எம். ஏ. சுசீலா

(ம. அ. சுசீலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எம். ஏ. சுசீலா (M.A. Susila) (பிறப்பு: பெப்ரவரி 27, 1949) தமிழகத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர், பெண்ணியவாதி, வலைப்பதிவர் ஆவார்.

எம். ஏ. சுசீலா
பிறப்புபெப்ரவரி 27, 1949 (1949-02-27) (அகவை 75)
காரைக்குடி, தமிழ்நாடு
இருப்பிடம்கோயம்புத்தூர்
பணிதமிழ்ப்பேராசிரியர், மதுரை பாத்திமா கல்லூரி (ஓய்வு)
அறியப்படுவதுஎழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

எம். ஏ. சுசீலா, 1949ஆம் ஆண்டு காரைக்குடியில் பிறந்தவர். இவர் தாய் சோபனாதேவி தலைமை ஆசிரியை, தந்தை எஸ். அனந்தராம் காவல்துறைக் கண்காணிப்பாளர். பள்ளத்தூர் சீதாலட்சுமி ஆச்சி பெண்கள் கல்லூரியில் வேதியல் இளநிலைப்பட்டமும் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டமும் பெற்றார். மதுரையிலுள்ள பாத்திமா கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராக 1970ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். பணிக்காலத்திலேயே பகுதிநேர ஆய்வாளராக ஆய்வு மேற்கொண்டு தமிழிலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். 36 ஆண்டுகள் பாத்திமாக்கல்லூரியில் பணி புரிந்து 2006ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். இடையே இரண்டாண்டுக்காலம் அக்கல்லூரியில் துணை முதல்வராகவும் பணியாற்றியிருக்கிறார். பணி நிறைவுக்குப்பின் ஏழாண்டுக்காலம் தில்லியில் இருந்தபின், மகள் மீனுபிரமோத்துடன் தற்போது கோவையில் வசித்து வருகிறார்.

எழுத்துத் துறை

தொகு

எம். ஏ. சுசீலாவின் முதல் சிறுகதையான ’ஓர் உயிர் விலை போகிறது’ என்னும் ஆக்கம் 1979ஆம் ஆண்டு கல்கி வார இதழ் நடத்திய அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்றது. இதைத் தொடர்ந்து எண்பதுக்கும் மேற்பட்ட இவரது சிறுகதைகள், கல்கி, கலைமகள், ஆனந்த விகடன், தினமணிக் கதிர், அமுத சுரபி, மங்கையர் மலர், அவள் விகடன், புதிய பார்வை, வடக்கு வாசல் ,கணையாழி, உயிரெழுத்து ஆகிய பல இதழ்களிலும் வெளி வந்துள்ளன; அவற்றுள் சில மலையாளம், கன்னடம் , இந்தி வங்காளம்,ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், முதலிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கோவை ஞானியின் பெண் எழுத்தாளர் சிறுகதைத் தொகுப்புக்களிலும் பல சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. "கண் திறந்திட வேண்டும்" என்னும் இவரது சிறுகதை, பாலுமகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சித்தொடர் வழியாக "நான் படிக்கணும்" என்ற தலைப்பில் ஒளி வடிவம் பெற்றுள்ளது. பல்கலைக்கழக,கல்லூரிப்பாடத் திட்டங்களிலும் இவரது நூல்கள் இடம் பெற்றிருக்கின்றன.பேராசிரியப் பணியின்போது நிறை நிலை மற்றும் முனைவர் பட்ட மாணவியருக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்திருக்கிறார். புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்,அன்னை தெரசா மகளிர்பல்கலைக்கழகம், காந்தி கிராமகிராமீய பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நிறைநிலை, மற்றும் முனைவர் பட்ட ஆய்வு வல்லுநர் குழுவிலும் ஆய்வேடுகளை மதிப்பீடு செய்யும் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். தேசிய, மாநில, பன்னாட்டுக்கருத்தரங்கங்களிலும் சாகித்திய அகாதமி நடத்தியுள்ள ஆய்வரங்கங்களிலும் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கிக் கருத்தரங்கங்கள் பலவற்றை நெறிப்படுத்தியிருக்கிறார். தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளென கம்பன், பாரதி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஆகியோரை குறிப்பிடுகிறார்

ஆக்கங்கள்

தொகு

நாவல்

தொகு
  • யாதுமாகி -2014,வம்சி புக்ஸ்,திருவண்ணாமலை

(‘ யாதுமாகி’ நாவலின் ஆங்கில மொழியாக்கம்- Devi:The Boundless, by V.Kadambari, Emerald Publishers, 2020)

  • தடங்கள்- 2020, மீனாட்சி புத்தக நிலையம்,மதுரை

சிறுகதைத் தொகுப்புகள்

தொகு
  • பருவங்கள் மாறும் (1985), நர்மதா வெளியீடு, சென்னை
  • புதிய பிரவேசங்கள் (1994),தழல் வெளியீடு, மதுரை
  • தடை ஓட்டங்கள் (2001). மீனாட்சி புத்தகநிலையம், மதுரை
  • தேவந்தி (2011), வடக்கு வாசல் பதிப்பகம், புது தில்லி

கட்டுரை நூல்கள்

தொகு
  • 'விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள்' (1996) - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்
  • பெண் இலக்கியம்- வாசிப்பு (2001), மீனா‌ட்சி புத்தக நிலையம்
  • இலக்கிய இலக்குகள் (2004), மீனாட்சி புத்தக நிலையம்
  • தமிழ் இலக்கிய வெளியில், பெண்மொழியும் பெண்ணும் (2006), மீனாட்சி புத்தக நிலையம்
  • கம்பன் தொட்ட சிகரங்கள்,விஜயா பதிப்பகம்,கோவை,2018
  • நவில்தொறும்..,சிறுவாணி வாசகர் மையம்,கோவை,2019
  • தமிழோடு தொடர்புகொண்டதாக வழங்கியுள்ள சில ஆங்கிலக்கட்டுரைகள்
  • Some Cryptotypes in Tamil
  • Baby Words in Brahmin Language
  • Periodisation in Tamil Social Novels [Published in The Jounal Of Asian Studies]
  • Native Women Writers as Champions of Human Rights
  • Impact of Gender Discrimination on The Life Of Karaikal Ammaiyar
  • Feminist Reading of 'Eco-Aesthetics'- Ugcsponsored National Level Symposium on Environmental Aesthetics, Dept Of Phlosophy, Arul Anandarcollege, Madurai
  • Tamil Religious Traditions and World Religions- National Seminar, School of Religions, Philosophy and Humanist Thought, Madurai Kamaraj University

மொழியாக்கம்

தொகு

செம்பதிப்பு, நற்றிணை பதிப்பகம்,2016.

  • பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் 'இடியட்’ புதினத்தின் மொழியாக்கம் பாரதி புத்தக நிலையம், மதுரை (2010)

 செம்பதிப்பு,நற்றிணை பதிப்பகம்,2018.

  • தஸ்தயெவ்ஸ்கி கதைகள்(2015),நற்றிணைபதிப்பகம்
  • ‘நிலவறைக்குறிப்புகள்’, தஸ்தயெவ்ஸ்கி, Notes From The Underground , நற்றிணைபதிப்பகம்(2018)
  • The Double,’இரட்டையர்’, தஸ்தயெவ்ஸ்கி,  நற்றிணை பதிப்பகம்( 2018)
  • ‘கவிஞனின் மனைவி’- (வங்க எழுத்தாளர்கள் ஆஷாபூர்ணாதேவி,மகாஸ்வேதாதேவி,டால்ஸ்டாய் ஆகியோரின் சிறுகதை மொழிபெயர்ப்புக்கள் அடங்கிய தொகுதி), (2019) நற்றிணை பதிப்பகம்
  • ‘செஹ்மத்அழைக்கிறாள்’, நாவல் மொழிபெயர்ப்பு, மூலம்: பஞ்சாப் எழுத்தாளர் ஹரீந்தர் சிக்கா- Calling Sehmath, (2019)நற்றிணை பதிப்பகம்.
  • ‘வெண் இரவுகள்’, White nights, தஸ்தயெவ்ஸ்கி, ( 2020), நற்றிணை பதிப்பகம்
  • ‘மரேய் என்னும் குடியானவன்’,  நற்றிணை பதிப்பகம்,2021 (டால்ஸ்டாய்,தஸ்தயெவ்ஸ்கி,ஆண்டன் செக்காவ், நிகோலாய் கொகோல் ஆகியோரின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் கொண்ட தொகுதி)

விருதுகள்

தொகு
  • பெண்கள் சார்ந்த சமூகச்செயல்பாடுகளின் பங்களிப்புக்களுக்காக, ஸ்தீரீ ரத்னா (2002)
  • சிறந்த பெண்மணி(2004)
  • சிறுகதைக்காக, தில்லித் தமிழ்ச் சங்கத்தின் அமரர் சுஜாதா விருது (2013) [1]
  • அசடன் நாவல் மொழிபெயர்ப்புக்காக மூன்று விருதுகள்( 2013இல்)
   (கனடா தமிழ் இலக்கியத்தோட்ட விருது
    நல்லி- திசை எட்டும் விருது
    எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் வழங்கிய ஜி யூ போப் விருது.)
  • மணல் வீடு இலக்கிய வட்டம் வழங்கிய அமரர் ராஜம்கிருஷ்ணன் வாழ்நாள் சாதனையாளர் விருது.(2018)
  • விஷ்ணுபுர இலக்கிய வட்டமும் சென்னை ரஷ்ய கலாச்சார மையமும் நடத்திய பாராட்டு விழாவில் தஸ்தயெவ்ஸ்கியின் தமிழ்க்குரல் என்னும் பாராட்டுத் தகுதி(2018)
  • கோவை விஜயா வாசகர் வட்டம் வழங்கிய கே எஸ் சுப்ரமணியன் நினைவு மொழிபெயர்ப்பு விருது,(2022)

சான்றுகள்

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._ஏ._சுசீலா&oldid=3696178" இலிருந்து மீள்விக்கப்பட்டது