மைசூர் மல்லி

மைசூர் மல்லி (Mysore Mallige)(கன்னடம்: ಮೈಸೂರು ಮಲ್ಲಿಗೆ) என்பது மிகவும் பிரபலமான மல்லிகைப்பூ வகையாகும். இது பெரும்பாலும் மைசூர் நகரைச் சுற்றியும், கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டண வட்டத்திலும் வளர்க்கப்படுவதால் மைசூர் மல்லி எனப் பெயரைப் பெற்றது.

விளக்கம்

தொகு

மைசூர் மல்லி கர்நாடகத்தில் விளையும் ஒரு வலை மல்லிகைப் பூவாகும். பெரும்பாலும் இது மைசூர் பகுதியினைச் சுற்றியுள்ள விவசாயிகளினால் பயிரிடப்படுகிறது. அரச நகரமான மைசூர் நகரத்துடன் மல்லிகை அரண்மனையுடன் தொடர்புடையதாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நகரில் நடைபெறும் புகழ்பெற்ற தசரா திருவிழாவில் மைசூர் மல்லி முக்கிய பங்குவகித்து மணம் வீசுகிறது.[1] இந்த மல்லி திறந்தவெளிப் பகுதிகளில் விவசாய நிலங்களிலோ அல்லது வீடுகளின் முன் அல்லது கொல்லைப்புறத்தில் காணப்படும் இடங்களில் வளர்க்கப்படுகிறது. இது பெரும்பாலும் மைசூர் நகரத்திலும் அதைச் சுற்றியும் வளர்க்கப்படுகிறது. சிறு விவசாயிகளுக்கு இலாபம் தரும் பயிராக உள்ளது. இந்த பருவகால பூவின் இரண்டு பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்கிறார்கள். உள்ளூர் சந்தையைத் தவிர, கேரளா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும் இந்த பூவுக்குத் தேவை உள்ளது.

தாவர தகவல்கள்

தொகு

இது கொடி வகையினைச் சார்ந்தது. மல்லிகை கொடியானது 2 முதல் 3 மீ (6.6 முதல் 9.8 அடி) உயரம் வரை வளரக்கூடியது. கிளை இல்லாதது வளைவானது. அரிதாக உரோமங்களுடையது, மாற்று இலை அமைவு, இலைக்காம்பு 1 செ.மீ. நீளமுள்ளது. நுனிவளரா மஞ்சரி, 1 முதல் 5 பூக்கள், 4-8 மி.மீ. மலர்கள் மிகவும் மணம் கொண்டவை. பூக்காம்பு 0.3–2 செ.மீ (0.12–0.79 அங்குலம்). உரோமங்களுடையது; நேரியல் மடல்கள் 8-9, 5-7 மி.மீ. நீள அல்லி வட்டம் சற்று இளஞ்சிவப்பு நிறமானது, 1.5 செ.மீ (0.59 அங்குலம்) நீளமான பூவிதழ்கள் தூய வெள்ளை நிறமானது, நீள்வட்டமானது நீள்வட்டத்திலிருந்து துணை சுற்றுப்பாதை வரை, 5-9 மி.மீ அகலம் கொண்டது. கனி ஊதா கருப்பு நிறத்தில் கோளவடிவானது, சுமார் 1 செ.மீ (0.39 அங்குலம்) விட்டம் கொண்டது.

இப்பகுதியில் (மைசூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்) நிலவும் ஒப்பீட்டளவில் அதிக காரகாடித்தன்மை கொண்ட மணல் களிமண் இந்த பயிரை வளர்ப்பதற்கு ஒரு பொருத்தமான நிலத்தை உருவாக்குகிறது. குறைந்த ஈரப்பதம் கொண்ட வறண்ட மற்றும் சூடான வானிலை மைசூர் மல்லி பயிருக்கு ஏற்ற காலநிலை. பூப்பூக்கும் காலம் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தொடங்கி ஜூன்-ஜூலை வரை தொடர்கிறது. ஏப்ரல்-மே மாதங்கள் உச்ச பருவமாக உள்ளது. மைசூர் மல்லியில் அத்தியாவசிய எண்ணெய் உள்ளடக்கம் 0.24 முதல் 0.42 சதவீதமாக உள்ளது.[2]

நறுமணம்

தொகு

இந்தோல், ஜாஸ்மோன், பென்சில் அசிடேட், பென்சில் பென்சோயேட், மெத்தில் ஆந்த்ரானிலேட், லினினூல் மற்றும் ஜெரானியோல் ஆகிய முக்கிய நறுமண கூறுகள் இந்த மல்லியில் அடங்கியுள்ளன. இதன் காரணமாக மைசூர் மல்லி வாசனை திரவியம், அழகுசாதன பொருட்கள், தூப, நறுமண சிகிச்சை மற்றும் ஆயுர்வேதத்தில் பயன்படுகிறது. இது உலர்ந்த மற்றும் உணர்திறன் வாய்ந்த சருமத்தை ஆற்ற வெளிப்புறமாக பயன்படுத்தப்படுகிறது.[3]

இலக்கியங்களில்

தொகு

'மைசூர் மல்லிகே' என்ற பெயரைக் கொண்ட மல்லிகை மலர் கடந்த நூற்றாண்டில் கர்நாடகாவின் கவிஞர்கள், நாவலாசிரியர்கள் மற்றும் நாடகக் கலைஞர்களால் புகழப்பட்டது. மல்லிகே காவி (கவிஞர்) என்று அழைக்கப்படும் மறைந்த கே எஸ் நரசிம்மசுவாமி, "மைசூர் மல்லிகே" என்ற பெயரை அழியாச் சொல்லாக்கினார். இவரது கவிதைத் தொகுப்பு மைசூரு மல்லிகே (1942) கன்னட மொழியில் சிறந்த இலக்கியப் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் இது 27 மறுபதிப்புகளைக் கண்டிருக்கிறது.

இந்த கவிதைத் தொகுப்பின் ஈர்ப்பு காரணமாக டி.எஸ். நாகபாராணா ”மைசூரு மல்லிகே’ எனும் திரைப்படத்தினை உருவாக்கினார். இதற்கு கலகங்கோத்ரி இசை அமைத்திருந்தார். மேலும் பிரபல பாடகர்களான பி.கலிங்க ராவ், மைசூர் அனந்தசுவாமி மற்றும் சி.அஸ்வத் ஆகியோர் நரசிம்மசுவாமியின் கவிதைகளைத் திரைப்படம் நாடகம் வாயிலகப் பிரபலப்படுத்தியுள்ளார்.

புவிசார் குறியீடு

தொகு

மைசூர் தோட்டக்கலைத் துறையின் சார்பில் அளிக்கப்பட்ட புவிசார் குறியீடு விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு மைசூர் மல்லிக்கு 2007ஆம் ஆண்டு முதல் புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Mysore, Udupi, Hadagali Mallige flowers patented". Thaindian News. Archived from the original on 2010-07-23. பார்க்கப்பட்ட நாள் 2021-04-30.
  2. Jasmine http://horticulture.kar.nic.in/Home%20page.htm பரணிடப்பட்டது 27 மே 2010 at the வந்தவழி இயந்திரம்
  3. "Jasmine". Archived from the original on 27 February 2009. பார்க்கப்பட்ட நாள் 14 August 2008.
  4. http://ipindiaservices.gov.in/GIRPublic/Application/Details/69
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைசூர்_மல்லி&oldid=3856520" இலிருந்து மீள்விக்கப்பட்டது