூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, திரிபுராந்தகர், ஆலிங்கனமூர்த்தி, கங்காதர மூர்த்தி உள்ளிட்ட சிற்பங்கள் உள்ளன. [2][3]

சுவடழிந்த கோயில்

தொகு

இக்கோயிலுக்கு சற்று கிழக்கே ஐந்தலை என்று ஐந்து கோயில்கள் இருந்துள்ளன. இவை அழிந்து தற்போது அடித்தளம் மட்டுமே காணப்படுகிறது.[2]

புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு