யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம்
யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம் (Diocese of Jaffna , இலத்தீன்: Dioecesis Jaffnensis) என்பது இலங்கையின் வடக்குப் பகுதிக்கென உருவாக்கப்பட்ட உரோமன் கத்தோலிக்க மறைமாவட்டம் ஆகும். புனித பிரான்சிஸ் சவேரியாரின் காலத்திலிருந்தே தோன்றிய இந்த மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயராகப் பணியாற்றுபவர் அதிவணக்கத்துக்குரிய தாமஸ் சவுந்தரநாயகம் ஆவார்.
யாழ்ப்பாணம் மறைமாவட்டம் Dioecesis Jaffnensis | |
---|---|
புனித மரியா மறைமாவட்டக் கோவிலின் உட்பகுதித் தோற்றம், யாழ்ப்பாணம் | |
அமைவிடம் | |
நாடு | இலங்கை |
மாநிலம் | கொழும்பு உயர்மறைமாவட்டம் |
விவரம் | |
திருச்சபை | உரோமன் கத்தோலிக்கம் |
வழிபாட்டு முறை | இலத்தீன் |
உருவாக்கம் | பெப்ருவரி 17, 1845 |
கதீட்ரல் | புனித மரியா மறைமாவட்டக் கோவில், யாழ்ப்பாணம் |
தற்போதைய தலைமை | |
திருத்தந்தை | பிரான்சிசு |
யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் | தாமஸ் சவுந்தரநாயகம் |
பேராயர் † | மால்கம் ரஞ்சித், கொழும்பு உயர்மறைமாவட்டப் பேராயர் |
வரலாறு
தொகுமுதலில் இலங்கை மறைமாவட்டம் பிரிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் திருத்தூதுப் பணியிடம் (Apostolic Vicariate of Jaffna) என்ற பெயரில் இம்மறைமாவட்டப் பகுதி 1845, பெப்ருவரி 17ஆம் நாள் நிறுவப்பட்டது.[1] யாழ்ப்பாணம் மறைமாவட்டப் பகுதி 1886, செப்டம்பர் 1 இல் மறைமாவட்டம் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது. யாழ்ப்பாணம் மறைமாவட்டம் 1893, ஆகத்து 25ஆம் நாள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, திருகோணமலை-மட்டக்கிளப்பு மறைமாவட்டம் உருவானது.[1]
1975 திசம்பர் 19ஆம் நாள் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, புதிதாக உருவான அனுராதபுரம் மறைமாவட்டத்தின் பகுதிகள் ஆயின.[1] பின்னர், 1981 சனவரி 24ஆம் நாள் மன்னார் மறைமாவட்டம் உருவாக்கப்பட்டபோது யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் சில பகுதிகள் அப்புதிய மறைமாவட்டத்தின் பகுதிகள் ஆயின.[1]
தோற்றமும் வளர்ச்சியும்
தொகு1548ஆம் ஆண்டில் புனித பிரான்சிஸ் சவேரியார் இலங்கையின் மன்னார் பகுதிக்குக் கிறித்தவ மறையைப் போதிக்கச் சென்றார். அங்கிருந்து அவர் யாழ்ப்பாணம் சென்று, அங்கு அரசனைச் சந்தித்து, கிறித்தவர்களைத் துன்புறுத்தும் செயலை நிறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.[2]
1580ஆம் ஆண்டு, இலங்கையில் போர்த்துகீசியரின் ஆதரவின் கீழ் யாழ்ப்பாணத்தில் முதல் கிறித்தவக் கோவில் கட்டி எழுப்பப்பட்டது. போர்த்துகீசியரின் தளபதியான ஆந்திரே ஃபுர்ட்டாடோ டெ மென்டோன்சா (André Furtado de Mendonça) என்பவர் 1591இல் யாழ்ப்பாண மூவலந்தீவு முழுவதையும் போர்த்துகீசிய ஆட்சியின் கீழ் கொணர்ந்ததைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மக்களில் பலர் கத்தோலிக்க சமயத்தை ஏற்றனர்.
பின்னர், 1658இல் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை போர்த்துகீசியரிடமிருந்து கைப்பற்றிய சமயத்தில் அங்கு கத்தோலிக்க சமயம் தழைத்திருந்தது. யாழ்ப்பாண மூவலந்தீவில் 50 கத்தோலிக்க குருக்கள் பணியாற்றினர். இயேசு சபையினர் நடத்திய ஒரு கல்லூரி நிறுவப்பட்டிருந்தது. 14 கோவில்கள் கட்டியெழுப்பப்பட்டிருந்தன. பிரான்சிஸ்கு சபை மடம் ஒன்றும், சுவாமிநாதர் சபை மடம் ஒன்றும் நிறுவப்பட்டிருந்தன.
ஒல்லாந்தர் காலம்
தொகுயாழ்ப்பாணத்தை போர்த்துகீசியரிடமிருந்து கைப்பற்றிய ஒல்லாந்தார் கத்தோலிக்க திருச்சபையை ஒடுக்கும் முயற்சியில் இறங்கினர். கத்தோலிக்கக் குருக்களும் துறவியரும் வெளியேற்றப்பட்டு, அவர்கள் மறைப்பணியாற்ற தடைவிதிக்கப்பட்டது. அவர்களுக்குப் புகலிடம் கொடுத்தவர்களுக்குத் தூக்குத்தண்டனை என்று அறிவிக்கப்பட்டது. கத்தோலிக்க திருச்சபை நீண்ட கால துன்பத்துக்கு உட்படுத்தப்பட்டது.
இந்நிலை 1796ஆம் ஆண்டு பிரித்தானியர் இலங்கையை ஒல்லாந்தரிடமிருந்து கைப்பற்றிய ஆண்டுவரை நீடித்தது.
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் பகுதியான மன்னார் தீவில் புனித பிரான்சிசு சவேரியார் மறைப்பணி ஆற்றியிருந்தார். அவரது பணியின் விளைவாகத் தழைத்த கத்தோலிக்க திருச்சபை யாழ்ப்பாண மன்னன் ஆட்சியின் கீழ் துன்புறுத்தப்பட்டது. மன்னனின் கட்டளைப்படி சுமார் 600-700 கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர்.
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ள மடு மாதா கோவில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஒல்லாந்தர் காலத்தில் கிறித்தவம் துன்புறுத்தப்பட்ட போது கிறித்தவர்கள் மடு கோவிலில் அடைக்கலம் புகுந்தனர். அவர்கள் கொணர்ந்த ஆரோக்கிய அன்னை திருவுருவச் சிலை அக்கோவிலில் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது. மடு அன்னை கோவில் ஒரு புகழ்மிக்க திருத்தலமாக உருப்பெற்றது. ஆண்டுதோறும் நிகழ்கின்ற அன்னை மரியா திருவிழாவின்போது 40 ஆயிரத்துக்கும் மேலான திருப்பயணிகள் அக்கோவில் சென்று வழிபடுகின்றனர்.
பிரித்தானியர் காலம்
தொகு1845ஆம் ஆண்டு இலங்கை இரு மறைமாவட்டங்களாக ஆக்கப்பட்டது. அவை கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகும். யாழ்ப்பாணத்தின் ஆயராக ஒராசியோ பெட்டக்கீனி நியமிக்கப்பட்டார்.
1847ஆம் ஆண்டில் அமலமரியின் மறைபரப்புத் தியாகிகள் (Missionary Oblates of Mary Immaculate) இலங்கையில் கிறித்தவ மறைப்பணி ஆற்ற வந்தனர். 1847இல் யாழ்ப்பாணம் மறைமாவட்டம் இவர்களின் பொறுப்பில் விடப்பட்டது. இவ்வாறு, ஆயர் ஒராசியோ பெட்டக்கீனியின் மறைவுக்குப் பிறகு, அமலமரியின் தியாகிகள் சபையைச் சேர்ந்த ழான்-எத்தியன்-செமேரியா (Jean-Etienne Sémeria) என்பவர் யாழ்ப்பாணத்தின் ஆயரானார்.
1868ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் ஆயராக கிறிஸ்தோபர் போன்ழான் (Christopher Bonjean) என்பவர் பொறுப்பேற்றார். இவர் ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவில் மறைப்பணி புரிந்துவிட்டு, 1856இல் இலங்கை சென்று அமலமரியின் ஊழியர் சபையில் சேர்ந்து பணியாற்றினார். அவர் மக்களுக்குக் கல்வியறிவு அளிப்பதில், குறிப்பாகத் தொடக்கக் கல்வி வழங்குவதில் மிகுந்த ஆர்வத்தோடு உழைத்தார். இம்முயற்சியால் மக்களிடையே கத்தோலிக்கக் கல்வி பரவியது.
யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த ஆயர் போன்ழான் பின்னர் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பேராயர் ஆனதைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் ஆயராக தியோஃபில் மெலிர்சான் என்பவர் நியமிக்கப்பட்டார். அவரும் பின்னர் 1893ஆம் ஆண்டு கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பேராயராக உயர்த்தப்பட்டார். அதே ஆண்டில் யாழ்ப்பாணத்தின் ஆயராக ஹென்றி ழூலேன் என்பவர் பொறுப்பேற்றார்.
20ஆம் நூற்றாண்டில்
தொகுஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 499,200 என்றிருந்தது. அவர்களுள் 45,500 பேர் கத்தோலிக்கர். யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் பணிப்பொறுப்பு மரியாவின் ஊழியர் சபையிடம் இருந்தது. அவர்களோடு இணைந்து வேறு மூன்று மறைமாவட்ட குருக்கள் பணியாற்றினர். மொத்த மறைப்பணிக் குருக்களின் எண்ணிக்கை 46ஆக இருந்தது.
மறைமாவட்டக் கோவிலை அடுத்துள்ள புனித மார்ட்டின் குருத்துவக் கல்லூரியில் குருக்களாகப் பணிபுரிய விழையும் இளைஞர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின், மற்றும் வடக்கு மாகாணத்தின் புகழ்மிக்க ஒரு நிறுவனம் ஆகும். நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்லூரி விடுதிகளில் தங்கி உயர் கல்வி பெறுகின்றனர். குறிப்பாக, ஆங்கிலக் கல்வியிலும் இலக்கியம் இலக்கணத்திலும் மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பெண்களுக்குக் கல்வி அளிப்பதில் யாழ்ப்பாணம் கான்வென்ட் சிறப்புடையது. அதை நடத்துவோர் போர்டோ திருக்குடும்ப சகோதரிகள் ஆவர். தூய யோசேப்பு சகோதரர் சபை யாழ்ப்பாணம், கெயிட்ஸ் தீவு, மன்னார், முல்லைத்தீவு ஆகிய இடங்களில் கல்வி பயிற்றுவிக்கின் றனர்.
யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட புனித பேதுரு சபை சகோதரிகள் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தின் பல பங்குகளில் தொடக்கக் கல்வி வழங்குவதில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கல்வி அளிக்கின்ற 127 கல்விக் கூடங்கள் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் உள்ளன. கொழும்பகம், முல்லைத்தீவு ஆகிய இடங்களில் உள்ள இரு தொழிற்கல்வி நிலையங்களில் பல மாணவர்கள் தொழிற்கல்வி பயில்கின்றனர். புனித வின்சென்ட் தே பவுல் சபையும் இளந்தொழிலாளர் இயக்கமும் செயல்படுகின்றன. மறைமாவட்டத்தில் புனித யோசேப்பு அச்சகம் உள்ளது. கத்தோலிக்க பாதுகாவலன் என்னும் வாரப்பத்திரிகை வெளியிடப்படுகிறது. கத்தோலிக்கரின் முன்னேற்றத்துக்காகக் கத்தோலிக்கக் கழகம் என்னும் அமைப்பும் உள்ளது.
யாழ்ப்பாணத்தின் ஆயர்கள், திருத்தூதுத் தலைவர்கள்
தொகுதிருத்தூதுத் துணைத்தலைவர் | பதவியேற்பு | விலகல் |
---|---|---|
ஒராசியோ பெட்டக்கீனி | 1847 | 1849 |
திருத்தூதுத் தலைவர் | பதவியேற்பு | விலகல் |
---|---|---|
ஒராசியோ பெட்டக்கீனி | 1849 | 1857 |
சான்-எத்தியன் செமேரியா | 1857 | 1868 |
கிறிஸ்தோப்-எத்தியன் போன்சான் | 1868 | 1883 |
ஆந்திரே-தியோபில் மெலிசான் | 1883 | 1886 |
ஆயர் | பதவியேற்பு | விலகல் |
---|---|---|
ஆந்திரே-தியோபில் மெலிசான் | 1886 | 1893 |
என்றி சூலெயின் | 1893 | 1919 |
சூல்-அந்திரே புரோல் | 1919 | 1923 |
ஆல்பிரட்-சான் குயோமார் | 1924 | 1950 |
ஜெரோமி எமிலியானுஸ்பிள்ளை | 1950 | 1972 |
பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை | 1972 | 1992 |
தோமசு சௌந்தரநாயகம் | 1992 |
குறிப்புகள்
தொகு- இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பில் உள்ள வெளியீடு ஒன்றின் பகுதிகளைக் கொண்டுள்ளது: Catholic Encyclopedia. (1913). நியூயோர்க்: இராபர்ட் ஆப்பில்டன்.
- ↑ 1.0 1.1 1.2 1.3 "Diocese of Jaffna". GCatholic.
- ↑ "Diocese of Jaffna". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.